Published:Updated:

``நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்!" - `குக் வித் கோமாளி' அஷ்வின் #SpreadPositivity

அஷ்வின்
News
அஷ்வின்

முதல் அலையில் ஒருமுறையும் இரண்டாவது அலையில் இன்னொரு முறையும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்ட அனுபவங்களைப் பகிர்கிறார் அஷ்வின்.

குக் வித் கோமாளியின் சாக்லேட் பாய் அஷ்வினை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அஷ்வின் என்றாலே அவரது மாறாத சிரிப்பும் ஆட்டிட்யூடு இல்லாத அணுகுமுறையும்தான் நினைவுக்கு வரும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த கையோடு வெப்சீரிஸ், படங்கள் என பிசியாகிக் கொண்டிருந்தவரின் மீது யார் கண் பட்டதோ.... அவருக்கும் கொரோனா. கொரோனாவுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்போல. அதனால்தான் ஒன்றுக்கு இருமுறை அவரை தாக்கியிருக்கிறது.

முதல் அலையில் ஒருமுறையும் இரண்டாவது அலையில் இன்னொரு முறையும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்ட அனுபவங்களைப் பகிர்கிறார் அஷ்வின்.

அஷ்வின்
அஷ்வின்

``2020-ம் வருஷம் நவம்பர் மாசக் கடைசி... வெப் சீரிஸ் ஷூட்ல இருந்தேன். திடீர்னு ஒருநாள் உடம்புக்கு முடியலை. வாசனையும் டேஸ்ட்டும் இல்லாதது மாதிரி ஃபீல் பண்ணினேன். அடுத்தடுத்த நாள்ல கடுமையான காய்ச்சல் வந்தது. தூங்க முடியலை. சந்தேகப்பட்டு ஸ்வாப் டெஸ்ட்டும், சி.டி ஸ்கேனும் எடுத்ததுல கோவிட் பாசிட்டிவ்னு உறுதியாச்சு. டாக்டர்ஸ் சொன்ன மருந்துகளை எடுத்துக்கிட்டு ஹோம் க்வாரன்ட்டீன்ல இருந்தேன். மாத்திரை சாப்பிட்டதும் கொஞ்சம் பெட்டரான மாதிரி இருக்கும். மறுபடி முடியாமப் போகும். ஆவி பிடிப்பேன். கொஞ்சம் பெட்டராகும். சாயந்திரம் 6 மணி ஆனா மறுபடி வேலையைக் காட்டும். ரெண்டு நாள் இந்த மாதிரி பயங்கரமான அவஸ்தைகள். ரெண்டு நாள் கழிச்சு காய்ச்சல் குறைஞ்சது. ஆனா வறட்டு ஜலதோஷம் இருந்தது. உடம்புவலியும், தூங்கும்போது மூக்கடைப்பும் இருந்தது. ஏழாவது நாள் கொஞ்சம் நார்மலானேன். ஆனாலும் சில அறிகுறிகள் இருந்தது. நல்லவேளையா அப்போ எங்கம்மா, அப்பா என்கூட இல்லை. ஊர்ல இருந்தாங்க. நான் சென்னையில தங்கியிருந்தேன். ஒருவழியா 20 நாள்களுக்குப் பிறகு அதுலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2021-ம் வருஷம் ஏப்ரல் மாசம்... ஒரு ஷூட்ல இருந்தேன். ஷூட்டிங் போகும்போது ரெகுலரா எல்லாருக்கும் டெஸ்ட் எடுக்குற மாதிரி எனக்கும் எடுத்தாங்க. அடுத்த நாள் காலைல ஏழு மணிக்கு ஷூட்... ஆறு மணிக்கு `நீங்க ஷூட்டுக்கு வர வேண்டாம்'னு மெசேஜ் வந்தது. என்னனு விசாரிச்சா, `உங்களுக்கு டெஸ்ட்டுல பாசிட்டிவ்னு காட்டுது'ன்னாங்க. எனக்கு செம ஷாக். என்னால நம்ப முடியலை. `எனக்கு இப்பதானே வந்துட்டுப் போச்சு... மறுபடி வர வாய்ப்பே இல்லையே'னு அவங்ககிட்ட ஆர்கியூ பண்ணேன். `இல்லை பிரதர்... டெஸ்ட்டுல அப்படித்தான் காட்டுது'ன்னாங்க. அன்னிக்கு நான் வீட்டைவிட்டு எங்கேயும் வெளியே போகலை. அடுத்த நாள் இன்னொரு ஷூட்டுக்காக மறுபடி டெஸ்ட் எடுத்தாங்க. அதுலயும் பாசிட்டிவ்... `ஷூட்டுக்கு வராதீங்க'ன்னாங்க.

அஷ்வின்
அஷ்வின்

`நீங்க ஏசிம்ப்ட்டமேட்டிக். அதனால ஹோம் க்வாரன்ட்டீன் பண்ணிக்கோங்க'ன்னாங்க. வீட்டுக்குள்ளேயே இருந்தேன். மூணு நாள் கழிச்சு எனக்கு கடுமையான தலைவலி வந்தது. கொரோனானு சொன்னதுமே நம்ம உடம்பு தானா வீக் ஆயிடுது. பயங்கர டயர்டாயிட்டேன். ரெண்டாவது முறை எனக்கு ஸ்மெல், டேஸ்ட் போகலை. ஆனா சாயந்திரமானா தாங்க முடியாத தலைவலி வரும். டாக்டர் சொன்ன மாத்திரை போட்டுப்பேன். ஆவி பிடிப்பேன். தூங்கிட்டிருந்தாகூட அலாரம் வெச்ச மாதிரி சாயந்திரம் 6 மணிக்கு தலைவலி வரும். நைட் முழுக்க பாடாப் படுத்திடும். காலைலதான் தூங்குவேன். இப்படியே போச்சு. 14 நாள் கழிச்சு டெஸ்ட் எடுத்ததுல நெகட்டிவ்னு வந்தது. நெகட்டிவ் வந்த பிறகும்கூட எனக்கு உடம்புல அசதி முழுமையா போகலை. நான் ஸ்பிரின்ட்டர். வேகமா ஓடுவேன். சாதாரணமாவே வேகமா நடப்பேன். அப்படிப்பட்ட எனக்கு கொரோனா வந்த பிறகு வேகமா நடக்கவோ, ஓடவோ முடியலை. நடந்தாலே மூச்சு வாங்குச்சு. அப்பதான் இந்த வைரஸோட வீரியம் உடம்பை ஒருவழி பண்ணிடுச்சுனு புரிஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு வந்த பிறகு நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள்லேருந்து சில விஷயங்களை ஷேர் பண்ண விரும்பறேன். நாம போற பல இடங்கள்ல பலரும் இன்னும் விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க. கைகொடுக்கறாங்க. கட்டிப் பிடிக்கிறாங்க. மாஸ்க்கை எடுத்துட்டுப் பேசறாங்க. இது வெயில்காலம். அதிகம் வியர்க்குது. அந்த வியர்வையோட யாருக்காவது கைகொடுத்தாலோ, நாம தொட்ட இடத்துல யாராவது தொட்டாலோகூட வைரஸ் பரவிடுது. முதல் அலையைத் தாண்டிட்டோம்னு பலருக்கும் ஓர் அலட்சியம். பல பேர் சானிட்டைஸரை எல்லாம் மறந்துட்டாங்க. மாஸ்க்கை துவைச்சு உபயோகிக்கிறதில்லை.போற இடங்கள்ல கவனமா இருக்கிறதில்லை. ஒருத்தர்கிட்டருந்து பேனா வாங்கினாகூட அது மூலமா உங்களுக்குத் தொற்று பரவ 90 சதவிகிதம் வாய்ப்பிருக்கு. இந்த வைரஸ் நமக்கு வராம தடுக்கலாம். ஆனா வந்துட்டா அது ஏற்படுத்துற பாதிப்புகளைத் தடுக்கவே முடியறதில்லை. அது ரொம்ப கொடூரமானது.

அஷ்வின்
அஷ்வின்

கடந்த பத்து நாள்களா தினமும் ஓர் இறப்புச் செய்தியைக் கேள்விப்படறேன். எல்லாருமே எனக்குத் தெரிஞ்சவங்க. இன்னிக்கு மட்டுமே நாலு பேரோட இறப்புச் செய்தி வந்தது. இன்னிக்குக் காலையில இறந்த என் நண்பர், கீழே விழுந்து அடிபட்டதுக்காக ஆஸ்பத்திரி போனவர். போன இடத்துல கொரோனா வந்து, அது தீவிரமாகி, நுரையீரல் பாதிச்சு, இறந்தே போயிட்டார்.

என் கவலையெல்லாம் தினக்கூலிகளைப் பத்திதான். அன்றாடப் பிழைப்புக்காக ஓட வேண்டியவங்க அவங்க. அந்த மாதிரி ஆட்களை வீட்டைவிட்டு வெளியே வராதேனு சொல்றதோட நிறுத்திக்காம, தினம் ஒருத்தருக்கு சோறு கொடுத்தாகூட அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. சாப்பாட்டுக்காகத்தானே அவங்க வெளியே ஓடறாங்க. இப்படி நாம எல்லாரும் நம்மால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகளைப் பண்ணாலே போதும்.

இன்னும் கொஞ்சநாள், தடுப்பூசி போடறவரைக்கும் பொறுத்துக்கிட்டாலே இதுலேருந்து வெளியே வந்துடலாம். இதுல நம்ம ஒவ்வொருத்தருக்கும் பங்கு இருக்கு. இன்னும் பல பேருக்கு இந்தக் கொடூரமான வைரஸ் தொற்றை பத்தின விழிப்புணர்வு இல்லை. எனக்கே பர்சனலா அதை அனுபவிச்ச பிறகுதான் புரிஞ்சதுன்னு சொல்வேன்.

ஒரு சாக்லேட்டோ, அம்மாவோட சமையலோ.. சாப்பிடும்போது பிடிக்கலைனா `மொக்கையா இருக்கு.... கேவலமா இருக்கு'னு ஈஸியா கமென்ட் அடிச்சிருப்போம். ஆனா 20 நாள் என்ன சாப்பிடறேன்னே தெரியாம சாப்பிட்டபோதுதான் அந்த அருமை எனக்குத் தெரிஞ்சது. தண்ணீரோட சுவைகூட தெரியாத அந்தக் கொடுமையை நான் அனுபவிச்சிருக்கேன்.

கொரோனா பாசிட்டிவ் ஆனதுமே நான் சோஷியல் மீடியாவை விட்டு வெளியே போயிட்டேன். நியூஸ் சேனல்களைப் பார்த்து மக்கள் திருந்தினா சரி. ஆனா நாம அதைப் பார்த்து இன்னும் அதிகமா பீதியாயிடறோம். எனக்கு கொரோனா வந்ததுக்கு நான் தான் காரணம்னு நம்பினேன். ஷூட்ல மாஸ்க்கை எடுத்துட்டுதான் கேமரா முன்னாடி நிக்கணும்.

``நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்!" - `குக் வித் கோமாளி' அஷ்வின் #SpreadPositivity

முதல்முறை எனக்கு கொரோனா வந்தபோது என் அம்மா, அப்பாவுக்கு சொன்னேன். ரெண்டாவது முறை வந்தபோது அவங்க பயப்படுவாங்கனு குணமான பிறகுதான் சொன்னேன். கடைசியா ஓட்டு போட போனபோது அவங்களைப் பார்த்தது. அப்புறம் இன்னும் பார்க்கலை. வேலை விஷயமா பல இடங்களுக்குச் சுத்திகிட்டிருக்கேன். அவங்களைப் பார்க்கப் போய் அவங்களுக்கு ஏதாவது வந்துடக்கூடாதேனுதான் இங்கேயே இருக்கேன். ஒருமுறை வந்து உயிர் பிழைக்கிறதே கஷ்டம் என்ற நிலையில ரெண்டு தடவை வந்து மீண்டிருக்கேன். என்னுடைய க்ளோஸ் ஃபிரெண்ட்ஸை தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.

ஒருமுறை வந்துடுச்சு... மறுபடி வராதுங்கிற எண்ணம் எனக்கு இருந்தாலும் நான் அதிகபட்ச கவனத்தோடுதான் இருந்தேன். கூட்டமான இடங்களுக்குப் போனதில்லை. மாஸ்க் இல்லாம இருந்ததில்லை. அடிக்கடி சானிட்டைஸ் பண்ணிருக்கேன். அதையும் மீறி எனக்கு ரெண்டாவது முறை வந்தது வாழ்க்கையில பெரிய பாடம். ரெண்டு டோஸ் வேக்ஸின் எடுத்தவங்களுக்கும் வருதுனு கேள்விப்படறேன். இந்த நோய்த்தொற்றை உடனடியா நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது. ஆனா ஒவ்வொருத்தரும் அதிகபட்ச கவனத்தோட இருந்தா பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

Spread Positivity
Spread Positivity

மாஸ்க்கை துவைச்சு யூஸ் பண்ணுங்க. முடிஞ்சா டபுள் மாஸ்க் போடுங்க. கைகளை சானிட்டைஸ் பண்ணுங்க. கூட்டத்துக்குள்ளே போகாதீங்க. Stay Safe... Stay Home-னு மெசேஜ் போடறது ஈஸி. அது போதாது. மக்கள் என்னல்லாம் பண்ணணும், என்னல்லாம் பண்ணக்கூடாதுனு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட்டே இருக்கணும். இறந்துபோற சடலங்களைக் காட்டி பயமுறுத்தாம, அதைத் தடுக்க முடியும்னு புரியவைக்கணும். என்னால முடிஞ்சவரைக்கும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். என்னைச் சுத்தி இருக்கிற யாரோ ஒருத்தருக்கு என்னால முடிஞ்ச உதவிகளைப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இப்படி ஒருத்தர்மேல ஒருத்தர் அக்கறையா இருந்து பார்த்துக்கறதுதான் இப்போதைய தேவை. நான் உயிரோட இருந்தா போதும்னு நினைக்கிறதுக்கான நேரமில்லை இது. அப்படி நினைச்சா வாழறதுல அர்த்தமே இருக்காது.''