சினிமா
Published:Updated:

விகடன் TV: என் காதல்... என் பரிசு!

ராஜ்கமல் – லதா ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ்கமல் – லதா ராவ்

வேணும்னா அந்த நாளில் ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல ட்ரெஸ் எடுத்திடுவோம்.

காதலெனும் தேர்வெழுதிக் காத்திருக்கும் தருணங்கள் எவ்வளவு இனிமையோ, அதேபோலத்தான் காதலித்த நாள்களில் பரிமாறிக்கொள்ளும் பரிசுப்பொருள்களும்! பார்க்கும்போதெல்லாம் பசுமையாகக் காதலை நினைவூட்டியபடியே இருக்கும்.

டிவி ஜோடிகள் சிலரிடம் அப்படியான பரிசுப்பொருள்கள் குறித்துக் கேட்டேன்.

விகடன் TV: என் காதல்... என் பரிசு!

ராஜலட்சுமி-செந்தில் கணேஷ்

‘‘காதலிச்ச நாள்கள்ல பொருளாதாரம் வீக்கா இருந்ததால வெயிட்டான பரிசுப் பொருள் கொடுத்து வாங்கிக்கலை. ஆனா லவ்வுங்கிறது பரிசுப் பொருளோட கனம் பார்த்து வர்றதில்லையே! அதனால என் மச்சானுக்கு நான் முதன்முதலா வாங்கித் தந்தது ஒரு முழுக்கை டி-ஷர்ட். அவர் டி-ஷர்ட் அவ்வளவா போட மாட்டார். ஆனா எனக்கு முழுக்கை டி-ஷர்ட்ல அவர் கூடுதல் அழகாத் தெரிவார்னு தோண, கஷ்டப்பட்டு அவருக்கான சைஸைத் தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டுப் போய்க் கொடுத்தேன். கரெக்டா பொருந்துச்சு.

உடனே, ‘நாமளும் ஏதாவது வாங்கித் தரணும்’னு அவருக்குத் தோணியிருக்கு. எனக்கு சுடிதார் வாங்கித் தந்தார். இப்போ போட முடியாட்டியும் அந்த சுடிதாரும் டி-ஷர்ட்டும் பீரோவுல பத்திரமா இருக்கு.

கல்யாணத்துக்கு முன்னாடி இந்தப் பரிசுன்னா, கல்யாணத்துக்குப் பிறகு அவர் எனக்குத் தந்த ஒரு பரிசு என் வாழ்க்கையில மறக்க முடியாதது. கல்யாணம் முடிஞ்சப்ப கழுத்துல கயிறுதான் அணிஞ்சிருந்தேன். அதை செயின்ல போடணும்னு ஆசை. அவர்கிட்ட அப்ளிகேஷனும் போட்டாச்சு. திடீர்னு ஒரு நாள் அந்த ஆசையை நிறைவேத்தினார். திண்டுக்கல்ல கச்சேரி. அது நாங்க காதலைச் சொன்ன அதே நாள். சரியா ராத்திரி 12 மணிக்கு கச்சேரியை ரெண்டு நிமிஷம் நிறுத்திட்டு மேடையிலேயே ‘என் மனைவியின் ஒரு ஆசையை நிறைவேத்தப் போறேன்’னு சொல்லிட்டு தாலியை செயின்ல கோத்துப் போட்டுவிட்டார்’’ என்கிறார் ராஜலட்சுமி.

செந்திலுக்கு ராஜலட்சுமி தந்த மறக்க முடியாத பரிசு, இளையராஜா கையெழுத்திட்ட ஆர்மோனியப் பெட்டியாம்.

விகடன் TV: என் காதல்... என் பரிசு!

தினேஷ் – ரச்சிதா

“கா
தலைக் கல்யாணத்துல கொண்டு வந்து சேர்த்த அந்த வருஷ வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு சென்னையில இருந்து பெங்களூருக்கு பைக்லயே கொண்டு வந்து இவர் எனக்குத் தந்த அந்தப் பரிசு இருக்கே, இன்னைக்கு பெங்களூருல என் வீட்டுக்குப் பாதுகாப்பே அதுதான். ஆமாங்க ஒரு வயசு நாய்க்குட்டியைக் கொண்டு வந்து தந்தார். அதுக்கு ‘ஹேப்பி’னு பேர் வச்சோம்’’ என்ற ரச்சிதாவிடம், ‘‘அது சரி! அவர் ஆசையா வாங்கித் தந்ததை அம்மா வீட்டுலயே விட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்’’ எனக் கேட்டால், ‘‘சென்னை க்ளைமேட் அதுக்கு செட் ஆகலை. அதுதான் அங்க இருக்குது’’ என்கிறார்.

‘‘பொதுவா பிப்ரவரி 14 ஒவ்வொரு வருஷமும் ஷூட்டிங் இருக்கும். ஆனாலும் அதுக்கு முந்தைய நாள் ப்ளஸ் அடுத்த நாளையும் சேர்த்து மொத்தமா மூணு நாள் லீவு போட்டுட்டு வீட்டுல இருக்காங்களே, அதையே ஒவ்வொரு வருஷமும் அவங்க எனக்குத் தர்ற பரிசாத்தான் நினைக்கிறேன்” என்கிறார் தினேஷ்.

விகடன் TV: என் காதல்... என் பரிசு!

ராஜ்கமல் – லதா ராவ்

‘‘கா
தலிக்கத் தொடங்கிய அந்த முதல் நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் பெரிய பரிசுப் பொருள்கள்னு நாங்க ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக்கொண்டதே இல்லை’’ என ராஜ்கமல் சொல்ல, லதா ராவிடம் ‘‘நிஜமா’’ என்றேன்.

“வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு எதையாவது வாங்கித் தர்றது, ஜாலியா வெளியில போய் சுத்தறதுன்னு இருந்துட்டு மறுநாள் சண்டை பிடிச்சுக்கிற ஜோடிகளைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். அதனால இந்தப் பரிசுப் பொருள்ங்கிற சம்பிரதாயத்துக்குள்ளேயே நாங்க போக விரும்பறதில்லை” என்கிறார் அவர்.

‘வேணும்னா அந்த நாளில் ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல ட்ரெஸ் எடுத்திடுவோம். அதுகூட அந்த டைம்ல யார்கிட்ட காசு வளமா இருக்கோ, அவங்களே எடுத்திடுவோம். ‘நீ எனக்கு எடுத்துத் தரணும். நான் உனக்கு வாங்கித் தரணும்’கிறதெல்லாம்கூட இல்லை. காதலர் தினப் பரிசுன்னு இதை வேணும்னா நீங்க குறிப்பிட்டுக்கலாம்’’ என்கிறார் ராஜ்கமல்.