Published:Updated:

ஷகிலா அவுட்... 'குக்கு வித் கோமாளி'யில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது... முக்கியமான ஒன்று தேவை?!

குக்கு வித் கோமாளி

ஆண் பெண் சம அளவில் இருக்கும் போட்டியாளர்களில் அடுத்த கட்டத்துக்கு முந்தப் போகும் குக்கு யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த வாஆஆஆஆஆஆரம் ஸ்பெஷல் வாரம்! ஆம்... செமி ஃபைனல் வாரம்!

ஷகிலா அவுட்... 'குக்கு வித் கோமாளி'யில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது... முக்கியமான ஒன்று தேவை?!

ஆண் பெண் சம அளவில் இருக்கும் போட்டியாளர்களில் அடுத்த கட்டத்துக்கு முந்தப் போகும் குக்கு யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த வாஆஆஆஆஆஆரம் ஸ்பெஷல் வாரம்! ஆம்... செமி ஃபைனல் வாரம்!

Published:Updated:
குக்கு வித் கோமாளி

எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கும் அடிப்படை ஒன்றுதான். அது ஒவ்வொரு போட்டியாளருக்கும் பின்னால் ஒரு எமோஷனலான கதை இருக்க வேண்டும். அந்த கதையைக் கேட்கும்போதே பார்வையாளர்கள் அழுது, உருகிக் கண்ணீர்விடவேண்டும். வாழ்வின் மீது நம்பிக்கைக் கொள்ளவேண்டும். எதையும் சாதித்துவிடலாம் என உற்சாகம் கொள்ளவேண்டும். போட்டியாளர்களில் ஒருவனாக பார்வையாளன் தன்னைப் பொருத்திக்கொள்ளவேண்டும். இதுதான் ரியாலிட்டி ஷோக்களுக்கான அடிநாதம்.

அதனால்தான் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, குக்கு வித் கோமாளியாக இருந்தாலும் சரி திறமையைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, போட்டியாளர்களுக்குப்பின்னால் என்ன கதை இருக்கிறது எனத்தேடுகிறது விஜய் டிவி.

அப்படி 'குக்கு வித் கோமாளி - சீசன் 2'வில் எமோஷனல், சென்ட்டிமென்ட், 'வீழ்ச்சியில் இருந்து எழுச்சி' எனப் பல சோகக்கதைகளையும், நம்பிக்கைக்கதைகளையும் கொண்ட 8 பேரைத் தேர்வு செய்து போட்டியில் நிறுத்தியது விஜய் டிவி. தீபா, மதுரைமுத்து, தர்ஷா, பவித்ரா, பாபா பாஸ்கர், அஷ்வின், ஷகிலா, கனி என எட்டு பேரோடு இந்த சீசன் தொடங்கியது. பலகட்ட எவிக்‌ஷன்களுக்குப்பிறகு இப்போது அஷ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி என நால்வர் மட்டுமே இருக்கிறார்கள். ஆண் பெண் சம அளவில் இருக்கும் போட்டியாளர்களில் அடுத்த கட்டத்துக்கு முந்தப் போகும் குக்கு யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த வாஆஆஆஆஆஆரம் ஸ்பெஷல் வாரம்! ஆம்... செமி ஃபைனல் வாரம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணாடியுடன் ஸ்மார்ட்டாக இருந்தார் ரக்‌ஷன். ஆடிக்கொண்டே பாபா பாஸ்கர், அழகான சிரிப்போடு அஷ்வின், கலக்கலான நடையில் கனி, சல்யூட் அடித்தபடி ஷகிலா என குக்குகள் ஆஜராகினர். உள்ளே கோமாளிகள் இரட்டையர்களாக நின்று கொண்டிருந்தனர்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

‘தேவர் மகன்’ சிவாஜி - கமலாய் சரத் - புகழ், 'அவ்வை சண்முகி' ஜெமினி கணேசன் - சண்முகி மாமியாக தங்கதுரை - சக்தி, 'கஜினி' சூர்யா - அசினாக பாலா ஷிவாங்கி, 'அன்பே வா' எம்ஜிஆர் - சரோஜாதேவியாக பப்பு சுனிதா வேடமிட்டிருந்தனர். சென்ற வாரம் விடுப்பில் இருந்த செஃப் தாமு, வெங்கடேஷ் பட்டுடன் ரீ என்ட்ரி தந்தார்.

இந்த வாரம் ‘ஒன்லி இன்டர்நேஷனல் குசின்’ என்று சொல்லிவிட்டார் வெங்கடேஷ் பட். பாபா பாஸ்கர் கெஞ்சாத குறையாக... கெஞ்சாத என்ன... கெஞ்சியே கேட்டார். இன்றைய போட்டியில் ஒரு குக்குக்கு இரண்டு கோமாளிகள் என்று சொன்னார் பட். ஷகிலாவுக்கு பப்பு - சுனிதா, பாபா பாஸ்கருக்கு தங்கதுரை - சக்தி, அஷ்வினுக்கு பாலா - ஷிவாங்கி, கனிக்கு புகழ் சரத் ஆகியோர் ஜோடிகளானார்கள்.

காமெடி கோமாளிகளை அழைக்கும்போது கன்டென்ட் எடுத்ததில் பாதி நேரம் கடத்தினார்கள். ஷிவாங்கி, பாலா இருவரும் நடித்துத் தள்ளினார்கள். போதாக்குறைக்கு புகழும், சரத்தும் 'தேவர்மகன்' கேரக்டரைப் புழிந்தார்கள். சரத்தைவிட, வெங்கடேஷ் பட் சிவாஜியாகவே மாறி ‘கமல்’ புகழைக் கலாய்த்தார்.

இதுவரை ‘ஸ்பெஷல் கெஸ்ட்டாகவே’ வராத மதுரை முத்து ஸ்கூல்பையன் வேடம் போட்டு வந்தார். அவர் காமெடி சொல்வதைவிட, காமெடி சொல்ல, படும் பாடு படாத பாடாக இருந்தது. அட்வான்டேஜ் டாஸ்க் ஒன்று ஆரம்பமானது. சாக்லேட்டை உருக்கி அதை பலூன் வைத்து முக்கி, கிண்ணத்தை தலைகீழாக வைத்ததுபோல - சாக்லேட் டோம் - செய்ய வேண்டும் என்பது டாஸ்க். பலூனை ஊத ஊத சிலருக்கு உடைந்தது. உடைந்த சாக்லேட் தெறித்தது. செய்து முடிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். இதில் கண்ணாடி பவுலை சுடு தண்ணீருக்குள் வைத்து உடைத்து அட்ராசிட்டி செய்தார் ஷிவாங்கி.

பாபா பாஸ்கர் 9 , அஷ்வின் 1, ஷகிலா 8, கனி 5 என்ற எண்ணிக்கையில் சாக்லேட் டோமைத் தயாரித்துக் கொண்டு வந்தனர். அஷ்வினைத் தவிர பாக்கி மூவரும் அட்வான்டேஜ் டாஸ்க் இரண்டுக்கு முன்னேறினர்.

அஷ்வின் - ஷிவாங்கி
அஷ்வின் - ஷிவாங்கி

இரண்டாவது டாஸ்க் சாத்துக்குடி உரிக்கும் டாஸ்க். வலது கையை மட்டும் வைத்து கோமாளிகள் சாத்துக்குடியை உரிக்க வேண்டும். குக், கோமாளிக்கு சாத்துக்குடியை கையில் பிடித்துக்கொண்டு உதவலாம். 10 சாத்துக்குடியை உரித்ததும் அடுத்து ஐந்து சாத்துக்குடிகள் தேவைப்பட்டால் உடற்பயிற்சி செய்யும் ரிங்கை இடுப்பில் வைத்து சுற்றிக் காண்பித்து - பத்து சுற்றாவது சுற்றவேண்டுமாம்! - வாங்கிக் கொள்ளலாம். டாஸ்க் ஆரம்பித்தது. டாஸ்குக்காக ஒரு பக்கம் சாத்துக்குடியை உரித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் காமெடி கூத்துகளும் இஷ்டத்துக்கு நடந்தன. பத்து சாத்துக்குடியை உரித்து முடித்தவர்கள் செய்ய வேண்டிய ரிங் சுற்றும் வேலையை யாரும் உருப்படியாகவே செய்யவில்லை. சும்மா போங்கு காட்டினர். அதையும் நடுவர்கள் போனப்போகுது என்று ஓகே செய்து கொண்டிருந்தனர்.

கனி - 27, ஷகிலா - 16, பாபா பாஸ்கர் 25 என்று சாத்துக்குடிகளை உரித்திருந்தனர். சுனிதா இரண்டு கையையும் உபயோகித்தது விதிமீறலானதால் ஷகிலாவின் 16 சாத்துக்குடியும் ரிஜக்ட் ஆனது. பிறகு சுனிதா பாட்டுப் பாடினால் ஓகே ஆகும் என்று சொல்லப்பட, அவர் ''கண்ணே கலைமானே'' பாடினார். பாடி ஒன்றும் ஆகப் போவதில்லை என்றாலும் பாடி உற்சாகப்படுத்தினார். இரண்டு சாத்துக்குடிகள் வித்தியாசத்தில், கனி அட்வான்டேஜ் டாஸ்கில் வெற்றி பெற்றார்.

அடுத்தநாள் Sea Foods கடல் உணவுகள் சமைக்கும் போட்டி. இனோவேஷனும், கிரியேட்டிவிட்டியும் இருக்கவேண்டும் என்று நடுவர்கள் சொன்னார்கள். அஷ்வின் கலக்கத்தில் இருந்தார். (சீ ஃபுட்ஸே சாப்டதில்ல), ஷிவாங்கி சொல்லவே வேண்டாம் “ஏன் இவ்ளோ நாத்தமடிக்குது” என்று புலம்ப ஆரம்பித்தார். கனிக்கு கன்னா பின்னா அட்வான்டேஜுகள் கிடைத்தன. முதலில் அவர் எதை வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்று அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன கொடுக்கலாம் என்றும் அவரே முடிவு செய்யலாம். மூன்றாவதாக கண்ணை மறைக்கும் மாஸ்க் ஒன்றை போட்டியாளர்கள் எவருக்கேனும் ஐந்து நிமிடங்கள் மாட்டிவிடலாம்.

இது போக கோமாளிகள் கலர் சாக்குப்பை ஒன்றில் இரண்டு கால்களையும் நுழைத்துத் தாவித் தாவித்தான் செய்பொருட்களையெல்லாம் கொண்டு வரவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. 'செத்தாண்டா சேகரு' என்கிற ரீதியில் இத்தனை இடர்பாடுகளுடன் சமையல் போட்டி ஆரம்பித்தது. பாபா பாஸ்கருக்கு லாப்ஸ்டர் என்ற கடல் உயிரி கொடுக்கப்பட்டது. “இதெல்லாம் கண்லகூட பார்த்ததில்ல” என்று புலம்பிடியபடி சமையலை ஆரம்பித்தார். அஷ்வின் போட்டி முழுவதுமே நம்பிக்கையற்ற உடல்மொழியுடன் இருந்தார். ஷிவாங்கி மிகவும் வருத்தமாக அதை கவனித்தபடியே அஷ்வினை உற்சாகப்படுத்த முயன்று கொண்டிருந்தார். ஷகிலா ‘என்னை விட்ருங்கடா... ஒரு ஓரமா சமைச்சுக்குறேன்’ மோடிலேயே இருந்தார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

பாபா பாஸ்கர் தங்கதுரை சக்தி கூட்டணி முதலில் சமர்ப்பித்தார்கள். ‘கோவன் லாப்ஸ்டர் கறி’ என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார்கள். முதல்முறை இப்படியான சமையலைச் செய்தது குறித்து செஃப் தாமு பாராட்டினார். ’' ஆனால், இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்’ என்றார் தாமு. ஒரு லாப்ஸ்டர் வேகவே இல்லை என்றார் வெங்கடேஷ் பட்.

அஷ்வின் - ஷிவாங்கி - பாலா அடுத்து. 'சிஸ்லிங் காலிஃப்ளவர் ப்ரான்' டிஷ்ஷை அவர் கொண்டு வந்தார். சைனீஸ் ஸ்டைல் குஸின். உச்சபட்சப் பாராட்டு கிடைத்தது அவருக்கு. தாமு பாராட்டித் தள்ளினார். ஷிவாங்கி வானத்துக்கே எகிறிக் குதித்தார். பாலா அதிகம் வேலை செய்ததற்குப் பாராட்டுப் பெற்றார்.

ஷகிலா - சுனிதா - பப்பு அடுத்தது அவர்கள் சமைத்த 'நவாபி ஸ்குவிட்'டைக் கொண்டு போய் வைத்தார்கள். பாராட்டிய செஃப் தாமு ‘'ஆனால், இனோவேஷன், கிரியேட்டிவிட்டியே இல்லையே’' என்று குறையையும் சொன்னார்.

கனி - புகழ் - சரத் கூட்டணி “வாழை இலை மீன் பொறிச்சது’ கொண்டு வந்து வைத்தார்கள். டாப் நாட்ச் பாராட்டு கிடைத்தது அதற்கு. செம பெஸ்ட் என்று தாமு பாராட்டி ''வேற லெவல்'' என்றார். புகழ் தன் பங்குக்கு ஆஸ்காருக்கு அடுத்த லெவல் நடிப்பைக் கொடுத்து தன் பங்கு என்ன என்பதைச் சொன்னார்.

முதல் சுற்றுக்கான தீர்ப்பு நேரம். கனி ஜெயித்து ஃபர்ஸ்ட் ஃபைனலிஸ்டாக நேரடியாக ஃபைனலுக்குப் போனார். நடுவர்கள் பாராட்டி பூங்கொத்து வழங்கினர். கனி, பேச முடியாமல் குரல் கம்ம நன்றி தெரிவித்தார். புகழுக்கும் சரத்துக்கும் மனதார மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

புகழ் திடீரென கண்கலங்கினார். நடுவர்களும் மற்ற போட்டியாளர்களும் “என்னடா.. ஃபைனலுக்குக் கூட்டிட்டுப் போய்ட்ட ஏன் அழற?” என்று கேட்டார்கள். பார்த்துக் கொண்டிருந்த நமக்குமே கண்கலங்கியது. புகழ் அழுகையான குரலில் “இந்த நேரத்துல ஒருத்தரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருக்கு கடமைப்பட்டிருக்கோம்” என்று எல்லாரையும் நெகிழச்செய்து “அவரு பேருகூட தெரியாது.. அந்த வவ்வா மீனு... உசுரக் கொடுத்து எங்களை ஜெயிக்க வெச்சிருக்கு” என்று சொல்ல அனைவரும் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழம்பி சிரித்து குலுங்கி... அடேய் புகழு....!!

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

இரண்டாவது ஃபைனலிஸ்ட் யார் என்று பெரும் நேர இடைவெளிக்குப் பின் சொன்னார்கள். அஷ்வின். அவர் பெயர் அறிவித்ததும் அஷ்வினை விடவும் ஒருத்தர் மகிழ்ச்சிக் கடலில் துள்ளித் துள்ளிக் குதித்தார். அவர் ஷிவாங்கி. அத்தனை டென்ஷனோடு இருந்த அவருக்கு பெரிய ரிலீஃபாக அந்த அறிவிப்பு இருந்தது. அவர் ஜெயித்ததும் செஃப் கொடுத்த பூங்கொத்தை வாங்கியவர் பாபா பாஸ்கர், ஷகிலா இருவரின் காலில் விழுந்ததைப் பார்த்த நமக்கு நிஜத்தில் கண் கலங்கியது. அந்தப் பண்புக்கு சல்யூட் அஷ்வின்! ஷிவாங்கியும் நெஞ்சம் முழுக்க மகிழ்ச்சியோடு நன்றி சொல்லி ஒரு பாடலையும் பாடினார். பாடி முடித்து நல்லாருந்துச்சா என்று சைகையில் அஷ்வினிடம் கேட்ட ஷிவாங்கியின் கண்களில் ஒரு யுகத்துக்கான காதல் இருந்தது.

கடைசியாக பாபா பாஸ்கரும், ஷகிலாவும் டக் ஆஃப்வாரில் போட்டி போட்டனர். மாம்பழம் & மாங்காய் சமைக்கும் சவால். ஷகிலா மாங்காயையும், பாபா பாஸ்கர் மாம்பழத்தையும் தேர்வு செய்தனர். 20 நிமிடத்தில் சமைக்க உத்தரவிட்டனர். சீரியசாக சமைத்துக் கொண்டிருக்கும்போது பழைய ஜோக்கோடு வந்த தங்கதுரையை விளக்குமாற்றால் அடிக்காத குறையாக துரத்திவிட்டார்கள் மாஸ்டரும், ஷகிலாவும். மதுரை முத்து சொன்ன ஜோக்குக்கு ஷிவாங்கி ஒரு மணிநேரமும், மற்றவர்கள் ஒரு நொடியும் சிரித்தார்கள்.

செம சீரியஸாக சமைக்க ஆரம்பித்தார்கள் இருவரும். நடுவர்கள், தொகுப்பாளர், சும்மா இருக்கும் மற்ற கோமாளிகள் என்று பலரும் வந்து பேச்சுக் கொடுக்க அதற்கு இடையே சமைத்தார்கள் இருவரும்.

பாபா பாஸ்கர் அவர் செய்த ‘குனாஃபா’வை கொண்டு வந்து வைத்தார். ஷகிலா ‘மாங்கா மல்லி ரைஸ்’ சமைத்திருந்தார். பாபா பாஸ்கர் ‘எங்கயோ போய்ட்டய்ய்யா நீ... டாப் நாட்ச்’ என்கிற பாராட்டைப் பெற்றார். ஷகிலாவின் சமையலில் புளிப்பு கம்மி என்றார்கள் நடுவர்கள்.

இருவரும் சம அளவில் பாராட்டுப் பெற்றாலும் பாபா பாஸ்கர் மூன்றாவது ஃபைனலிஸ்டாக ஃபைனலுக்குப் போனார். ஷகிலா வெளியேற்றப்பட்டார். “வைல்ட் கார்ட்ல நான் வர்றதால கொஞ்சம் டஃபா இருக்கும்” என்று இதுவரை சொல்லாத ஒரு ஹைலெவல் ஜோக்கை சொன்னார் மதுரை முத்து.

ஷகிலா மிகுந்த மகிழ்ச்சியோடு தன் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். எல்லாரும் அழுது கட்டிப் பிடித்து அவரை வழியனுப்பி வைக்க... அடுத்த வாரம் வைல்ட் கார்டு ரவுண்டில் சந்திப்போமென்று நிகழ்ச்சியை முடித்து வைத்தார் ரக்‌ஷன்.

ஷகிலாவுக்குப்பின்னால் நம்பிக்கைத்தரக்கூடிய கதை ஒன்று இருக்கிறது என்பதால் அவர் நிச்சயம் வைல்டு கார்டில் வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கலாம்!