Published:Updated:

பிக் பாஸ் அல்டிமேட் - 1: வந்தவுடன் ஓனரான வனிதா; ஓவியாவை காணோம் பிக் பாஸ்... லைவ் ரிலே கொஞ்சம் டிலே!

பிக் பாஸ் அல்டிமேட்

வரவேற்பறை சோபாவில் படுத்திருந்த வனிதா “நான்தான் வீட்டோட ஓனர். கமலே ரெஜிஸ்டர் பண்ணிக் கொடுத்துட்டார். இந்த வீட்டில் யாராவது லவ் பண்ணீங்கன்னா அவ்வளவுதான்” என்று அப்போதே அலப்பறையை ஆரம்பிக்க, நிரூப்பும் அபிராமியும் தங்களுக்குள் முனகினார்கள்.

Published:Updated:

பிக் பாஸ் அல்டிமேட் - 1: வந்தவுடன் ஓனரான வனிதா; ஓவியாவை காணோம் பிக் பாஸ்... லைவ் ரிலே கொஞ்சம் டிலே!

வரவேற்பறை சோபாவில் படுத்திருந்த வனிதா “நான்தான் வீட்டோட ஓனர். கமலே ரெஜிஸ்டர் பண்ணிக் கொடுத்துட்டார். இந்த வீட்டில் யாராவது லவ் பண்ணீங்கன்னா அவ்வளவுதான்” என்று அப்போதே அலப்பறையை ஆரம்பிக்க, நிரூப்பும் அபிராமியும் தங்களுக்குள் முனகினார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட்
அன்புள்ள நண்பர்களே, திருவாளர் கோவிட்டின் சகோதரர் ஒமிக்ரான் புண்ணியத்தில் நான் நலம். நீங்களும் நலமா? இத்தனை விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.
பிக் பாஸ் சீசன் 5 முடியும் போதே ‘BB Ultimate’ பற்றிய அறிவிப்பு கூடவே வந்ததால் “என்னது… மறுபடியும் மொதல்ல இருந்தா?” என்று எனது மைண்ட் வாய்ஸ் பிரியங்கா + அக்ஷரா குரல்களில் கலந்து கட்டி அலறியது. உங்களுக்கும் அப்படியே ‘இஸ்க்... இஸ்க்’ என்றுதான் கேட்டிருக்கும் என்று தெரியும்.

அதென்ன BB Ultimate? ஒரு பிராண்ட் வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அந்த அடையாளத்தை வைத்து துணை பிராண்டுகளை உள்ளே நுழைப்பது ஒரு வழக்கமான வணிக உத்திதான். தோசை என்கிற வடிவம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மசால் தோசை, ஆனியன் தோசை, பேப்பர் ரோஸ்ட் என்று அதே மாவு பல்வேறு வடிவங்களில் வைரஸ் போல் உருமாறவில்லையா? அதே கதைதான் இங்கேயும்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

BB OTT என்பது நமக்குத்தான் புதியது. இந்த Spin-off வடிவம் இந்தியில் முன்பே நிகழ்ந்துவிட்டது. ஆகஸ்ட் 2021-ல் ஆரம்பித்த இந்த ஷோவை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதுவே தமிழில் ‘Bigg Boss Ultimate’ என்கிற பெயரில் தற்போது வந்துள்ளது. இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் 24 மணி நேரமும் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை நாம் சம்பந்தப்பட்ட OTT தளத்தில் ‘லைவ்வாக’ காண முடியும். இது வழக்கமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளிபரப்பாகாது. மாறாக இதன் எடிட் செய்யப்பட்ட சுருக்கமான வடிவத்தை ஒன்றரை மணி நேர எபிசோடாக தினமும் இரவு 09.00 மணிக்கு காண முடியும். கடந்த சீசன்களில் பங்கேற்றவர்கள் இதில் போட்டியாளர்களாக நுழைவார்கள்.

24x7 லைவ் ஒளிபரப்பை பார்வையாளர்கள் விரும்பிய சமயங்களில் எல்லாம் பார்க்க முடிகிற வசதி இருந்தாலும் எவராலும் அதற்காக நேரம் ஒதுக்க முடியாது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. நாம் என்ன பிக் பாஸ் வீட்டின் செக்யூரிட்டி இன்சார்ஜா? அங்கு நடப்பவைகளை அமர்ந்து கண்காணிப்பதற்கு? எனவே நேரம் இருக்கும் சமயங்களில் மட்டும் உள்ளே சென்று காணலாம். அதில் ஏதாவது தவறவிட்டு விடுவோமோ என்று நினைக்கத் தேவையில்லை. ஒன்றரை மணி நேர எபிசோடில் அவை நிச்சயம் வந்துவிடும்.

‘லைவ்’ வடிவத்தால் என்னென்ன மாற்றங்கள் இருக்கக்கூடும்?

இந்தப் புதிய மாற்றத்தினால் சில சாதக பாதகங்கள் நிகழலாம். அவை என்னென்ன? பிக் பாஸ் வீட்டில் நிகழும் எந்தவொரு சர்ச்சையை நாம் விவாதிக்கும் போதும் என்ன சொல்லி வந்திருக்கிறோம்? ‘என்ன இருந்தாலும் இது எடிட் செய்யப்பட்ட ஒரு மணி நேர வடிவம்தான். இதை வைத்து நாம் எதையும் தீர்மானிக்க முடியாது. கறாரான முடிவிற்கு வர முடியாது… என்றுதானே?! இந்தச் சாத்தியத்தை இப்போது ‘லைவ் ஷோ’ தருகிறது. ஒரு சர்ச்சையான சம்பவத்திற்கு ‘முன்னாலும்... பின்னாலும்’ என்ன நடந்தது என்பதை விரிவாகவே நாம் காண முடியும். ("நான் ஏம்யா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகப் போறேன்?" என்று நீங்கள் நினைத்தாலும் அது நியாயமே).

இது பார்வையாளர்களின் கோணம். போட்டியாளர்களின் கோணத்திலும் அவர்களுக்குள் சில மாற்றங்கள் நிகழலாம். இது 24x7 ஒளிபரப்பாவது அவர்களின் நடவடிக்கைகளையும் மனநிலைகளையும் மாற்றக்கூடும். தான் செய்யும் விஷயங்கள், எடிட் வடிவத்தில் வருமோ, வராதோ என்கிற கவலை அவர்களுக்கு இனி இல்லை. ஆனால் இந்த விஷயமே அவர்கள் செயற்கையாக பலவற்றைச் செய்து கேமராக்களின் கவனத்தை ஈர்க்க காரணமாகவும் அமைந்து விடக்கூடும்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

இரண்டாவதாக, இது நாள் பூராவும் காணக்கூடிய நிகழ்ச்சி என்பதால் பிக் பாஸ் சவால்களிலும் விதிகளும் சின்னச் சின்ன சுவாரஸ்யமான மாற்றங்கள் இருக்கக்கூடும். இல்லையென்றால் ‘அவார்டு படம்’ மாதிரி, போட்டியாளர்கள் நடப்பதையும், பேசுவதையும் உட்கார்ந்து பார்க்க நமக்கு பொறுமை இருக்காது.

மூன்றாவதாக, இது சம்பந்தப்பட்ட OTT தளத்தின் வணிகத்தைப் பெருக்கும்; அதன் சந்தாதாரர்களை அதிகப்படுத்தும். தொலைக்காட்சிப் பெட்டியைத் தாண்டி OTT தளங்களுக்கு நம்மை வலுக்கட்டாயமாக பழக்கப்படுத்துவதின் ஆரம்பம் இது. இனி நகரங்களைத் தாண்டி, சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் கூட OTT சந்தாதாரர்கள் உருவாவார்கள். வீட்டுச் செலவு பட்ஜெட்டில் பொழுதுபோக்கிற்கான ஒதுக்கீடு இன்னமும் உயரும்.

நான்காவதாக, பிக் பாஸ் டீம் எடிட்டட் வெர்ஷனில் மறைக்கப்பட்ட விஷயங்களை நாம் காணக்கூடிய சாத்தியங்கள் இனி இருக்கலாம். உதாரணமாக சீசன் 5-ல் நமீதா ஏன் திடீரென மாயமானார்? கடந்த சீசனில் மதுமிதா தன் கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது போன்ற சம்பவங்களின் பின்னணியைப் பார்க்க முடியும். ஆனால் இதிலும் பிக் பாஸ் டீமின் மாய்மாலங்கள் ஏதாவது இருக்கக்கூடும்.

ஆரம்பித்தது BB Ultimate துவக்க விழா

‘பிக் பாஸ் என்பது உங்களின் உணர்வுகளில் கலந்துவிட்ட நிகழ்ச்சி’ என்கிற சென்ட்டியான வாக்கியங்கள் பின்னணியில் ஒலிக்க, ஷங்கர் திரைப்படக்காட்சி மாதிரி, ஆட்டேக்கார், பூக்கார அம்மா, வடை சுடும் பாட்டி போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியை 'ஹா’வென்று பார்ப்பது போல் காட்டினார்கள். அரங்கத்தில் கமல் என்ட்ரி. அதே பின்னணிதான். ஆனால், அட்டகாசமாக ‘பட்டி டிங்கரிங்’ பார்த்திருக்கிறார்கள்.

“'என்னது... இப்பதான் போனீங்க. மறுபடியுமா’ன்னு உங்களுக்குத் தோணலாம். அதுக்கு நீங்கதான் காரணம்” என்று நம் மீதே பழியைப் போட்டார் கமல். மக்கள்தான் இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்க விரும்பினார்களாம். (கம்பி கட்ற கதையாவுல்ல இருக்கு?!). “ஆதாமின் ஆப்பிள் முதல் ஆப்பிள் வாட்ச் வரை அனைத்து தொழில்நுட்பங்களிலும் நான் இருப்பேன். எனவே இதிலும் இருக்கிறேன்” என்று சினிமாவின் முன்னோடியாக பேசிய கமல் “ஏற்கெனவே களம் கண்டவர்கள்தான் இதிலும் வரப்போகிறார்கள். தீர்க்க வேண்டிய கணக்குகளை பார்க்கப் போகிறார்கள்” என்று முன்னுரை தந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

டிரோன் கேமராவின் அட்டகாசமான கோணத்தின் மூலம் வீடு நமக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டது. டிரோனாச்சாரியார் என்று குறும்புடன் வர்ணித்தார் கமல். Virtual reality headset மூலம் அவர் இந்தக் காட்சிகளைக் கண்டு களிக்க, நாமும் அவருடன் ஒட்டிக் கொண்டு பார்க்க முடிந்தது. சில மாற்றங்களைத் தவிர, வீடு என்பது அதே செட்அப்தான். ஆனால் பிக் பாஸ் டீம் இதை வண்ணமயமாகவும் கவர்ச்சிகரமாகவும் அருமையாக மாற்றியிருந்தார்கள். வடிவமைப்பாளர்களுக்கும் சாத்தியப்படுத்திய பணியாளர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு. அட்டகாசம்! தேனிலவு படுக்கை மாதிரி பிரத்யேகமான படுக்கையறை ஒன்று காணப்பட்டது. சவால்களில் வெற்றி பெறுபவர்களுக்கான ஊக்கப்பரிசாக இருக்கலாம். இது தவிர டெலிபோன் பூத், பிளாக் போர்டு என்று சில மாற்றங்கள் தென்பட்டன.

ஓவியாவைக் காணோம் பிக் பாஸ்

பிபி அல்டிமேட்டில் கலந்து கொள்வார்கள் என்று முன்பே கணிக்கப்பட்ட பட்டியல் ஏறத்தாழ சரியாக இருந்தாலும் ஓவியா, பரணி போன்ற ஆட்களைக் காணவில்லை. ‘குக் வித் கோமாளி’ புகழ் பெயர் கூட அடிபட்டது. ஆனால் அவர் வரவில்லை. ஆகவே இந்தப் போட்டியில் நுழைந்த பதினான்கு நபர்களின் அதிகாரபூர்வ பட்டியல் இதுதான். (1) வனிதா, (2) நிரூப், (3) ஜூலி, (4) அபிராமி, (5) தாமரைச் செல்வி, (6) ‘தாடி’ பாலாஜி, (7) பாலாஜி முருகதாஸ், (8) அனிதா, (9) சுஜா வருணி, (10) சுரேஷ் சக்ரவர்த்தி, (11) ஷாரிக், (12) அபிநய், (13) சுருதி, (14) சிநேகன்.
பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

ஒவ்வொரு போட்டியாளரையும் வரவேற்ற கமல், அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி, ஒரு பரிசுப் பொருளையும் தந்து வீட்டிற்குள் அனுப்பினார். அந்தப் பொருளில் உட்கருத்து (Subtext) இருக்கிறதாம். ஆட்டத்தில் அது பிறகு உதவுமாம். "இது இரண்டாவது வாய்ப்பு... சிறப்பா பயன்படுத்திக்குவேன்”, “முன்ன விட்டதை இப்ப பிடிச்சுடுவேன்” என்பது போன்ற வாக்கியங்களை போட்டியாளர்கள் தவறாமல் சொன்னார்கள்.

முதலில் வந்தவர் வனிதா. "பிக்பாஸோடு எனக்கொரு பந்தம் இருக்கிறது. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நிகழ்கிறது என்று நம்புபவள் நான். இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையை மாற்றியது” என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசி, Women empowerment என்று கலந்து கட்டி, “மகள்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு நீங்கள்தான் எனக்கு முன்னுதாரணம்” என்று கமலைச் சுட்டிக் காட்டி நெகிழ்ந்தார் வனிதா. பிறகு அவருக்காக ஒளிபரப்பான AVயில், ஒரு பிரபலம், ஊடகத்திடம் சொல்லும் கறாரான விஷயம், எவ்வாறு வம்பாக உருமாறுகிறது என்பதை விளக்கினார்கள். “எப்படியும் என்னைத் திட்டப் போறீங்க. நல்லா வெச்சு செய்ங்க” என்று மீம்ஸ்காரர்களை சர்காஸ்டிக்காக ஊக்கப்படுத்தினார் வனிதா. இவருக்குத் தரப்பட்ட பொருள் ‘தேன்’. இனிமையாக பேச வேண்டும் என்பதன் குறியீடாக இருக்கலாம்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

கோயிலில் நுழைபவர் போல் பயபக்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த வனிதா, திடீரென்று நின்று நெகிழ்ந்து கண்கலங்கி தரையைத் தொட்டுக் கும்பிட “என்னா பீலிங்க்ஸா…?” என்று வடிவேலு மாடுலேஷனில் கேட்க வேண்டும் போல் இருந்தது. ‘ஹா’வென்று வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வனிதாவை டிவி பெட்டியின் மூலம் மீண்டும் சந்தித்து, “வீட்டை நல்லாப் பார்த்துக்கங்க... Stay Longer” என்று கமல் ஆசி கூற, அப்போதே வீட்டு ஓனராகி விட்ட பூரிப்பு வனிதாவின் முகத்தில் தெரிந்தது. கமல் சொல்லவில்லையென்றாலும் கூட அந்தப் பொறுப்பை வனிதா வம்படியாக தானே எடுத்துக் கொள்வார் என்பது நமக்குத் தெரியும். இவர் நடனமாடிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.

அடுத்து வந்தவர் நிரூப். “அடடே... வாங்க தம்பி. அடையாளமே தெரியலையே?” என்று பாவனை செய்த கமல் “தம்பி கிட்ட பேசினீங்களா?” என்று கேட்டது முக்கியமானது. அண்ணனும் தம்பியும் கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்களாம். “முடியை டொனேட் பண்ணிட்டீங்களா?” என்று ஞாபகமாகக் கேட்டுக் கொண்டார் கமல். நிரூப்பிற்குத் தரப்பட்ட பொருள் மிளகு. ஒவ்வொரு பொருளுடன் பொருத்தமான பழமொழியையும் சொன்னார் கமல்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

“அந்த அஞ்சு செகண்ட் வீடியோவை இப்போவாவது போடுவீங்களா?”

மூன்றாவதாக நுழைந்தவர் ஜூலி. ‘அழகா இருக்கடா செல்லம்’ என்பது போல் தன்னைத்தானே கொஞ்சிக் கொண்டு உற்சாகமாக உள்ளே வந்தார். அப்போது ஒரு தம்பி ‘ரெட் கார்ப்பெட்டை’ கொண்டு வந்து வரவேற்பாக விரிக்க “அய்யோ கார்ப்பெட்டா... வேண்டாம்ப்பா...” என்று இவர் ஒதுங்கி நடந்தது ஜாலியான காட்சி. “பிக் பாஸில் ‘குறும்படம்’ என்கிற விஷயமே இவரால்தான் புகழ் அடைந்தது” என்று குறும்பான முன்னுரையுடன் ஜூலியை வரவேற்றார் கமல். பிக் பாஸ் மூலம் பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவர்களில் ஜூலியை முதன்மையானவராகச் சொல்லலாம். இந்த நோக்கில் தான் கடந்த வந்த சவால்களை, கசப்புகளை இயல்பான தொனியில் பகிர்ந்தார் ஜூலி. “எப்படி கடந்து வந்தேன்னு தெரியல சார். ஆனா வந்துட்டேன்” என்றது சிறப்பு.

ஜூலிக்குத் தரப்பட்ட பொருள் ‘வெங்காயம்’. “நான் எனக்காகத்தான் வாழறேன். மத்தவங்களைப் பத்தி கவலையில்லை. ‘Mind your own business’ என்பதுதான் நான் சொல்லும் செய்தி” என்றெல்லாம் தனக்கான வீடியோவில் பேசியிருந்தார் ஜூலி. இவர் வீட்டிற்குள் செல்ல அங்கு ஏற்கெனவே வனிதாவும் நிரூப்பும் இருந்தார்கள். கதவைத் திறந்து ஜூலியை வரவேற்றார் நிரூப். சில நிமிடங்களுக்குப் பிறகு “தம்பி நிரூப்பு... கதவை மூடாமயே வெச்சுட்டியே” என்று தான் ‘ஓனரம்மா’ ஆன விஷயத்தை ரெஜிஸ்டர் செய்தார் வனிதா.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

நடனத்தின் மூலம் காட்சி தந்தார் அபிராமி. “ஒரு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டும் எழுந்து வருவேன்” என்கிற வாக்குறுதியுடன் உள்ளே சென்ற அபிராமிக்குத் தரப்பட்ட பரிசுப்பொருள் ‘மஞ்சள்’. வீட்டிற்குள் நுழைந்த அபிராமி, “இது என்ன செருப்பா... இல்ல நாற்காலியா?” என்று வனிதாவின் காலணியை பங்கமாக கிண்டல் செய்தார். (என்னா தைரியம்?!) வரவேற்பறை சோபாவில் ஒய்யாரமாகப் படுத்திருந்த வனிதா “நான்தான் இந்த வீட்டோட ஓனர். கமலே ரெஜிஸ்டர் பண்ணிக் கொடுத்துட்டார். இந்த வீட்டில் யாராவது லவ் பண்ணீங்கன்னா அவ்வளவுதான்” என்று அப்போதே அலப்பறையை ஆரம்பிக்க, “வாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பில்ல" என்று நிரூப்பும் அபிராமியும் தங்களுக்குள் முனகினார்கள். பிரியங்காவுடன் நிறைய ராவடி செய்தாலும் பெண் போட்டியாளர்களுடன் நிரூப் மிக கண்ணியமாகவே பழகினார். அதனால் நிரூப் லவ் டிராக்கில் மாட்ட வாய்ப்பில்லை. ஆனால் அபிராமி? பார்ப்போம்.

“நான் போ... மாட்டேன்...” என்று அழுது அடம்பிடித்த தாமரை, உண்மையாகவே போகாமல் மீண்டும் உள்ளே வந்துவிட்டார். ஆளே உருமாறி அட்டகாசமான ஒப்பனையில் இருந்தார். ‘நாடக உலகத்திற்கு பெருமை சேர்த்து தந்துட்டேன்” என்று இவர் அடிக்கடி சொல்வதின் பொருள்தான் என்னவென்று தெரியவில்லை. “பையன் கூட பேசினீங்களா?” என்று தாமரையை வரவேற்றார் கமல். தாமரைக்கான வீடியோவில் அவர் கிராமத்தில் நடந்து செல்லும் காட்சிகள் காணப்பட்டன. கவுன்சிலர் தேர்தலில் வென்றது போன்ற வரவேற்பு தரப்பட்டது. “போன முறை என்னவோ நெனச்சி விட்டுட்டேன். இந்த முறை ஜெயிச்சுடுவேன்” என்று வாக்குறுதி தந்த தாமரையை வழியனுப்பி வைத்தார் கமல். இவருக்குத் தரப்பட்ட பொருள் ‘அரிசி’.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

படுக்கையில் இடம்பிடித்த ‘முருங்கைக்காய் பாலாஜி’

அடுத்ததாக வந்தவர் ‘தாடி’ பாலாஜி. “கடந்த முறை சோகமான பாலாஜியைப் பார்த்தீங்க. இந்த முறை ஃபுல் என்டர்டெயின்மென்ட்தான்” என்கிற வாக்குறுதியைத் தந்தார். கோபத்தை விட்டுவிட்ட பாலாஜி இப்போது ‘அன்பே சிவம்’ என்கிற பாதையில் திரும்பியிருக்கிறாராம். இவருக்குத் தரப்பட்ட பொருள் 'முருங்கைக்காய்’. ‘முருங்கை சாப்பிட்டவுடன் வெறுங்கையோடு நடப்பான்’ என்கிற பழமொழியை சொன்னார் கமல். அதாவது வயதானாலும் கூட வாக்கிங் ஸ்டிக் தேவைப்படாதாம். முருங்கைக் காயை படுக்கையில் இட்டு முதலில் இடம்பிடிக்க முயன்றார் பாலாஜி. (பொருத்தமான இடம்தான்).

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

இதற்குப் பிறகு பார்வையாளர்களிடமிருந்து வந்த சில கேள்விகளை எதிர்கொண்டார் கமல். “ஏன் OTT?” என்று ஒரு பெண் கேட்க “நீங்கதான் காரணம். நிகழ்ச்சியை முழுசா பார்க்க முடியலைன்னு வருத்தப்பட்டீங்கள்ல?” என்று பதில் சொன்னார். (நாங்க எப்ப சொன்னோம்?!). "2022-ல் 'விக்ரம்' படத்தை எதிர்பார்க்கலாம்" என்று அடுத்த கேள்விக்கான பதில் வந்தது. “பிக் பாஸில் நீங்கள் கத்துக்கிட்ட பாடம் என்ன?” என்று ஒரு பெண் கேட்டது முக்கியமான கேள்வி. “சினிமாவின் மூலம் போதுமான புகழை நீங்கள் அளித்துவிட்டீர்கள். ஆனால் அங்கு ‘கதாபாத்திரங்களின்’ வழியாகத்தான் என்னை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘என்னை’ நானாக இங்கு பார்க்க முடியும். இதன் மூலம் மக்களிடம் நான் பேச முடியும்” என்ற கமல் “அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தலைமுறையாக இருக்காதீர்கள். அரசியலில் உங்களின் பங்கு அவசியம் இருக்க வேண்டும்” என்று சொன்ன செய்தி முக்கியமானது.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1
ஏழாவது போட்டியாளராக வந்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்குத் தரப்பட்ட பொருள் கீரை. வீட்டுக்குள் நுழைந்த பாலாஜி, சில நிமிடங்களில் ‘Restricted Area’ என்று போர்டு போட்டு எச்சரிக்கப்பட்டிருந்த ஏரியாவில் அத்துமீறி நுழைந்து ‘சிறப்பு படுக்கையில்’ ஆசையாக படுத்து உருண்டார். மற்றவர்கள் இதை ஆட்சேபித்த போது “இன்னமும் ரூல்ஸ் சொல்லலைல்ல” என்று சட்டத்தின் ஓட்டையில் தப்பிக்க முயன்றார்.

‘பத்த வெச்சிட்டியே பரட்டை’ சுரேஷ் என்ட்ரி

எட்டாவது போட்டியாளராக வந்தவர் ‘ஸ்பேஸ்’ அனிதா. இந்த விஷயத்தை வைத்து கமல் கிண்டல் செய்ய அதற்கு ஈடுகொடுத்தார் அனிதா. வெளியில் சென்ற பிறகு ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்கிற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட அனிதா “பிக் பாஸ் குரலை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று வீடியோவில் ஃபீலிங்க்ஸ் காட்டினார். இவருக்குத் தரப்பட்ட பொருள் ‘பால்’. "சமாதானத்திற்கான குறியீடா எடுத்துக்கறேன்” என்று அனிதா சொல்ல “அதுக்காக வெளுத்ததெல்லாம் பால்ன்னு நம்பிடாதீங்க” என்று டைமிங்கில் பின்னியெடுத்தார் கமல்.

ஒன்பதாவது போட்டியாளராக வந்தவர் சுஜா வருணி. "சமீபத்தில் தாய்மை எய்தி தனது குழந்தையை விட்டு விட்டு வந்திருக்கிறார்” என்று அறிமுகப்படுத்தினார் கமல். இவருக்குத் தரப்பட்ட பொருள் பூண்டு. பத்தாவதாக உள்ளே வந்தவர் ‘பத்த வெச்சிட்டியே பரட்டை’ புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி. இவருக்கான AV சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருந்தது. தான் சமைத்திருந்த ‘சிறுதானிய உப்புமா’வை கமலுக்காக கையோடு கொண்டு வந்திருந்தார் சுரேஷ். கூடவே ‘தனுஜா - ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்’ என்கிற நூலையும் கமலுக்கு பரிசாக தந்தார். தற்போது ஜெர்மனியில் வசிக்கும் ஒரு திருநங்கையின் சுயசரிதை நூல் இது.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

கமலின் இளமையான (?!) தோற்றத்தைப் பாராட்டி ஐஸ் வைத்த சுரேஷ் “எப்போதான் சார். தாத்தாவா ஆவீங்க?” என்று கமலின் தோற்றம் குறித்து கேட்க “என் மகளைத்தான் கேட்கணும்” என்று கமல் அடித்த நையாண்டி பன்ச் சூப்பர். “பிக் பாஸில் கலந்து கொண்ட பிற்பாடு என்னை நிறைய பேர் ‘தாத்தா...’ன்னுதான் கூப்பிடறாங்க” என்று சுரேஷ் பெருமிதமாக சொல்ல “அதுக்கு முன்னாடியே ‘இந்தியன் தாத்தா’ன்னு என்னைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க” என்று கமல் சொல்ல ‘தாத்தா’ பதவிக்காக இருவரும் ஜாலியாக போட்டியிட்டுக் கொண்டது சுவாரஸ்யம். வீட்டினுள் நுழைந்த சுரேஷ், கேமராவின் முன் நின்று "நான் இங்கு நேர்மையாக நடந்து கொள்வேன். உண்மையைத்தான் பேசுவேன்” என்று பொய் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். சுரேஷிற்கு தரப்பட்ட பொருள் ‘உப்பு’.

ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பிறகு உள்ளே வந்தவர் ஷாரிக். "கடந்த முறை விட்டுட்டேன். இந்த முறை பிடிச்சிடுவேன்" என்கிற டெம்ப்ளேட் வாக்கியத்தைச் சொல்லி உள்ளே நுழைந்த இவருக்குத் தரப்பட்டது ‘கடுகு’. இதன் அருமையை பழமொழி வழியாக சொன்ன கமல், “என்னை நாட்டு வைத்தியனாவே மாத்திடுவாங்க போல” என்று பிற்பாடு சுயபகடியுடன் வசனம் பேசியது சுவாரஸ்யம். பன்னிரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் அபிநய். தான் செய்யும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட ‘கவுனி அரிசி’ என்னும் பிரத்யேக அரிசி வகையை கமலுக்குப் பரிசளித்த அபிநய் “இந்த முறை நான் சாணக்கியனாக இருப்பேன்” என்று சபதம் எடுத்துவிட்டுச் சென்றார். இவருக்குத் தரப்பட்ட பொருள் நெய்.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

பதிமூன்றாவது போட்டியாளராக உள்ளே வந்தவர் சுருதி. “நான் எந்தவொரு உத்தியையும் யோசிக்கலை. நிலைமைக்குத் தகுந்தவாறு சமாளிப்பேன்” என்று சொன்ன சுருதிக்குத் தரப்பட்ட பொருள் ‘சீரகம்’. “இது அகத்தை (உடலை) சீராக வைத்துக் கொள்ளும். நீங்களும் இந்த அகத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள்” என்று சுருதியை வீட்டின் உள்ளே அனுப்பி வைத்தார் கமல்.

‘கட்டிப்பிடி வைத்தியம் நடக்குமா, நடக்காதா?’

கடைசிப் போட்டியாளராக உள்ளே வந்தவர் கவிஞர் சிநேகன். “முதல் சீசனில் முதல் கேப்டன் இவர்தான்" என்கிற பெருமித அறிமுகத்துடன் அவரை வரவேற்றார் கமல். “வெளியே போய் என்ன செஞ்சீங்கன்னு கேட்க மாட்டேன். எனக்கே தெரியும்” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் கமல். ‘மக்கள் நீதி மய்யத்தின்’ அரசியல் கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர் சிநேகன் என்கிற பின்னணி தெரிந்தால் கமலின் சிரிப்பும் புரியும். (ஆனால், விசுவாசமாகக்கூட எஞ்சியவர் சிநேகன் மட்டும்தான் போலிருக்கிறது).
பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

சுரேஷ் சக்ரவர்த்தியைத் தொடர்ந்து சிநேகனும் கமலுக்கு இரண்டு நூல்களைப் பரிசளித்தது சிறப்பான விஷயம். ‘வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா’ என்பது ஒரு நூலின் தலைப்பு. ‘பணம் சார் உளவியல்’ என்பது இன்னொரு நூல். 'சிறைக்குச் சென்று திரும்பி வறிய நிலையில் இருந்த உ.வு.சிக்கு காந்தி உதவவில்லை’ என்கிற சர்ச்சையை கடிதங்களின் வாயிலாக விளக்கும் நூல் முன்னது. பணம் என்கிற விஷயத்தை உளவியல் ரீதியாக அணுகும் நூல் பின்னது. “சுதந்திரப் போராட்ட தியாகிகள் தொடர்பான சம்பவங்களை வாசித்தால் கண்ணீர் விடாமல் வாசிக்க முடியாது. ஒன்று மனம் சம்பந்தப்பட்டது. இன்னொன்று பணம் தொடர்பானது" என்று நன்றி கூறி பெற்றுக் கொண்டார் கமல். “படைப்பாளிகளை கொண்டாடுபவர் நீங்கள். பிக் பாஸில் நீங்கள் அறிமுகம் செய்த நூல்கள் எல்லாம் புத்தக கண்காட்சிகளில் தனியான கவனத்துடன் அடுக்கப்பட்டிருக்கிறது" என்று சிநேகன் கூறியது அருமையான விஷயம். பிக் பாஸ் என்னும் பிரபலமான நிகழ்ச்சி வழியாக கமல் செய்யும் சிறப்பான விஷயங்களுள் ஒன்று ‘புத்தகப் பரிந்துரை’.

இதைத் தொடர்ந்து ‘புத்தகப் பரிந்துரை’ சடங்கையும் செய்து முடித்தார் கமல். இந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய நூல் ‘இரா. முருகனின் சிறுகதைகள்’. எழுத்தாளர் இரா.முருகன், கமலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியிருக்கிறார். மாய யதார்த்த பாணியில் முருகன் எழுதிய தொடர் வரிசை நாவல்களான 'விஸ்வரூபம்', 'அச்சுதம் கேசவம்', 'வாழ்ந்து போதீரே' ஆகியவற்றைக் குறிப்பிட்ட கமல், "'எங்களுக்குப் புரியற மாதிரி ஈஸியான புத்தகமும் சொல்லுங்க சார்...’ன்னு சிலர் கேட்கறாங்க” என்கிற காரணத்தைச் சொல்லி அவர் அறிமுகப்படுத்திய நூல்தான் மேலே குறிப்பிட்டது.

இரா. முருகனின் சிறுகதைகள்
இரா. முருகனின் சிறுகதைகள்

எட்டு வருட காதலுக்குப் பின்னால் சிநேகனுக்கு இப்போதுதான் திருமணம் நடந்திருக்கிறது. எனவே ஓர் உருக்கமான பிரிவுக்கவிதையை அவர் வாசிக்க, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மனைவி கண்கலங்கினார். சிநேகனை வீட்டுக்குள் அனுப்பிய கமல் “முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். நிலையான மருத்துவ தீர்வு வரும் வரை, நாம் இந்தச் சூழலில்தான் வாழ்ந்தாக வேண்டும்’ என்கிற உபதேசத்தைக் கூறி விடைபெற்றுக் கொண்டார்.

‘நேரடிக் காட்சிகளில் நடந்தது என்ன?’

‘லைவ்’ நிகழ்ச்சி என்பதால் நேற்று இரவு சுமார் பதினொன்றரை மணிக்கு எட்டிப் பார்த்தேன். அதிர்ஷ்ட வாய்ப்பில் வீட்டின் தலைவராக ஷாரிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இது அவருக்குக் கிடைத்த வரமா, சாபமா என்று தெரியவில்லை. கீரிடம், செங்கோல் அணிந்து நின்று கொண்டேயிருந்தார். மற்றவர்கள் அவரை இம்சை செய்தார்கள்.
பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1

சுரேஷ் தொடர்ந்து அடித்துக் கொண்ட ‘கமென்ட்டுகள்’ காரணமாக வனிதா டென்ஷன் ஆவதைக் காண முடிந்தது. (இருக்கு... சம்பவம் இருக்கு). ஷாம்பெயின் விருந்திற்குப் பின்னால் துரதிர்ஷ்டத்தின் காரணமாக சுஜா, சிறைக்குச் செல்ல நேர்ந்தது. விதிமீறல் நிகழ்த்திய பாலாஜியும் துணைக்குச் சென்றார். “இதெல்லாம் ரொம்ப அநியாயம் பிக் பாஸ்... பெட்ல படுத்தது ஒரு குத்தமா?” என்று அனத்திக் கொண்டிருந்தார்.

காலை ஆறு மணிக்கு எட்டிப் பார்த்தால் ஏஸி சத்தத்திற்கு இணையாக மக்கள் குறட்டையிடும் சத்தம் கேட்டது. கேமராமேன், கேமராவை ஆணியில் மாட்டி விட்டு தூங்கச் சென்றிருக்கிறார் போல. ஒரே கோணம்தான். காலை ஏழரைக்கு சென்று பார்த்தால் சிநேகன் ‘வாக்கிங்’ செல்லும் காட்சியை பார்க்க முடிந்தது.

ஆக... ‘லைவ்’ நிகழ்ச்சியில், சில அரிதான தருணங்களைத் தவிர முக்கியமான சம்பவங்கள் எதுவும் கிடைக்காது. கல்லில் அரிசி பொறுக்கும் கதைதான். எனவே தினசரி ஒளிபரப்பாகும் ‘Edited Version’-ஐ பார்த்தால் போதும் என்று இப்போதைக்குத் தோன்றுகிறது.

பிக் பாஸ் அல்டிமேட் - 1
பிக் பாஸ் அல்டிமேட் - 1
இது தவிர, ஓடிடி தளத்திலேயே இது 'deferred stream' என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதனால், லைவ் ரிலேதான்... ஆனால் கொஞ்சம் டிலே என்று புரிகிறது. நான்-ஸ்டாப்பாக ஓடும் என்பதுதான் ஹைலைட்!