Published:Updated:

`நிச்சயம் ஃபீல் பண்ணிருப்பாங்க. ஆனா..?!' - `ரம்யா அக்கா' குறித்து `பிக்பாஸ்' ஆஜித்

பிக்பாஸ் ஆஜித்
பிக்பாஸ் ஆஜித்

நீங்க எவிக்‌ட் ஆனதால உங்க பிக்பாஸ் வீட்டு அக்கா ரம்யா வருத்தப்பட்டாங்களா என ஆஜித்திடம் கேட்டோம்.

தன்னுடைய குரலால், பாடல்களால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்த `சூப்பர் சிங்கர்’ ஆஜித் சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது க்வாரன்டீனில் இருக்கும் ஆஜித்திடம், `வாட் நெக்ஸ்ட்?' எனக் கேட்டோம்.

ஆஜித்
ஆஜித்

``என் குடும்பத்தை விட்டுட்டு இன்னொரு பெரிய குடும்பத்துக்குள்ள கிட்டத்தட்ட 92 நாள்கள் இருந்துட்டு வந்திருக்கேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள நிகழ்ந்த சம்பவங்களால கிடைச்ச உணர்வுகள்ல இருந்து இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்திட்டிருக்கேன். அடுத்தென்னனு இனிதான் ரொம்ப சீரியஸா யோசிக்கணும். ரெக்கார்டிங் தியேட்டர் ஆரம்பிக்கணும்.

சொந்தமா மியூசிக் வீடியோஸ் பண்ணணும்னு சில ஐடியாஸ் வெச்சிருக்கேன். ரெக்கார்டிங் வாய்ப்புகள் வருது. நான் இன்னும் எதுக்கும் ஓகே சொல்லலை. கொஞ்சம் யோசிக்கணும்’’ - தன் வழக்கமான மென்மை தொனியுடன் பதிலளித்தவரிடம், குடும்பத்தினர் எப்படி ஃபீல் செய்கிறார்கள் என்றோம்.

பிக்பாஸ் ஆஜித்
பிக்பாஸ் ஆஜித்

``குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் பெருமையாதான் ஃபீல் பண்றாங்க. அம்மா ஷபானா இன்னும் தெளிவா விமர்சனம் பண்ணாங்க. `நீ பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்தவரைக்கும் எதுவுமே பண்ணலை, பேசலைன்னு எல்லாரும் சொன்னாலும், உன்னோட இயல்பான கேரக்டர்லதான் நீ இருந்தே. நம்ம வீட்ல நீ எப்படி அமைதியா, சாஃப்ட்டா இருப்பியோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயும் இருந்தே.

ஒரு புது இடத்துல, பல புது மனுஷங்களுக்கு நடுவுல 90 நாள்கள் நீ உன்னோட இயல்பு மாறாம இருந்தது ரொம்ப பெரிய விஷயம். நீ எந்த சிச்சுவேஷன்லேயும் ஃபேக்கா நடந்துக்கல. எனக்கு அது ரொம்ப பெருமையா இருக்கு’ன்னு சொன்னாங்க’’ என்கிறார் மகிழ்ச்சியாக.

நீங்க எவிக்‌ட் ஆனதால உங்க பிக்பாஸ் வீட்டு அக்கா ரம்யா வருத்தப்பட்டாங்களா என்றோம்.

``நிச்சயம் ஃபீல் பண்ணிருப்பாங்க. ஆனா, என்னதான் தம்பின்னு சொன்னாலும் கேம்னு வர்றப்போ சுயநலமாத்தானே யோசிக்க முடியும். என்னோட எவிக்‌ஷன் எபிசோடை பார்த்தேன். நான் கிளம்பினப்போ கேபி அழுத மாதிரி இருந்துச்சு. பாசம், நட்பெல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி கேம் விளையாடணும். அதானே முக்கியம்’’ என்கிறார் ஆஜித்.

அடுத்த கட்டுரைக்கு