Published:Updated:

``நானும், காயத்ரியும் பெர்சனலா பேசிக்கிறதில்லை!'' - `பேரழகி' விராட்

விராட்
விராட்

"உண்மையைச் சொல்லணும்னா, ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமாவும், தடுமாற்றமாவும்தான் இருந்துச்சு. இந்த சீரியலுக்காக தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்!'' - 'பேரழகி' விராட்.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'பேரழகி' சீரியல் இப்போதைய இளைஞர்களின் ஃபேவரைட். ஏழ்மையிலும், டஸ்கி கலரிலும் இருக்கும் ஒரு பெண் நடிப்புத் துறைக்கு வந்து கஷ்டப்படும் விஷயங்கள் மற்றும் காதல் ஆகியவற்றை அவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்தி வருகிறார்கள். அந்த சீரியலில் பிரித்திவியாக நடித்துவரும் நாயகன் விராட், பல இளம் பெண்களின் கனவு நாயகன். அவரிடம் பேசினேன்.

விராட்
விராட்
பேரழகி

''இதுதான் உங்களுக்கு முதல் சீரியலா?!''

''இல்லை. கடந்த 13 வருடமா நடிப்புத் துறையில் இருக்கேன். நான் கர்நாடகாவைச் சேர்ந்தவன். 'பிளாக்' என்ற படம்தான் என்னுடைய முதல் படம். அது 2006-ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிச்சிருந்தேன். பிறகு, '10 க்ளாஸ் ஏ செக்‌ஷன்' படத்தில் ஹீரோவாக நடித்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது காதலித்தால், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் கதை. அங்கிருந்துதான் என் நடிப்புப் பயணம் தொடங்கியது."

''நீங்கள் ஹிந்துஸ்தானி பாடகராமே?''

''ஆமாம். எங்க குடும்பமே ஒரு இசைக் குடும்பம். அம்மா, சித்தி, மாமா என எல்லோருக்குமே இசை ஞானம் உண்டு. அதனால், எனக்கும் இசையின் மீது இயற்கையாகவே ஆர்வம் வந்துவிட்டது. முறைப்படி ஹிந்துஸ்தானி இசையைக் கத்துக்கிட்டேன். அதன் பிறகு, வீடியோ எடிட்டிங்கில் ஈடுபாடு அதிகமாச்சு. வி.எஃப்.எக்ஸ் டிசைனிங்கிலும் ஆர்வம் வந்தது, கத்துக்கிட்டேன். கன்னடத் திரையுலகில் டிஜிட்டல் மோஷன் போஸ்டரை முதன் முதலில் தந்தது நான்தான். 2014-ஆம் ஆண்டிலிருந்து நடிப்பில் முழு கவனமும் இருந்தது. 2015-ஆம் ஆண்டில் 'ஜி கன்னடா' சேனலில் 'சுபவிவாஹா' சீரியலில் நடிச்சேன். நடிப்புடன், பாடவும் ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது."

விராட்
விராட்

''எப்படி இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க?''

''உண்மையைச் சொல்லணும்னா, ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமாவும், தடுமாற்றமாவும்தான் இருந்தது. இந்த சீரியலுக்காக தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். நடிப்பைப் பொருத்தவரை, எனக்குக் கமல், விக்ரம் இருவரையும் பிடிக்கும். எந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்குப் போனாலும், 'இந்தியன்' படத்தில் கமல் நடித்த நடிப்பைக் கண்ணாடி முன்னாடி நின்னு நடிச்சுப் பார்த்துட்டுதான் போவேன். விக்ரமின் 'அந்நியன்' படத்தை கணக்கே இல்லாத அளவுக்குப் பார்த்திருக்கேன். அப்படியொரு தீவிர ரசிகன் நான். அடுத்து, சினிமாவில் பாடணும்னு ஆசை இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் என் ஆல்டைம் ஃபேவரைட். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பிடிக்கும்.''

''நீங்க பொம்மைப் பிரியராமே?!''

''படிப்பைப் பொருத்தவரை, நான் ஆவரேஜ் ஸ்டூடண்ட். எனக்கு ரிமோட் கன்ட்ரோல் கார் மாதிரியான பொம்மைகள் ரொம்பப் பிடிக்கும். என் வீடு முழுக்க நிறைய பொம்மைகள் இருக்கு. என்னதான் வளர்ந்தாலும், அந்த விஷயத்தில் நான் இன்னும் குழந்தைதான்."

பேரழகி
பேரழகி

''உங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிவதில்லையே ஏன்?!''

''நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. அது வேஸ்ட் ஆஃப் டைம்னு நினைக்கிறேன். மத்தபடி, நிறைய படங்களைப் பார்ப்பேன். 24 மணி நேரமும் படம் பார்க்கவிட்டால்கூட பார்த்துக் கொண்டே இருப்பேன்.''

''நீங்களும், உங்க ஜோடி காயத்ரியும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டீர்களாமே?''

''எனக்கும், அவருக்கும் சந்தித்துப் பேசக்கூடிய சூழல் பெரிதாக இல்லை என்பதாலோ என்னவோ, ஷூட்டிங் ஸ்பாட்ல பேசுறதே மிக மிகக் குறைவு. அவரும், நானும் நடிக்கும்போது வசனம் மூலமா பேசிக்கிறதோடு சரி. தனிப்பட்ட முறையில் பேசிக்கிறதில்லை."

பேரழகி
பேரழகி

''குடும்பத்தைப் பற்றி?"

''அம்மா பெயர், குருதேவி. அப்பா, பரமேஸ். காவல் துறையில இருக்கார். நான் ஒரே மகன். என்ன கேட்டாலும் இல்லைனு சொல்லாம வாங்கிக் கொடுக்கிற பெற்றோர். அவங்களுடைய செல்லம் நான். அம்மாதான் எனக்கு எல்லாமே!''

எனக்குத் தெரிஞ்சு, எல்லா சீரியல்களிலும் பெண்களைத்தான் மையமாகக் கொண்டு கதை நகரும். ஆனால், வில்லன், சண்டை போன்ற பிரச்னைகளையெல்லாம் தாண்டிய ஒரு ரொமான்டிக் சீரியல்னா, அது 'பேரழகி'தான்.
விராட்
விராட்
விராட்

'' 'பேரழகி' சீரியலுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?"

''நிறைய ரசிகர்கள் எங்க ரொமான்டிக் காட்சிகளைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறாங்க. எனக்குத் தெரிஞ்சு, எல்லா சீரியல்களிலும் பெண்களைத்தான் மையமாகக் கொண்டு கதை நகரும். ஆனால், வில்லன், சண்டை போன்ற பிரச்னைகளையெல்லாம் தாண்டிய ஒரு ரொமான்டிக் சீரியல்னா, அது 'பேரழகி'தான். எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டர் முழுக்க முழுக்கத் திருப்தியா இருக்கு. ஆண்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத சின்னத்திரையில எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது, சந்தோஷமா இருக்கு. கதைப்படி, காயத்ரிக்கும், எனக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கவிருக்கு. அதைப் பிரமாண்டமா படமாக்க ஏற்பாடு செய்றாங்க. எல்லோரும் கல்யாணத்துக்கு வந்துடுங்க!'' என்கிறார், விராட்.

அடுத்த கட்டுரைக்கு