Published:Updated:

மீண்டும் சித்தீதீதீ... சீஸன்-2வில் என்ன ஸ்பெஷல்?

ராடான் டிவி தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சித்தி- 2 தொடருக்கான ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது

ராதிகா
ராதிகா

ராதிகா சரத்குமாரின் ராடான் டிவி தயாரிப்பில் சன் டிவியில் 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான தொடர், சித்தி. இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான இத்தொடருக்கு அப்போது டிவி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. தினாவின் இசையில் 'கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா' என்ற பாடல் கிராமம், நகரம் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி தமிழ் பேசும் எல்லா வீடுகளிலும் ஒலித்தது.

ராதிகா
ராதிகா

9-30 டு 10 மணிக்குத் தெருக்களில் ஆள்நடமாட்டமே இருக்காது என்கிற அளவுக்கு இத்தொடர் மெகா ஹிட். இத்தொடரை சி.ஜே. பாஸ்கர் இயக்கியிருந்தார். ராதிகாவின் சின்னத்திரைப் பயணத்தில் 'சித்தி' ஓர் உச்சம். ராதிகாவைத் தங்கள் வீட்டில் ஒருவராகவே கொண்டாடியது தமிழ்ச் சமூகம். இத் தொடருக்குப் பிறகு பல சீரியல்களை ராடான் தயாரித்து ஒளிபரப்பிய போதும், எந்தவொரு சீரியலாலும் 'சித்தி'யை ஓவர்டேக் செய்ய முடியவில்லை.

'சித்தி'யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் என்பது ராதிகாவுக்குத்தான் என்கிற ட்ரெண்ட் உருவானது. ஆனால், இதில் திடீர் மாற்றமாக கடைசியாக வெளிவந்த 'சந்திரகுமாரி' தொடர் இரவு 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது. இந்நேர மாற்றத்தோடு இன்னொரு மாற்றமாக ராதிகாவும் நடிப்பிலிருந்து சில மாத விடுமுறையையும் அறிவித்தார். மீண்டும் 9.30 மணி ஸ்லாட் தனக்குக் கிடைக்கும்வரை ராதிகா விடுப்பில் இருப்பார் என சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

பொன்வண்ணன்
பொன்வண்ணன்

இதற்கிடையில் ராடான் நிறுவனமும் சில நஷ்டங்களைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். இதனால் '' 'சித்தி' மாதிரி மறுபடியும் ஒரு புராஜெக்ட் வந்தால் மட்டுமே விட்டுப்போனவை எல்லாம் மீண்டும் கைக்கு எட்டும்'' எனப் பேச்சு வர சித்தி 2-க்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. விறுவிறுவென கதை விவாதம், நடிகர், நடிகைகள் விவாதம் நடந்திருக்கிறது.

சித்தி-2வை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். ராதிகா (ஒரே ஆக்டிங்தான் என்கிறார்கள்), பொன்வண்ணன், முன்னாள் நடிகை ரூபிணி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி, ஆகியோர் நடிக்கிற காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரூபிணி
ரூபிணி

'சித்தி'யில் நடித்திருந்த மூத்த நடிகர் சிவகுமார் மட்டும் சித்தி 2-வில் மிஸ்ஸிங் என்கிறார்கள். 'சித்தி'யின் டைட்டில் பாடல் போல சீசன் 2-வின் பாடலும் வைரலாகவேண்டும் என்று பரபரப்பான ட்யூன்கள் தயாராகின்றனவாம்.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

மிக விரைவில் சன் டிவியில் அதே 9.30 மணி ஸ்லாட்டில் சித்தி-2 ஒளிபரப்பாகும் என்கிறார்கள். வரும் தீபாவளியையொட்டி இத்தொடருக்கான முன்னோட்டம் வெளியாகலாம். வாழ்த்துகள் 'சித்தி' டீம்!