Published:Updated:

"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்!"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்

Ravi Varma with Vijay Sethupathi
Ravi Varma with Vijay Sethupathi

"செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்தை வெச்சு நிகழ்ச்சி நடக்காம தடுத்திருந்தா, சங்கத்துல இப்படியொரு சங்கடமான சூழலே வந்திருக்காது."

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், `சங்கத்தில் நிதி முறைகேடு' எனப் புகார் கிளம்பியுள்ளது. சங்கம் சமீபத்தில் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை நிகழ்ச்சியே புகாரின் தொடக்கப்புள்ளி எனத் தெரிகிறது.

Letter to Ravi Varma
Letter to Ravi Varma

ஏற்கெனவே, 'மலேசியாவில் தாங்கள் சரியாக நடத்தப்படவில்லை, சோறு தண்ணீர்கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம்' என அங்கு சென்றுவந்த சில நடிகர்கள் சொல்லியிருந்த நிலையில், அவர்களின் புகார்களுக்குப் பதில் விளக்கம் தந்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார், சங்கத்தின் தலைவர் ரவி வர்மா.

தற்போது, `கலை நிகழ்ச்சி நடத்திய வகையில் கமிஷனாக ரவிவர்மாவுக்கு ரூபாய் ஐந்து லட்சம் கைமாறியதற்கான ஆதாரம்' என ஒரு கடிதம் வெளியாகி, மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

"சங்கத்துல ஏற்கெனவே ஆயிரத்தெட்டு பிரச்னை. உறுப்பினர்களுக்கு வேலை இல்லை, பிற மாநிலத்துக்காரங்களை நடிக்கக் கூட்டிக்கிட்டு வர்றது, உறுப்பினர் அல்லாதவங்களை நடிக்க அனுமதிக்கிறதுனு நிறைய சொல்லலாம். இதையெல்லாம் சரிசெய்ய எந்த நிர்வாகமும் முயற்சி செய்யல. இந்த லட்சணத்துல கலை நிகழ்ச்சினு சொன்னாங்க. 'சங்கத்துக்கு நிதி திரட்டுறதுதான் இதோட நோக்கம்'னு சொன்ன ஒரே காரணத்துக்காகவே கலைஞர்கள் சம்பளம் ஏதும் கேட்காம, போயிட்டு வந்தாங்க. இப்போ என்னன்னா, நிகழ்ச்சியை நடத்தியதற்காக தலைவர் ரவிவர்மாவுக்கு ஐந்து லட்சம் ரூபாயை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான 'டிவைன் மீடியா'வுல இருந்து விருப்பப்பட்டு தந்திருக்கிறதா, டிவைன் மீடியா லெட்டர் பேடுலேயே ஒரு கடிதம் வெளியாகியிருக்கு. அந்தக் கடிதத்தில் பேசிய தொகையில் 3,25,000 ரூபாயை, தான் பெற்றுக்கொண்டதாக ரவிவர்மாவின் கையொப்பம் இருக்கு. இதற்குமேலே நாங்க என்னங்க சொல்றது?!

Ravi Varma team
Ravi Varma team

ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பா தலைவருக்கும், செயலாளர் 'ஆடுகளம்' நரேனுக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அதனாலேயே, கடைசி நேரத்துல மலேசியாவுக்கு வராம நிகழ்ச்சியைப் புறக்கணிச்சார் நரேன். அவர் மட்டும் செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்தை வெச்சு நிகழ்ச்சி நடக்காம தடுத்திருந்தா, சங்கத்துல இப்படியொரு சங்கடமான சூழலே வந்திருக்காது" என ஆதங்கப்பட்டார், பெயர் குறிப்பிட விரும்பாத சீனியர் நடிகர் ஒருவர்.

"'மலேசியா கலை நிகழ்ச்சி சிறக்கட்டும்'னு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதமெல்லாம் அனுப்பியிருந்ததோடு, இந்த விழாவில் பங்கேற்க விரும்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் அலுவலகத்துல இருந்து ஆதரவு கிடைக்கிற அளவுக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில இப்படிப்பட்ட சர்ச்சைகள் எழுந்தா, எதிர்காலத்துல சங்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து எப்படி ஆதரவு கிடைக்கும். சந்தேகங்கள் எழுந்தாச்சு. அதை நிவர்த்தி செய்யவேண்டியது தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத்தையே சேரும்!" எனத் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார், இன்னொரு நடிகை.

Edappadi Palaniswami's letter to Ravi Varma
Edappadi Palaniswami's letter to Ravi Varma
``புரொபஸர் விஜய், `ஆக்‌ஷன்' விஜய் சேதுபதி... `விஜய் 64' படத்தின் 10 ஹைலைட்ஸ்!" #Vijay64

இந்நிலையில், மலேசியக் கலை நிகழ்ச்சி சர்ச்சைகள் தொடர்பாக சங்கத்திடம் விளக்கம் கேட்டு, நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள், கடந்த தேர்தலில் ரவிவர்மா அணிக்கு எதிராகப் போட்டியிட்ட சில உறுப்பினர்கள். கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரும், கடந்த தேர்தலில் நரேனை எதிர்த்து செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டவருமான பரத்திடம் பேசினேன்.

"நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்ட விஜய் சேதுபதி, தனக்குக் கிடைச்ச பணத்தை சங்கத்துக்கு நன்கொடையா கொடுத்துட்டதா சொல்லப்படுது. அப்படியான சூழல்ல, நிகழ்ச்சி நடத்தியதுக்குனு தலைவருக்குத் தனியா பணம் கை மாறியிருந்ததுன்னா... அது முறையா, மனச்சாட்சியோட சொல்லுங்கன்னு நாங்க எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

Barath
Barath

அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. கொஞ்சநாள் பார்க்கலாம். எந்த விளக்கமும் கிடைக்காதபட்சத்துல மேற்கொண்டு சங்கத்துமேல அக்கறை கொண்ட உறுப்பினர்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்." என்கிறார், பரத்.

"சங்கம் வளரணும்னா, இளைஞர்கள் இறங்கி வேலை செய்யணும்னு கடந்த தேர்தல்ல ஒரு அணியை உருவாக்கப் பாடுபட்டேன். துரதிர்ஷடவசமா கடைசி நேரத்துல என்னாலேயே தேர்தல்ல போட்டியிட முடியாத சூழல் உருவாகிடுச்சு.

Naveendhar
Naveendhar

புது நிர்வாகம் பொறுப்பேற்றால், அவங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தரணும். ஆனா, இப்போ நிதி முறைகேடு மாதிரியான புகார்கள் வந்தா, சம்பந்தப்பட்டவங்கதான் விஷயத்துல தலையிட்டு விளக்கம் தரணும்" என்கிறார், பொதுக்குழு உறுப்பினரான, நவீந்தர்.

டிவைன் மீடியா தரப்பில் அட்மின் மேனேஜர் சரவணன் என்பவரிடம் நாம் பேசியபோது, "இதுதொடர்பாக கம்பெனி பார்ட்னர்ஸ்கிட்டதான் பேசணும். நான் அவங்கிட்ட பேசி உங்களைத் தொடர்புகொள்ளச் சொல்றேன்" என்றவர், அதன் பிறகு நம் அழைப்பை ஏற்கவில்லை.

chinnathirai show
chinnathirai show
"உங்களுக்கு மட்டுமா, விஜய் சேதுபதிக்கே அசெளகரியங்கள் இருந்திருக்கலாம்!" - சின்னத்திரை கலைநிகழ்ச்சி சர்ச்சை

ரவிவர்மாவைத் தொடர்பு கொண்டபோதும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோதும், பேச மறுத்துவிட்டனர். ரவிவர்மாவோ அல்லது சங்கத்தின் சார்பிலோ இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் கிடைத்தால், அதைப் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு