பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் தாமரை செல்வி, மேடை நாடக நடிகர் என்பது நாம் அறிந்ததே! மணப்பாறையைச் சேர்ந்த ராஜகுரு அம்சபிரியா நாடகக் குழுவில் தாமரைச் செல்வி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

"என் சொந்த ஊர் மணப்பாறை. என் கணவர் ராஜகுரு. தவில் வித்துவான். நான் மேடைகளில் நடித்து, பாடல் பாடுவேன் என்றவாறு அம்சபிரியா தொடர்ந்தார். 35 வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். இந்தத் தொழிலுக்கு வந்த பிறகு பொழப்புக்கு பெரிய கஷ்டமெல்லாம் வந்ததில்லை. மக்களுடைய ஆசீர்வாதம் தான் எங்களுடைய வளர்ச்சிக்கு காரணம். ரெண்டு வருஷம் கொரோனாவால் எல்லாரும் கஷ்டப்பட்டோம்.
எங்க கலைக்குழுவில் தாமரை செல்வி இருந்தாங்க. அவங்க நல்ல நடிகை. சிரிப்பழகி. எங்க கலைக்குழுவில் எல்லாருக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும். பெரிய டான்சர். பாசத்திலும், குணத்திலும் அருமையான பொண்ணு. அவங்க ஜெயிக்கணும் என்பது எங்களுடைய ஆசை என்றநடிகர் SM குமரேசன் தொடர்ந்தார்.

நாங்க கொரோனா நேரத்தில் வாழ்வாதாரம் இழந்து ரொம்பவே கஷ்டப்பட்டோம். மறுபடி லாக்டெளன் போட்டாங்கன்னா எல்லாரும் ரொம்ப பாதிக்கப்படுவோம்.
தாமரை செல்வி தங்கையை பற்றி சொல்லணும்னா நல்ல நடிகை. என்கூட சேர்ந்து நடிக்கும்போது ரொம்ப அன்பாகவும், பாசமாகவும் பழகும். இப்போ இந்த அளவுக்கு பிக்பாஸ் போய் ஜெயிக்கக்கூடிய அளவுக்கு வந்தது எங்க நாட்டுப்புற கலைஞர்கள் எல்லாருக்கும் முதல் வெற்றியை வாங்கிக் கொடுத்தது, தாமரை செல்வி. அவங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். நாடகக் கலையில் இருந்து பிக்பாஸ் போயிருக்குன்னு எங்க ஊருக்கே ரொம்ப பெருமை!' என்றார்.

இதுதவிர, தாமரையுடன் நாடகம் நடித்த வெவ்வேறு குழுக்களை சேர்ந்த மற்ற நடிகர்களிடம் பேசும்போது, தாமரைக்கு ஒரு நாள் நைட்டு மேடையில் பாட்டு பாடி, ஆடுறதுக்கு 5000 ரூபாய் கொடுப்பாங்க. அந்தப் புள்ளைக்கு பல ஊருல ரசிகர்கள் இருக்காங்க. சில ஊர்களில் தாமரை செல்வியை கூட்டிட்டு வாங்கன்னே சொல்லுவாங்க. இப்ப அது பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கூட பலர் அந்தப் புள்ள வந்ததும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்றாங்க.. அந்த புகழை அனுபவிச்சிட்டு வெளியே வந்த பிறகு தாமரை மறுபடி நாடகத்துக்கு வருமான்னே எங்களுக்கு தெரியலை. அப்படி அது வந்தாலும் அதுக்கு இந்தக் காசு தான் கொடுப்பாங்க.. அது அதிகமா கேட்டா அதை யாரும் கூப்பிட மாட்டாங்க. இந்த புகழ் நிரந்தரமில்லைங்கிறதை அந்தப் புள்ள புரிஞ்சுகிட்டா அதோட வாழ்க்கை நல்லா இருக்கும்.. எங்க கலைக்குழுவில் இருந்து ஒரு புள்ள இன்னைக்கு நாடே பார்க்கிற நிலைமைக்கு வந்துருக்குன்னு எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்!" என்றனர்.