Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 31: `அடிதடி, சண்டை, அழுகை...' களேபரமான ஸ்வீட் டாஸ்க்!

பிக் பாஸ்

`நான் வயசுல பெரியவன்’ என்று உரிமை கோரும் மணிகண்டனாவது ஒரு கட்டத்தில் விட்டுத் தந்திருக்கலாம். மற்றவர்கள் தடுத்தும் கூட இந்த விவகாரத்தை திரும்பத் திரும்ப கிளறி தனலஷ்மியை ‘டிரிக்கர்’ செய்து கொண்டிருந்தார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 31: `அடிதடி, சண்டை, அழுகை...' களேபரமான ஸ்வீட் டாஸ்க்!

`நான் வயசுல பெரியவன்’ என்று உரிமை கோரும் மணிகண்டனாவது ஒரு கட்டத்தில் விட்டுத் தந்திருக்கலாம். மற்றவர்கள் தடுத்தும் கூட இந்த விவகாரத்தை திரும்பத் திரும்ப கிளறி தனலஷ்மியை ‘டிரிக்கர்’ செய்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ்
தனலஷ்மிக்கும் மணிகண்டனுக்கும் இடையில் பயங்கரமான சண்டை. மகேஸ்வரிக்கும் மைனாக்கும் இடையில் உரத்த குரல் சண்டை. ஆனால் சரவெடி போல் ஆரம்பித்த இந்தச் சண்டைகள், கடைசியில் புஸ்வாணம் போல ‘புஸ்’ஸென அடங்கி விட்டன. ‘தங்கம்.. தங்கம்..’ என்று ‘அண்ணாத்த’யாக மாறி பாசத்துடன் மாறினார் மணி. ‘ஐ லவ் யூ’ என்று மகேஸ்வரியைக் கட்டிக் கொண்டார் மைனா. ‘இந்த மாதிரில்லாம் முடிஞ்சா நான் என் கல்லாப்பெட்டியை எப்படி காப்பாத்தறது?’ என்று பிக் பாஸ் நொந்து போயிருக்கக்கூடும்.

நாள் 31-ல் நடந்தது என்ன?

24 மணி நேரமும் இயங்கும் ஃபாக்டரி என்பதால் நள்ளிரவைத் தாண்டியும் தொழிலாளர்கள் உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இனிப்பு தயாரானதோ இல்லையோ, தள்ளுமுள்ளுவும் சண்டையும் தாரளமாக உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. பெல்ட் வழியாக பொருட்கள் வரும் போது ஏறத்தாழ உடலையே அதில் நுழைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார்கள்.

கன்வேயர் பெல்ட் அருகே கராத்தே பெல்ட் சண்டை

புரியாமலேயே போய்க் கொண்டிருக்கும் அவார்டு படங்களில் மெலிதான நகைச்சுவை வசனம் வந்தாலே பார்வையாளர்கள் உரத்த குரலில் சிரிப்பார்கள். (அது புரிஞ்சுடுச்சாம்!). அதைப் போல பிக் பாஸ் சுமாராக காமெடி செய்தாலே மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இம்முறை அவர் சொன்ன கமெண்ட் கண்டு கொள்ளப்படவில்லை. தள்ளுமுள்ளுவில் அத்தனை மும்முரமாக இருந்தார்கள். ‘பெல்ட்டுக்கு ரொம்ப உள்ள போனா, வெறும் அல்வாதான் கிடைக்கும்’ என்று பிக் பாஸ் அடித்த ஜோக்கை யாரும் கவனிக்காமல், அவர் மட்டுமே தனியாக சிரித்துத் தொலைய வேண்டியிருந்தது.

டாஸ்க்கில் சண்டை
டாஸ்க்கில் சண்டை

மக்கள் பெல்ட் அருகே மும்முரமாக போராடிக் கொண்டிருக்கையில், தனலட்சுமியும் ஷிவினும் கூட்டுக்களவாணியாக இணைந்து எதிரணியின் கடையில் இருந்த ஸ்வீட்டுக்களை திருடி விட்டார்கள். ‘பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தலாம்’ என்று ரூல் புக்கில் இருந்ததால் ‘சுட்டு விடலாம்’ என்று நினைத்து விட்டார்கள் போல. ஆனால் அவர்கள் ஜாலியாக செய்த இந்த விஷயம் உபத்திரவமாக முடிந்தது. இதைப் பார்த்து விட்ட எதிர் டீம் மகேஸ்வரி, ஆவேசமாக வந்து சண்டை போட்டார். மகேஸ்வரியை விடவும் மணிகண்டன் அதிக ஆவேசம் அடைந்தார். “நான் உங்களை எடுக்கச் சொன்னேனா?” என்று தன்னுடைய டீமை ஓனர் அமுதவாணன் கோபித்துக் கொண்டார்.

மீண்டும் பெல்ட். மீண்டும் தள்ளுமுள்ளு. இந்த முறை தனலஷ்மி எடுத்ததை மணிகண்டன் பிடுங்கப் போராடினார். ‘கொடி காத்த குமரன்’ போல் தனலஷ்மி பிடிவாதம் காட்ட, மணிகண்டனின் வேகத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் ‘பொதோ்’ என கீழே விழுந்தார். அவ்வளவுதான். பிறகு ஆரம்பித்தது... அந்த ரணகளச் சண்டை. தனலட்சுமி வெறித்தனமாக கத்த, மணிகண்டனும் அதற்கு சளைக்காமல் பதிலுக்கு கத்த, தொழிற்சாலை ஸ்தம்பித்தது.

மணிகண்டன் – தனலஷ்மி – உக்கிரமான சண்டை

தன்னை நோக்கி யாராவது திமிறிக் கொண்டு வந்தாலே தனலஷ்மி ஆவேசமாகி விடுகிறார் என்பதை முத்து விவகாரத்தில் ஏற்கெனவே பார்த்தோம். ‘என்னை அடிக்க வந்தா.. நானும் திருப்பித் தருவேன்’ என்று தனலஷ்மி கத்த, ‘நான் உன்னை அடிக்கவா வந்தேன். நீதான் வயசுக்கு மரியாதை தராம ‘போடா’ன்னு சொன்ன.” என்று மணிகண்டன் உக்கிரம் காட்ட “நான் அப்படி சொல்லல” என்று தனலஷ்மி திமிற.. நான்-ஸ்டாப்பாக இந்த ‘நான்சென்ஸ் சண்டை’ போய்க் கொண்டே இருந்தது.

தள்ளுமுள்ளுவில் கீழே விழுவது சகஜம்தான். பொம்மை டாஸ்க்கில் இதே தனலஷ்மிதான் ஆவேசமாக செயல்பட்டார். அது போல் இந்தச் சம்பவத்தையும் அவர் இயல்பாக எடுத்துக் கொண்டிருக்கலாம். “ஏன்.. மணி.. இப்படிப் பண்ணிட்டே” என்று பிறகு நிதானமாக கேட்டிருக்கலாம். ஆனால் இத்தனை ஆவேசம் அடைந்து சண்டை போடும் தனலஷ்மியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ‘நான் வயசுல பெரியவன்’ என்று உரிமை கோரும் மணிகண்டனாவது ஒரு கட்டத்தில் விட்டுத் தந்திருக்கலாம். மற்றவர்கள் தடுத்தும் கூட இந்த விவகாரத்தை திரும்பத் திரும்ப கிளறி தனலஷ்மியை ‘டிரிக்கர்’ செய்து கொண்டிருந்தார்.

மணிகண்டன்
மணிகண்டன்

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டும். அது அசிமின் அணுகுமுறை. ‘நான் பண்ண தப்பை நீங்களும் பண்ணாதீங்க” என்று இருவரையும் அவர் தடுத்து சமாதானப்படுத்த முயன்றது சிறப்பான விஷயம். இந்த நிதானத்திற்காக அசிமை நிச்சயம் பாராட்ட வேண்டும். இந்த மாற்றத்தை அவர் தொடர்ந்து கடைப்பிடித்தால் இறுதி வரை பயணிக்கக்கூடிய போட்டியாளராக இருப்பார். “நீங்க ரியாக்ட் பண்ணாதீங்க” என்று விக்ரமன் தடுத்த பிறகுதான் மணிகண்டனின் ஆவேசம் சற்று தணிந்தது.

உற்பத்தி முடிந்த பிறகு தனலஷ்மியிடம் வந்து மணிகண்டன் விசாரித்து கைகொடுத்தது நல்ல விஷயம். ஆனால் அரைமனதாகவே இந்தச் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார் தனலஷ்மி. தரக்கட்டுப்பாடு செய்யும் நேரம். அசிமும் ஜனனியும் இதற்கான பொறுப்பில் இருந்தார்கள். ‘அடை.. தேன் அடை அணி..’ 315 எண்ணிக்கையும், ‘கண்ணா லட்டு’ அணி 221 எண்ணிக்கையும் தயார் செய்திருந்தார்கள். மணிகண்டனின் போராட்டம் ‘அடை’ அணிக்கு கூடுதல் எண்ணிக்கையைப் பெற்றுத்தருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

“என்ன..நீங்க. ஓனரா இருந்துக்கிட்டு பெல்ட் ஏரியால சரியா போராட மாட்டேன்றீங்க.. பயப்படறீங்க. களத்துல இறங்கி மோதுங்க” என்று விக்ரமனை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் மைனா. சிலரால் மட்டுமே இப்படி ஆவேசமாக போராடி சண்டையிட முடியும். அந்தக் குணாதிசயம் இல்லாதவர்களால் அதிகம் செயல்பட முடியாது. குயின்சி, ஜனனி போன்றவர்கள் எல்லாம் போராட்டக்களம் பக்கமே வரவில்லை. அவர்களின் இயல்பு அப்படி.

‘அப்ப நான் தக்காளி தொக்கா?’ – மகேஸ்வரி ஆவேசம்

நாள் 31 விடிந்தது. ‘ஏதோ’ படத்திலிருந்து ‘ஏதோ’ பாடலைப் போட்டார் பிக் பாஸ். (அவர் மட்டும்தான் ‘அந்த டிவி’, ‘இந்த டிவி’ என்று பெயர் வைக்க முடியுமா?!). “நேத்து என்னா ஃபைட்டு தெரியுமா.. என் கண்ணு கிழிஞ்சது.. கை உடைஞ்சது” என்று ஆயிஷாவிடம் தனலஷ்மி பெருமிதமாக சொல்ல “நேத்து நைட்டு மழை பெஞ்சுதா என்ன?” என்பது மாதிரி ஆச்சரியத்துடன் விசாரித்துக் கொண்டிருந்தார் ஆயிஷா. அம்மணிக்கு நல்ல தூக்கம் போல.

மகேஸ்வரி
மகேஸ்வரி

“ரெண்டு பேருமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்ல போயிட்டீங்க.. அவ கடைக்குட்டி-ன்னு கமல் முன்னாடி நீதானே சொன்னே.. நீயாவது விட்டுக் கொடுத்திருக்கலாம்” என்று மணிகண்டனிடம் சரியான பாயிண்டை சொல்லிக் கொண்டிருந்தார் ராபர்ட். தன்னிடம் மணிகண்டன் வந்து கைகொடுத்த சம்பவத்தைப் பற்றி “காமிராக்காக கைகொடுக்கறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” என்று இன்னொரு பக்கம் அனத்திக் கொண்டிருந்தார் தனலஷ்மி.

மகேஸ்வரிக்கும் மைனாவிற்கும் இடையில் ஒரு சிறு விரோதப்புகை ஆரம்பித்தது. இதுவே அன்றைய இரவில் நடந்த பெருஞ்சண்டைக்கான விதையாக இருக்கலாம். “மணி வந்தப்புறம்தான் இந்த டீமோட பாயிண்ட்ஸ் அதிகமாச்சு” என்று சொன்ன மைனா, தன்னையும் அந்த கிரெடிட்டில் மறைமுகமாக இணைத்துக் கொண்டார். இதனால் காண்டான மகேஸ்வரி “அப்ப ஆரம்பத்துல இருந்து உழைச்ச.. நாங்கள்லாம் தக்காளி தொக்கா?!” என்று ஆவேசம் அடைய ‘ஆள விடும்மா’ என்று எஸ்கேப் ஆனார் மைனா.

‘துவம்சம் பண்ணிடுவேன்’ – கோபம் அடைந்த ராம்

சம்பளப்பட்டுவாடா விஷயத்தில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இழுபறி நடந்தது. “நான் கடுமையா உழைச்சேன். நிறைய சம்பளம் வேணும்” என்று ஷிவின் போர்க்கொடி உயர்த்த “அவ்ளலாம் எதிர்பார்க்காத.. இவ்ளதான் தர முடியும்” என்று கறாரான ஓனராக இருந்தார் தனம். “ராமோட சம்பளத்தை வேணா குறைச்சுக்கறேன்” என்றார் தனலஷ்மி. பாவம், ராம். (கிச்சான்னே இளிச்சவாயன்தான்!). “எனக்கு சம்பளம் கம்மியா தந்தா அவ்வளவுதான். துவம்சம் பண்ணிடுவேன்” என்று இன்னொரு பக்கம் பொங்கிக் கொண்டிருந்தார் ராம்.

“மணிகண்டனும் மைனாவும் சிறப்பா உழைச்சாங்க. அவங்களுக்கு கூடுதல் பணம் தரலாம்ன்னு பார்க்கறேன்” என்று ஓனர் விக்ரமன் சொல்ல, இன்னொரு முறை காண்டானார் மகேஸ்வரி. மைனாவும் இதைச் சொல்லியதில் முன்பே சூடான மகேஸ்வரிக்கு இம்முறை உஷ்ணத்தின் டிகிரி அதிகமாகியது. “நாங்கள்லாம் உழைக்கலையா?” என்கிற புராணத்தை மறுபடி பாடினார்.

தனலஷ்மி
தனலஷ்மி

வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் பணியில் இணைவதற்காக அப்ளிகேஷன் போடும் நேரம். “தனலஷ்மி கிட்ட சண்டை போட்டது தப்புதான். இனிமே அப்படி நடக்காம பார்த்துக்கறேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் மணிகண்டன். எனவே ‘மணியை மேனேஜரா எடுத்துக்கறேன்” என்றார் விக்ரமன். டெலிவரி பாயாக புது அப்பாயிண்ட்மெண்ட் நிவாஷிணியாம். மைனாவும் ஆயிஷாவும் தொழிலாளர்கள்.

“முன்னாள் ஊழியர்களான கதிரவனும் அசிமும் கூட நல்லா உழைச்சாங்க.. அவங்களுக்கும் பணம் தரலாம்ன்னு பார்க்கறேன்” என்று தாராள பிரபு ஓனராக இருந்தார் விக்ரமன். “டீம் வளர்ந்தாதான் நானும் வளர முடியும். அணி இன்னமும் பெரிசா வளரட்டும். பிறகு கேட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று அசிம் பெருந்தன்மையாக பேசியதைக் கேட்டு உரிமையாளருக்கு புல்லரித்தது.

‘முதலாளி.. அழுவாதீங்க.. முதலாளி’...

இன்னொரு அணியிலும் பணியாளர் மாற்றம் நடந்தது. ரச்சிதா மேனேஜராம். அமுதவாணனும் ஷிவினும் தொழிலாளர்கள். புதிய வரவு ராபர்ட். இவர் டெலிவரி பாயாக இருப்பாராம். ஷிவின் தன்னுடைய இடத்தை அத்தனை எளிதில் விட்டுத்தர தயாராக இல்லை.

தனலஷ்மி பேசும் போது ‘ராமோட ஒர்க் நல்லா இருந்தது’ என்று பாராட்ட ‘துவம்சம் பண்ணிடுவேன்’ என்று முன்னர் பொங்கிய ராம், இப்போது புன்னகை முகத்துடன் இருந்தார். மணிகண்டனுடன் நடந்த சண்டையைப் பற்றி பேசும் போது பாச மிகுதியில் தனலஷ்மி கண்கலங்க, ஓடி வந்து அணைத்துக் கொண்டார் அண்ணன் மணிகண்டன். (தங்கம்.. தங்கம்..). ‘மொல்லாளி.. அழுவாதீங்க.. மொல்லாளி’ என்று தனத்தை மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.

ஜனனி - அசிம்
ஜனனி - அசிம்

இந்தச் சமயத்தில் ஏடிகே ஒரு கருத்தை சபையில் வைத்தார். “டாஸ்க்ல வீணா மோதி மண்டையை உடைச்சுக்காதீங்க.. மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. போதாததுக்கு கமல் சார் கிட்டயும் நாம அப்புறம் பதில் சொல்லியாகணும்.. இதையும் மனசுல வெச்சுக்கிட்டு ஆடுங்க” என்று அவர் சொன்னது நியாயமான கருத்துதான். ஆனால் “அப்படில்லாம் இருக்க முடியாது. அந்தச் சமயத்துல என்ன தோணுதோ.. அப்படித்தான் ரியாக்ட் பண்ண முடியும்..” என்று ‘கமல் சாருக்கு பதில் சொல்றதெல்லாம் ஒரு மேட்டரா?!’ என்கிற ரேஞ்சில் தனலஷ்மி பேசினார். (இதை வீடியோவில் பிறகு பார்க்கப் போகும் கமல் ‘அபூர்வசகோதரர்கள்’ அப்பு மாதிரி பரிதாப எபெக்ட்டிற்கு மாறலாம்). “அசிம் கோபப்பட்ட போது நாம எல்லோருமே சுட்டிக் காட்டினோம். அவருக்குத்தான் ரெட் கார்டு நிறைய கொடுத்தோம்” என்று தன் தரப்பிற்கு வலுவான பாயிண்ட்டுகளைக் கூட்டினார் ஏடிகே.

பர்கர் சிக்கன் காட்டி காசு பிடுங்கிய பிக் பாஸ்

‘இதென்ன பிரமாதம்.. அடுத்தது இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்கிற கதையாக பிக் பாஸ் தந்த அடுத்த சிறப்பு ஆர்டர், ‘காஜூ கத்லி’யாம். “நாம ஒரு டிக்னிட்டியா விளையாடலாம்” என்று சொன்ன விக்ரமன், பஸ்ஸர் அடித்தவுடன் பாய்ந்து ஒடினார். நிவா தன் கையைப் பிடித்து இழுத்தது குறித்து ஆவேசமான தனலஷ்மி “நானும் அப்படிச் செய்வேன்” என்று உக்கிரமானார். பாவம், நிவா என்கிற பிள்ளைப்பூச்சியால் இத்தனை ஆவேசம் அடைய முடியவில்லை.

“அது என்ன என்னை மாத்திரம் கரெக்ட்டா பார்த்து குத்தம் சொல்லிட்டே இருக்கே?” என்று அமுதவாணன் அசிமிடம் வாக்குவாதத்தை ஆரம்பிக்க “அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல.. வாங்க.. ஸ்வீட் பேக் பண்ணனும்” என்று அமுதவாணனை இழுத்துச் சென்றார் ஓனர் தனலஷ்மி. (இந்த அவசரம் நேத்து சண்டை போடும் போது தெரியலைங்களா மேடம்?!).

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பர்கர், தந்தூரி சிக்கன் என்று உணவுப்பொருட்களை கவர்ச்சிகரமாக டிவியில் காட்டி காசு பிடுங்கும் வேலையில் இறங்கினார் பிக் பாஸ். (மக்களிடம் சற்று பணப்புழக்கம் அதிகமாகும் நேரத்தில் விளம்பரங்களும் அதிகமாகி விடுகிற வணிக உத்தியை பிக் பாஸூம் பின்பற்றுகிறார் போல). ‘என் கிட்ட காசு இல்ல.. வாங்கித்தா’ என்று சிலர் கேட்க ‘யார் கிட்ட காசு இருக்கோ.. அவங்க மட்டும்தான் வாங்க முடியும். அவங்க மட்டும்தான் அதை சாப்பிடணும். மத்தவங்களுக்கு ஷோ் பண்ண முடியாது’ என்று கறாராக தெரிவித்தார் பிக் பாஸ். ‘மக்களை அதிகமாக உழைக்க வைப்பதுதான் பிக் பாஸின் நோக்கமாம். ‘கையில காசு.. வாயில தோச’ என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

பிக் பாஸ் இப்படிச் சொல்லியும் ஏடிகேவிடமிருந்து நைசாக கடன் வாங்கி வந்திருந்த ஆயிஷாவை “காசு எப்படி வந்துச்சு?” என்று பிக் பாஸ் மடக்க, ‘ஹிஹி..’ என்று பணத்தை திருப்பிக் கொடுத்தார் ஆயிஷா. “வேலைதான் முடிஞ்சிருச்சே.. முதலாளி கிட்ட பணம் வாங்கிக்கலாம் இல்லே?!” என்று இன்னொரு பக்கம் போட்டுக் கொடுத்தார் பிக் பாஸ்.

உப்பில்லாத தயிர்சாதமாக ‘சப்’பென்று முடிந்த சண்டை

மதியம் சாப்பிடாத களைப்பில் தொழிலாளர்கள் வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு தயிர் சாதம் மட்டுமே காத்திருந்தது. மேனேஜருக்கு மட்டும் தொட்டுக்கொள்ள உருளைக் கிழங்கு பொறியல். இதனால் வீட்டின் கேப்டன் மைனாவிற்கு ‘கச்சா முச்சா’ என்று கோபம் வந்தது. ‘வெறும் தயிர்சாதம்தானா. வேற எதுவும் செய்யலையா?” என்று சமையல் டீமில் இருந்த மகேஸ்வரியிடம் ஆத்திரமாக கேட்க இருவருக்கும் உக்கிரமான வாக்குவாதம் ஆரம்பித்தது.

மைனா - மகேஸ்வரி
மைனா - மகேஸ்வரி

“சமையல் டீம்ல நான் மட்டும்தான் இருக்கனா.. இத்தனை பேருக்கு தனியா நின்னு வடிச்சுக் கொட்டியிருக்கேன். சும்மா இருந்த மத்தவங்களையும் போய்க் கேளு.. நான் மேனேஜரா இருந்தப்பவும் சுமாரான சாப்பாடுதான் கிடைச்சது..” என்று பதிலுக்கு மகேஸ்வரி மல்லுக்கட்ட “கேப்டன்-ன்ற முறையில என் கிட்ட இதைச் சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்று மைனாவும் சிறகடித்து கோபம் காட்டினார். ஆனால் சில நிமிடங்களிலேயே இந்தச் சண்டையின் சூடு ஆறிப் போய் தயிர் சாதமாக மாறியது. இருவரும் கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்கள். நமக்குத்தான் ‘ச்சை’ என்று ஆகி விட்டது.