
கணவர்தான் என் மிகப்பெரிய பலம். நடந்து போய் காய்ச்சல்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர், 120 நாளா ஐ.சி.யூ-விலும் கோமாவிலுமாக இருந்து இறந்துபோனார்.
`யாருப்பா இந்தப் பாட்டி? இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு இன்னைக்கு இந்த மாதிரி தூள் பண்ணிடுச்சு!' என சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் பேசிக்கொண்டிருந்தது பட்டம்மாள் பாட்டியைப் பற்றித்தான். ‘பட்டம்மாள் எம்.ஏ’ என்கிற கணீர் குரல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அத்தனை இயல்பாய் நடித்து அனைவரின் பாராட்டையும் அள்ளியிருக்கும் பாம்பே ஞானத்தைச் சந்தித்தோம்.
‘‘சினிமா, சீரியல்னு எதுவுமே வேண்டாம்ங்கிற முடிவுலதான் இருந்தேன். ஏற்கெனவே நான் ஒர்க் பண்ணின `கோலங்கள்' டீமிலிருந்து, `இந்தக் கேரக்டர் நீங்க பண்ணினா நல்லா இருக்கும்'னு தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க. ரொம்ப நல்ல கேரக்டர் என்பதால் ரொம்ப யோசிச்சு நடிக்க ஒத்துக்கிட்டேன்.
ஒருவகையில் நிஜத்திலும் நான் பட்டம்மாள்தான்! சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிடுச்சு. கணவர்கிட்ட எனக்குள்ள இருந்த ஆர்வத்தைச் சொல்றதுக்கே ரொம்பத் தயங்கினேன். அவர்கிட்ட என் ஆசையை எடுத்துச் சொல்லவும், அவர் அதுல இருந்த பிரச்னைகளை விவரிச்சார். அதை நான் கவனமா கையாளுவேன் என்கிற நம்பிக்கையைக் கொடுத்ததுமே என் மேடை நாடகக் கனவுக்கு என் கரம் பற்றி உயிர் கொடுத்தார். கேபி சார் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டேன். 50 சீரியலுக்கும் மேல நடிச்சிருக்கேன். நெகட்டிவ் ரோல் பன்றதுல எனக்கு உடன்பாடில்லை. அதனால பல சீரியல்களை நிராகரிச்சிருக்கேன்.
கணவர்தான் என் மிகப்பெரிய பலம். நடந்து போய் காய்ச்சல்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவர், 120 நாளா ஐ.சி.யூ-விலும் கோமாவிலுமாக இருந்து இறந்துபோனார். அந்த மருத்துவமனை நாள்கள் என் மனசுல வடுவாகப் பதிஞ்சிடுச்சு. ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பறிகொடுத்துட்டோமோன்னு எல்லாம் யோசிக்க வச்சிடுச்சு. இல்லாத ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணினாங்க. அவர் மீண்டு வந்திருந்தா ஓகே... ஆனா, போயிட்டாரே! அதுதான் என்ன உலகம்னு தோண வச்சிடுச்சு.
அவருடைய இழப்புல இருந்து மீண்டு வர ஆன்மிகம் எனக்கு உதவியா இருந்துச்சு. ஆன்மிக நாடகங்கள் பண்ணினேன். அந்தச் சமயத்துலதான் ‘எதிர்நீச்சல்’ சீரியல் வாய்ப்பு வந்தது. சீரியலில் பெயர் சொன்ன பிறகுதான் இந்தக் கேரக்டர் பெயர் ‘பட்டம்மாள்’னு எனக்கே தெரியும்.
பெண்கள் இன்னமும் நசுக்கப்படுறாங்க. 33% இட ஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கு. அது மாறணும்னு எல்லார் மாதிரியும் நானும் நினைக்கிறேன். சீரியல் ஓகே, நிச்சயம் சினிமாவில் நடிக்க மாட்டேன்... எனக்கு அதுல ஆர்வம் இல்லை’' என்கிறார் ‘பட்டம்மாள் எம்.ஏ.’