Published:Updated:

``காய்காரம்மா பால்காரம்மான்னு கூப்பிடவங்க இப்போ அம்முச்சின்னு கூப்பிட்றாங்க!’’ – யூ டியூப்பை கலக்கும் சின்னமணி ஆத்தா

அம்முச்சி போஸ்டர்
அம்முச்சி போஸ்டர் ( நக்கலைட்ஸ் )

``எனக்கு மகன் இல்லை, பேரன் இல்லை அப்படிங்குற ஏக்கமே இப்போ இல்ல.''

நக்கலைட்ஸ் யூடியூப் சேனலின் அம்முச்சி வெப்சீரிஸ் செம ரீச். அம்முச்சி வெப்சீரிஸ் குறித்து நக்கலைட்ஸ் கதாசிரியர் பிரசன்னா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் விகடன் இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது. வாசகர்கள் பலர் `அம்முச்சி’ கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னமணி அம்மாவையும் பேட்டி எடுத்துப்போடுங்கள் என்று அன்பாகக் கோரியிருந்தனர். சுயதொழில், வீடு, வெப் சீரிஸ் ஷூட்டிங் என பிஸியாக இருந்த `அம்முச்சி’ சின்னமணி அம்மாவிடம் பேசினோம். நல்லாருக்கியா கண்ணு.. சாப்டாச்சா.. என்று நம்மிடம் பாசத்துடன் நலம் விசாரித்த பின் பேசத் தொடங்கினார்.

சின்னமணி
சின்னமணி

"என் ஊர் கரையாம்பாளையம் கண்ணு. எனக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க. கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. பேத்திகளும் பார்த்துட்டேன். சொந்தமா ரெண்டு நாட்டு மாடு வெச்சிருக்கோம். அதுகளோடதான் என் பாதி நாள் போகும். கம்பங்கூழ் கடையும் போட்டிருக்கேன். அவர் இறந்து 27 வருஷம் ஆகிடுச்சு. அவர் இறக்கும்போது பெரிய மகளுக்கு 10 வயசு, சின்ன மகளுக்கு 7 வயசு. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். காய்கறி வியாபாரம் பண்ணினேன். பால் வியாபாரம் பண்ணினேன். எங்க ஊர்ல என்னைய காய்காரம்மா, பால்காரம்மான்னு தான் அழைப்பாங்க. இப்போ அம்முச்சின்னு சொல்றாங்க.

நடிப்பேன்னு நெனச்சிக் கூட பார்த்ததில்ல. தனம் எங்க குடும்ப நண்பர். அவர் மூலமா வந்ததுதான் இந்த நடிப்பு வாய்ப்பு. முதன்முதலா ஒப்பாரி வைக்குற காட்சியில நடிக்கணும்னு சொன்னாங்க. நானும் நடிச்சு கொடுத்தேன். நல்லா வந்திருந்ததா சொல்லி சந்தோஷப்பட்டாங்க. அதன்பிறகு அம்முச்சி-ன்னு ஒரு தொடர் இருக்கு. நீங்கதான் அந்தத் தொடரில் முக்கியமான ரோல்னு சொன்னாங்க. நானும் சந்தோஷமா நடிக்க ஒத்துக்கிட்டேன்.

குடும்பத்தினருடன் சின்னமணி அம்மா
குடும்பத்தினருடன் சின்னமணி அம்மா

நக்கலைட்ஸ் பிள்ளைங்க எல்லாரும் ரொம்ப அன்பா இருக்காங்க. எனக்கு மகன் இல்லை, பேரன் இல்லை அப்படிங்குற ஏக்கமே இப்போ இல்ல. ஷூட்டிங் போதுகூட ரொம்ப ஜாலியா இருப்போம். அவங்க எல்லாரும் ஆத்தான்னுதான் என்னை கூப்பிடுவாங்க. வேறு ஊர்லதான் ஷூட்டிங் நடக்கும். அதனால அந்தப் பிள்ளைகங்கதான் என் வீட்டுக்கு வந்து கூட்டிகிட்டு போவாங்க. ஷூட்டிங் முடிஞ்சதும் பத்திரமா கொண்டு வந்து விடுவாங்க. எனக்கு டிவிஎஸ் வண்டி ஓட்ட தெரியும். ஆனா இப்போ வயசாகுது கண்ணு. 65 வயசாகுது. முன்ன மாதிரி வண்டி ஓட்ட முடியல. பஸ் ஏறி இறங்க முடியல.

என் பேத்திகள் மகள் மருமகன்களாம் என் வீடியோ போட்டு காமிப்பாங்க. என் கடைக்கு கூழ் குடிக்க வரும் பிள்ளைங்க என்கூட போட்டோ புடிக்கணும்னு கேட்பாங்க. தினமும் ஒரு நாலு பேராவது என்கூட போட்டோ புடிச்சிப்பாங்க. சந்தோஷமா இருக்கும். நக்கலைட்ஸ் பார்த்துட்டு சினிமா படத்துல என்னை நடிக்க கூப்பிட்டிருக்காங்க. 15 நாள் ஷூட்டிங்காம். நாமக்கல் போகப்போறேன்’’ என்று ஹேப்பியாக சொன்னவரிடம் உங்களுக்கு பிடித்த சீரியல் எது என்று கேட்டோம்.

அம்முச்சி சின்னமணி
அம்முச்சி சின்னமணி

"நான் அதிகமா டிவி பார்க்கிறது இல்ல கண்ணு. முன்னாடி, ராதிகா சித்தி சீரியல் ரசித்து பார்ப்பேன். ராதிகா அழகா தமிழ் பேசுவாங்க. இப்போ யாரும் அந்தளவுக்கு அழகா பேசுகிறதில்ல’’ என்றார் நச்சென்று.

அடுத்த கட்டுரைக்கு