Published:Updated:

பிக் பாஸ் அல்டிமேட் 2: மிரட்டிய வனிதா; பத்த வெச்ச சுரேஷ்; அடித்து ஆடும் பாலா! முதல் நாளேவா இப்படி?!

பிக் பாஸ் அல்டிமேட் 2

இது OTT-ல் மட்டும் ஒளிபரப்பாவதால் சில விஷயங்களில் பிக் பாஸ் இறங்கி ஆட முடிவெடுத்து விட்டார். எனவே இனிமேலும் ‘பிக் பாஸை குழந்தைகளும் பார்க்கிறார்களே’ என்று நாம் சிணுங்க முடியாது. பார்க்காமல் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Published:Updated:

பிக் பாஸ் அல்டிமேட் 2: மிரட்டிய வனிதா; பத்த வெச்ச சுரேஷ்; அடித்து ஆடும் பாலா! முதல் நாளேவா இப்படி?!

இது OTT-ல் மட்டும் ஒளிபரப்பாவதால் சில விஷயங்களில் பிக் பாஸ் இறங்கி ஆட முடிவெடுத்து விட்டார். எனவே இனிமேலும் ‘பிக் பாஸை குழந்தைகளும் பார்க்கிறார்களே’ என்று நாம் சிணுங்க முடியாது. பார்க்காமல் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் நாளே வீடு நன்றாக பற்றிக் கொண்டது. இதற்கு முக்கியமான காரணமாக இருப்பவர்களாக இருவரைச் சொல்லலாம். ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இன்னொருவர் வனிதா. முன்னவர் நெருப்பு என்றால் பின்னவர் அடுப்பு. ‘பக்’கென்று பற்றிக் கொள்கிறது. அல்டிமேட்டின் போட்டியாளர்கள் அனைவருமே முன்அனுபவம் மிக்க, பயிற்சி பெற்ற போராளிகள் என்பதால் முதல் நாளில் இருந்தே இறங்கி விளையாடத் துவங்கி விட்டார்கள். நிரூப், பாலா போன்ற இளைஞர்கள் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். மாறாக ஜூலி, அனிதா போன்றவர்கள் இன்னமும் அடக்கி வாசிக்கிறார்கள். தாடி பாலாஜி, சிநேகன் போன்றவர்களும் சந்தடியில்லாமல் இருக்கிறார்கள்.

‘முதல் நாளில் என்ன நடந்தது?’ என்று பார்ப்பதற்கு முன்னால் இரண்டு முக்கியமான விஷயங்கள். ஒன்று, இது ‘லைவ்’ ஸ்டீரிமிங் என்று சொல்லப்பட்டாலும் அது ‘லுலுவாய்க்குதான்’. முதல் நாளில் நடந்த நிகழ்வுகள், மறுநாளில் எடிட் செய்யப்பட்டு ‘முழு தினமாக’ நமக்குக் காட்டப்படுகின்றன. ஆகவே இதை 24x7 ஒளிபரப்பு என்பதுதான் சரியாக இருக்கும். நேரடி ஒளிபரப்பு அல்ல. போட்டியாளர்கள் சாவகாசமாக அமர்ந்து பேசிக் கொள்ளும் சுயபுராணங்கள், உரையாடல்கள், போன்ற அனைத்தையும் கவனிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதுதான் இதன் முக்கியமான அனுகூலம்.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

இரண்டாவது விஷயம். இந்த 24x7 ஸ்டீரிமிங்கை சிறிதாவது எட்டிப் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது அழுத்தமாகப் புரியும். பிக் பாஸ் எடிட்டிங் டீமில் உள்ள ஆசாமிகளுக்கு நாம் கோயில் கட்டி கும்பிடலாம். ஆம், இத்தனை சீசன்களாக அவர்கள் செய்து வந்த மகத்தான சேவையின் அருமை இப்போதுதான் நமக்கு நன்றாகப் புரிகிறது. அந்த அளவிற்கு ‘ஒரு நாள்’ காட்சிகள் கன்னாபின்னாவென்று சிதறிக் கிடக்கின்றன. ஒன்று, சிநேகன் நிதானமாக வாக்கிங் செல்லும் சரித்திர சம்பவத்தை அரைமணி நேரம் பொறுமையாக பார்க்கும் வாய்ப்பு. இல்லையென்றால் பதினான்கு பேரும் கூடி சந்தைக்கடை போல் பேசும் ‘கசகச’வென்ற காட்சிகள். இவைதான் நமக்கு காணக் கிடைக்கின்றன.

இவற்றிலிருந்து அவசியமானவற்றை மட்டும் தொகுத்து அவற்றை கோர்வைப்படுத்தி, சுவாரஸ்யமாக சமைத்துத் தரும் எடிட்டிங் டீமின் திருச்சேவைக்கு வந்தனம். எடிட்டிங் என்கிற நுட்பம் எத்தனை முக்கியமானது என்பதையே இது உணர்த்துகிறது.

எபிசோட் 2, நாள் 1-ல் நடந்தது என்ன?

கமல் அனைவரையும் வீட்டுக்குள் அனுப்பி வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றார் அல்லவா? போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே அமர்ந்திருக்கும் போது “கார்டன் ஏரியாவில் சோறு போடறோம். ஓடியாங்க” என்று பிக் பாஸ் அழைத்தார். மக்கள் ஆவலாக வந்தனர். அசைவ உணவு வகைகள் முதற்கொண்டு விதம் விதமான உணவுகள் காத்திருந்தன. அதற்கு முன்னால் ஷாம்பெயினும் காத்திருந்தது. ஆம், சீமைச்சாராயம். ‘இது நான்-ஆல்கஹால் ஷாம்பெயின்’ என்பதை வனிதா கண்டுபிடித்துச் சொன்னாலும் மக்களில் சிலர் தயங்கினார்கள்.

அதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம். இது OTT-ல் மட்டும் ஒளிபரப்பாவதால் சில விஷயங்களில் பிக் பாஸ் இறங்கி ஆட முடிவெடுத்து விட்டார். எனவே இனிமேலும் ‘பிக் பாஸை குழந்தைகளும் பார்க்கிறார்களே’ என்று நாம் சிணுங்க முடியாது. பார்க்காமல் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். இது பதினாறு வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான ஷோ என்பது அதன் தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

ஷாரிக்கின் அதிர்ஷ்டம், சுஜாவின் துரதிர்ஷ்டம்

மக்கள் ஆவலாக விருந்தை நோக்கி பாய்ந்தபோது "இப்படித்தான்… சோறு போட ஆரம்பிச்சு என்னை வெளியே அனுப்ப பிளான் பண்ணினாங்க" என்று டிக்கெட் டூ பினாலே சம்பவத்தில் தான் முன்னர் பாதிக்கப்பட்ட கதையை நினைவுகூர்ந்தார் நிரூப். இந்தச் சமயத்தில் பூத்தில் இருந்த போன் ஒலிக்க, மற்றவர்களை முந்திச் சென்று பாய்ந்து எடுத்தார் ஷாரிக். அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். முதலில் போனை எடுத்ததால் அவர்தான் முதல் வாரத்தின் தலைவர். (எதிர்பாராததை எதிர்பாருங்கள்). ஆனால் இந்த அதிர்ஷ்டம் அவருக்கு வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை. ஆளாளுக்கு அவரை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக வனிதாவின் அலப்பறையைத் தாங்க முடியாமல் தம்பி நொந்தே விட்டார்.

“வீட்டைத் திறம்பட நிர்வகியுங்கள்" என்று ஷாரிக்கிற்கு வாழ்த்து சொன்னார் பிக் பாஸ். வீட்டினுள் செங்கோல், கீரிடம் போன்ற செட் பிராப்பர்ட்டிகள் இருந்தன. ஒருவேளை அதை முதலில் எடுத்துக் கொண்டால், தனக்கும் ஏதாவது பதவி கிடைக்கலாம் என்று ஆசைப்பட்டு எடுத்து வைத்துக் கொண்டார் வனிதா. இல்லை. அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் ‘ராஜமாதா’ வேலை மட்டுமே கிடைத்தது. இதை ஜாலியாக கிண்டல் செய்தார் சுரேஷ்.

சிலர் ஷாம்பெயின் கிளாஸை பாதி அருந்திவிட்டு மீதம் வைத்திருந்ததால், அனைவரையும் குடித்து காலி செய்யச் சொன்னார் பிக் பாஸ். சோறு போட்டு விட்டு கூடவே மருந்தையும் வைப்பதில் பிக் பாஸ் வல்லவர். எனவே அவருடைய அறிவிப்பின் பின்னால் ஒரு கணக்கு இருந்தது. ‘யாருடைய கிளாஸின் அடியில் சிவப்பு புள்ளி இருக்கிறது?’ என்று கேட்கப்பட்டது. அது சுஜா வருணியின் கிளாஸ். ஷாரிக்கிற்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் சுஜாவிற்கு துரதிர்ஷடம் அடித்தது. ஆம், அவர்தான் பாதாள சிறையைத் திறந்து வைக்கும் பெருமையை அடைவதோடு அதில் சில மணி நேரங்கள் தங்கியும் இருக்க வேண்டுமாம். (ஒரு ஜூஸ் குடிச்சது குத்தமாய்யா?)

ஆனால் சுஜா தனியாகச் செல்ல வேண்டாம். ‘Restricted Area’ என்று போடப்பட்டிருந்த பகுதியைத் தாண்டி சிறப்பு படுக்கையில் சென்று புரண்டு ‘விதிமீறலை’ நிகழ்த்திய காரணத்தினால் பாலாஜிக்கும் சேர்த்து சிறைத் தண்டனை கிடைத்தது. “ஹப்பாடா... தனியாப் போறதுக்கு எனக்கு பயமா இருந்தது” என்று நிம்மதியாக பெருமூச்சு விட்டார் சுஜா. “எப்படியும் தண்டனையை அனுபவிக்கப் போறேன். அப்படின்னா இன்னொரு தடவை போய் பெட்ல படுத்துட்டு வர்றேன்” என்று ஓடினார் பாலாஜி. (வெளங்கிடும்).

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

“என்ன பிக் பாஸ்... போன சீசன்ல வெச்ச தட்டு அப்படியே கழுவாம கிடக்குது?” என்கிற அனத்தலுடன் பாதாளச் சிறையினுள் பாலாஜி முதலில் இறங்க, தனது ‘புசு புசு’ ஆடையை தூக்கிப் பிடித்தபடி படியில் இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார் சுஜா. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். பிறகு சுஜாவின் கவுனை எடுத்து அணிந்து கொண்ட சுரேஷ் “கொசு வலை மாதிரியே இருக்கு... கொசு கடிக்காம இருக்கும்” என்று சொல்லியபடி ஜாலியாக வலம் வந்தார்.

“இன்ஸ்டாவில் என்ன ஸ்டேடஸ் போடுவீங்க?”

விடிந்தது. பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் நாள் பாடலாக ‘வாரேன்... வாரேன்... சீமராஜா’ ஒலித்தது. புதிய லோகோவை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயனுக்கான டெடிகேஷன் போலிருக்கிறது. இந்தப் பாடலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அஞ்சு மார்க் கேள்விக்கு விடை சொல்ல பயன்படும். (முதல் நாளின் ‘வேக்அப்’ சாங் எது?!).
மணி அடித்தது. போஸ்ட் பாக்ஸில் கடிதம் வந்திருப்பதற்கான அடையாள ஒலி அது. பாய்ந்து சென்று எடுத்த பாலாஜி ‘எதுக்கு வம்பு’ என்று அதை அபிநய்யிடம் கொடுத்து விட்டார். பெரிதாக ஒன்றுமில்லை. ‘காலை கலாட்டா’ என்கிற டாஸ்க்கிற்கான அறிவிப்பு அது. "உங்களிடம் மொபைல் போன் தரப்பட்டால் சமூகவலைத்தளத்தில் முதல் நாளில் என்ன ஸ்டேட்டஸ் போடுவீர்கள்?” என்கிற அதிமுக்கியமான விஷயத்தை அனைவரும் கேமரா முன் வந்து சொல்ல வேண்டுமாம்.
பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

ஆளாளுக்கு ஒரு செய்தி சொன்னார்கள். ‘Live life one day ahead of time’ என்கிற பொன்மொழியைச் சொன்னார் நிரூப். (ஒளிபரப்பாகும் ஸ்டீரிமிங் பாணிக்கு முரணான செய்தி இது). "புதிய நண்பர்களுடன் புதிய தொடக்கம்” என்று புன்னகையுடன் சொன்னார் ஜூலி. (ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்!). ‘வாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பில்ல’ என்று மையமாக செய்தி சொன்னார் அபிராமி. (யாருக்கு... யாருக்கோ?!). பிக் பாஸ் வீடு பின்னணியில் இருக்க புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாராம் தாமரை. (வீடு மேலயே கண்ணா இருக்காங்க!). இருப்பதிலேயே ‘தாடி பாலாஜி’தான் ஸ்மார்ட். “Vote for Me” என்று அவசியமான செய்தியைச் சொன்ன அவரின் சமயோசிதத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

வீட்டின் தலைவருக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. காலையிலேயே படுக்கையில் அவருக்கான காபியைத் தர வேண்டுமாம். அவருக்குப் பிடித்தமான உணவை சமைத்து தர வேண்டுமாம். அவர் சாப்பிட்ட பின்புதான் மற்றவர்கள் சாப்பிட வேண்டுமாம். இல்லையென்றால் அவருடைய அனுமதியைப் பெற்றுதான் சாப்பிட வேண்டுமாம். யாராவது தவறு செய்தால் சிறைத்தண்டனை தருவதற்கான அதிகாரம் தலைவருக்கு உண்டு. ‘Restricted Area’வில் யாரும் செல்லாதவாறு பாதுகாக்க வேண்டியது தலைவரின் கடமைகளுள் ஒன்றாம். ‘யாராவது அப்படிச் சென்றால் தலைவர் சிறைக்குச் செல்ல வேண்டும்’ என்று தானே ஒரு வரியை சேர்த்து வாசித்து குறும்பு செய்தார் பாலா. (இன்னொரு பாலாஜியை இனிமேல் ‘பாலா’ என்று குறிப்பிடலாம்).

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

சுருதியுடன் தனிமையில் அமர்ந்து தீவிரமாக ‘ஸ்ட்ராட்டஜி’ பேசிக் கொண்டிருந்தார் நிரூப். “எல்லோருமே முன்ன விளையாடியிருக்காங்கன்றதால இப்ப டிப்ளமஸியா ஆடறாங்க... பாலா கூட அவன் சீசன்ல நல்லாத்தான் விளையாடினான். ஆனா ஜெயிச்சது என்னமோ ஆரிதான்” என்று மக்கள் இறங்கி அடித்து ஆடாத குறையை ஆதங்கமாக நிரூப் சொல்லிக் கொண்டிருக்க, எல்லாமே புரிந்தது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் சுருதி. (இதுவே பிரியங்காவாக இருந்திருந்தால் இரண்டாவது நிமிடத்தில் ஒரு வாக்குவாதம் நிகழ்ந்திருக்கும். நீ... ஒண்ணு பண்றே... ஸ்மார்ட்டாதான் பண்றே...).

‘முதல் நாளிலேயே நாமினேஷன் அதிரடி’

“நீங்க என்ன இறங்கி ஆடறது... நான் ஆடறேன் பாரு... இனிமேதான் தரமான சம்பவங்களைப் பார்க்கப் போறீங்க” என்று பிக் பாஸ் முடிவு செய்து கொண்டார் போலிருக்கிறது. முதல் நாளிலேயே அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். ஆம். Nomination Day. “அதுக்குள்ளேயாவா. கொஞ்சம் டைம் கொடுங்க பிக் பாஸ்” என்று சிலர் கெஞ்சினாலும் பிக் பாஸ் அசரவில்லை.
பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

முதல் ஆளாக அழைக்கப்பட்டவர் நிரூப். (இதுவும் அஞ்சு மார்க் கேள்விதான்). ஐந்தாவது சீசனில் தேவதை மாதிரி சிறகுகளுடன் அமைக்கப்பட்டிருந்த வாக்குமூல அறையின் நாற்காலி, இந்த முறை சாத்தானின் அடையாளம் போல டெரராக அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் அந்த மாற்றம் வசீகரமாக இருந்தது. உள்ளே வந்து அறையின் மாற்றத்தை வியந்த நிரூப்பை “எப்படியிருக்கு எங்க வேலை?” என்று சர்டிஃபிகேட்டை கேட்டு வாங்கி மகிழ்ந்தார் பிக் பாஸ்.

நாமினேஷன் சடங்கு ரணகளமாக ஆரம்பித்தது. “எங்களுக்குள்ள முன்னாடியே ரிலேஷன்ஷிப் இருந்தது. ஆனா அப்ப பார்த்த ஆளா இப்ப அவங்க இல்லை” என்று வெளிப்படையான காரணத்தைச் சொல்லி அபிராமியை நாமினேட் செய்தார் நிரூப். இன்னொருவர் சுரேஷ் தாத்தாவாம். ரொம்பவும் செயற்கையாகவும் மிகையாகவும் ஆடுகிறாராம். வனிதாவும் சுரேஷூம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் போனால்தான் ஆச்சர்யம். “ரொம்ப ஓவரா பண்றாங்க” என்கிற காரணத்தைச் சொல்லி வனிதாவை நாமினேட் செய்தார் பாலா.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

“புதுசா கல்யாணம் ஆனவரு... சீசன் ஒண்ணுல Runner-up-ஆ வந்தவரு. வெற்றியை ஏற்கெனவே அனுபவித்தவர்” என்கிற விநோதமான காரணத்தைச் சொல்லி சிநேகனை நாமினேட் செய்தார் வனிதா. இவர் நாமினேட் செய்த இன்னொரு நபர் ‘அனிதா’. பழிக்குப் பழியாக அனிதாவும் வனிதாவை நாமினேட் செய்தார். (வனிதா vs அனிதா...). “டபுள் மீனிங்க்ல ஓவரா பேசறாரு” என்று சொல்லி சுரேஷை நாமினேட் செய்தார் பாலாஜி. சிநேகன் மட்டுமே சற்று பாசிட்டிவ்வாக பேசினார். “யாரு மேலயும் தவறு கண்டுபிடிக்கலை. கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்கிற காரணத்தினால் பாலாஜி மற்றும் நிரூப்பை நாமினேட் செய்கிறேன்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘ஆமான்னா. குடி... இல்லைன்னா... கடி’

இந்தத் தலைப்பில் அடுத்த டாஸ்க் நடத்தப்பட்டது. அனைத்து போட்டியாளர்களும் டைனிங் டேபிளில் அமர வேண்டும். யாராவது ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொல்ல வேண்டும். அதற்கு ‘ஆமாம்’ என்று ஒப்புக் கொள்கிறவர்கள் பாகற்காய் ஜூஸை குடிக்க வேண்டும். ‘இல்லை’ என்று மறுப்பவர்கள் விரல் அப்பளத்தை கடிக்க வேண்டும். ஆனால் இந்த விதியை தலைகீழாகப் புரிந்து கொண்டு சொதப்பித் தீர்த்தார்கள். பிக் பாஸ் தலையிட்டு எச்சரிக்க வேண்டியதாக இருந்தது. சிலர் டாஸ்க்கின் போது அடிக்கடி எழுந்து வெளியே சென்றார்கள். ஒரே சமயத்தில் பலர் கன்னாபின்னாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். (24x7 வடிவத்தில் இதைப் பார்த்திருந்தால் பைத்தியம் பிடித்திருக்கும்!).

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

“நீங்களே ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொல்லலாம். கேள்விகள் தீர்ந்தால் குடுவையில் இருக்கும் சீட்டை எடுத்து வாசிக்கலாம்” என்கிற ஆப்ஷனை பிக் பாஸ் ஆரம்பத்திலேயே தந்திருந்தார். மக்கள் இணக்கமாக நடந்திருந்தால் இந்த டாஸ்க்கை ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நடத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தானே கேள்வி கேட்டால் அது பிரச்னையாகி விடலாம் என்பதால் (ராஜூ எஃபெக்ட்டோ?!) குடுவையில் இருந்தே எடுத்து வாசித்தார்கள். பல கேள்விகள் வில்லங்கமாக இருந்தன. குறிப்பாக ஒரு கேள்விக்கு வனிதாவின் எதிர்வினை ரணகளமாக அமைந்தது.

“அப்பா வைத்திருந்த சரக்கை திருட்டுத்தனமாக எடுத்து குடித்ததில்லை. அழையாத திருமணத்திற்கு சென்று திருட்டுத்தனமாக சாப்பிட்டதில்லை” என்கிற முதல் ஸ்டேட்மெண்ட்டை வனிதா வாசித்தார். இதற்கு ‘ஆம்’ என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லை என்றால் அப்பளம் சாப்பிடலாம். ஆனால் ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டவர்கள் அப்பளத்தை எடுத்துக் கடித்தார்கள். ‘நாம்தான் தவற்றை ஒப்புக் கொண்டோமே, பிறகு எதற்கு பாகற்காய் ஜூஸ் தண்டனை?” என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

“திருப்பதில நடந்த கல்யாணம். மீனாட்சியம்மன் கோயில்ல நடந்த கல்யாணம்... ரெண்டுத்துக்கும் என்னை யாரும் கூப்பிடலை. நானாத்தான் போய் சாப்பிட்டேன்” என்று கோயில் திருவிழாக்களில் சாப்பிட்டதையெல்லாம் சொல்லி அப்பளத்தோடு சேர்த்து நம்மையும் கடித்தார் சுரேஷ். “ஸ்விம்மிங் ஃபூலில் நைசாக சுச்சா போனதுண்டா?” என்று அடுத்த வில்லங்கமான கேள்வியை வாசித்த அபிராமி தானே அதை ஒப்புக் கொண்டார். சிலர் மறுக்க சிலர் ஆமோதித்தார்கள். “சின்ன வயசுல போயிருப்பேன். விவரம் தெரிஞ்ச அப்புறம் போனதில்லை” என்று மறுத்தார் பாலா.

‘யார் மேலயாவது வாந்தி எடுத்திருக்கீங்களா?’ என்கிற ‘உவ்வேக்’ கேள்வியை அடுத்ததாக வாசித்தார் ஜூலி. (சீசன் ஒன்றில் ஜூலி வாந்தி எடுக்க அதை கையேந்தி சிநேகன் பிடித்த காட்சிதான் நினைவிற்கு வந்தது). "கர்ப்பமா இருந்த சமயத்தில் கணவர் மீது எடுத்திருக்கேன்” என்றார் சுஜா. இதற்கு கவுன்ட்டர் தர வனிதா நினைத்தாரோ, என்னமோ. “நான் கர்ப்பமாகவும் ஆனதில்லை. வாந்தியும் எடுத்ததில்லை” என்று ஒரே போடாக போட்டார். (ஜோக் அடிக்கறாங்களாமாமாம்!).

வனிதாவின் ரணகள அலப்பறை ஆரம்பம்

அடுத்தது ஒரு வில்லங்கமான கேள்வி. “காண்டமை பலூன் போல் ஊதி விளையாடியிருக்கிறீர்களா?”. இதை பொதுவில் வாசிக்க பாலாஜி மறுத்துவிட்டார். பாலாஜியின் தயக்கத்திற்கு ஆதரவு தந்த வனிதா “பிக் பாஸ்... என்னதிது நான்சென்ஸ்?” என்று பிக் பாஸையே ஓர் அதட்டல் போட, உள்ளே அவர் ‘கப்சிப்’ என்று அமைதியாக இருந்து உயிர் தப்பித்தார். ஏற்கெனவே இந்த விளையாட்டில் சரியாக ஆடாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த வனிதா, இதுதான் சாக்கென்று "இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. இது குழந்தைகளும் பார்க்கிற நிகழ்ச்சி… நான் வெளியே போறேன்” என்று கோபித்துக் கொண்டு வெளியேற, சூழல் இன்னமும் ரணகளமாக மாறியது.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

“இதுல என்ன தப்பு இருக்கு? இது பற்றிய விழிப்புணர்வு சின்ன பசங்களுக்கு வரணும். இதை முறையா கத்துத் தரணும். அதனால்தான் நிறைய தப்பு நடக்குது” என்கிற நோக்கில் நிரூப் வாதாட, அதற்கு பலமாக ஆதரவு தந்தார் பாலா. “இது OTT நிகழ்ச்சி. பெரியவர்களுக்கானது” என்று வாதாடினார் சுரேஷ். “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் இங்க டாஸ்க் ஆட வரலை. நான் நானாத்தான் இங்க இருப்பேன். இது என்னோட பாயிண்ட். நீங்க ஒத்துக்காட்டி எனக்கு கவலையில்ல” என்று கலாசார காவலர் போர்வையை பலமாக உயர்த்திப் பிடித்தார் வனிதா. இவர் இப்படி அதிரடியாக வெளியேறியது வீட்டின் தலைவர் ஷாரிக்கிற்கு தன்மானப் பிரச்னையாக மாற, “அப்படில்லாம் நீங்க வெளியே போக முடியாது” என்று ஆட்சேபிக்க “போடா… சின்னப்பையா...” என்பது போல் கேப்டனையே இடது கையால் கையாண்டார் வனிதா. “நான் அடிப்படையிலேயே ஒரு போராளி. விதியை உடைப்பவள்” என்றெல்லாம் வனிதா எகிறிக் கொண்டே போக “நீங்க வீட்டோட ஓனர் கிடையாது. அப்படி நினைச்சுக்காதீங்க... நீங்களும் ஒரு ஹவுஸ்மேட்தான்” என்று கவுன்ட்டர் தந்தார் பாலா.

பிறகு பாலாவை மட்டும் ஓரங்கட்டி பேசிய வனிதா “முன்னாடி சீசன்ல நான் வந்த போது அக்கா எல்லோரையும் நம்பிட்டேன்டா... ஆனா வெளிய போய் பார்த்தப்புறம்தான் தெரிஞ்சது. இவங்க பேசினது அத்தனையும் பொய். அண்ணன், அக்கா... ன்னு இங்க உறவு கொண்டாடறதெல்லாம் பொய் வேஷம். ஆனா.. நீ ஆரம்பத்துல இருந்தே என் தம்பிடா” என்று சென்டியாக பேச “அதெல்லாம் சரி... பிக் பாஸ் தவிர என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது’ன்ற மாதிரில்லாம் நீங்க பேசறது சரியா...” என்று கெத்து குறையாமல் வாதாடினார் பாலா.

பிக் பாஸ் அல்டிமேட் 2
பிக் பாஸ் அல்டிமேட் 2

வனிதாவால் தான் அலட்சியமாக கையாளப்பட்டதால் “நான் இருந்தப்ப அந்த சீசன்ல என்ன ஆச்சு தெரியுமா... கேப்டன் சொல்றதைத்தான் கேட்கணும். பிக் பாஸே இதைத்தான் சொன்னார்” என்று கடந்த கால வரலாற்றில் இருந்து சான்றுகளைத் தேடி தனக்கான ஆதாரங்களாக சமர்ப்பித்து பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் ஷாரிக்.

சுரேஷ் பற்ற வைத்த நெருப்பு, வனிதா ஆன கடுப்பு, ஷாரிக் ஆன வெறுப்பு, துடிப்பான நிரூப்பு என்று முதல்நாளே பிக் பாஸ் அல்டிமேட் களைகட்டியிருக்கிறது. அடுத்த நாளில் (அதாவது நமக்கு அடுத்தடுத்த நாள்) என்னவெல்லாம் நடக்குமோ?