Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 32: `Truth or Dare'-ல் வெடித்த விவகாரம்; அண்ணன் - தங்கை சென்டிமென்ட் சண்டை!

பிக் பாஸ்

“நான் உன்னை தங்கச்சி மாதிரிதான் பார்க்கறேன்.. ஆனா நீ அப்படி இல்ல. ‘இந்த வாரம் நான்தான் வெளிய போவேன்’ன்னு ராம் கிட்ட சொல்லியிருக்க.. அவ்வளவு வன்மம்..

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 32: `Truth or Dare'-ல் வெடித்த விவகாரம்; அண்ணன் - தங்கை சென்டிமென்ட் சண்டை!

“நான் உன்னை தங்கச்சி மாதிரிதான் பார்க்கறேன்.. ஆனா நீ அப்படி இல்ல. ‘இந்த வாரம் நான்தான் வெளிய போவேன்’ன்னு ராம் கிட்ட சொல்லியிருக்க.. அவ்வளவு வன்மம்..

பிக் பாஸ்
ஹவுஸ்மேட்ஸ்களை கோர்த்து விட்டு குடுமிப்பிடிச் சண்டை போட வைப்பதற்காக விதம் விதமான ஐடியாக்களை பிக் பாஸ் ரூம் போட்டு யோசிக்கிறார். அதில் ஒன்று Truth or Dare. இந்தக் கொலைவெறி விளையாட்டில் ‘பிள்ளைப்பூச்சி’ ஜனனி மாட்டிக் கொண்டு வார்த்தையை விட்டு விட, இன்னொரு பூச்சியான ஏடிகேவிற்கு கோபம் வந்து ஒரே சென்டிமென்ட் மோதல்.

‘இவையெல்லாம் பிக் பாஸின் பிளான். சூட்சுமக்கயிறு அவரிடம் உள்ளது. அந்த சூழ்ச்சிக்கு நாம் பலியாக வேண்டாம்’ என்று சிறிது யோசித்தால் கூட இவர்களிடம் இத்தனை உணர்ச்சிப்பீறிடல் உற்பத்தியாகாது. காமிரா மைலேஜ் தேற்றுவதற்காக கத்துவது வேறு. அது இன்னொரு டிபார்ட்மெண்ட். அசிம், தனலஷ்மி போன்றவர்கள் இதில் மாஸ்டர்கள்.

நாள் 32-ல் நடந்தது என்ன?

அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம். மைனாவையும் நிவாவையும் வெளியே அனுப்பி விட்டு ராம் மற்றும் கதிரவனை உள்ளே சேர்த்துக் கொண்டார் ஓனர் விக்ரமன். இன்னொரு அணியில் ஷிவின், ராபர்ட்டை வெளியே அனுப்பி விட்டு குயின்சி மற்றும் அசிமை இணைத்துக் கொண்டார் தனலஷ்மி. ஆனால் அசிமை சேர்த்துக் கொண்டதின் மூலம் ‘வேலியில் போகிற ஓணாணை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்ட கதையாகப் போகிறது’ என்பது தனலஷ்மிக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

ரச்சிதாவின் நிழலாக ராபர்ட்டா?

Truth or Dare விளையாட்டில் மைனாவிற்கு Dare வந்தது. ‘விக்ரமனிற்கு நிழலாக இருக்க வேண்டும்’ என்று பிக் பாஸ் அறிவிக்க ‘இது எனக்கான தண்டனையா?’ என்று சிணுங்கினார் விக்ரமன். அடுத்ததாக ராபர்ட்டிற்கும் Dare வந்தது. ‘அய்யய்யோ.. எனக்கு நிழலா வெச்சிடுவாங்களோ.. ஏற்கெனவே இந்தாளு இம்சை தாங்கலையே?!’ என்பது போல் ஜாலியாக பதறினார் ரச்சிதா. ஆம், பிக் பாஸ் அப்படி கோக்குமாக்காக செய்து வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்.

ரச்சிதா
ரச்சிதா

ரச்சிதாவின் நல்ல வேளை, அப்படி நடக்கவில்லை. ‘அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களின் முழுப்பெயர்களைச் சொல்ல வேண்டும்’ என்று வந்தது. உளறிக் கொட்டி கிளறி மூடினார் ராபர்ட். தன்னுடைய தந்தையின் பெயரை தவறாக சொல்ல ராபர்ட் முற்பட்ட போது ‘குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்திடாதீங்க’ என்று ஜாலியாக கமெண்ட் அடித்தார் ஷிவின். “என்னது.. ரச்சிதாவோட முழுப்பெயர் உங்களுக்குத் தெரியாதா.. என்னய்யா ரசிகரு?” என்று ராபர்ட்டைக் கலாய்த்தார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றதால் ராபர்ட்டிற்கு பாயிண்ட்ஸ் இல்லை.

அடுத்து ஆரம்பித்தது ஒரு வில்லங்கமான விவாதமும் சண்டையும். ஜனனிக்கு Truth தேர்வு வந்தது. “இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார்?’ என்கிற கேள்விக்கு சிறிதும் தயக்கமில்லாமல் ‘ஏடிகே’ என்றார் ஜனனி. “அவருக்கு நல்லாவே கோபம் வரும். அது சில சமயங்கள்ல தெரிஞ்சது. ஆனா பிறகு கோபம் இல்லாத மாதிரி நடிப்பார்” என்பது கன்ஃபெஷன் ரூமில் ஜனனி சொன்ன காரணம். இதையே சபையிலும் சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் தப்பியிருந்திருக்கலாம். ஆனால் விதி அப்படி நிகழ அனுமதிக்கவில்லை.

ஏடிகே Vs ஜனனி – அண்ணன் தங்கை சென்டிமென்ட் சண்டை

இந்த ஆப்ஷனுக்கு பெரும்பாலும் விக்ரமனின் பெயரை மக்கள் தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ‘அய்யய்யோ’ என்று நாக்கைக் கடித்துக் கொண்ட ஜனனி, தன்னுடைய தேர்வு மற்றும் காரணத்தை பொதுவில் சொன்னார். “ஏதாவது ஒரு பிழையைப் பற்றி ஏடிகே முதலில் ஒன்று சொல்லுவார். பிறகு பொதுவில் வேறு மாதிரி சொல்லுவார்” என்பது ஜனனி சபையில் அளித்த விளக்கம். இதனால் ஏடிகேவின் முகம் மாறிற்று.

“ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்க” என்று கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட முகபாவத்துடன் ஏடிகே கேட்க “நான் கப் உடைச்ச போது.. “ஒகே.. பார்த்து விளையாடு. என்று சொன்னவர்... ஆனால் கமல் சார் முன்னாடி அவங்களுக்கு கோபம் வர ஆரம்பிச்சிட்டது என்றார்” என்று ஜனனி விளக்கம் அளிக்க, பிறகு ஆரம்பித்தது ஏடிகேவின் ரணகளமான கோப சரவெடி.

ஜனனி
ஜனனி

“நான் உன்னை தங்கச்சி மாதிரிதான் பார்க்கறேன்.. ஆனா நீ அப்படி இல்ல. ‘இந்த வாரம் நான்தான் வெளிய போவேன்’ன்னு ராம் கிட்ட சொல்லியிருக்க.. அவ்வளவு வன்மம்.. இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கேன்.. நான் போறேன். நீ சந்தோஷமா கேம் ஆடு. முதல்ல அண்ணா’ன்னு கூப்பிட்ட.. அப்புறம் ஏடிகேன்னு கூப்பிட ஆரம்பிச்ச.. உனக்கு உள்ள அத்தனை வெறுப்பு இருந்திருக்கு..” என்றெல்லாம் வார்த்தைகளால் குமுறிக் கொண்டே வெளியே செல்ல முயன்றார் ஏடிகே.

‘இந்த ஆட்டத்தில் யாருடைய பெயரையாவது சொல்லித்தானே ஆக வேண்டும், அதுதானே பிக் பாஸின் பிளான்?’ என்று ஏடிகே சற்று நிதானித்திருக்கலாம். ஏடிகேவின் குமுறதை தற்காலிகமாக சகித்துக் கொள்ளலாம் என்கிற அணுகுமுறை ஜனனியிடமும் இல்லை. பதிலுக்கு கோபம் கொள்ள ஆரம்பித்தார். ‘முதலில் அண்ணா.. என்று கூப்பிட்டார்.. பிறகு பெயர் சொல்ல ஆரம்பித்தார்’ என்று ஏடிகே சொன்ன குறிப்பிற்குப் பதில் சொல்லும் விதமாக ‘அதெல்லாம் அவங்க அவங்க நடந்துக்கறதைப் பொறுத்து இருக்கு’ என்று ஜனனி பதிலடி தர சூழல் இன்னமும் உக்கிரமாகியது.

‘எங்கும் கருத்து சொல்லும் உரிமை பெற்ற அசிம். வேறு கிளைகள் இல்லை’

‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ என்கிற காமெடியாக அசிமும் இப்போது கோதாவில் குதித்தார். “என்னையும் மொதல்ல அண்ணான்னு கூப்பிட்ட.. அப்புறம் அசிம்’ன்னு கூப்பிட ஆரம்பிச்சே’ என்கிற லா பாயிண்ட்டை அவர் முன்வைக்க “நீங்கதானே சொன்னவர்.. அண்ணா என்று அழைக்க வேண்டாம்.. அசிம்ன்னு கூப்பிட்டா போதும்” என்று ஜனனி சொன்னதும் அசிமின் முகம் அஷ்டகோணலாகச் சென்று சமாளித்துக் கொண்டு வாதத்தைத் தொடர்ந்தார்.

ஜனனி கார்னர் செய்யப்படுவதை உணர்ந்த அமுதவாணன் ஆதரவு தரும் நோக்கில் “பேசுங்க.. ஒரு பொண்ணு கிட்ட எப்படில்லாமும் பேசுங்க” என்று சொல்லி விட, சூழல் இன்னமும் உஷ்ணம் ஏறியது. “அப்படி என்ன கேட்டுட்டோம்..” என்று அசிம் உள்ளிட்ட சிலர் சூடானார்கள்.

கதிரவன் - மகேஸ்வரி
கதிரவன் - மகேஸ்வரி

கோபத்துடன் வெளியே அமர்ந்திருந்த ஏடிகேவிடம் “நீங்க ரெண்டு பேரும் ஒரே நாட்ல இருந்துதானே வந்திருக்கீங்க” என்று வில்லங்கமான வார்த்தையை அசிம் விட்டார். ‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன்தான்’ என்கிற, அவருக்குப் பிடித்த அரசியல் கோஷத்தை இப்போது மறந்து விட்டார் போல. மற்றவர்கள் இதை மெலிதாக ஆட்சேபித்தார்கள். “அசிம் பண்றதெல்லாமே ஒரு மாதிரி இருக்கு” என்று விக்ரமன் சலித்துக் கொள்ள “உள்ளே புகுந்து குழப்பிட்டாரு” என்று இதை ஆமோதித்தார் அமுதவாணன்.

‘இந்த வாரம் ஏடிகே எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கு’ என்று ராமிடம் இயல்பாக ஜனனி சொன்னதை, அவரும் இயல்பாக ஏடிகேவிடம் சொல்லி விட்டிருக்கிறார். அந்தக் கோபமும் வருத்தமும் ஏடிகேவின் மனதில் இருந்திருக்கிறது. ஆட்டத்தில் இப்படி ஒருவர் கருத்து சொல்வது சகஜம்தான். இதை ஏடிகே மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எப்படியும் மக்களின் வாக்குகள்தான் இதைத் தீர்மானிக்கப் போகின்றன.

‘எப்பப்பாரு பஞ்சாயத்து பண்ணாதீங்க’ – விக்ரமனிடம் சூடான அசிம்

‘அவர்தான் அசிம் என்று கூப்பிடச் சொன்னவர்’ என்று அசிம் செய்த காமெடியைப் பற்றி ஜனனி சிரித்துக் கொண்டே தன் நண்பர் குழுவிடம் சொல்ல, இதை தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த அசிம், உரையாடலுக்குள் வந்து விட்டார். இதைப் பற்றி விக்ரமன் சொன்ன கருத்திற்கு அசிம் கோபம் கொண்டு “நீங்க ஒண்ணும் எல்லாத்துக்கும் பஞ்சாயத்து பண்ண வேண்டாம்” என்று எகிற, “நானா எல்லோரையும் கூப்பிட்டு உக்கார வெச்சு பஞ்சாயத்து பண்றேன்” என்று விக்ரமனும் பதிலுக்கு மல்லுக்கட்ட, இந்தச் சர்ச்சையின் பாதை திசை மாறிப் பரவியது.

பிறகு ஏடிகேவும் ஜனனியும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தனிமையில் அமர்ந்தார்கள். இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் ‘அண்ணா.. தங்கச்சி..’ என்கிற உருக்கத்துடன் இருவரும் சமாதான முடிவிற்கு வந்திருந்தாலும் அவரவர்களின் ரகசியக் கத்திகளும் நகங்களும் உள்ளே அப்படியே உறைந்திருக்கக்கூடும்.

டாஸ்க்
டாஸ்க்

‘போராடு.. ஓயாதே..’ என்கிற உத்வேகப் பாடலுடன் நாள் 32 விடிந்தது. கட்டியும் முட்டியுமாக, இனிப்பு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் வஸ்துவிற்கு இந்தப் பாடல் எல்லாம் சற்று ஓவர்தான். “தூக்கிட்டா என்ன பண்றது?” என்கிற பயத்துடன் கல்லாப்பெட்டியை அமுதவாணன் காவல் காத்துக் கொண்டிருக்க “நாங்கள்லாம் பாருங்க.. எவ்வளவு நம்பிக்கையா தூங்கப் போயிட்டோம்.. உங்களுக்கு நம்பிக்கை இல்ல” என்று அவரிடம் வெட்டி தத்துவம் பேசினார் விக்ரமன்.

Truth or Dare விளையாட்டில் தோற்ற காரணத்தால் தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. ராபர்ட் சைகை மொழியில்தான் பேச வேண்டும். ஜனனி ஒட்டு மீசை வைத்துக் கொள்ள வேண்டும். தனக்கு நிழலாக இருக்க வேண்டிய மைனாவிடம், ஓடி ஓடி விக்ரமன் ஆட்டம் காட்ட, ஒரு கட்டத்தில் ‘போய்யா.. யோவ்..’ என்று விலகி விட்டார் மைனா. தண்டனை வந்தாலும் பரவாயில்லையாம்.

குயின்சியை தான் மகளாக தத்தெடுத்துக் கொண்டிருக்கும் தகவலை மகேஸ்வரியிடம் சைகை மொழியில் தெரிவித்து ‘திடீர்’ பாசம் காட்டினார் ராபர்ட். (ரச்சிதாவை எடுத்துக் கொண்டிருக்கலாம்!). “என்னையும் தத்தெடுங்க” என்று சொல்லி ராபர்ட்டிற்கு அதிர்ச்சி தந்தார் மகேஸ்வரி. ‘கல்லா பெட்டில கைவெச்சிடுங்க’ என்று ராபர்ட்டிற்கு விபரீத ஐடியா தந்து கொண்டிருந்தார் ஷிவின்.

 “அண்ணன். ஒண்ணு கேட்பேன். செய்வீங்களா மக்கா?!”

மக்களை ஒன்று திரட்டி வரவேற்பறையில் அமர வைத்த பிக் பாஸ் “அண்ணன் ஒண்ணு சொல்லுவேன்.. நீங்க கோச்சுக்காம கேப்பீங்களா.?” என்கிற பாணியில் கோரிக்கை வைக்க “சொல்றா. தம்பி.. பார்க்கலாம்’ என்கிற மோடில் மக்கள் இருந்தார்கள். 

“எவ்வளவு சொல்லியும் இங்க விதிமீறல் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. மைக் மாட்டாதது முதல் பல தவறுகள். வாங்கிய உணவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடாது –ன்னு கட்டாயமாக சொல்லியும் பலர் அதை மீறி விட்டீர்கள். நான் வேடிக்கையா பேசறதால என்னை காமெடி பீஸூன்னு நெனச்சா.. இனி அப்படி பேசறதை நிறுத்திக்குவேன்” என்று லகுவும் பிகுவுமாக பிக் பாஸ் கண்கலங்கி கேட்க “இனிமே ஒழுங்கா இருக்கறோம் பிக் பாஸ்” என்று கோரஸாக வாக்கு தந்தார்கள். ‘நான் யார் கிட்டயும் எதுவும் வாங்கிச் சாப்பிடலைப்பா” என்று அநாவசியமாக சுயவாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் அசிம். 

மைனா, ஜனனி, ராபர்ட்
மைனா, ஜனனி, ராபர்ட்

அடுத்ததாக மணிகண்டனுக்கு Truth ஆப்ஷன் வந்தது. ‘எல்லாவற்றிலும் தன்னுடைய கருத்து இருக்கணும் என்று நெனக்கறவர் யார்?’ என்பது கேள்வி. துளி கூட சந்தேகம் இல்லாமல் ‘அசிம்’ என்று சொன்னார் மணி. பெரும்பாலான மக்களும் இதையே தேர்வு செய்திருந்தார்கள். அசிம் கூட தன் பெயரையே எழுதியிருந்ததுதான் வேடிக்கை. மணிகண்டனுக்கு 200 புள்ளிகள். 

குயின்சிக்கு ‘செந்தமிழில் பேச வேண்டும்’ என்கிற தண்டனை பரிசாக கிடைத்தது. அம்மணி சாதாரணமாக பேசினாலே புரியாது. மணிரத்னம் படம் மாதிரி தமிழை குதறிக் குதறி பேசிக் கொண்டிருந்தார் குயின்சி. அவருக்கு தமிழ் வாத்தியார் அசிமாம்.  ‘150 தோப்புக்கரணம் போட வேண்டும்’ என்கிற தண்டனை நிவாவிற்கு கிடைத்தது.  

குறும்படத்திற்கு என்று ஒரு மரியாதை இல்லையா, மக்களே?!

அடுத்த ஆன்லைன் ஆர்டரை அறிவித்தார் பிக் பாஸ். பழவகைகளின் வடிவில் ஸ்வீட் செய்ய வேண்டுமாம். (‘இதுவரை செய்ததெல்லாம் உருளைக்கிழங்கு வடிவில் இருந்தன’ என்பதை பிக் பாஸ் மறைமுகமாக கிண்டலடிக்கிறார் போல!). இதில் ஒரு ஃபாக்டரிக்கு மட்டும்தான் பாயிண்ட்ஸ் கிடைக்குமாம்.

பெல்ட்டில் பொருட்கள் வர ஆரம்பித்தன. அசிமை ஏறத்தாழ 90 டிகிரியில் படுக்க வைத்து ஸ்கேன் செய்ய அனுப்புவது போல் உள்ளே தள்ளினார் அமுதவாணன். இதை விக்ரமன் ஆட்சேபம் செய்ய அமுதவாணன் கோபித்துக் கொண்டார். ஆனால் இத்தனை சாகசம் செய்தும் அசிம் எதையும் எடுக்காததால் ஓனர் தனலஷ்மி கோபித்துக் கொள்ள “பொருள் எதுவும் வரலையே.. நான் என்ன செய்யறது?” என்றார் அசிம்.

அமுதவாணன் - விக்ரமன்
அமுதவாணன் - விக்ரமன்

‘இங்க நிக்காதீங்க. பின்னாடி வாங்க’ என்று விக்ரமன் சொன்னதால் அமுதவாணனுக்கும் இவருக்கும் இடையில் நீண்ட விவாதம் காரசாரமாக நடைபெற்றது. “எப்ப்பபாரு நீங்க பொய் சொல்றீங்க?” என்று அமுதவாணன் சாட்டிய குற்றச்சாட்டிற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார் விக்ரமன்.

குறும்படம் என்றால் பிக் பாஸ் வீட்டு மக்களுக்கு அத்தனை சல்லிசாகப் போய் விட்டது. “முணுக்’ என்றால் ‘ஃபுட்டேஜ் போட்டுப் பார்க்கலாம்’ என்று ஏதோ தன்னுடைய வீட்டின் சிசிடிவி காமிரா மாதிரியே ஹாண்டில் செய்கிறார்கள். குறும்படத்திற்கு என்று ஒரு மரியாதை வேண்டாமா?! இந்தச் சண்டையிலும் “உங்க அளவிற்கு என்னால பேச முடியாது விக்ரமன்.. ஃபுட்டேஜ்ல பார்த்துக்கலாம்” என்று கோபத்துடன் விலகினார் அமுதவாணன். ‘இந்த சீசனில் ‘மரியாதையா பேசுங்க’ என்று எத்தனை முறை விக்ரமன் சொன்னார்?’ என்று ஒரு போட்டியே வைக்கலாம் போல.

இந்தச் சண்டையின் நடுவில் `அவரு கிரியேட் பண்றாரு.. நீங்க வாங்க’ என்று அமுதவாணனை தனலஷ்மி இழுத்துச் சென்றதுதான் பெரிய காமெடி. அந்த விஷயத்தில் தனலஷ்மி ஒரு மாஸ்டர் என்பதை மறந்து விட்டார் போல. “நீயே போராடு தனம்.. நான் வரலை... பேக்கிங் செக்ஷன் போறேன்” என்று தெரிவித்து விட்டார் அமுதவாணன்.

‘யார் அந்த கறுப்பு ஆடு,?’ – துப்பறியும் தனலஷ்மி

தன்னுடைய அணியில் ஒரு கறுப்பு ஆடு இருக்கிறது என்கிற சந்தேகம் ஓனர் தனலஷ்மிக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அது அசிமாக இருக்கலாம். வேண்டும் என்றே எதிரணிக்கு சாதகமாக அவர் ஆடுகிறாரா? இது தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் மெல்ல கசியத் துவங்கின.

“ஆமாம். என்னால் பொருட்களை ஈஸியா எடுக்க முடிஞ்சது. அசிம் அத்தனை எதிர்ப்பு காட்டியது போல் தெரியவில்லை" என்கிற விஷயத்தை மணிகண்டன், குயின்சியிடம் சொல்ல, அவர் அதைச் சென்று தனலஷ்மியிடம் சொன்னார். “அப்படியா சங்கதி?” என்று டெரரான தனலஷ்மி இதை நேராகச் சென்று மணியிடமே விசாரிக்க ‘ஆடு திருடு போன மாதிரி கனவுதான் வந்துச்சு’ என்கிற மோடிற்கு மாறி பம்மினார் மணி. அசிம் தொடர்பான பிரச்சினை என்பதால் மணி ரிவர்ஸ் கியர் எடுக்கிறார்போல.

தனலஷ்மி
தனலஷ்மி

“என்னால ஈஸியா எடுக்க முடிஞ்சதுன்னுதான் சொன்னேன். இதுக்கு அர்த்தம் அசிம் சரியா விளையாடலைன்றது இல்ல. ஆள விடும்மா” என்று பதுங்கிய மணி ‘இரு. இரு .. குயின்சிக்கு இருக்கு” என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டார். “நான் யதார்த்தமா சொன்னதை தனலஷ்மி பதார்த்தமா ஆக்கிட்டாங்க” என்று மணியிடம் சென்று ஸாரி சொன்ன குயின்சி, பிறகு அதே கோரிக்கையை தனலஷ்மியிடமும் சென்று சொன்னார். “இது மணி என்னை நம்பி சொன்ன தகவல். தயவு செய்து ஊதி பெரிசாக்கிடாதே.. ஓவரா யோசிக்காத. எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு” என்றார் குயின்சி. அசிம், தனலஷ்மி என்றாலே எலெட்ரிக் கம்பியைத் தொடுவது போல் மற்றவர்கள் பயப்படுகிறார்கள்.

‘பெல்ட் அருகே நான் நிற்கவில்லை’ என்று முதலில் சொன்ன அமுதவாணன், “நீங்க வரதுக்கு லேட் ஆச்சுன்னா.. நான் போறேன்..” என்று இப்போது சொல்ல, இந்த உரையாடல் சென்று ஓனர் தனலஷ்மியுடன் முட்டிக் கொண்டது. “நில்லுங்கன்னுதானே நானும் சொல்றேன்.. எது சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்கறீங்க.” என்று தனலஷ்மி சலித்துக் கொள்ள “ஓனர் அதிகாரம்லாம் என் கிட்ட வேணாம்” என்று அமுதவாணன் கோபிக்க “நீங்களே ஓனரா இருந்துக்கங்க” என்று எரிச்சலானார் தனலஷ்மி.

விநோத வடிவங்களில் இனிப்பு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் வஸ்துவிற்கான போராட்டத்தின் முடிவில் மூன்றாம் உலகப்போரே வந்து விடும் போலிருக்கிறது. ‘சின்ன ஸ்வீட்டு... பெத்த சண்டை’ என்கிற மோடிலேயே கொலைவெறியுடன் உலவுகிறார்கள்.