Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 87: `See... இதான் உங்க பிரச்னையே மிஸ்டர். அசிம்!' ரச்சிதாவின் சாயம் வெளுக்கிறதா?

பிக் பாஸ் 6 நாள் 87

விக்ரமனும் அசிமும் ஜோடியாக ஒரு சைக்கிளில் ஏறிக் கொண்டார்கள். ஷிவின், அமுது, ரச்சிதா ஓர் அணியாகவும், மைனா, ஏடிகே, கதிரவன் ஆகிய மூவர், இன்னொரு அணியாகவும் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பித்தது.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 87: `See... இதான் உங்க பிரச்னையே மிஸ்டர். அசிம்!' ரச்சிதாவின் சாயம் வெளுக்கிறதா?

விக்ரமனும் அசிமும் ஜோடியாக ஒரு சைக்கிளில் ஏறிக் கொண்டார்கள். ஷிவின், அமுது, ரச்சிதா ஓர் அணியாகவும், மைனா, ஏடிகே, கதிரவன் ஆகிய மூவர், இன்னொரு அணியாகவும் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பித்தது.

பிக் பாஸ் 6 நாள் 87
அடுத்தடுத்து டாஸ்குகளை வைத்து பிக் பாஸ் கெத்து காட்டுகிறார். எனவே ‘டிக்கெட் டு பினாலே’ எபிசோடுகள் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கின்றன. பாராட்டும்படியாக ஒரு விஷயத்தை அசிம் செய்துவிட்டால், அதைத் தொடர்ந்து பத்து முறை கண்டிக்கும் படியான விஷயத்தைச் செய்வது அவருக்குப் பழக்கமாகி விட்டது. பார்க்கும் நமக்கும் அதே!

சைக்கிள் டாஸ்க்கில் ஓர் ஒப்பந்தத்திற்கு அசிம் ஒப்புக் கொள்கிறார். ஆனால் தான் செய்த பிழைக்காக, அந்தப் பழியை ஷிவின் மற்றும் ரச்சிதா மீது அவர் போட்டது சிறுபிள்ளைத்தனம். ‘அடுத்த டாஸ்க்கில் உங்க ரெண்டு பேரையும் வெச்சு செய்வேன்’ என்று வன்மத்துடன் அவர் சவால் விட்டது இன்னமும் மோசமான காட்சி. வெற்றிக்கான பாதையில் அசிமே தடைகளைப் போட்டுக் கொள்வதுதான் இதில் பரிதாபம்.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

சாய்பலகையில் நடந்து பந்துகளை வைக்கும் டாஸ்க்கை மற்றவர்கள் முடித்து விட, அசிம் மட்டும் வியர்வை வழியத் தடுமாறிக் கொண்டிருந்தார். மக்கள் அவரை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ‘எப்போது முடிப்பான்?!” என்கிற மாதிரி கொட்டாவியுடன் காத்திருந்தார்கள். ‘சாரி நண்பர்களே... லேட்டாயிடுச்சு’ என்று மன்னிப்பு கேட்டபடி, ஒருவழியாக அசிம் டாஸ்க்கை முடித்து விட “ஹப்பாடா! தூங்கப் போகலாம்" என்று அனைவரும் கிளம்பினார்கள். இந்த டாஸ்க்கில் கதிரவன் முதலிடத்தில் வந்தார். ஆனால் டைல்ஸ்களின் எண்ணிக்கையில் அமுதவாணனே தொடர்ந்து லீடிங்கில் இருக்கிறார். டைல்ஸ்களை அடுக்கிய பிறகு, ‘ஒருவழியா பைபாஸ் ரூட்டைப் பிடிச்சிட்டேன்’ என்று அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதுவரை ‘வேக் அப்’ பாடல்களுக்கு மக்கள் நடனமாடிய காட்சிகளைத்தான் பார்த்தோம். ஆனால் இப்போதோ அவர்கள் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது. ஒருபக்கம் ஓட்டப் பயிற்சியில் விக்ரமன் ஈடுபட்டுக் கொண்டிருக்க, புஷ்அப்பில் அமுதுவும் யோகாவில் கதிரவனும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதிப் போட்டி டாஸ்குகள் கடுமையாக இருக்கும் என்பதால் உடம்பைத் தயார் செய்கிறார்கள் போல. இதை முன்பே அவர்கள் செய்திருக்கலாம். ஆனால் இதிலும் கூட அசிமைக் காணவில்லை.

"நடுவுல என்னை மக்கள் மறந்துட்டாங்க. வெளில போனா... ‘எங்கோ பார்த்த ஞாபமாக இருக்கு’ன்னு அவங்க சொல்லவும் ‘பக்’குன்னு ஆயிடுச்சு. இப்ப ஞாபகம் வெச்சுப்பாங்க இல்லையா?" என்று தான் பிக் பாஸ் வந்த காரணத்தை விக்ரமனிடம் நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார் அமுது. “டீ போட்டுக் கொடுத்தா, சண்டை போட்டுட்டு நைசா சமாதானம் பேசறியான்னு அமுது சொல்றாரு... நாம அன்புக்காக போட்டுத் தரோம். அப்ப காஃபி கொடுத்தா சண்டைக்கு கூப்பிடறேன்னு அர்த்தமா... என்னய்யா இது... ஹய்யோ... ஹய்யோ...” என்று ஏடிகேவிடம் அனத்திக் கொண்டிருந்தார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

ரச்சிதாவின் சாயம் வெளுக்கிறதா?

‘தினமும் உப்புமா’ என்றால் நம் வீடுகளிலேயே நிறையப் பேர் முகத்தைச் சுளிப்பார்கள். பிக் பாஸ் வீடு மட்டும் அதற்கு விதிவிலக்கா? ‘உப்புமா செய்யறேன்’ என்று ரச்சிதா சொன்னதுமே பலர் அதற்காகத் துக்கம் அனுஷ்டிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு மௌனமாக இருந்ததால் ரச்சிதாவிற்குக் கோபம் வந்தது. “ஏதாவது வாயைத் திறந்து சொன்னாதானே அதுக்கேற்ப செய்ய முடியும்?” என்று அவர் எரிச்சல் காட்டவே ‘எங்களுக்கு வேணாம்’ என்று அசிமும் மைனாவும் மறுப்பு தெரிவித்தார்கள். மற்றவர்கள் வேறுவழியில்லாமல் ‘ஓகே’ என்றார்கள். ‘காய்கறி போடாம பிளைன் உப்புமா செய்ய முடியாதா?’ என்று கேட்டு ரச்சிதாவை காண்டாக்கினார் ஏடிகே.

ரச்சிதா கோபத்தை அடக்கிக் கொண்டு விலகியவுடன் "இப்பத்தான் சாயம் கலையுது... ஒரிஜினல் முகம் வெளியே வருது" என்று சொல்லி வெடித்துச் சிரித்தார் ஏடிகே. "அதுக்காக எப்பவுமா கோபப்படாம இருக்க முடியும்?! ஒருத்தர் செய்யறதை பாராட்டாம கூட இருக்கலாம். கிண்டல் செய்யாதீங்க" என்று விக்ரமன் சொன்னது சரியானது. “இவரும் சீரியஸா பேசற மாதிரி கிண்டல் பண்ணுவாரு... கேட்டா காமெடின்னு சொல்லிடுவாரு” என்று அமுதவாணன் மிகச்சரியாக விக்ரமனின் டெக்னிக்கைப் பிடித்துவிட்டார். “அதுக்குப் பெயர் வஞ்சப்புகழ்ச்சி அணி” என்றார் தமிழ் ஆர்வலர் அசிம். 24 மணி நேரமும் ஒருவரால் பொலிட்டிக்கல் கரெக்னட்டஸூடன் பேச முடியாது. செய்தால் அது டிராமா. அல்லது அந்தக் குணம் தன்னிச்சையாகப் படிந்திருக்க வேண்டும்.

“முருகேசா... பர்சனல்ன்னா என்ன... அது எப்படி இருக்கும்? அது வர்றதுக்கு உண்டான அறிகுறி ஏதாவது இருக்கா?” என்று சந்திரமுகி காமெடி மாதிரி மைனா கேட்க “மகர ராசி அன்பர்களே... உங்களுக்கு வந்திருக்கிறது...’ என்று ஜோசியம் சொல்வதுபோல ‘பர்சனலுக்கு’ விளக்கம் சொன்னார் ஏடிகே. ‘தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற மோடில் அசிமுக்கும் ஒரு குத்து, விக்ரமனுக்கும் ஒரு குத்து என்று பாரபட்சமில்லாமல் புறணி பேசுவதில் வல்லவராக இருக்கிறார் ஏடிகே. அவர் சொல்வதைப் பிரசாதம் வாங்கிக் கொள்வது போல் பயபக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார் மைனா. ‘பர்சனல்’ என்றால் என்ன என்று மைனாவிற்கே தெரியாதா, என்ன?! “ரச்சிதா தன் கோபத்தை வெளில காட்ட மாட்டாங்க. ஆனா. நாமினேஷன்ல சைலண்ட்டா குத்திடுவாங்க” என்பது ஏடிகேவின் கண்டுபிடிப்பு.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

‘காலையில் உப்புமா பிளானை மாற்றி ரொட்டி சாப்பிட வைத்த பிக் பாஸ்’

டாஸ்க் 4-ஐ வித்தியாசமாக ஆரம்பித்தார் பிக் பாஸ். காலின் கட்டைவிரலில் ஒரு கயிறு கட்டப்படும். அதன் மேல் முனையில் ஒரு ரொட்டி தொங்க விடப்படும். கைகளை உபயோகிக்காமல் காலால் கயிற்றை இழுத்து ரொட்டியை வாயின் அருகே வரவழைத்துச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். 'பிரேக்ஃபாஸ்ட்டுக்கு உப்புமாவா பிளான் பண்றீங்க... இருங்கடா... உங்களுக்கு ரொட்டியே இல்லாமப் பண்றேன்!' என்பது பிக் பாஸின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம். “நாலு நாலு பேரா போயி ஜோலியை முடிங்க” என்று அனுப்பிய பிக் பாஸ், "கதிரவன்... ஷிவின் பக்கத்துல உக்காருங்க" என்று உத்தரவு போட்ட போது ‘பிக் பாஸ்... நீங்க செய்யற வேலைக்கு என்ன பேர் தெரியுமா...' என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அதுவல்ல காரணம். இந்த வரிசையில் யாருடைய ரொட்டியாவது கீழே விழுந்தால், அடுத்த வரிசைக்கு அனுப்புவதற்குத்தான் கதிரவனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். (பிக் பாஸ் மன்னிச்சூ... முதல்ல தப்பா நெனச்சிட்டேன்!).

'காலால் கயிற்றை இழுத்து ரொட்டியைக் கடித்துச் சாப்பிட வேண்டும். அவ்வளவுதானே... ஈஸி மாம்ஸூ’ என்று முதலில் தோன்றியிருக்கலாம். ஆனால் செய்து பார்க்கும் போதுதான் சிரமம் தெரிந்தது. கால் போகும் திசை ஒரு பக்கம் இருக்க, வாய் போகும் திசை அதற்கு எதிரே இருக்க, ரொட்டியோ காற்றில் ஆடி ஆடி வெறுப்பேற்றியது.

அமுதவாணன் நாக்கால் நக்கியே முடித்து விடலாம் என்று முயற்சி செய்தார். “இது என்ன வாயா... வாட்டர் டாங்க்கா...?’ என்று ஷிவினைக் கிண்டல் செய்தார் அசிம். "மைனா நீங்க பேலன்ஸ் பண்றீங்க" என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன் குறை கண்டுபிடித்துச் சொல்ல “நீங்க வந்து விளையாடும் போதுதான் கஷ்டம் தெரியும்” என்று எரிச்சலானார் ஏடிகே.

மற்றவர்கள் மிகவும் தடுமாற, கதிரவன்தான் ஒரு சரியான டெக்னிக்கை முதலில் கண்டுபிடித்தார். ரொட்டியை உயரத் தூக்கி முட்டிக்காலால் வாயின் அருகே வைத்து அணைத்துக் கொண்டு கடிக்க முயன்றது சிறிது பலனை அளித்தது. பிறகு மற்றவர்களும் இதை காப்பியத்தார்கள்.
பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

மைனாவின் ரொட்டி இரண்டாவது முறையும் கீழே விழுந்ததால் அவர் அவுட். அடுத்த வரிசையில் வந்தவர்களும் இதே மாதிரியாகச் சிரமப்பட்டார்கள். (வேடிக்கை பார்த்த போது என்னா கிண்டல் பண்ணீங்க?!). ரச்சிதா பெரிய பீஸாகக் கடித்து விட, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து கைகளை உபயோகித்தார். “ஃபவுல் ஆட்டம்” என்று மற்றவர்கள் ஆட்சேபித்தார்கள். இரண்டு முறை ரொட்டி விழுந்ததால் ரச்சிதா வெளியேற்றப்பட, சோகமான முகத்துடன் வெளியே சென்றார். (உப்புமா போட்டதுக்குத் தண்டனை!). அமுதவாணன் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது போலக் கயிற்றை ஆட்டிக் கொண்டே இருக்க, அசிமால் ஒரு துண்டு கூட கடிக்க முடியவில்லை. கால்களை உயர்த்த அவர் பெரிதும் சிரமப்பட்டார். வயிறு இடித்தது. (இதுக்குத்தான் ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணனும்றது!).

இரண்டு வரிசைகளும் முடிந்த பிறகு ரிசல்ட் வந்தது. அமுதவாணன் முதலில் வந்தார். அவருக்கு சவால் விட யாரும் தயாராக இல்லை. ஆகவே டைல்ஸ்களின் எண்ணிக்கையிலும் அமுதுவே லீடிங். கடைசியிலிருந்த அசிம் “லாஸ்ட்ல ஃபர்ஸ்ட் யாரு வரதுன்றதுதான் முக்கியம்” என்று பன்ச் வசனம் பேசினார். (இப்படிப் பேசிப் பேசியே...!). தனது உப்புமா கிண்டல் செய்யப்பட்ட வருத்தத்திலிருந்தார் ரச்சிதா. 'குறைந்தபட்ச பாராட்டு கூட இல்லை’ என்பது அவரது துயரம். இது அவரின் துயரம் மட்டுமல்ல. சமையல் அறையின் புழுக்கத்துடன் இருக்கும் ஏராளமான பெண்களின் சோகமும் கூட.

‘நீச்சல் குளத்தில் ஒரு நாணயமான போராட்டம்’

சுடச்சுட அடுத்த டாஸ்க்கை தண்ணீரில் ஆரம்பித்தார் பிக் பாஸ். கண்ணைக் கட்டிக் கொண்டு நீச்சல்குளத்தில் இருக்கும் காயின்களைத் தேடி எடுக்க வேண்டும். பிளஸ், மைனஸ் என்று அதன் மதிப்பு எதுவாகவும் இருக்கலாம். தன்னுடைய பெயர் கொண்ட உண்டியலில் அதைப் போட வேண்டும்.. ஒரு சமயத்தில் மூன்று காயின்களை மட்டும்தான் போட வேண்டும். உண்டியலில் போடுவதற்கு சக போட்டியாளர்கள் வழி சொல்லி உதவுவார்கள். இந்த டாஸ்க்கில் நீருக்கு அடியிலான காட்சிகளைக் கூட கேமரா காட்டி பிரமிக்க வைத்தது. முதல் வரிசைப் போட்டியில் அசிம் முதல் இடத்தில் வந்தார். கடைசி இடத்தில் ரச்சிதா.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

அடுத்த நால்வர் களத்தில் இறங்கினார்கள். இதில் தனது தோழி ஷிவினை மட்டும் ரச்சிதா உற்சாகப்படுத்த, மற்றவர்கள் ஆட்சேபித்தது நியாயமான விஷயம். “எனக்கு மூச்சுத்திணறுது” என்று தவித்த மைனாவைக் கவனமாக ஆடச் சொன்னார்கள். மூன்று காயின்களை மட்டுமே போட வேண்டும் என்கிற விதியை மீறி அமுதவாணன் நான்கு காயின்களைப் போட்டார். இது கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டது. பிறகு விக்ரமனுடன் நடந்த உரையாடலில் தான் செய்த பிழையை நியாயப்படுத்திப் பேசினார் அமுது. “கண்ணு கட்டியிருக்கு. கீழே துழாவி எடுக்கும் போது கையில எத்தனை வருதுன்னு எப்படித் தெரியும்..? அது மைனஸ் காயினா கூட இருக்கலாம்” என்பது அவர் சொன்ன லாஜிக். ஆனால் அது போங்காட்டம். “நாலு காயின் கையில இருக்கறது தெரியுமே பாஸூ” என்று விக்ரமன் மடக்கியதுதான் சரியானது.

நீச்சல்குளப் போட்டி சொதப்பியதால், கையில் பொம்மையை வைத்துக் கொண்டு தனியாகப் புலம்பிக் கொண்டிருந்த மைனாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “நல்லா விளையாடு” என்று தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டார். போட்டியின் முடிவுகள் வந்தன. அசிம் முதல் இடம். ஆச்சரியகரமாக ஷிவின் இரண்டாம் இடத்தில் வந்தார். நான்கு காயின்களைப் போட்ட மைனாவுக்கும் அமுதுவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. “அசிம் கூட சவால் விடப்போவது யார்?” என்று கேட்கப்பட்ட போது முதலில் கை தூக்கிய அமுதவாணன், பிறகு பின்வாங்கி விட்டார்.

ஆனால் ஏடிகே மனஉறுதியுடன் அசிமுடன் மோதத் தயாரானார். இதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். சற்று முன்னர் ஏடிகேவிடம் அசிம் வழக்கம் போல் அடித்த சர்காஸ்டிக் கமெண்ட் காரணமாக ஏடிகே மனம் புண்பட்டார். எனவே அசிமை ஜெயிக்க அவர் உறுதி பூண்டிருக்கலாம். ஏடிகேவின் மனஉறுதி வென்றது. அசிமுடன் நடந்த போட்டியில் வென்று அவரிடமிருந்து 5 டைல்களைப் பறித்துக் கொண்டார். வரிசை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அமுதவாணன் தொடர்ந்து முன்னணியிலிருந்தார். அசிமிற்குக் கடைசி இடம். ஆனால் ரிஸ்க் எடுத்து சவாலில் விளையாடிய அசிமைப் பாராட்டியாக வேண்டும்.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

‘அந்த நாள் முதல்... இந்த நாள் வரை...’ – சைக்கிள் போட்டி

நீச்சல் குளத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்த டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘மிதிவண்டி... உங்கள் மிதிவண்டி...' இது பஸ்ஸர் டு பஸ்ஸர் டாஸ்க். எப்போது பஸ்ஸர் அடிக்கும் என்பதை பிக் பாஸ் முடிவு செய்வார். மூன்று பேர் அமரும் வகையில் இரண்டு சைக்கிள்கள் இருக்கும். இரண்டு போ் அமரும் வகையில் ஒரு சைக்கிள் இருக்கும். தொடர்ந்து சைக்கிளை பெடல் செய்ய வேண்டும். பஸ்ஸர் அடிக்கும் போது ஆள் மாற்றிக் கொள்ளலாம். யாராவது வண்டியில் ஏறுவதற்கு பத்து நொடிகளுக்கு மேல் தாமதமானால் அவர் அவுட். போட்டியிலிருந்து வெளியேற வேண்டும்.

விக்ரமனும் அசிமும் ஜோடியாக ஒரு சைக்கிளில் ஏறிக் கொண்டார்கள். ஷிவின், அமுது, ரச்சிதா ஓர் அணியாகவும், மைனா, ஏடிகே, கதிரவன் ஆகிய மூவர், இன்னொரு அணியாகவும் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அப்போதைய நிலையை அறிவித்தார் பிக் பாஸ். அதன்படி விக்ரமன் முதல் இடத்திலும் அசிம் இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். கதிரவனுக்குக் கடைசி இடம். “ஆம்புலன்ஸ் வருது கதிரு... வேகமா ஓட்டுங்க” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

ஆள் மாற்ற வேண்டிய நேரத்தில் சைக்கிளிலிருந்து இறங்கிய கதிரவன், ஏதோ பஸ்ஸில் ஏறி அமர்வது போலத் துணியைக் கீழே போட்டு, பிறகு தவற விட்டு மீண்டும் எடுத்து இருக்கையில் போட்டுத் துடைத்து அமர, அதற்குள் பத்து விநாடிகள் கடந்துவிட்டதால் அவர் அவுட். இந்தச் சமயத்தில் ஷிவின் ஓர் ஒப்பந்தத்தை விக்ரமன்+அசிம் டீமிடம் முன்வைத்தார். “நாம் இடம் மாற்றிக் கொள்ளலாமா?” என்று. விக்ரமன் டக்கென்று ஒப்புக் கொள்ள, அசிம் ஆலோசித்து விட்டு பிறகு அந்த டீலுக்கு ஒப்புக் கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டு பேர் மட்டும் ஓட்டும் சைக்கிளில் பெடலிங் செய்வதற்கான நேரம் அதிகம் வரும். பாயிண்ட்டுகளும் அதிகம். ஆட்களின் எண்ணிக்கை குறைவு. எனவே இருக்கையில் சற்று வசதியாக அமரலாம். மூன்று போ் எண்ணிக்கை கொண்ட சைக்கிளில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மாற்றி மாற்றி ஓட்டலாம். மற்றவர்கள் ஓய்வு எடுக்கக் கூடுதல் நேரம் கிடைக்கும். ஆனால் இருக்கையில் நெருக்கியடித்து அமர்ந்திருக்க வேண்டும்.

அசிமின் அநாவசியமான கோபம்

அதிகாலை 04.30 மணி. மூன்று நபர் சைக்கிளுக்கு மாறியிருந்தார் அசிம். ஆளை மாற்ற வேண்டியதற்கான பஸ்ஸர் அடித்தது. அசிம் இறங்கி ஏறுவதற்குள் பத்து விநாடிகள் கடந்து விட்டதாக பிக் பாஸ் அறிவிக்க, சற்று அதிர்ச்சியானார் அசிம். என்றாலும் சுதாரித்துக் கொண்டு சிரிப்புடன் இறங்கினார். ஆனால் இந்தச் சமயத்தில் ஷிவின் நக்கலாகச் சிரித்தது, அசிமை மிகவும் காண்டாகியிருக்க வேண்டும். “உங்களுக்காகத்தானே நான் இடம் மாறினேன்... இல்லாட்டி நானும் விக்ரமனும் ஒழுங்கா ஓட்டியிருப்போம். கொஞ்ச நேரம் ஃபிரெண்ட்ஷிப் பார்த்தது தப்பா போச்சு. ஷிவின், ரச்சிதா... அடுத்த ஆட்டத்துல உங்களை வெச்சு செய்யறேன் பாருங்க” என்று கோபம் மெல்ல மெல்ல சூடேறக் கத்த ஆரம்பித்தார் அசிம். இதனால் ஷிவின் மற்றும் ரச்சிதாவின் முகங்களில் அதிர்ச்சியும் எரிச்சலும் தெரிந்தன.

பிக் பாஸ் 6 நாள் 87
பிக் பாஸ் 6 நாள் 87

“நீங்க டீலுக்கு ஒப்புக் கொண்டுதானே மாறினீங்க... இல்லாட்டி அப்பவே மறுத்திருக்கலாமே... அதுவும் உங்க சைக்கிள்லதானே தப்பு நடந்துச்சு. எதிர் சைக்கிளுக்கு மாறும்போது கூட நடக்கலையே...” என்றெல்லாம் ஷிவின் சரியான தர்க்கத்தை முன்வைத்தாலும் தோற்றுவிட்ட கோபம் காரணமாக அசிம் நிதானத்தில் இல்லை. ‘உங்க ரெண்டு பேரையும் வெச்சு செய்வேன்” என்பதையே தொடர்ந்து கோபத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிள்ளைகள் விளையாடும் போது, ஒரு சிறுவன் அவனே தவறி விழுந்து விட்டால் கூட, அந்தக் கோபத்தை ஏமாந்த பிள்ளையை அடித்துத் தீர்த்துக் கொள்வான். இதன் மூலம் அவன் செய்த தவற்றையும் மறைக்க முயல்வான். அசிம் செய்த காரியம் அப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. தன் தவற்றை உணர்ந்து அசிம் சுதாரித்துக் கொள்வாரா?