Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 89: பைனலிஸ்ட் அமுதவாணன்; "கிரிஞ்சு விருதை மாட்டிக்கோங்க விக்ரமன்!" எகிறிய அசிம்

பிக் பாஸ் 6 நாள் 89

"நீங்கதான் கிரிஞ்சு விக்ரமன். உங்க தலைல மாட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க... பிக் பாஸ் இதை விக்ரமன் தலைல மாட்டிப்பாரு... அவருக்குத்தான் இது பொருத்தம்... உங்க பாச்சால்லாம் என் கிட்ட பலிக்காது." - அசிம்

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 89: பைனலிஸ்ட் அமுதவாணன்; "கிரிஞ்சு விருதை மாட்டிக்கோங்க விக்ரமன்!" எகிறிய அசிம்

"நீங்கதான் கிரிஞ்சு விக்ரமன். உங்க தலைல மாட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க... பிக் பாஸ் இதை விக்ரமன் தலைல மாட்டிப்பாரு... அவருக்குத்தான் இது பொருத்தம்... உங்க பாச்சால்லாம் என் கிட்ட பலிக்காது." - அசிம்

பிக் பாஸ் 6 நாள் 89
எதிர்பார்த்தபடியே ஃபைனலுக்கான டிக்கெட்டை அமுதவாணன் பெற்றுவிட்டார். இதுவரை நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன்களில் ‘டிக்கெட் டு ஃபினாலே’ பெற்றவர்கள், டைட்டில் வென்றதில்லை. (மூன்றாம் சீசன் முகேன் தவிர). அமுதவாணன் டைட்டில் வெல்வாரா?

மறுபடியும் அதேதான். விருது விழாவில் அழுகுணி ஆட்டம் ஆடினார் அசிம். மற்றவர்களுக்குக் கடுமையான விமர்சனங்களைத் தாராளமாக அள்ளித் தருவதில் துளி கூட தயக்கம் காட்டாத அசிம், தன் மீது வரும் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லாதவராக இருக்கிறார். தன்னைப் பற்றி அறிந்தவன் இப்படிக் கோபப்பட மாட்டான். ‘ராணுவத்தால அழிஞ்சவன விட ஆணவத்தால அழிஞ்சவன்தான் அதிகம்’ என்பது சந்தானம் சொன்ன பொன்மொழி. இதை அசிமிற்கு டெடிகேட் செய்யலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

யாரோ கிணற்றுக்குள் இருந்து ரகசியமாகப் பாடுவது போன்ற குத்துப்பாட்டுடன் நாள் 89 விடிந்தது. அமுதவாணன் சிரசாசனம் செய்து கொண்டிருந்தது பாராட்டுக்குரிய விஷயம். அந்த வீட்டில் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருப்பவர்களில் ஷிவினும் அமுதுவும் அக்கறை காட்டுகிறார்கள். அதனால்தான் அமுதுவால் டிக்கெட் போட்டிகளில் நன்கு விளையாட முடிந்தது. ‘டிக்கெட்டிற்காக அமுது தலைகீழாக நிற்கிறார்’ என்று மைனா கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

டாஸ்க் 9-ஐ ஆரம்பித்தார் பிக் பாஸ். இதுவும் உடல் வலிமை சார்ந்த போட்டி. ஒவ்வொரு முதுகிலும் அனைத்துப் போட்டியாளர்களின் புகைப்படங்களின் துண்டுகள் கலவையாக ஒட்டப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடித்ததும் மற்றவரிடமிருந்து அந்தத் துண்டுகளைப் பறித்து தன்னுடைய புகைப்படத்தின் முழு வடிவத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களின் புகைப்படமாக இருந்தால் அதை வைத்துக் கொள்ளலாம். அதுதான் இந்த கேமில் தொடர்வதற்கான பாட்டரி சக்தியாக இருக்கும். ‘பாட்டரி’ இல்லையென்றால் களத்திலிருந்து அவர் வெளியேற வேண்டும். ஒருவர் தன் புகைப்படத்தை முழுமை செய்துவிட்டால் அவர் வெற்றியாளர்.

‘டிக்கெட் டு ஃபினாலே' – ஃபைனலுக்கு நேரடியாகச் செல்லும் அமுதவாணன்

முதல் ரவுண்டிலேயே தன் பாட்டரிகளை இழந்து வெளியேறினார் மைனா. இரண்டாவது ரவுண்டில் ரச்சிதா அவுட். ஷிவின் தன் புகைப்படத்தை முதலில் முழுமை செய்து முதல் இடத்தைப் பிடித்தார். மூன்றாவது ரவுண்டில் கதிரவன் வெற்றி. இவருக்கு இரண்டாவது இடம். பாட்டரி இல்லாததால் அசிம் அவுட். நான்காவது ரவுண்டில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் விக்ரமன். அமுதவாணனுக்கு நான்காவது இடம். பெரிதும் அடிதடி இல்லாமல் இந்த டாஸ்க் சுமுகமாக நடந்து முடிந்தது.

ஆக... அமுதவாணன் ஃபினாலே டிக்கெட்டைப் பெறுவது உறுதியாகி விட்டது. மற்றவர்கள் வாழ்த்து சொல்ல, உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கினாலும் ‘இருங்க... பிக் பாஸ் உறுதிப்படுத்தட்டும்’ என்று அவர் காத்திருந்தது முதிர்ச்சியான விஷயம். விக்ரமன் வெற்றி பெற்ற பிறகு, தன்னிடமிருந்த பாட்டரிகளை அமுதவாணனிடம் அளித்தார். இதனால்தான் அமுதுவால் ஆட்டத்தை விரைவில் முடிக்க முடிந்தது. கையில் அடிபட்டிருந்த ஏடிகே, விக்ரமனிடம் இதைப் பற்றி பிறகு விசாரித்தார். “அந்த இரண்டு பாட்டரிகளை எனக்குத் தந்திருக்கலாம். நான் இன்னமும் கொஞ்ச நேரம் ஆடியிருப்பேன்” என்று அவர் கேட்க “அமுதவாணன் வெற்றியின் எல்லையில் நிற்கிறார். மேலும் நீங்க அடிபட்ட கையோட அதிக நேரம் போராட வேணாம்ன்னு நெனச்சேன். யோசிச்சிதான் இதைச் செஞ்சேன்” என்று விக்ரமன் அளித்த விளக்கத்தை ஏடிகே ஏற்றுக் கொண்டார்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

“டாஸ்க்லாம் விளையாடுவாரான்னு விக்ரமனைப் பத்தி முதல்ல நெனச்சோம். ஆனா அவருக்கு மனவலிமை அதிகம்” என்று பிறகு விக்ரமனைப் பற்றிப் பாராட்டிக் கொண்டிருந்தார் ஏடிகே. வீட்டின் வாசலில் அனைவரும் வரிசையாக நிற்க, அமுதவாணனின் மீது மட்டும் ஃபோகஸ் லைட் விழ, டிரோன் மூலமாக டிக்கெட் பறந்து வந்தது. அடக்கமான மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டார் அமுதவாணன். மற்றவர்களின் முகங்களிலும் உண்மையான மகிழ்ச்சி இருந்தது. துளி வருத்தமோ, பொறாமையோ இல்லை. ‘எனக்கே கிடைச்ச மாதிரி இருந்தது’ என்றார் ஏடிகே. “நீங்கள் வாங்கிய அடிகள், பட்ட ரணங்கள், எடுத்த முயற்சிகள் போன்றவற்றுக்கு இது பரிசு... வாழ்த்துகள் அமுதா" என்று பாராட்டினார் பிக் பாஸ். பிறகு தனியாக கேமரா முன்பு வந்து அனைவருக்கும் நன்றி சொன்னார் அமுது.

வில்லங்கமாக நடந்த விருது விழா

மக்கள் சந்தோஷமாக இருந்தால் பிக் பாஸுக்குப் பிடிக்காதே?! எனவே வில்லங்கமான அயிட்டத்தை அடுத்து ஆரம்பித்தார். ‘BB Critics Awards’ (‘இங்கு விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லை’ என்கிற டேக் லைன் வேறு). “ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா உன் கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா” என்கிற விருதை அசிமிற்கு வழங்கிய ஏடிகே “கேப்டன்ற பேர்ல அவன் சொல்ற விஷயங்கள்லாம் முதல்ல நல்லாத்தான் இருக்கும். ஆனா கடைசில வேற மாதிரி முடியும்” என்று காரணம் சொல்ல, அதை ஏற்காமல் கழற்றி தூக்கி எறிந்து விட்டு நடந்தார் அசிம். இதனால் எரிச்சல் அடைந்த ஏடிகே காரணம் கேட்க “எனக்குப் பிடிக்கலை. அவ்வளவுதான்” என்றார் அசிம்.

இந்த விருது விழாவில் சிலர் வில்லங்கமான விருதுகளை ‘எதற்கு வம்பு?’ என்று மறுக்காமல் மௌனமாக வாங்கிக் கொண்டார்கள். தருபவர்களும் அதைப் புகழ்வது போல் காரணங்களை மாற்றி மனம் வலிக்காமல் சொன்னார்கள். சிலர் விளக்கம் கேட்டார்கள்; சிலர் சொன்னார்கள். ஆனால் துணிச்சலாக மறுத்தவர் அசிம் மட்டுமே. ‘இதை நான் ஏற்கவில்லை’ என்பதைச் சொல்வதற்கான அத்தனை உரிமையும் அவரிடம் இருக்கிறது. ஆனால் மறுக்கும் விதம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?.. அங்குதான் கோபத்தில் சறுக்குகிறார் அசிம். “என்னைப் பத்தி எனக்குத் தெரியும். இந்த விமர்சனமெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது" என்று உண்மையாகவே தன்னைப் பற்றி தன்னம்பிக்கையாக உணர்கிறவர்கள், இதற்கெல்லாம் எளிதில் கோபப்பட மாட்டார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

தன்னுடைய குட்டை பொதுவில் அம்பலப்படுத்தி விட்டார்களே என்று உள்ளூர நினைப்பவர்களுக்கும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கும்தான் அதிகமாகக் கோபம் வரும். இந்த கேட்டகிரியில்தான் அசிம் இருக்கிறார். விருதை மறுத்ததோடு, அதைத் தந்தவர்களை அவமானப்படுத்தும் திருப்பணியையும் அவர் சிறப்பாகச் செய்தார். இது பிக் பாஸ் ஆட்டத்தின் சதியாயிற்றே என்பது கூட அவருக்குத் தோன்றவில்லை. சிறிய கிண்டலைக் கூட ஏற்காத அச்சமும் தாழ்வுணர்ச்சியும்தான் கோபமாக அவருக்குள் இருந்து வெளியே வருகிறது.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணம்தான். பெரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒரு செருப்பு வந்து மேடையில் விழுகிறது. ‘எறிந்த நண்பர் இன்னொரு செருப்பையும் வீசினால் போட்டுக் கொள்ள உபயோகமாக இருக்கும்’ என்பது பெரியாரின் கூலான ரியாக்ஷன். இதுதான் சகிப்புத்தன்மை. இதுதான் முதிர்ச்சி. தன்னுடைய கருத்தியலின் மீது ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள், சிறிய சலசலப்புகளுக்கு அஞ்சவோ, கவலைப்படவோ மாட்டார்கள். “ஒருவர் உன்னை அவதூறு செய்தால் அதை மனதார நீயாகப் பெற்றுக் கொள்ளும் வரை அது உன்னுடையதில்லை” என்கிறார் புத்தர்.

‘பாருடா பன்னிக்குட்டில்லாம் பன்ச் டயலாக் பேசுது'

இந்த நோக்கில் விக்ரமனின் அணுகுமுறை முதிர்ச்சியானதாகவும் சகிப்புத்தனமாகவும் இருந்தது. ‘இந்த விருதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் தந்து விட்ட காரணத்திற்காக அணிந்து கொள்கிறேன்’ என்று ஜாலியாக எதிர்கொண்டார். ‘இதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது’ என்பதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை. ‘அய்யோ. என்னை அவதூறு செய்கிறார்களே’ என்று கவலைப்படுவதோ, "என்னையாடா சொல்றே?” என்று ஆத்திரப்படுவதோ முதிர்ச்சியின்மையின் அடையாளம்.

"பாருடா பன்னிக்குட்டில்லாம் பன்ச் டயலாக் பேசுது” என்கிற விருதை ரச்சிதா அளிக்க வேண்டும். அவர் தயக்கப்படாமல் இருந்திருந்தால் அசிமிற்குத் தந்திருப்பார். ஆனால் அச்சம் காரணமாக விக்ரமனைத் தேர்ந்தெடுத்தார். “ஏற்பதில் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் முதல்ல விருதோட உள்ளடக்கத்தை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு கொடுங்க” என்று அறிவுறுத்தினார் விக்ரமன். அசிமும் இதை ஆதரித்தது பாராட்டத்தக்க விஷயம். இந்த ரியாக்ஷனை எதிர்பார்க்காத ரச்சிதா தயங்கி விட்டு பிறகு “இன்னிக்கு விக்ரமன் ஃபன்னா பேசினாங்க” என்று பொருந்தாத காரணத்தைச் சொல்ல, ‘சரி... ஓகே...’ என்று விருதை அணிந்து கொண்டார் விக்ரமன்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

‘வேணாம்... வலிக்குது. அழுதுருவேன்...’ என்கிற விருதை அமுதவாணனுக்குத் தந்தார் மைனா. ‘போட்டோ டாஸ்க்ல... அமுதவாணனை எல்லோரும் பிடிச்சுக்கலாம்ன்னு விளையாட்டுக்குச் சொன்னப்ப, உண்மையாவே பயந்துட்டாரு’ என்கிற காரணத்தை மைனா சொல்ல, “ஆமாம். பயந்துட்டேன்” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டு விருதை ஏற்றுக் கொண்டார் அமுதவாணன். ‘இதுதான் அநியாயத்தைக் கண்டா பொங்கறதா?’ – இந்த விருதைத் தருவதற்கு விக்ரமனைத் தேர்ந்தெடுத்தார் ஷிவின். "அசிம் – தனலஷ்மி சண்டை, அமுதவாணன் – கதிர் சண்டை’ ஆகிய இரண்டு விவகாரங்களிலும் பிரச்னை ஓய்ந்த பிறகு விக்ரமன் உள்ளே வந்தது, தேவையில்லாத விஷயம்” என்கிற காரணத்தை ஷிவின் சொல்ல “தனலஷ்மி அழுதுட்டு இருக்கும் போது எப்படிங்க கேட்காம இருக்க முடியும்?” என்று தன் தரப்பு விளக்கத்தைச் சொன்னார் விக்ரமன்.

‘யாரு அந்த மிக்சர் பார்ட்டி?’

‘இவ்வளவு அமளி, துமளி நடக்குது. எதைப் பத்தியும் கவலைப்படாம இங்க ஒருத்தன் மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்கான்’ என்கிற விருதிற்காக கதிரவனைத் தேர்ந்தெடுத்தார் விக்ரமன். கதிரவன் சற்று கூட அலட்டிக் கொள்ளவில்லை. மிக கூலாக வந்து பெற்றுக் கொண்டார். ‘வீக்கெண்ட் ஆக்டர்’ என்கிற விருதிற்காக அசிமை துணிச்சலுடன் தேர்ந்தெடுத்தார் கதிரவன். "கமல் வரும் நாளன்று பாயிண்ட்டுகளைச் சிறப்பாகத் தொகுத்துச் சொல்லி விடுகிறார்" என்பது கதிரவன் சொன்ன ‘பாசிட்டிவ்’ காரணம். அது தனக்குச் சாதகமாக இருந்ததால் ‘கிளவர்’ என்கிற குறிப்புடன் ஏற்றுக் கொண்டார் அசிம். அதாவது அது வில்லங்கமான விருதாக இருந்தால் கூட, அசிமைப் புகழ்வது போல் காரணத்தை இணக்கமாகச் சொன்னால் அவர் இறங்கி வந்து விருதை ஏற்றுக் கொள்வாராம்.

அடுத்தது ‘பேமென்ட் வேஸ்ட்’ என்கிற விருதை அசிம் வழங்க வேண்டும். “எமோஷனை வெளிப்படுத்தலை” என்கிற காரணத்தைச் சொல்லி ரச்சிதாவிற்கு இதை வழங்கினார் அசிம். ‘இவர் கிட்ட என்னத்த பேசி...’ என்ற தயக்கத்துடன் மௌனமாக விருதைப் பெற்றுக் கொண்டார் ரச்சிதா. இதே விருது அசிமிற்கு வழங்கப்பட்டிருந்தால் வீடு தலைகீழாகியிருக்கும். ‘உங்க மைக்கிற்கு எதற்கு பாட்டரி?’ என்கிற விருதை ரச்சிதாவிற்கு வழங்கினார் ஷிவின். "வாயைத் திறந்து பேசினால்தானே மைக் உபயோகம்?!" என்பது ஷிவின் சொன்ன காரணம்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

‘விஷபாட்டில் ஷிவின்' – விருது தந்த அசிம்

‘நோ சூடு... நோ... சொரணை’ என்பது அடுத்த வில்லங்கமான விருது. இதை வேறு எவராக இருந்தாலும் நிச்சயம் ஆட்சேபித்திருப்பார்கள். மறுத்திருப்பார்கள். ஆத்திரப்பட்டிருப்பார்கள். ஆனால் கதிரவன் அலட்டிக் கொள்ளாமல் வந்து வாங்கிச் சென்றார். இந்த அளவிற்கு ஒருவர் நிதானமாக இருப்பது ஒரு நல்ல பண்பு. ‘டிரோல் மெட்டீரியல்’ என்கிற விருதை மைனாவிற்குத் தந்து மகிழ்ந்தார் கதிரவன். ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியிலேயே இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. மிக கூலாக இதை வாங்கிக் கொண்டார் மைனா.

‘விஷ பாட்டில்’ என்கிற டைட்டிலை ஷிவினுக்குத் தந்தார் அசிம். "ஓட்டு மொத்த சீசனின் விஷபாட்டில் இவங்கதான். வாரம் முழுக்க அமைதியா இருந்துட்டு கமல் சார் எபிசோட்ல மட்டும் பாயிண்ட் பாயிண்டா பேசுவாங்க. திடீர்னு பொங்கிடுவாங்க” என்று காரணம் சொன்ன அசிம், கூடுதலாக ‘Very Bold’ என்பதையும் ஜாக்கிரதையாக இணைத்துக் கொண்டார். "நான் வார நாட்களிலும் பேசத்தான் செய்கிறேன்” என்கிற மறுப்புடன் விருதை ஏற்றுக் கொண்டார் ஷிவின். (அசிம் சொன்ன காரணம் அவருக்கே கூட பொருந்தும் – வீக்கெண்ட் ஆக்டர்!).

‘முந்திரிக்கொட்டை’ என்கிற விருதை அசிமிற்குத் துணிச்சலாகத் தந்து விட்டார் ரச்சிதா. சிரித்துக் கொண்டே ஜாலியான, சாதகமான காரணத்தை அவர் சொன்னதால், அதே சிரிப்புடன் அசிமும் பெற்றுக் கொண்டார். சிரிப்பாக அல்லாமல், வில்லங்கமான காரணத்தை ரச்சிதா சொல்லியிருந்தால் முந்திரிக்கொட்டை மாதிரி அசிமால் வறுத்தெடுக்கப்பட்டிருப்பார். ‘தொட்டாச் சிணுங்கி’ என்கிற விருதை ரச்சிதாவிற்கு வழங்கினார் ஏடிகே.

‘பூமர்’ என்கிற விருது வழங்கப்பட வேண்டும். ‘பழைய விஷயங்களையெல்லாம் பேசுகிறவர்’ என்கிற காரணத்தைச் சொல்லி விக்ரமனுக்குத் தந்தார் அமுதவாணன். "பழைமைவாதம் பேசுகிறவர்கள்தான் பூமர். ஆனால் நான் நவீன முற்போக்கான விஷயங்களை ஆதரிக்கிறவன். எனக்குப் பொருந்தாது. இருந்தாலும் தந்த காரணத்திற்காக ஏற்றுக் கொள்கிறேன்" என்று பெற்றுக் கொண்டார் விக்ரமன். ‘ஜால்ரா’ என்கிற விருதுக்கு முதலில் ரச்சிதாவின் பெயரைச் சொல்லி விட்டு, பிறகு மைனாவிடம் தந்தார் அமுதவாணன். ‘மணி சொன்னதையெல்லாம் ஆமோதித்தார்’ என்பது காரணம். இதை மைனா ஆட்சேபித்து மறுத்தார்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

‘கிரிஞ்ச் யார்?’ – அசிமா... விக்ரமனா?

கடைசி விருது. இதில்தான் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கிரிஞ்ச்’ என்கிற விருதை விக்ரமன் வழங்க வேண்டும். "எனக்கு ஒரு அர்த்தம் தெரியும். இருந்தாலும் நீங்களும் தெளிவுப்படுத்துங்க” என்று ஜாக்கிரதையாகச் சபையில் அவர் கேட்டுக் கொண்டது புத்திசாலித்தனம். "Not enjoyable. சுவாரஸ்யமில்லாம பேசறது" என்பது ஷிவினின் விளக்கம். “ஓகே. இதை நான் அசிமிற்கு தரேன். அப்பப்ப பொருந்தாத பழமொழிகள் சொல்வாரு. நிறைய முறை இதை அவருக்கு சுட்டிக் காட்டியிருக்கேன்” என்று விக்ரமன் சொல்ல, அப்போதே அசிமிற்கு மூக்கு சிவந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு மேடைக்கு வந்தார். அப்போதே தெரிந்து விட்டது, அவர் கடுமையான மறுப்பை முன் வைக்கப் போகிறார் என்று.

"அது என்ன பழமொழி... அது என்ன ஒரு நாள்... அது என்ன எப்பப்பாரு அரசியலு... அது என்ன எப்பப்பாரு ஷவினுக்கு சப்போர்ட்டு... அது என்ன எப்பப்பாரு ‘மக்கள் பார்க்கிறாங்கன்னு’ சொல்றது... நீங்கதான் கிரிஞ்சு விக்ரமன். உங்க தலைல மாட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க... பிக் பாஸ் இதை விக்ரமன் தலைல மாட்டிப்பாரு... அவருக்குத்தான் இது பொருத்தம்... நீங்கதான் சப்பையா பேசறீங்க... ஜால்ரா அடிக்கறீங்க... உங்க பாச்சால்லாம் என் கிட்ட பலிக்காது. வேற ஆளைப் பாருங்க விக்ரமன்...’’ என்றெல்லாம் எகத்தாளமாகப் பேசி விட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டார் அசிம். (கெத்தாகப் பேசி விட்டாராம்!).

பிக் பாஸ் ஆட்டத்தில் இது போன்ற சீண்டல்கள், கோள்மூட்டுதல்கள் இருக்கும் என்பது எவருக்கும் புரிந்த விஷயம். ‘இந்த விருது எனக்குப் பொருந்தாது. ஏற்கவில்லை’ என்று மறுத்து விட்டு அசிம் இறங்கியிருந்தால் கூட அது நியாயம். ‘அது விக்ரமனுக்குத்தான் பொருந்தும்’ என்று நியாயமான காரணம் சொன்னால் கூட ஓகே. ஆனால் தந்தவருக்கே அழிச்சாட்டியமாகச் சுமத்தி விட்டு, அநாவசியமான வார்த்தைகளை விடுவது அழகல்ல. அசிமின் ஈகோ சிறிது உசுப்பப்பட்டால் கூட ‘தான் என்ன செய்கிறோம்’ என்பதே அவருக்குப் புரியாது. கண்மூடித்தனமான ஆத்திரம் வரும். இப்போதும் அதுதான் நிகழ்ந்தது. விக்ரமன் அரசியல் பேசினாலே அசிமிற்கு எரிச்சல் வந்து விடுகிறது. அரசியல் இல்லாமல் இங்கு ஒரு விஷயமும் நடப்பதில்லை என்பது ஓர் எளிய புரிதல்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

"எனக்கு அப்படி விருது இருந்தா கொடுங்க. வாங்கிக்கறேன்... அவமதிப்பா பேசாதீங்க... பிக் பாஸ் இதை அசிம் ஏற்க மறுத்து விட்டார். அவரே ஒரு நாள் இதை உணர்ந்த பிறகு தலையில் மாட்டிப்பார்” என்று சரியான பதிலடியைத் தந்து விட்டு புன்னகையுடன் இறங்கினார் விக்ரமன். “இந்த விருது ஸ்டோர் ரூம் வழியா மறுபடியும் வரும்ன்னு தோணுது” என்று சரியாக யூகித்துச் சொன்னார் மைனா. ஒருவழியாக இந்த விருது விழா இனிதே (?!) நடந்து முடிந்தது.

“அசிம் ஏன் இப்படிப் பண்றான். மத்தவங்களை மட்டும் என்ன வேணா சொல்றான். ‘பேமென்ட் வேஸ்ட்’ன்னு ரச்சிதாவிற்குச் சொல்றான். ஆனா தனக்கு வந்தா மட்டும் கோபப்படறான். நான் தந்த விருதைத் தூக்கி எறிஞ்சது என்னை அவமானப்படுத்தினது மாதிரி இருக்கு. ஒரு விஷயத்தை அவன் அஞ்சு வாட்டி சொல்லிப் பதிவு பண்றதை நீங்க சொல்ல மறந்துட்டீங்க. காமெடின்ற பேர்ல அவன் சொல்றது எரிச்சலாத்தான் வரும். ரசிக்கவே முடியாது” என்று விக்ரமனிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார் ஏடிகே. "கேமராக்காக யாரு பண்றாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்” என்றார் விக்ரமன்.

‘இந்த வாரம் வெளியேறப் போவது யார்?’

இன்னொரு பக்கம், அமுதவாணனிடம் தன் ஆதங்கத்தைப் பேசினார் அசிம். “வீக்கெண்ட் ஆக்டர்... முந்திரிக்கொட்டை... இதையெல்லாம் நான் வாங்கிக்கிட்டேன். கிரிஞ்ச்-ன்றது எனக்குப் பொருந்தாது” என்று நியாயப்படுத்தி அசிம் சொல்ல, அதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார் அமுது. ‘நாடோடிகள்’ திரைப்படக் காட்சி மாதிரி, சற்று முன் நடந்த விருது விழா தொடர்பான புகைப்படங்களை மிகுந்த அழகுணர்ச்சியுடன் பதிவு செய்து பிரேம் செய்து அனுப்பியிருந்தார் பிக் பாஸ். மக்கள் அதைப் பார்த்து ‘ஹே.. .சூப்பரா இருக்குல்ல’ என்று மகிழ்ந்தார்கள். தனக்கு அளிக்கப்பட்ட புகைப்படம், எதிர்மறையான அடையாளத்துடன் இருந்தாலும் “ரொம்ப அழகா இருக்கு. இந்த விருதை நான் ஏற்கலை. இருந்தாலும் இந்த புகைப்படத்தை நான் பாதுகாப்பா வெச்சுப்பேன்” என்று விக்ரமன் சொன்னது மனமுதிர்ச்சியின் அடையாளம்.

பிக் பாஸ் 6 நாள் 89
பிக் பாஸ் 6 நாள் 89

‘கிரிஞ்ச்’ என்கிற வார்த்தை சமீபத்தில் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ‘பயப்படுவது போல் முகஸ்துதி செய்வது. சங்கடம், அச்சம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் வருவது போல் நடப்பது’ என்பதுதான் அதற்கான அர்த்தம் என்கிறார்கள். சமய சந்தர்ப்பமில்லாமல் பொருத்தமில்லாத பொன்மொழிகளை, திருக்குறள்களைச் சொல்லி ‘நானும் தமிழேண்டா’ என்று வம்படியாகக் காட்டிக் கொள்ளும் அசிமிற்கு இந்த விருது ஒருவகையில் பொருத்தம்தான்.

இன்று பஞ்சாயத்து நாள். பஞ்சாயத்துத் தலைவருக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. எனவே வார இறுதி எபிசோடுகள் ரகளையாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். இந்த வார எவிக்ஷனிலும் ஓர் அதிரடி திருப்பம் இருப்பதாகச்சொல்கிறார்கள். காத்திருந்து பார்ப்போம்.
இந்த வாரம் யார் வெளியேறுவார், வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.