Election bannerElection banner
Published:Updated:

மகிழ்ச்சியில் அஷ்வின்... மேகத்தில் ஷிவாங்கி... உருக்கத்தில் புகழ்! 'குக்கு வித் கோமாளி' அலப்பறைகள்

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

விஜய் டிவியின் ஐந்து முக்கியமான ஷோக்கள் போர்டில் வைக்கப்பட்டிருந்தது. கோமாளிகள் ஆளுக்கொரு ஷோவை செலக்ட் செய்ய வேண்டும். அந்த போர்ட் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு ஃப்ளேவர்களும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. யாருக்கு என்ன ஃப்ளேவர் வருகிறதோ... அந்த டேஸ்டில் உணவு செய்ய வேண்டும் என்பது ப்ளான்.

பிக் பாஸ் ஃபைனலுக்காக கடந்த ஞாயிறு ஒளிபரப்பப்படாத `குக்கு வித் கோமாளி’யின் மெயின் டாஸ்க் நேற்று ஒளிபரப்பப்பட்டது. அப்ப நாளைக்கு ‘அட்வான்டேஜ் டாஸ்க்’ மட்டும் ஒளிபரப்புவாங்களா? இப்படியே போனா ஒருவாரமும் ஒரு முழு ப்ரோக்ராம் வராதா என்று எல்லாரையும் போலவே உங்களுக்கும் சந்தேகம் வரும். இதை ஒருவர் டிஸ்னி ஹாட் ஸ்டாருக்கே கேட்க அவர்கள் சென்ற வாரம் போலவே “ஐயம் சாரிப்பா... சண்டே சூப்பர் சிங்கர் ஒளிபரப்பறதால சண்டே எபிசோட் இல்லை” என்று கைவிரித்துவிட்டார்கள்.

சரி.. இப்போது சென்ற வாரத்தில் ‘மீந்துபோன’ அந்த மெய்ன் டாஸ்க்கில் என்னென்ன நடந்தன?

விஜய் டிவியின் ஐந்து முக்கியமான ஷோக்கள் போர்டில் வைக்கப்பட்டிருந்தது. கோமாளிகள் ஆளுக்கொரு ஷோவை செலக்ட் செய்ய வேண்டும். அந்த போர்ட் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு ஃப்ளேவர்களும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. யாருக்கு என்ன ஃப்ளேவர் வருகிறதோ... அந்த டேஸ்டில் உணவு செய்ய வேண்டும் என்பது ப்ளான்.

பவித்ரா - மணிமேகலைக்கு கசப்பு, ஷகிலா - புகழுக்கு புளிப்பு, அஷ்வின் - ஷிவாங்கிக்கு இனிப்பு, கனி - சுனிதாவுக்கு துவர்ப்பு, பாபா பாஸ்கர் - பாலாவுக்கு காரம் வந்தது.

ஷிவாங்கி உள்ளே போகும்போதே, எனக்கு இனிப்பு வந்தா பரவால்ல என்று அஷ்வின் சொல்ல.. ஷிவாங்கியும் சரியாக அதையே தேர்வு செய்து துள்ளிக்குதித்தார். அஷ்வினுக்கு வந்தது இனிப்பு.... அதுவே எனக்கு கடுப்பு என்று மணிமேகலை கமென்ட் அடித்தார். பாலா அவருக்கான டேஸ்ட்டை தேர்வு செய்ததும் புகழ் அவரைத் தூக்கிக்கொண்டு வந்து, செட்டில் விழ பவித்ரா உள்ளிட்ட எல்லாரும் சிரித்து அதை ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஐந்து டேஸ்ட்டுகள் செய்யவும் ஐந்து வகையான சமையல் பொருட்கள் கொடுக்கப்பட்டன. பாபா பாஸ்கர் அட்வான்டேஜ் ஜெயித்ததால், அவருக்கான டேஸ்ட்டை மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் “வேண்டாங்க ஐயா... காரமே எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டார். அடுத்து இன்னொரு அட்வான்டேஜாக, வேறு இருவரின் கூடையை மாற்றிவிடலாம் என்று சொல்லப்பட்டது.

இந்த இடத்தில் அஷ்வினைப் பற்றிப் பார்க்கலாம். விஜய் டிவியின் ஸ்மார்ட்டான ஒரு மூவ், இந்த சீசனுக்கு அஷ்வினை இறக்கியது. எப்படி, எங்கிருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை. பையன் கலக்கல். இந்த சீசனின் ஃபைண்டிங் அவர்தான். அவரது ஸமார்ட்னெஸுக்கு, என்னைப் போல பல பெண்கள் ஹார்ட்டீன்கள் பறக்கவிட, சமையலிலும் சளைத்தவரில்லை என்று நிரூபிக்கிறார். சக போட்டியாளர்களை ஒவ்வொரு டாஸ்க்கிலும் அள்ளுவிட வைக்கிறார் அஷ்வின். ரிஸ்க் எடுத்து ஒரு டாஸ்க் செய்வதில் மன்னனாக இருக்கிறார். பாபா மாஸ்டரும் சமையலில் கில்லி என்பதால், இந்த அட்வான்டேஜில் அஷ்வினின் கூடையை மாற்றி அவரை கதிகலக்கலாம் என்று மணிமேகலையும் மாஸ்டரிடம் சொல்ல, பாபா மாஸ்டர் அஷ்வின் மற்றும் கனி இருவரின் கூடையை மாற்றிவிட்டார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

அதன்படி இனிப்பு கனிக்குப்போக, அஷ்வினுக்கு துவர்ப்பு வந்தது. அஷ்வின் முகமெங்கும் அத்தனை டென்ஷன். அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் நடந்தார். ஷிவாங்கி டென்ஷனாகாதீங்க என்றார். ''பண்ணிடலாம்'' என்று அஷ்வின் சொன்னாலும், அவர் உடல்மொழி ரிலாக்ஸாக இருக்கவில்லை.

செஃப் வெங்கடேஷ் பட் “அஷ்வின் டென்ஷனா இருக்கியா?” என்று கேக்க “அதெல்லாம் இல்ல செஃப், பண்ணிடலாம்” என்றார். பாபா பாஸ்கர் உள்ளிட்ட எல்லாரும் சிரித்து கிண்டல் செய்யவும் வெறியேறியவராய் “செய்வேன்... ஆனால், நான் செய்யமாட்டேன். ஷிவாங்கிய வெச்சு பண்ண வைக்கறேன். நான் வெறும் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மட்டும்தான் குடுப்பேன்” என்றார். அரங்கே “என்னது” என்று கத்தி அதிர்ச்சியாக “பண்ணிக்காட்றேன்” என்று சவால் விட்டார் அஷ்வின். ஆட்டம் களைகட்டியது!

டாஸ்க்கின் Hinderenceஆக ஒரு தடுப்பு கொடுக்கப்பட, அதை கோமாளியும் குக்கும் கட்டிக்கொண்டு திரும்பி நிற்க வேண்டும் என்றனர். போன சீசனில் ரம்யா பாண்டியனுடன் அப்படி நின்றது புகழுக்கு நினைவுக்கு வர “ஏப்பா அம்மா புள்ளையா இருக்கறப்ப இதைக் கொடுக்கறீங்களே” என்றார்.

எல்லாரும் சமையலுக்கான பொருட்கள் எடுக்க உள்ளே கஷ்டப்பட்டு ஓட, பாபா பாஸ்கர் மட்டும் பாலா இருப்பதை மறந்து ஓடிஓடி பாலாவை ஒருவழி பண்ணினார். புகழ், பாபா பாஸ்கரை “வாங்க பாப்போம்” என்று டென்ஷனாக்க “வர்றேன்டா” என்று பாலாவை கீழே விழவைத்தார். “தோலுரிக்க சொன்னேனே... உரிச்சுட்டியா” என்று அஷ்வின் கேட்க “ஓ...” என்று உருளைக்கிழங்கை எடுத்தார் ஷிவாங்கி. “வாழக்காயத்தானே உரிக்கச் சொன்னேன்” என்று அஷ்வின் தலையிலடித்துக்கொண்டார். ”நோ டென்ஷன் பண்ணிடலாம்” என்று கூலாக்கினார் ஷிவாங்கி.

அந்தப் பக்கம் ரம்யா பாண்டியன் நினைப்பில் “ஒன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன்” என்று புகழ் பாட, “நான் இங்கதானே இருக்கேன்?” என்று கேட்டார் ஷகிலா. “ஏங்க... உங்களையா நெனைப்பாங்க. இது போன சீசன்” என்று ஃபீல் செய்தார் புகழ்.

எடிட்டர் கரெக்டாக ரம்யா பாண்டியன் - புகழின் சென்ற சீசன் எபிசோடை கட்டிங்கில் போட, அவ்வளவு அழகாக இருந்தது அந்த க்ளிப்பிங்.

இன்னொரு பக்கம் கனியும் சுனிதாவும் நிற்க முடியாமல் விழுந்து கொண்டிருந்தார்கள். “வரவர டாஸ்க்லாம் ரொம்ப கஷ்டமா குடுக்கறாங்க. என்னாங்க வரவர இவ்ளோ மோசமா இருக்கு” என்று ஷகிலா திரும்பி நின்று புலம்பிக் கொண்டிருக்க புகழ் ஹாயாக எதையோ தின்று கொண்டிருந்தார். “ஆமாங்க. வாய்ல பச்சத்தண்ணிகூட படல” என்றார் புகழ். “அப்பறம் என்னத்த மென்னுட்டிருக்க?” என்று நக்கலடித்தார் ஷகிலா.

அஷ்வின் - ஷிவாங்கி குக்கு வித் கோமாளி
அஷ்வின் - ஷிவாங்கி குக்கு வித் கோமாளி

இந்த களேபரங்களுக்கு நடுவில் செஃப் தாமு புகழை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு கொள்ளாமல் புகழ், பவித்ராவுக்கு ஃப்ளையிங் கிஸ் விட்டுக்கொண்டிருந்தார்.

அடுத்து செஃப் தாமு பாபா பாஸ்கர் வொர்க் ஸ்டேஷனுக்குப் போகவும் பாலா பாட ஆரம்பித்தார்.

“பச்சமிளகா காரம்

பன்னெண்டு மணி நேரம்

டிரான்ஸ்ஃபார்மர் ஓரம்

ஊருக்குத்தான் போறோம்” என்று பாலா பாடவும்

“என்ன டிஷ் செய்யப்போறனு கேட்க வந்தேன்” என்றார் தாமு.

''கிளி மாஞ்சாரோ, சித்தப்பா சிக்கன் செஞ்சாரோ’ என்று அதற்கும் பாட கன்னத்தில் ரப்பென்று ஒன்று கொடுத்து “என்னடா டிஷ்?” என்றார். அதற்கும் “ஆந்திரா காரம்.. ஜெயிப்பாரு அடுத்த வாரம்” என்றார் பாலா. செஃப் தாமு ‘குண்டூர் கொடிவேப்புடு’ என்று சொல்லவும் ‘ஐ செஃப் பேர் வெச்சுட்டார்’ என்றார் பாபா பாஸ்கர். “அப்ப காதுல மூணுவாட்டி சொல்லுங்க” என்று கடித்தார் பாலா.

அஷ்வின் இழுத்த இழுப்புக்கு சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தார் ஷிவாங்கி. ‘இப்படி நடுவுல கட்டிக்கற டாஸ்க் இப்பவா தருவீங்க? தர்ஷா, பவித்ரா இருக்கறப்ப குடுக்கல பாருங்க. வெங்கடேஷ் பட் சார்தான் இதப் பண்ணிருப்பாரு” என்று புகழ் புலம்பிக்கொண்டிருந்தார். டைரக்டருடன் கன்ஸோலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்ந செஃப் பட் வந்து ஷகிலாவிடம் போட்டுக்கொடுத்தார்.

வெங்கடேஷ் பட், தாமு இருவரும் புகழை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர். “ரம்யா பாண்டியன்கூட மட்டும் அவ்ளோ ஜாலியா இந்த டாஸ்க் பண்ணின... இப்ப மட்டும் புலம்பற?” என்று கேட்டார் பட். பதிலுக்கு “தாமு மாஸ்டர் பவித்ராவுக்கு ஃப்ளையிங் கிஸ் குடுத்தார். எடிட்டர் ஐயா அதப் போட்டுக்காட்டுங்க” என்று சொன்னார் புகழ். மூவரின் கலகல சண்டை ரணகளமாக இருந்தது.

பவித்ராவுடன் இருந்த மணிமேகலை புகழை வம்புக்கிழுக்க “பவித்ரா... எனக்கு கல்யாணம் ஆனப்பறம் நீ சமைக்கிற.. உன் கையால நான் சாப்பிடுறேன்” என்றார் புகழ். “அவங்க புருஷன் ஒத்துக்கணுமே” என்று பழைய சரவெடி கவுன்ட்டர் அடித்தார் மணிமேகலை.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

“பசங்கள கண்டுக்கக்கூடாது. கண்டுகிட்டா பாக்கவே மாட்டாங்க. கண்டுக்காத பொண்ணுங்க பின்னாடிதான் பசங்க போவாங்க” என்று சுனிதாவுக்கு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் கனி. “ஒரு காலத்துல நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்கள குக்கா கூட்டிட்டு வருவாங்க. இப்ப ஆள் பத்தலைனு கூட்டிட்டு வராங்க” என்று மணிமேகலை பவித்ராவை வாரிக் கொண்டிருந்தார்.

‘ஸ்நேகிதனே’ போலவே இந்த முறை ‘சாய்ந்து சாய்ந்து’ பாடினார் ஷிவாங்கி. அஷ்வினும் ரசிக்க “ரசிக்கறியா அஷ்வின்... பிடிச்சுருச்சா?” என்று கலாய்த்தார் செஃப் தாமு. “பாட்டு சார்... நல்ல பாட்டு” என்றார் அஷ்வின். இன்னொரு பக்கம் புகழிடம் “நீ பாட்டு பாடு” என்று சொல்ல ஷகிலாவை வைத்துக் கொண்டு “ஓ அங்கிள்... ஓ அங்கிள்... ஒ அங்கிள் ஆன்ட்டி” என்று பாட சிரிக்க ஆரம்பித்தார் ஷகிலா. இதனால் பின்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த புகழ், நிற்க முடியாமல் தடுமாறி “விட்டுருங்க செஃப்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

கடைசி ஐந்து நிமிடம் என்று ரக்‌ஷன் அறிவிக்க ஆளாளுக்கு ஸ்பீடெடுத்தார்கள். அஷ்வின் அவர் செய்த டிஷ்ஷுக்கு ஸ்மோக் தேவை என்று நெய்யை வைத்து எதையோ செய்தார். (எதைச் செய்தார்? அது தெரிஞ்சா நான் ஏன் இங்க இதை எழுதிட்டிருக்கப் போறேன்!) பிறகு அதை ஒரு பெரிய மூடி வைத்து மூட அப்படியும் புகை வெளியே போனது. “நான் பாத்துக்கறேன்” என்று களமிறங்கிய ஷிவாங்கி மூடியைக் கட்டிப்பிடித்து நிற்க (கண்ணாடியத் திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா!!)

டாஸ்க் டைம் முடிய ஒவ்வொருவராய் வந்து கொடுத்தார்கள். அஷ்வின் ‘துவர்ப்பு’ டேஸ்ட்டில் செய்த “ஸ்மோக்ட் வாழக்கா ஸ்க்யூவர்ஸ்’ நடுவர்களை அசத்தியது. “எப்படி ஒவ்வொரு வாட்டியும் வித்தியாசமா எதாச்சும் பண்ணிடற” என்று ரக்‌ஷன் சொல்ல செஃப் வெங்கடேஷ் பட் கைகொடுத்துப் பாராட்டினார். தாமுவும் அவர் பங்குக்கு பாராட்டித் தள்ளினார். “மூடி பிடிச்சு ஸ்மோக்கை தக்க வெச்சதுக்கு ஹாட்ஸ் ஆஃப் ஷிவாங்கி” என்றார் பட். ஷிவாங்கி கொஞ்சம் எமோஷனலானார். “பாபா பாஸ்கர் மாஸ்டர் என்னால செய்ய முடியாதுனு சொன்னப்ப கஷ்டமாச்சு... இவர் எம்மேல நம்பிக்கை வெச்சு சொன்னப்ப” என்று ஸ்பீச் கொடுத்தார்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

பாபா பாஸ்கர் - பாலா இணை ‘எறா கார வறுவல் - நெய் சோறு - சிக்கன் வேப்புடு’வைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை அக்குவேறு ஆணிவேறாக அலசி வெரிகுட் சொன்ன நடுவர்கள், கூடவே‘ஏழெட்டு நிமிஷம் முன்னாடி எடுத்திருக்கலாம்’ என்கிற கமென்ட்டையும் கொடுத்தார்கள்.

ஷகிலாதான் புளிப்பு டேஸ்ட்டில் செய்த ‘பைங்கன் கட்டா’வை கொண்டு வந்து கொடுத்தார். கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தியாக இருப்பதாக நடுவர்கள் சொன்னாலும் ''ஓகே'' என்று பாராட்டினார்கள். ஷகிலா சிரித்துக்கொண்டே இருந்ததையும், அவரோடு அந்த ப்ளைவுட்டைக் கட்டிக்கொண்டு நின்ற சிரமத்தையும் புகழ் விளக்க அப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தார் ஷகிலா.

கனி - சுனிதா சிம்பிளாக ’பால் கொழுக்கட்டை’யைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ''எல்லாம் அவுட் ஆஃப் த வேர்ல்ட். ஆனால் கொழுக்கட்டை கட்டிருச்சே?” என்றனர் நடுவர். அடுத்து பவித்ரா - மணிமேகலை, பாவக்காய்த் தொக்கு கொண்டு வந்தார்கள். ''ஆயில் ஜாஸ்தி, உப்பு கம்மி, வெங்காயம் கொஞ்சம் வதங்கிருக்கலாம்'' என்ற கமென்ட்டுகளோடு அதை சாப்பிட்டு முடித்தனர் நடுவர்.

அஷ்வின் முதலிடமும், ஷகிலா இரண்டாமிடமும், பாபா பாஸ்கர் மூன்றாமிடமும் பிடித்து அடுத்த டாஸ்குக்கு முன்னேறினர். ஸ்டார்ட்டர் எதாவது செய்ய வேண்டும் என்பது டாஸ்க். செஃப் உள்பட பலரும் வொர்க் ஸ்டேஷனில் போய் செய்த இடையூறுகளுக்கிடையே மூவரும் சமைத்து முடித்தனர். ஷகிலா ‘புளி பங்குராலு’ (பேரு வைக்கறாங்க பாரு!), பாபா பாஸ்கர் பேபிகார்ன் சிகார், அஷ்வின் ’சிக்கன் ருலாட்’ செய்து சமர்ப்பித்தனர். மற்ற இரண்டையும் பாராட்டிய நடுவர்கள் அஷ்வின் செய்த ஸ்டார்ட்டரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் திணறினர் செஃப் இருவரும். எழுந்து வந்து பாராட்டினார்கள். அஷ்வின் மகிழ்ச்சியில் திளைக்க ஷிவாங்கி மேகத்தில் மிதந்தார்.

”ஒரு பாட்டு பாடேன்” என்று நடுவர்கள் கேட்கவும் ஒரு பாடலைப் பாடினார் ஷிவாங்கி. கேட்காத பாட்டா இருக்கே என்று பார்த்துக் கொண்டிருக்க... சில வரிகளுக்குப் பிறகு அஷ்வின் இரண்டடி பாடினார். “என்ன பாட்டு இது?’ என்று செஃப் பட் கேட்க “இவர் (அஷ்வின்) நடிச்ச பாட்டு. என்னைக்கு இவருகூட நான் கோமாளியா வந்து இவரு பெருமைப்படுற மாதிரி ஜெயிக்கிறமோ அன்னைக்கு இவருக்கு டெடிகேட் பண்ணணும்னு நெனைச்சுட்டிருந்தேன்” என்று செட்டையே உருக வைத்தார் ஷிவாங்கி.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

மொமன்ட் ஆஃப் த டே:

அஷ்வின் - ஷிவாங்கியைப் பாராட்டிய பிறகு ஷிவாங்கியைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது அண்ணனாக வந்த புகழ் அங்கே அடித்த லூட்டிகள் செம ரகம். பிஜியெம்மில் ’மலர்ந்தும் மலராத’ ஓட திரும்பி நின்று தொடை தட்டி சிவாஜி பாதி எம்ஜியார் பாதியாக அவர் செய்த ரகளை!

இம்யூனிட்டி டாஸ்க்கில் வென்றார் அஷ்வின். உடனே பாலா, “இப்ப ஒரு சவால் விடறேன்... இதே குக்கு வித் கோமாளில ஃபைனல்ஸில் எங்க சித்தப்பாவை ஜெயிக்க வைக்கறேன்” என்றார். மணிமேகலை அவர் பங்குக்கு ‘நான் ஷகிலாவை ஜெயிக்க வைக்கறேன்” என்றார். ஆளாளுக்கு இப்படி ஆரம்பிக்க “நான் சவால் விடறேன். இந்த எல்லாரையும் எலிமனேட் பண்றேன்” என்றார் வெங்கடேஷ் பட்.

இப்படி கலகலவென முடிந்தது இன்றைய எபிசோட். நாளை எபிசோட் இல்லாததால்... அடுத்த சனிக்கிழமை மீண்டும் சந்திப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு