Published:Updated:

"சித்ராவின் வீடியோக்களை அழித்து, என்னை அடித்து விரட்டினார் ஹேமந்த்!"– முன்னாள் உதவியாளர் சலீம்

சித்ராவும், ஹேமந்த்தும் ஒன்றாகத் தங்கிய சென்னை தி.நகர் வீட்டிலும் சில நாட்கள் உதவிக்காக அவர்களுடனேயே தங்கியிருக்கிறார் சலீம்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணமடைந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை, சித்ரா தற்கொலை செய்ததாகக் குறிப்பிடுவதாகக் கூறியது காவல்துறை.

தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்தை விசாரித்தனர் போலீசார். நான்கு நாட்களுக்குப் பிறகு ’தற்கொலைக்குத் தூண்டினார்' எனக் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையிலிருக்கிறார் ஹேமந்த். இன்னொருபுறம், இந்த மரணம் குறித்த ஆர்.டி.ஒ தரப்பு விசாரணையும் முடிவடைந்துள்ளது.

பொதுவாக எந்த வழக்கானாலும் காவல்துறையின் விசாரணை ஒளிவு மறைவில்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். சித்ராவின் மரண விவகாரமும் இதற்கு விதிவிலக்கல்ல.
சித்ரா, ஹேமந்த் ரவி
சித்ரா, ஹேமந்த் ரவி

போலீஸார் நேர்மையாக விசாரித்தால் மட்டுமே சித்ரா தற்கொலைதான் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் முறையில் அவரது மரணம் நிகழ்ந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை தற்கொலை என்றால் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டியதும் காவல்துறையின் பொறுப்பே. ஆனால், சித்ரா விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை சரியான கோணத்தில்தான் செல்கிறதா என்கிற ஒரு கேள்வியை சித்ராவின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆரம்பம் முதலே எழுப்பி வருகின்றனர். சித்ரா வழக்கு விசாரணை சரியான கோணத்தில்தான் செல்கிறதா என்பதை அறிய முற்பட்ட போது இரண்டு விஷயங்கள் நெருடலை உண்டாக்குகிறது.

முதலாவது சந்தேகம் இதுதான். சாதாரணமாக எவராவது தற்கொலை செய்து கொண்டால் தடயத்துக்காக சம்பந்தப்பட்டவர் பயன்படுத்திய பொருட்கள் குறிப்பாக அவரது மொபைலை சல்லடை போட்டுத் துலாவி விசாரிக்க வேண்டியது காவல் துறையின் பணி. சித்ராவின் மொபைலையும் போலீஸ் நிச்சயம் கைப்பற்றியிருப்பார்கள். ஆனால் மரணம் நிகழ்வதற்கு முன் சித்ரா தொடர்பு கொண்டவர்கள், சித்ராவைத் தொடர்பு கொண்டவர்கள் என அத்தனை பேரையும் போலீஸ் விசாரிக்கவில்லை.

சித்ரா
சித்ரா

இரண்டாவது நெருடல், சித்ராவின் முன்னாள் உதவியாளர் சலீமும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இதுவரை வரவில்லை. சலீம் சித்ராவுக்கு ரசிகராக அறிமுகமாகி சுமார் இரண்டரை ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர். சித்ரா ஷூட்டிங், நிகழ்ச்சிகளுக்கு கூடவே செல்லும் சலீமின் வேலை அங்கு நடக்கும் எல்லோவற்றையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது.

ஹேமந்த் - சித்ரா நிச்சயதார்த்தம் நடக்கும் வரையில் சலீமின் வேலைக்கு எந்தவிதப் பிரச்னையுமில்லை. ஆனால் ஹேமந்த் வந்த பிறகு சலீமுக்குப் பிரச்னை வந்திருக்கிறது. சித்ராவும், ஹேமந்த்தும் ஒன்றாகத் தங்கிய சென்னை தி.நகர் வீட்டிலும் சில நாட்கள் உதவிக்காக அவர்களுடனேயே தங்கியிருக்கிறார் சலீம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பத்து மணிக்கு மேலதான் எழுந்திருப்பார் ஹேமந்த். வேலைக்கு எதுவும் போக மாட்டார். சித்ரா ஷூட்டிங்ல இருந்தாலும் அவருக்கு போன் பண்ணிட்டே இருப்பார். தி.நகர் வீட்டுலயே அவங்க ரெண்டு பேருக்கும் இடைபே பெரிய சண்டை வந்திருக்கு. என்னை அவர் ஆரம்பத்துல இருந்தே வில்லனாத்தான் பார்த்தார். சித்ராவுடன் போய் நான் வீடியோக்கள் எடுக்கறதுக்கு முதலில் தடை போட்டார். நான் சித்ராவை வீடியோ எடுத்து சம்பாதிக்கறேன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டார். ஒருகட்டத்துல என் மொபைலைப் பிடுங்கி அதுல இருந்த சித்ரா தொடர்பான வீடியோக்களையெல்லாம் அழிச்சுட்டு என்னையும் அடிச்சு விரட்டிட்டார். ஏன்னு தெரியலை, சித்ராவாலயும் அதைத் தடுக்க முடியலை. அதனால நான் அங்க இருந்து வெளியேறி இப்ப செக்யூரிட்டி கார்டா ஒரு இடத்துல வேலை செஞ்சிட்டிருக்கேன்" என்கிறார் சலீம்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

இரண்டரை ஆண்டுகளாகச் சித்ராவிடம் பணிபுரிந்தவர் ஹேமந்தின் வருகைக்குப் பிறகுதான் சித்ராவிடமிருந்து விலகியிருக்கிறார் என்கிற போது இவரை விசாரித்தால் நிறைய தகவல்கள் கிடைக்கும். ஆனால் போலீசாரோ, சுமார் 14 பேர் வரை விசாரித்த ஆர்.டி.ஓ-வோ இந்த சலீமிடம் எதுவுமே விசாரிக்கவில்லை.

ஏற்கெனவே தூக்கிட்டுக் கொண்டார் என்றால் கழுத்தில் வலுவான தடயம் ஏன் இல்லை, அந்த ஹோட்டலில் வீடியோ ஃபுட்டேஜ் ஏன் இல்லை என நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

யாரைக் காப்பாற்ற நினைக்கிறது காவல்துறை?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு