பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சாதனை பேசியது!

கெளசல்யா
பிரீமியம் ஸ்டோரி
News
கெளசல்யா

“நாங்க சீரியல் பார்த்துட்டிருந்தா, கெளசல்யா புத்தகங்கள் வாசிச்சிட்டிருப்பாங்க.

மிழகத்தில் ‘தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக கேம் ஷோவில் ஒரு கோடி வென்ற மாற்றுத்திறனாளிப் பெண்’ என்ற பெருமை கௌசல்யா கார்த்திகாவுக்கு உண்டு. கெளசல்யாவின் வாயும் செவிகளுமாகி, ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார் அவர் கணவர் பாலமுருகன். கௌசல்யாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அவரிடம் பேசினேன்.

கணவருடன்...
கணவருடன்...

“நாங்க சீரியல் பார்த்துட்டிருந்தா, கெளசல்யா புத்தகங்கள் வாசிச்சிட்டிருப்பாங்க. டிவியில கேம் ஷோ பார்க்கிறப்போ, அதுல கலந்துக்கிறவங்க பதில் சொல்றதுக்கு முன்னாடியே இவங்க பதில் சொல்லிடுவாங்க. அப்போவெல்லாம், என் மனைவி சராசரிக்கும் மேலேன்னு எனக்கு சந்தோஷமா இருக்கும். அதனாலதான், கலர்ஸ் டிவியின் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் கெளசல்யாவைக் கலந்துக்கச் சொல்லி உற்சாகம் கொடுத்தேன். இப்போ, இந்த வெற்றி அவங்க திறமையை உலகத்துக்கே சொல்லிடுச்சு’’ என்று சொல்லும் பாலமுருகனுக்கும் கெளசல்யாவுக்கும் 2017-ம் வருடம் திருமணம் நடந்திருக்கிறது. கெளசல்யா எம்.எஸ்ஸி தகவல் தொழில்நுட்பமும், எம்பிஏ-வும் படித்துவிட்டு, மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். பாலமுருகன் வருவாய்த்துறையில் வேலைபார்க்கிறார்.

“உண்மையில கெளசல்யாவோட அதிர்ஷ்டம்னு சொன்னா, அது அவங்க அம்மாதாங்க. பிறந்த ஒன்பதாவது மாசத்துல கெளசல்யாவுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாதுன்னு தெரிஞ்சிருக்கு. மகளுக்கு இனி எல்லாமே படிப்புதான்னு முடிவெடுத்து, அவங்க விருப்பப்பட்டதையெல்லாம் படிக்க வெச்சிருக்காங்க.

கெளசல்யா
கெளசல்யா

பொதுவா, இந்த மாதிரி குறைபாடு இருக்கிறவங்க ப்ளஸ் டூ வரைக்கும் தாய்மொழி வழியில மட்டும் படிச்சா போதும்னு அரசாணை இருக்கு. இரண்டாவது மொழி ஆப்ஷனல். அதனால ப்ளஸ் டூ வரைக்கும் தமிழ் வழியிலதான் எல்லா சப்ஜெக்ட்களையும் படிச்சிருக்காங்க கௌசல்யா. இங்கிலீஷ் படிக்கவே இல்லை. அவங்க காலேஜ் போனப்போ, அதுவே பிரச்னை ஆகியிருக்கு. காலேஜ்ல சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. ‘என் மகளை எப்படியாவது இங்கிலீஷ் படிக்க வெச்சிடுறேன்’னு வாக்குக்கொடுத்திருக்காங்க என் அத்தை. அதுவரை ஏ பி சி டிகூடத் தெரியாம இருந்த கெளசல்யாவுக்கு, இங்கிலீஷ் ட்யூஷன் ஏற்பாடு பண்ணி, டிகிரிகளை முடிக்கவெச்சிருக்காங்க’’ என்றவர், தனக்கும் கெளசல்யாவுக்கும் திருமணம் முடிவான தருணத்தை விவரித்தார்.

“கெளசல்யாவோட போட்டோவைப் பார்த்ததும், ‘பொண்ணு அமைதியா, அழகா இருக்கே’ன்னு தோணுச்சு. அப்புறம்தான் அவங்க ஒரு மாற்றுத்திறனாளின்னு தெரிஞ்சது. அந்த நிமிஷம் என் மனசுக்குள்ள, ‘இந்தப் பொண்ணை நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நிச்சயம் நல்லா பார்த்துப்போம். வேற யாராவது கல்யாணம் பண்ணி, அந்த ஆண் சரியான நபரா இல்லைன்னா, அவங்க வாழ்க்கையே வீணாப் போயிடும்’னு தோணுச்சு.

எங்களுக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கான். அவனுக்கு அர்ஜுன் அல்லது அபினவ்னு பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டோம். ரெண்டு பெயர்களையும் கெளசல்யாவை உச்சரிக்கச் சொன்னேன். அபினவ்ங்கிற பெயரை அவங்க அதிக சிரமப்படாம தெளிவா உச்சரிச்சாங்க. அந்தப் பேரையே பிள்ளைக்கு வெச்சுட்டோம்’’ என்கிறார் பாலமுருகன்.

“நான் படிச்ச ஸ்கூலுக்கு உதவி செய்யணும், என்னைப்போல இருக்கிறவங்களுக்கு உதவணும், கலெக்டராகணும், உலகம் முழுக்க ட்ராவல் பண்ணணும்’’ - தன் ஆசைகளையெல்லாம், தன் பிரத்யேக ஒலிகளாலும் கை அசைவுகளாலும் பகிர்ந்துகொண்ட கௌசல்யா, ‘`ரொம்ப ஆச்சர்யமா, சந்தோஷமா, பெருமையா, நெகிழ்ச்சியா இருக்கு’’ என்றார் முகத்தில் அத்தனையையும் வெளிப்படுத்தி.