Published:Updated:

BB Ultimate - 5: 'காஃபித்தூளும் கம்யூனிஸமும்' கண்கலங்கிய வனிதா என்ன தான் பாஸ் நடந்துச்சு..!

வனிதா - அபிராமி

“வனிதாக்கா.. இப்படில்லாம் அழற ஆள் கிடையாது. அவங்க பழைய விஷயங்களை நினைச்சு கலங்கறாங்க போல” என்று இன்னொரு பக்கம் ஆர்வமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் அனிதா

Published:Updated:

BB Ultimate - 5: 'காஃபித்தூளும் கம்யூனிஸமும்' கண்கலங்கிய வனிதா என்ன தான் பாஸ் நடந்துச்சு..!

“வனிதாக்கா.. இப்படில்லாம் அழற ஆள் கிடையாது. அவங்க பழைய விஷயங்களை நினைச்சு கலங்கறாங்க போல” என்று இன்னொரு பக்கம் ஆர்வமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் அனிதா

வனிதா - அபிராமி
‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்பார்கள். ஆனால் பிக்பாஸின் சமீபத்திய கலகம் காஃபித் தூளில் சென்று முடிந்தது. ஆனானப்பட்ட வனிதாக்காவையே அழவைத்த கொடுமையான நாள் இது. ஒரு வாய் காஃபிக்காக வனிதா செய்த நெடும் தியாகப் போராட்டத்தை பங்கம் செய்து முடித்து வைத்தார் அபிராமி.
இந்த நாள் நமக்கு உணர்த்தும் நீதி என்ன? காஃபிக்கும் கம்யூனிஸத்திற்கும் தொடர்பு இருக்கிறது. என்னவென்று அறிய கடைசிப்பகுதி வரைக்கும் வாருங்கள்.

எபிசோட் 5, நாள் 4-ல் நடந்தது என்ன?

அல்டிமேட் ஷோ இரண்டாவது நாளிலேயே களைகட்டியிருப்பதால் பிக்பாஸ் உற்சாகமாக இருக்கிறார் போலிருக்கிறது. எனவே குத்துப்பாடல் ஒன்றைப் போட்டு மக்களை எழுப்பி விட்டார். பிரெஸ் மீட் வைபவம் தொடர்ந்தது. டிஸ்னி சேனல் ரிப்போர்ட்டர் வனிதாவிற்கு உடல்நலம் குன்றியிருப்பதால் அவர் இன்று வரவில்லை’ என்று பாலா தெரிவிக்க, நேர்காணல் தருவதற்கு முதலில் அழைக்கப்பட்டவர் ‘சிநேகன்’.

சினேகன்
சினேகன்

“உங்க பின்னணி பத்தி சொல்லுங்க சார்” என்பது சிநேகன் எதிர்கொண்ட முதல் கேள்வி. “என்னுடையது சாதாரண விவசாயக் குடும்பம். 13 வயதிலேயே பாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சென்னைக்கு வந்து வைரமுத்து அவர்களிடம் உதவியாளராக இருந்தேன். இயக்குநர் பாலசந்தர் என்னைக் கவனித்து பாராட்டியிருக்கிறார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு முதல் படத்தில் பாடல் எழுத வாயப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்ததால் ‘அதிர்ஷ்டமில்லாத கவிஞர்’ என்கிற முத்திரை விழுந்தது. அதற்குப் பிறகு எழுதிய முதல் படத்தின் முதல் பாடலிலேயே தமிழக அரசு விருது கிடைத்தது. ‘பாண்டவர் பூமி’ திரைப்படத்தில் வரும் ‘அவரவர் வாழ்க்கையில்’ என்கிற அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆறு புத்தகங்கள் எழுதியிருக்கேன். ஓர் அமைப்பை ஏற்படுத்தி சில மாணவர்களை படிக்க வைக்கறேன். திருநங்கைகளுக்கு உதவி செய்யறேன். அதற்காக யாரிடமும் நன்கொடை வாங்கியதில்லை” என்று தன் வாழ்க்கைப் பயணத்தை சுருக்கமாக விளக்கிய சிநேகன், நிரூப் கேட்டுக் கொண்டதின் பேரில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ பற்றி கவிதை மாதிரி ஏதோ சொன்னார். “எல்லோரிடமும் சமமான ஆயுதம் இருக்கிறது. ஆனால் மக்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பார்கள். என்றாலும் இங்கு பொய்யாக நடிக்கிறார்கள்’ என்று அவர் சொன்ன கவிதை மாதிரியான சமாச்சாரத்திற்கு மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

“ஏன் என்னை கான்டாக்ட் பண்ணலை?” ஜூலி அழிச்சாட்டியம்

“முதல் சீசன்ல Runner-upஆ வந்தீங்க. நல்ல நிலைல இருக்கீங்க. மறுபடியும் ஏன் பிக்பாஸ்?” என்கிற கேள்வியை ஷாரிக் கேட்டார். “இதுவொரு நல்ல கேள்வி தம்பி.. இதுக்கு பதில் சொல்லியே ஆகணும். போன சீசன்ல ‘கட்டிப்பிடி சிநேகன்’ன்னு ஒரு பட்டம் தந்து என்னை அவதூறு செஞ்சாங்க. இப்பல்லாம் எல்லோரும்தான் கட்டிப்பிடிக்கறாங்க. ஆனா என் மேல மட்டும் ஏன் தவறான முத்திரை விழுது? உலகம் முழுக்க இருக்கிற ஈழத்து உறவுகளில் உள்ள பல சகோதரிகள் என்னை ‘அண்ணா’வா பார்க்கிறாங்க. முதல் சீசனில் கலந்து கொண்டதற்காக கிடைத்த அங்கீகாரம் அது. நிறைய தங்கச்சிகளை எனக்கு பெற்றுத் தந்தது” என்று சென்ட்டியாக பதில் சொன்னார் சிநேகன்.

ஜுலி
ஜுலி
சில சமயங்களில் புத்திக்கூர்மையாக பேசும் தாமரை, வேறு சில சமயங்களில் சுமாராக மாறி விடுகிறார். “கூட்டுக்குடும்பம் உடைஞ்சு தனிக்குடும்பமா மாறி வருது. அதுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்று அவர் சம்பந்தேயில்லாமல் கேட்க அதற்கும் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லி ஈடு கொடுத்தார் சிநேகன். “என்னைத் தேடி வர்றவங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவர் சொல்ல “உங்களை எப்படி கண்டுபிடிச்சு வர்றது?” என்று இம்சையைக் கூட்டினார் தாமரை.

“இந்த சீசன்ல யார் வெற்றியடைவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று தாமரை அடுத்த கேள்வியை வீச “நான் ஜோசியக்காரன் இல்ல. ஆனால் வெற்றி என்பது ஆபத்தானது. முதலில் ஓடுகிறவன் பின்னால் யார் வருகிறார்களோ என்கிற பயத்துடன் ஓட வேண்டும். ஆனால் இரண்டாவதாக வருகிறவனுக்கு அந்தக் கவலை இல்லை. அவன் நேரா பார்த்து ஓடலாம்” என்றார். (அப்ப மூணாவதா வர்றவனை ரெண்டாவதா வர்றவன் பார்க்க மாட்டானா? என்னப்பா லாஜிக் இது?!) “வெற்றியைப் பெறுவதை விடவும் அதை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியமானது” என்று சிநேகன் சொன்னது சிறப்பு.

‘சமூகப் பிரச்சினைல்லாம் இருக்கட்டும். என் பிரச்சினைக்கு வாங்க’ என்று சிநேகனை வம்பிற்கு இழுத்த ஜூலி “இப்பவும் உங்களை என் அண்ணனாத்தான் பார்க்கிறேன். ஆனால் முதல் சீசன் முடிஞ்சு வெளியே போனப்புறம் மத்தவங்க கிட்டலாம் தொடர்புல இருந்தீங்க. ஆனா என்னை காண்டாக்ட் பண்ணவேயில்ல. என் கிட்ட இருந்த negative fame தான் காரணமா?” என்று கேள்வியெழுப்ப “ஏம்மா.. என்னையும்தான் கழுவி ஊத்தினாங்க.. சில நண்பர்கள் என்னை ஜீரோவாக்கிட்டாங்க. திரைத்துறையில் ஒரு ஆளை சீக்கிரம் காலி பண்ணிடுவாங்க.. அதையெல்லாம் மீறி நான் எழுந்து வந்திருக்கிறேன். இவ்வளவு பேசற நீ ஏன் என்னை உரிமையா தொடர்பு கொண்டிருக்கக்கூடாது?” என்று பதில் கேள்வியை சிநேகன் கேட்க, “உங்க பிரச்னையெல்லாம் வெளில வச்சுக்கங்க” என்று மற்றவர்கள் ஜாலியாக ஆட்சேபித்தார்கள். மற்றவர்கள் செய்யும் அவதூறு பற்றி சிநேகன் சொல்லும் போது “என்னை விமர்சிக்க எனக்குத்தான் முதலில் அருகதை இருக்கு. நான்தான் என் கூடவே பெரும்பாலும் இருக்கேன்” என்று சொன்னது சிறப்பு. (கமல் சகவாசத்தால் அது போலவே பேசிப் பழகறார் போல!).

சுரேஷ்
சுரேஷ்

“நான் கண்ணாடி மாதிரி. நீங்க பண்றதுதான் தெரியும்”

அடுத்ததாக வந்தவர் சுரேஷ். இப்போது பத்திரிகையாளர்களுக்குத்தான் ‘ஜெர்க்’ ஆகியிருக்கும். அந்த அளவிற்கு பத்திரிகையாளர்களை கலங்கடித்தார் சுரேஷ் தாத்தா. “சமூகத்தின் முக்கியமான தூண் பத்திரிகை. எனவே பொறுப்பாக கேள்வி கேளுங்கள். நிறை இருந்தால் வாழ்த்துங்கள்; குறை இருந்தால் மன்னியுங்கள்” என்று ஆரம்பத்திலேயே disclaimer கார்டு போட்டார். “நீங்க வெளிப்படையா பேசிடற ஆளு. எனவே சர்காஸம் இல்லாம நேர்மையா பதில் சொல்லுங்க” என்று நிரூப் ஆரம்பிக்க, துவக்கத்திலேயே அந்தப் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் சுரேஷ் “நான் எப்படி பதில் சொல்வேன்னு நீங்களா ஏன் ஒரு முடிவுக்கு வர்றீங்க. நான் கண்ணாடி மாதிரி. நீங்க என்ன காண்பிக்கறீங்களோ, அதைத்தான் பிரதிபலிப்பேன். உங்க கேள்விக்கு ஏத்த மாதிரித்தான் பதில் சொல்வேன்” என்று சொல்ல ‘இது என்ன மிரட்டலா?” என்று ஏழரையைக் கூட்டினார் பாலா.

“சுரேஷ் தாத்தான்றவர் யாரு.. மும்பைல நீங்க என்ன செஞ்சுக்கீட்டு இருந்தீங்க. சொல்லுங்க.. சொல்லுங்க..” என்கிற மாதிரி முதல் கேள்வி வந்தது. “வாழ்க்கை என்பது யாருக்குமே மலர்ப்பாதையாக அமைவதில்லை. எல்லோருமே எதிர்நீச்சல் போட்டுத்தான் வருகிறோம். சிலர் தங்களின் கஷ்டங்களைப் பகிரும் போது ‘அனுதாபம் தேடுகிறார்’-ன்னு சிலர் ஈஸியா கிண்டல் பண்ணிடறாங்க. இந்த இரண்டாவது வாய்ப்பு உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று சுரேஷ் ஆன்மீக உரையை நிகழ்த்த “சர்வம்..ன்னு என்னமோ சொன்னீங்களே. அப்படின்னா என்னா?” என்று இம்சையை ஏற்றினார் பாலா.

சுஜா - நிரூப்
சுஜா - நிரூப்

“சிலரை செட் பிராப்பர்ட்டின்னு சொன்னீங்களே.. அது யாரு?” என்று நிரூப் கேட்க “இங்க வெச்சிருக்கிற மைக் உண்மையானதா.. இல்லைல்ல.. அந்த மாதிரிதான்” என்று சுரேஷ் மேலும் குட்டையைக் குழப்ப “உங்களுக்கு கொளுத்திப் போடும் தாத்தான்னு ஒரு பட்டம் இருக்கே, ஏன்?” என்று அடுத்த கேள்வியை பற்ற வைத்தார் நிரூப். “எதுவுமே செய்யாம சும்மா உக்காந்திருந்தா இந்த ஆட்டம் எப்படி இருக்கும்? நாமதான் அதை சுவாரஸ்யமா ஆக்கணும். கொளுத்துவது நானல்ல. எல்லாவற்றிற்கும் காரணம் மேலே இருக்கும் எம்பெருமான் ‘பரட்டை’தான்’ என்று பிக்பாஸை நோக்கி கைகாட்டினார் சுரேஷ்.

“நீங்க செஃப்ன்றதால இந்தக் கேள்வியைக் கேட்கறேன். இந்த சீசன்ல நீங்க கடாயா இருப்பீங்களா, கரண்டியா இருப்பீங்களா?” என்று சுஜா கிளற ஆரம்பிக்க, “இங்க நமக்கு குழிக்கரண்டி தரலை. ஒரு நண்பர் கோப்பையை வெச்சே அதை கரண்டியா மாத்தி உபயோகிச்சாரு. அது போல சமய சந்தர்ப்பத்திற்கேற்ப என்னை நான் உருமாற்றிக் கொள்வேன்” என்று பதில் சொன்ன சுரேஷிடம் “நீங்க வெளியுலக வாழ்க்கையிலும் கொளுத்திப் போடற வேலையைச் செய்வீங்களா?” என்று ஷாரிக் கேட்க “ஒவ்வொரு கேமிற்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் இருக்கும். அதற்கேற்பத்தான் ஆட முடியும்” என்று சுரேஷ் சொன்ன பதில் அருமை. “நாரதர் கலகம் நன்மையில் முடியும்-ன்னு சொல்லுவாங்க.. நீங்க என்னதான் நன்மை செஞ்சிருக்கீங்க?” என்று ஒரு ஜாலி பட்டாசுக் கேள்வியை தாமரை தூக்கிப் போட சபை வெடித்து சிரித்தது.

“ஏற்கெனவே சொல்லிட்டேன். கொளுத்திப் போடறது நானல்ல. பிக்பாஸ். நாரதர்ன்னு சொன்னது கமல் சார். நீங்க அவரையே கேள்வி கேட்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தாமரையை கமலுடன் கோர்த்து வம்பு செய்தார் சுரேஷ். ஆனால் அதற்கும் தாமரை அசராமல் இருந்தது சிறப்பு. “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என்று ஜூலி மொக்கையாக ஒரு கேள்வியைக் கேட்க “ஏம்மா.. இதெல்லாம் ஒரு கேள்வியா.. அடிப்படையான விஷயத்தையெல்லாமா கேட்பீங்க?” என்று பதில் சொன்ன சுரேஷ், இன்னமும் பஸ்ஸர் அடிக்காததால், ஜதி பாட ஆரம்பிக்க பிக்பாஸ் பயந்து போய் டாஸ்க்கை முடித்து வைத்தார்.

‘பிக்பாஸ் ஆடிய சிறப்புத் திருவிளையாடல்’

இத்துடன் ‘லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்’ முடிவிற்கு வந்தது. (ஹப்பாடா!). ஆனால் இதை விடவும் உக்கிரமான பிரச்சினை ‘காஃபி’யின் வடிவில் அடுத்து வந்தது. இதற்கான கலகத்தை பிக்பாஸ் மிகத் திறமையாக வடிவமைத்திருந்தார். சிறந்த பத்திரிகையாளராக அனிதாவும், சிறந்த நட்சத்திரப் பேச்சாளராக அபிராமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தலா 5000 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஷாரிக் இருந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 7000 புள்ளிகள் வழங்கப்பட்டன.

 லக்ஸரி பொருட்கள்
லக்ஸரி பொருட்கள்

அடுத்ததாக லக்ஸரி பொருட்களை தேர்ந்தெடுக்கும் சடங்கு. உழைப்பிற்கான அறுவடை. இங்குதான் தன் திருவிளையாடலை சிறப்பாக ஆரம்பித்தார் பிக்பாஸ். வெற்றி பெற்ற அணியை மட்டும் ‘ஆக்டிவிட்டி’ ஏரியாவிற்கு வரவழைத்தார். அங்குள்ள பொருட்களில் 14 பொருட்களை மக்கள் தேர்ந்தேடுத்துக் கொள்ளலாம்” என்று பிக்பாஸ் அறிவிக்க “அய் மட்டனு.. ரவா. மைதா..” என்று ஆசையாக அள்ளினார்கள். வனிதா மறக்காமல் காஃபி பவுடரை எடுத்துக் கொண்டார். வந்த நாளில் இருந்தே ‘காஃபி வேணும்’ என்று பிக்பாஸை இம்சை செய்தவர் வனிதா. பஸ்ஸர் அடித்த பிறகும் இரண்டு பொருட்களை வனிதா எடுக்க முயல “அதை வெச்சுடுங்க” என்று பிக்பாஸ் கறாராக தடுத்து விட்டார்.

ஆச்சா..? இந்தப் பக்கம் இன்னொரு அணி வரவேற்பு அறையில் காத்திருந்தது. அவர்களுக்கு வழக்கம் போல் பிளாக் போர்டு, ரிமோட் எல்லாம் வழங்கிய பிக்பாஸ் 14 பொருட்களைத் தேர்ந்தேடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இவர்களும் ‘சிக்கனு.. மட்டனு..’ என்று அள்ள முயன்றார்கள். இரண்டு அணிகளும் ஒரே மாதிரியான பொருட்களையே அள்ளி வருமோ என்று நமக்குத் தோன்றியது. இந்த விஷயத்தை முதலிலேயே சரியாக யூகித்தவர் அபிநய்.

மந்தையில் இருந்து ஆடுகள் திரும்பின. இரண்டு அணிகளும் வீட்டிற்குள் சந்தித்தார்கள். “ஓ.. உங்களுக்கும் லிஸ்ட் கொடுத்தாங்களா?” என்று திரும்பி வந்த அணி வியந்தது. இப்போதுதான் பிக்பாஸ் ஒரு டிவிஸ்ட்டை அறிவித்தார். இரண்டு அணிகளும் தனித்தனியாக தேர்ந்தெடுத்த பொருட்களில் எவையெல்லாம் ஒத்துப் போகிறதோ, அவற்றை மட்டும் மக்கள் வைத்துக் கொள்ளலாம். மற்றவற்றை திருப்பியனுப்புங்கள்” என்று அவர் தெரிவிக்க மக்கள் அதிர்ச்சியானார்கள். ‘கத்தையா கொடுப்பாருன்னு பார்த்தா. பிக்பாஸ் ஒத்தையா கொடுத்திருக்காரு’. இரண்டு பட்டியலிலும் ஒத்துப் போகும் பொருட்களை மட்டும் பாலா தனியாக எடுத்து வைத்தார்.
பிக் பாஸ்
பிக் பாஸ்

வனிதா டீம் எடுத்து வந்திருந்த சிக்கன், இறால் ஆகியவற்றையெல்லாம் திருப்பியனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. “இதையெல்லாம் என்ன செய்யறது?” என்று மக்கள் ஆதங்கத்துடன் கேட்க “காக்கிநாடா உன்னுது.. கடப்பா என்னுது’ என்று ஏரியா பிரிக்கும் விவேக் காமெடி மாதிரி “மேட்ச் ஆன பொருட்கள் மட்டும் உங்களுடையது. மேட்ச் ஆகாத பொருட்கள் என்னுது” என்று பிக்பாஸ் கறாராக அறிவிக்க “நீங்களே சாப்பிட்டு நல்லா இருங்க” என்று சாபத்துடன் ஆசிர்வாதம் செய்தார் தாமரை.

‘காப்பித்தூள் பாட்டிலை பதுக்கி வைத்த வனிதா’

நல்ல வேளையாக இரண்டு பட்டியல்களிலும் காஃபி பவுடர் இருந்ததால், ஒரு பாட்டில் காப்பித்தூள் இவர்களுக்கு கிடைத்தது. அதற்குள் மக்கள் ஆவேசமாக காஃபி போட்டு குடிக்க ஆரம்பித்ததால் “என்னதிது.. அதுக்குள்ள இவ்வளவு காலியாயிடுச்சு.. நான்தான் காஃ.பிக்காக பெரும் போராட்டம் நடத்திட்டு இருந்தேன். டீ குடிக்கற பழக்கம் இருக்கவங்க.. டீயைக் குடிங்க. காஃபி வேணும்ன்றவங்களுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்து வெச்சுடறேன். பாட்டிலை நான் தனியா எடுத்து வெச்சுக்கறேன். அது எனக்கு மட்டும்தான். விட்டா நீங்க காலி பண்ணிடுவீங்க போலிருக்கு. காஃபிக்காக நான் போராடிய போது யாராவது துணைக்கு வந்தீங்களா.. இப்பக் கூட நீங்க எல்லோரும் காஃ.பி குடிச்சீங்க. அக்காவிற்காக யாராவது போட்டுத் தந்தீங்களா?” என்று விதம் விதமாக வனிதா லாஜிக் பேசி விட்டு காஃபித் தூள் பாட்டிலை தன் படுக்கையறையில் எடுத்து வைத்துக் கொண்டார்.

வனிதா
வனிதா
காஃபித்தூளை வனிதா கைப்பற்றி வைத்துக் கொண்ட விஷயம் வீட்டிற்குள் ஆட்சேபமாக மாறி மெல்ல தீயாக பரவ ஆரம்பித்தது. ஆனால் வனிதாவை எதிர்த்துப் பேச பலருக்கும் பயம். இதன் இடையில் பாலாஜியும் தன் உடற்பயிற்சித் தேவைக்காக (?!) சிறிது காஃபித் தூளை எடுத்து தனியாக வைத்திருந்தார். அதற்கான காரணத்தை அவர் மக்களிடம் விளக்கிய போது ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் பெரும் ஆட்சேபம் வனிதா மீதுதான். ஆனால் சொல்லத் தயக்கம்.

“வீட்ல எல்லாத்தையும் அவங்களே கண்ட்ரோல் பண்ணனும்னு நெனச்சா எப்படி?” என்று கார்டன் ஏரியாவில் சிநேகன் கமுக்கமாக புகார் சொல்ல “இதெல்லாம் சரியில்ல” என்று பாலாவும் அபிநய்யும் அவருடன் ஒத்து ஊதினார்கள். “இனிமே நானும் தனியா எடுத்து வெச்சுக்குவேன்” என்று காண்டானார் அபிநய். இதையெல்லாம் எரிச்சலுடன் கவனித்துக் கொண்ட அபிராமி, சட்டென்று தீர்மானித்து ‘ஓ.. ஒரு தென்றல் புயலாக வருதே’ என்கிற மாதிரி, தன் கையில் இருந்த கோப்பையை தரையில் வீசி விட்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றார். “ஏய்.. என்ன பண்ணப் போற.. அவங்களைப் போய் கேப்பியா?” என்று ஷாரிக் தடுத்தாலும் அபிராமியின் ஆவேசத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆவேசமாக புறப்பட்ட அபிராமி.. அபிராமி..

கிளம்பிய வண்டி நேராக வனிதாவிடம் சென்று சேர்ந்தது. அப்போதுதான் படுக்கையறைக்குள் காஃபித் தூளை அழகாக பதுக்கி வைக்க முயன்று கொண்டிருந்த வனிதாவிடம் “அக்கா.. அது உங்க பிராப்பர்ட்டி இல்ல. எல்லோரும் சேர்ந்து உழைச்சதுக்காக கிடைச்சது. நீங்க மட்டும் தனியா எடுத்து வெச்சா எப்படி?” என்று அபிராமி கேட்க உடனே சட்டென்று பற்றிக் கொண்டது வனிதா என்னும் பெருநெருப்பு. “நீ பண்றது ரொம்ப கேவலமா இருக்கு. கேவலம் ஒரு காஃபிக்காக அக்காவையே எதிர்த்து கேள்வி கேட்பியா.. என வசையுடன் காஃபித்தூள் பாட்டிலைத் தூக்கியெறிந்தார் வனிதா. பிறகு “எனக்கு காஃபி கூட முக்கியமில்ல. நீ அதைக் கேட்கறதுக்காக எப்படி நடந்து வந்தேன்னு தெரியுமா. அக்கான்னு ஒரு மரியாதை இருந்ததா? ஒரு விஷயத்திற்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்றது ரொம்ப முக்கியம்” என்று வனிதா ஆவேசமாக கத்த, அடிபட்ட முகபாவத்துடன் “ஸாரி” என்றார் அபிராமி.

அபிராமி
அபிராமி

இதற்கிடையில் பஞ்சாயத்து செய்ய ஷாரிக் வர “இந்தக் காஃபியை இனிமே நான் தொட மாட்டேன். பிக்பாஸ்.. எனக்கொரு பாட்டில் தனியா கொடுத்துடுங்க.. காஃ.பிக்கு கூட வக்கில்லாம நான் இல்ல. இந்த விஷயத்தை பிரெஸ் மீட் வரைக்கும் கொண்டு போயிட்டாங்க” என்று வனிதா பொரும, பஞ்சாயத்தில் சுரேஷூம் வந்து இணைந்து கொண்டார். “நீங்க இதில் தலையிடாதீங்க.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று சுரேஷையும் இடதுகையால் ஹாண்டில் செய்தார் வனிதா. “என்னை அக்கான்னு கூப்பிட்டு ஏமாத்தியதெல்லாம் போதும். போன சீசன்லயே நிறையப் பார்த்துட்டேன். இனியும் ஏமாற தயாராக இல்லை. யாரையும் நம்ப மாட்டேன்’ என்று ஆவேசம் குறையாமல் வனிதா பேச வாயடைத்துப் போய் நின்றார் அபிராமி.

சுரேஷ்
சுரேஷ்

இன்னொரு பக்கம் பாலாவிற்கும் சுரேஷிற்கும் இடையில் வழக்கம் போல் மோதல் வெடித்தது. காஃபித்தூள் விஷயத்தைப் பற்றி நிரூப்பிடம் சுரேஷ் பேசிக் கொண்டிருக்க “எதையாவது கோர்த்து விடறதே இவருக்கு வேலை” என்று வழக்கம் போல் பாலா கிண்டல் செய்ய, அந்தக் கமெண்ட்டிற்கு ஆவேசமாக ரியாக்ட் செய்தார் சுரேஷ். வசைகள் நிறைய புறப்பட்டன. ஆனால் அலட்டிக் கொள்ளாமல் புன்னகை செய்தார் பாலா. ‘கொளுத்திப் போடறதுதான் என் வேலை’ என்பதை பெருமிதமாகவே எப்போதும் சொல்லிக் கொள்ளும் சுரேஷ், பாலா அதைக் குறிப்பிட்டு கிண்டல் செய்ததற்கு மட்டும் ஏன் ஆவேசம் அடைந்தார் என்று தெரியவில்லை. அதை பாலா சொன்னதே காரணமாக இருக்கலாம்.

‘வனிதாக்கா அழறாங்க சார்’

இந்தச் சமயத்தில்தான் பிக் பாஸ் சரித்திரத்திலேயே நிகழாத அந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம். வனிதாக்கா அழுது கொண்டிருந்தார். “நான் வீட்டுக்குப் போறேன். இங்க எல்லோருமே பொய்யா இருக்காங்க” என்று அவர் கண்கலங்க, அவரைச் சமாதானப்படுத்த முயன்றார் ஷாரிக்.

வனிதா
வனிதா
அபிராமி கோப்பையை கீழே வீசிய சம்பவத்தையொட்டி “நீ கோபத்தைக் கண்ட்ரோல் பண்ணு” என்று ஷாரிக் உபதேசம் செய்தார். “ஏண்டா. டேய்.. அங்க ஒரு மர்டரே நடந்திருக்கு. அதைக் கேட்கத் துப்பு இல்லாம ஒரு பிக்பாக்கெட் கேஸைக் கூப்பிட்டு அடிச்சிட்டு இருக்கே?” என்பது போல் கோபம் அடைந்த அபிராமி, ஷாரிக்கை தனியாக கூப்பிட்டு பஞ்சாயத்து பேச “அவங்க குழந்தை மாதிரி ஏதோ பண்ணிட்டாங்க. விடேன்” என்று வனிதாவிற்குப் பரிந்து பேசினார் ஷாரிக். அதைப் பரிவு என்பதை விடவும் பயம் என்றும் சொல்லலாம். “என்னடா. ஒரு கோட்டானைப் போய் குழந்தைன்ற?” என்பது மாதிரி அதிர்ச்சியான முகபாவத்தைத் தந்த அபிராமி “அப்ப நான் போய் கேட்டது தப்பா?” என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“வனிதாக்கா.. இப்படில்லாம் அழற ஆள் கிடையாது. அவங்க பழைய விஷயங்களை நினைச்சு கலங்கறாங்க போல” என்று இன்னொரு பக்கம் ஆர்வமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் அனிதா. பாலாவின் மீதான கடுப்பில் ஆவேசம் குறையாமல் சுற்றிக் கொண்டிருந்த சுரேஷ் தாத்தாவை தடுத்து நிறுத்திய ஷாரிக் “உங்களுக்கு பிபி ஏறிடப் போகுது” என்று எச்சரிக்க “அது ஆல்ரெடி ஏறித்தான் கிடக்கு. இந்த பாலா பய நல்லவனா. கெட்டவனா. நீ பதில் சொல்லேன்” என்று கேட்க “அய்யோ. ஒரே சமயத்துல நான் எத்தனை பைத்தியங்களைத்தான் மேய்ப்பேன்?!” என்று உள்ளுக்குள் நொந்து போனார் ஷாரிக்.

வனிதா கண்கலங்கி அழுகையுடன் கடவுள் படத்தின் முன்னால் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, பக்தன் போல தண்ணீர் பாட்டிலுடன் பாலாஜி பின்னால் நின்று கொண்டிருந்த காட்சியுடன் எபிசோட் நிறைந்தது.

காஃபித்தூளும் கம்யூனிஸமும்

இந்த காஃபித்தூள் விவகாரத்தை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். பொதுவாக மது, புகைப்பழக்கம் உள்ளவர்களைத்தான் ‘போதைக்கு அடிமையானவர்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். நம்மால் விடவே முடியாத எந்தவொரு பழக்கமும் போதைக்கு இணையானதுதான். அதில் காஃபியும் முக்கியமானதொன்று. காஃ.பியின் வணிகம் பெருகுவதற்காக ஆரம்பக்கட்டத்தில் அதை மக்களுக்கு இலவசமாகத் தரும் உத்தியை வணிகர்கள் கடைப்பிடித்தார்கள். அதை ருசி பார்த்த மக்களால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை. இன்றைய தேதியில் காஃபியின் பின்னால் பெரும் வணிகமும் அரசியலும் உள்ளது.

ஜுலி
ஜுலி

காலையில் காஃபி கிடைக்கவில்லையென்றால் பைத்தியம் பிடித்தது போல் அலையும் பெருங்கூட்டமே இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் ஆசாமியும் அந்தப் பட்டியலில் உள்ளவர்தான். இந்த நோக்கில் வனிதாவின் அவஸ்தையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்தான் சீசன் ஆரம்பத்திலிருந்தே காஃபி கேட்டு போராட்டம் நடத்தியவர். பிக்பாஸை தொடர்ந்து இம்சைப்படுத்தியவர்.

ஆனால் கூட்டு உழைப்பினால் கிடைத்த ஒரு பரிசை, தனக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்ள வனிதா நினைப்பது அடிப்படையான பிழை. பிக்பாஸ் என்பதே ஒரு மனிதனின் அடிப்படையான செளகரியங்களைக் கட்டுப்படுத்தி அவனுடைய சகிப்புத்தன்மையை பரிசோதிக்கும் விளையாட்டுத்தான். அங்கு சென்றும் தன் செளகரியத்தை விட மாட்டேன் என்று ஒருவர் அடம்பிடிப்பது தவறு. மாறாக வனிதா என்ன செய்திருக்கலாம்?.. அனைவரிடம் கலந்து பேசி “கா.ஃபி தனக்கு எத்தனை அவசியமானது’ என்பதை விளக்கி காஃ.பி பழக்கம் இருப்பவர்கள் மட்டும் அளவாக உபயோகியுங்கள். எனக்குத் தேவைப்படுவதை விட்டு வையுங்கள்” என்பதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தால் நிச்சயம் மக்கள் உடன்பட்டிருப்பார்கள்.

மற்றவர்கள் தயங்கிய போது அபிராமி மட்டும் துணிச்சலாக சென்று தட்டிக் கேட்டது மிகச்சிறப்பான விஷயம். ஆனால் தன் ஈகோ காயப்பட்ட காரணத்தினால் வனிதா பொங்கியெழுந்து விட்டார். அதை அவர் தன் கண்ணீராலும் அனுதாபத்தினாலும் மூடி மறைக்க முடியாது.

இயற்கை அனைத்து வளங்களையும் இந்தப் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்காகவும்தான் படைத்து வைத்துள்ளது. ஆனால் மனிதகுலம்தான் இருப்பதிலேயே பேராசை படைத்த உயிரினமாக உள்ளது. மனித குலம் தோன்றிய போது ‘அனைத்துப் பொருட்களும் அனைவருக்கும்’ என்கிற நிலைதான் இருந்தது. ஆனால் விவசாய சமூகமாக மாறிய பின்னர் நிலவுடமை என்னும் நிலை தோன்றி பின்னர் முதலாளித்துவ சமூகமாக மாறியது. இதனால் சமூகத்தின் அடிப்படை சமநிலை குலைந்தது. இந்த நோக்கில் தோன்றியதுதான் பொதுவுடமைத் தத்துவம். ‘எல்லாம் எல்லோருக்கும்’ என்பதுதான் அதன் ஒன்லைன். இதுதான் பிக்பாஸ் வீடும் நமக்கு உணர்த்த விரும்பும் செய்தி. காஃபித்தூள் சம்பவத்திலிருந்தும் கம்யூனிஸப் பாடத்தை நாம் அறிய முடியும் என்பதுதான் இதன் நீதி. (சம்பவத்தை விடவும் இந்த வியாக்கியானம் டெரரா இருக்கேப்பா!).