Published:Updated:

`விஜய்-ன்னா உயிர்; மாஸ்டர் பட வாய்ப்பைத் தவறவிட்டது ஏன்?'- மனம்திறக்கும் `குக்வித் கோமாளி' புகழ்

காமெடி மழை பொழிந்து தமிழ் மக்களைச் சிரிக்க வைத்த புகழின் கண்ணீர் பிளாஷ்பேக்கை கடந்த வாரம் பதிவிட்டிருந்தோம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வார இறுதியில் ஃபைனல்ஸ். அதன் பிறகு சூப்பர் சிங்கர் தொடங்குகிறது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தமிழ் மக்களைச் சிரிக்க வைத்த புகழின் கண்ணீர் பிளாஷ்பேக்கை கடந்த வாரம் பதிவிட்டிருந்தோம். குக் வித் கோமாளிக்குப் பிறகான வாழ்க்கையைக் கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டார் `புகழ்’.

சிறிய வயதில் புகழ்
சிறிய வயதில் புகழ்

``எனக்கு சுருட்டை முடி. சின்ன வயசுல என் அம்மா கோயில் திருவிழாவுக்காக எனக்கு லேடி கெட் அப் போட்டாங்க. அப்படியே ஸ்டியோவுக்குக் கூட்டிட்டுப் போய் போட்டோவும் எடுத்தாங்க. இதைக் கேள்விப்பட்ட என் அப்பா, கிராமத்து ஆள் இல்லையா அதனால கோபத்துல ஸ்டூடியோக்குள்ளயே புகுந்து என் அம்மாவை அடிச்சிட்டார். அதே அப்பா இப்போ அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்டு, ``இப்போ என் பையன் செம்மைய லேடி கெட் அப்ல வருவான் பாருங்க’’-ன்னு டிவியில என்னைப் பார்த்து பெருமை அடிச்சிக்கிறாரு.’’

`ரூஃபிங் வேலைக்குப் போனேன்; 5 நரம்பு கட்டாகிருச்சு!' - கலங்கவைக்கும் `குக் வித் கோமாளி’ புகழ்

``உன் அப்பன பார்த்தியா புகழு, அன்னைக்கு என்ன அந்த அடி அடிச்சிட்டு, இன்னைக்கு ஊரையே கூப்டு என் பையன் பொண்ணு வேஷம் கட்டியிருக்கான்னு காமிக்குறாரு’’-ன்னு என் அம்மா சொல்லி சிரிச்சாங்க. என் குடும்பத்துக்கு என்னை டிவியில் பாக்குறதுல ஒரே சந்தோஷம்.’’

புகழின் அம்மா அப்பா
புகழின் அம்மா அப்பா

``காமெடி பண்றோம், எல்லார்கிட்டயும் மொக்க வாங்குறோம்-ன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதேயில்ல. சிரிப்புடா, கலக்கப் போவது யாரு போன்ற ஷோ பண்ணிட்டு ஊருக்குப் போனேன்னா எல்லாரும் நால்லா இருந்துச்சு-ன்னு சொல்லிட்டு கடந்து போய்டுவாங்க. ஆனா குக் வித் கோமாளி-க்குப் பிறகு என் ஊர் கும்பாபிஷேகம் போனப்போ ஊரே என்னை சூழ்ந்துடுச்சு. `வழி விடுங்கப்பா.. அவனுக்கு மூச்சடைக்கப் போகுது’-ன்னு என் மாமா கூட்டத்தை விலக்கிவிட்டார். இதையெல்லாம், சூர்யவம்சம் படத்துல வர்ற மாதிரி ஃபீலிங்ஸோட ஓரமா நின்னு என் அம்மா பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க. பிஜிஎம் மட்டும்தான் இல்ல. நான் உடனே ``சாந்தி.. போதும் போதும் உன் ஃபீலிங்ஸ்’’-ன்னு கலாய்ச்சேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் எப்போ ஊருக்குப் போனாலும் வயசான தாத்தா கூட,`ஏன்பா ரம்யா பாண்டியனைக் கூட்டுட்டு வரலையா’-ன்னு கேட்குறாரு. எனக்கு ரம்யா பாண்டியன் புடிக்கும்-ன்னு பட்டி தொட்டி வரை தெரிஞ்சிருக்கு.’’

ரம்யா பாண்டியன், புகழ்
ரம்யா பாண்டியன், புகழ்

``ஸ்கூல்ல இருந்தே ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணுவேன். இங்கிலீஷ் டீச்சர் கிட்ட அடிவாங்கும்போது, வலிக்குற மாதிரி ஓவர் ஆக்டிங் பண்ணி கால்ல விழுந்தேன். அவங்க. `எப்பா சாமி நீ நடிகன்டா’-ன்னு சொல்லி அடிக்குறத நிறுத்திட்டு சிரிப்பாங்க.. நான் ஊருக்குப் போனதும் அவங்களுக்கு புடவை வாங்கிக் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும். என்னை நடிகன்னு முதன்முதலா சொன்னது அவங்கதான்.’’

``ஃபாரீன்ல இருந்துலாம் மெசேஜ் அனுப்புறாங்க. ஒருவாட்டி ஷூட்டுக்கு ஷேர் ஆட்டோவுல போகும் போது, ஒரு அம்மா என்னை உத்துப் பார்த்தாங்க. நான் கால் எதும் மேல பட்டுச்சோன்னு ஒதுங்கி உட்கார்ந்தேன். அவங்க ``தம்பி நீங்க புகழ் தானே. நீ நல்லா காமெடி பண்றப்பா. எங்க தங்கியிருக்க?’-ன்னு கேட்டாங்க. ``அம்மா, அப்பா கடலூர்ல இருக்காங்க. நான் மட்டும் சென்னையில் இருக்கேன்மா’’-ன்னு சொன்னேன். ``உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்-பா என் வீடு பக்கத்துல தான் இருக்கு. அம்மா பக்கதுல இல்லைன்னு ஃபீல் பண்ணாத. வீட்டுக்கு வந்து சாப்டு போ``-ன்னு அன்பை பொழிஞ்சிட்டாங்க. எனக்கு கண் வியர்த்துடுச்சு. லாரிக்கு கிரீஸ் அடிச்சிட்டு இருந்த எனக்கு, இதெல்லாம் கனவா நெனவா-ன்னு தெரியல.’’

புகழ்
புகழ்

``சோசியல் மீடியாலையும் எனக்கு யாரும் இதுவரை நெகடிவ் கமென்ட் கொடுத்தது கிடையாது. எனக்கே சில சமயம் ஓவர் ஆக்டிங் பண்றோமோன்னு தோணும். ஆனா இதுவரை யாருமே நெகடிவ் கமென்ட் பண்ணதில்ல. ஒரே ஒருவாட்டி, ஒரு பொண்ணு இன்ஸ்டால நான் போட்டோ போஸ்ட் பண்ணதும், ``உங்க தலையில பேன் இருக்குமா’’-ன்னு சும்மா காமெடியா கமென்ட் போட்டாங்க. அவங்க ஜாலியா கேட்டதுக்கு, பலர் வந்து அவங்களை திட்டி ரிப்ளை போட்டாங்க. ஆனா, நான் அவங்க கமென்டுக்கு மட்டும்தான் லைக் போட்டேன். அவங்க மனசுல இருக்குறத ஓப்பன்னா கேட்டுட்டாங்க. இதுல வருத்தப்பட என்ன இருக்கு. என் முடி காமெடியா தானே இருக்கு? எனக்காக சப்போர்ட் பண்ண இவ்ளோ பேர் இருக்காங்கன்னு இன்ப அதிர்ச்சியா இருக்கு.’’

``உங்க ஹேர் ஸ்டைல் சீக்ரெட் சொல்லுங்க-ன்னு பலர் கேட்குறாங்க. வாட்டர் வாஷ் கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, முடி வெட்ட காசில்லாம சுத்திட்டு இருந்தேன். முடி வளர வளர கொஞ்சம் வித்யாசமான தோற்றத்தைக் கொடுத்துச்சு. என்னைக் கடந்து போறவங்க என்னை வித்யாசமா லுக் விட்டாங்க. யோகி பாபு அண்ணன் டிரெண்ட் ஆகியிருந்த நேரமது. சிலர் என்னைப் பார்க்க யோகி பாபு அண்ணன் மாதிரி இருக்குறதா ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. அதனால அந்த ஹேர் ஸ்டைல அப்படியே மெயின்டன் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.’’

மாகாபா ஆனந்த், புகழ்
மாகாபா ஆனந்த், புகழ்

``ஒருவாட்டி ஷோ பண்ண துபாய் போனோம். ஏர்போர்ட் போனப்போ மாகாபா ஆனந்த் அண்ணன் பயமுறுத்திவிட்டுட்டார். ``இந்த முடியோட வந்தா துபாய் ஏர்போர்ட்ல உன்ன தூக்கிடுவாங்க’’-ன்னு சொன்னார். என் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் எல்லாத்துலையும் மொட்டை போட்ட போட்டோதான் இருக்கும். அதனால, நான் பயந்து போய், ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி தலையில தேய்ச்சு, படிய வெச்சு போனி டெயில் போட்டுக்கிட்டேன். மாகாபா அண்ணன்லாம் எனக்கு வேற லெவல் சப்போர்ட் கொடுப்பார். அவரையும் அண்ணியையும் கேட்டுதான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன். அதே மாதிரி தாம்சன் சாரும் நிறையா சொல்லிக் கொடுப்பார். காமெடி பண்ண என்ன ட்ரெயின் பண்ணது அவர்தான்.’’

``குக் வித் கோமாளி முடியப் போகுது-ன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. ஓபன்னா சொல்லணும்னா கடைசி நாள் ஷூட் அப்போ அழுகையே வந்துருச்சு. நான் இதுவரைக்கும் பண்ண ஷோக்களில் இது ரொம்ப மனசுக்கு நெருக்கமான ஷோ. நடுவர்கள் செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட் சாரும் என்கிட்ட மட்டும் கோபப்படவே மாட்டாங்க. பட் சார், ஏதோ ஒரு பேட்டியில் அவருக்கு புடிச்ச கோமாளி நான்தான்னு சொல்லியிருக்கார். அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஒரே சந்தோஷம். ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் மேடம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். ’’

புகழ்
புகழ்

``பட வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. மாஸ்டர் படத்துல நடிக்க வாய்ப்பு தேடி வந்துச்சு. 40 நாள் கேட்டிருந்தாங்க. எனக்கு விஜய் சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மாஸ்டர் படத்துல எனக்கான காட்சியில, 40 மாணவர்கள் ஜெயில்ல இருப்பாங்க. அதில் நானும் ஒருத்தன். நான் போனதும், அந்த சீன்படி என் முடிய வேற வெட்டிடுவாங்கலாம். முடி வெட்டினதும் யாருக்குமே என்னை அடையாளம் தெரியாது. அதனால அந்த வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டேன்.’’

``எங்க ஹெட் பிரதீப் சார் கேட்டாரு. என்னடா மாஸ்டர் படத்துல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஆனா ஏன் போகலை-ன்னு கேட்டார். விஜய் சாரா, விஜய் டிவியா-ன்னு பார்த்தா எனக்கு விஜய் டிவி தான் சார்’-ன்னு ஒரு பிட்டை போட்டேன். உடனே அவர் டேய் முடியல’’-ன்னு கலாய்ச்சாரு. மாஸ்டர் படத்துல நடிச்சிருந்தாலும் இந்த அளவுக்கு ரீச் கெடச்சிருக்குமான்னு தெரியல.’’

குக் வித் கோமாளி டீம்
குக் வித் கோமாளி டீம்

``குக் வித் கோமாளியில் பெரிய பெரிய ஆர்டிஸ்ட் என் கூட நடிச்சாலும் எங்க கேமிரா மேன்லாம் என் மூகத்துக்குத் தான் அதிகமா குளோசப் வைப்பாங்க. உன் ரியாக்‌ஷன் நல்லா இருக்குன்'னு சொல்லுவாங்க. நான் இப்பயும் கார் ரென்டல் தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டேதான், ஷோ பண்ணிட்டு இருக்கேன். ஆபீஸ்ல ஷூட்டுக்கு எவ்வளவு நேரம் பெர்மிஷன் போட்டாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க. இப்படி என்னைச் சுத்தியிருக்குற ஒவ்வொருத்தரும் என் மேல அக்கறை காட்டி என்னை உருக வெக்குறாங்க. புகழ் ஹேப்பி போங்க’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு