Published:Updated:

"நான் ஷோ-லதான் கோமாளி... ஆனா, சிலர் நிஜக் கோமாளின்னே நினைக்கிறாங்க!"- `குக்கு வித் கோமாளி' புகழ்‌

"சென்னை என்னை முதல் தடவை ஏமாத்துச்சு. விஜய் டிவியில கூட ஆரம்பத்துல ஆடிஷன்லயே எலிமினேட் ஆனேன். பார்த்துட்டிருந்த ஒரு வேலையை உதறிட்டு இங்கவந்து மறுபடியும் அதே முதலாளிகிட்ட வேலைகேட்டுப் போய் நின்னுருக்கேன்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'குக்கு வித் கோமாளி' புகழ்தான் சோஷியல் மீடியாவின் செல்லப்பிள்ளை. சமீபத்தில் இவர் ஹூண்டாய் க்ரெட்டா கார் வாங்கிய செய்தியை வீடியோவாகப்போட, வாழ்த்து மழையில் குளிப்பாட்டிவிட்டார்கள் ரசிகர்கள். புகழிடம் பேசினேன்.

"'ஒருத்தன் கார் வாங்கினதை ஊரே கொண்டாடுது'னு சோஷியல் மீடியாவுல ஒருத்தர் கார்டு ரெடி பண்ணிப் போட்டிருந்தார். பார்த்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. சென்னை என்னை முதல் தடவை ஏமாத்துச்சு. விஜய் டிவியில கூட ஆரம்ப ஆடிஷன்லயே எலிமினேட் ஆனேன். பார்த்துட்டிருந்த ஒரு வேலையை விட்டுட்டு இங்கவந்து மறுபடியும் அதே முதலாளிகிட்ட வேலை கேட்டுப் போய் நின்னுருக்கேன். இப்படி என்னுடைய ஃப்ளாஷ்பேக் முழுசையும் சொல்லிட்டே இருந்தா உங்க கண்ணுலயும் தண்ணி வந்துடும் சார்" எனச் சிரிக்கிறார் புகழ்.

"சிலர் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. எனக்கு அதிர்ஷ்டம்தானானு சொல்லத் தெரியலை. ஏன்னா, வாழ்க்கையில ஏதாவது செஞ்சு முன்னுக்கு வந்துட மாட்டோமாங்கிற நினைப்பு எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. அந்த நினைப்புலயே மாடு மாதிரி உழைக்கவும் செஞ்சிருக்கேன்.

புகழ், ஷிவாங்கி, ரக்‌ஷன்
புகழ், ஷிவாங்கி, ரக்‌ஷன்

கடலூர்ல இருந்து சென்னைக்கு வந்து இறங்கினப்ப கையில ஒருநாள் சாப்பாட்டுக்கு மட்டும்தான் காசு இருந்திருக்கும். சென்னையில வேலை தேடி அலைஞ்ச கதை இருக்கே, சீரியலா எடுத்தா ஏகப்பட்ட எபிசோடு, அதுவும் இன்ட்ரஸ்டிங்காப் போகும். பார்க்காத வேலை இல்லை. வெல்டிங், லேத் பட்டறை, கார் வாட்டர் வாஷ்னு கிடைச்ச வேலைகளைப் பண்ணிட்டேதான் தெரிஞ்சவங்க சிலர் மூலமா சினிமா, டிவிக்கான முயற்சிகளைப் பண்ணினேன்.

எப்படியோ முட்டி மோதி, விழுந்து எழுந்து போராடினதுல 'கலக்கப்போவது யாரு', 'சிரிப்புடா'னு பண்ணுன அலப்பறைகள்ல நம்ம மூஞ்சியையும் மக்களுக்குப் பிடிச்சுப் போச்சு.

அதுவும் 'குக்கு வித் கோமாளி' ஷோவுக்குப் பிறகு வேற லெவல் ரீச். இன்னைக்கு எங்க ஊருக்குப் போய் இறங்கினா அங்க என்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்குக் கொண்டாடுறாங்க.

சரி கார் மேட்டருக்கு வர்றேன். எங்க வம்சத்துலயே நான் வாங்கியிருக்கறதுதான் முதல் கார். டவுனுக்குப் போய் உழைச்சு வாங்கின கார்னு நினைக்கிறப்ப ரொம்பவே எமோஷனல் ஆகிடுறேன். கார் வாட்டர் வாஷ் பண்ற வேலையில இருந்தப்ப விதவிதமான கார்களா அங்க வரும். சில காருங்களோட விலையைக் கேட்டா கிறுகிறுன்னு வந்துடும்.

வாட்டர் வாஷ் முடிச்சா, சிலர் டிப்ஸ் தருவாங்க. அப்பெல்லாம் நானும் ஒரு நாள் சொந்தமா கார் வாங்குவேன்னு யோசிச்சிக்கூடப் பார்க்கல. இன்னைக்கு அது நடந்திடுச்சு. போதும் சார், எல்லாம் ஆண்டவன் செயல். இத்தோடு முடிச்சுக்குவோம். இன்னும் பேசினா எமோஷன் ஆகிடுவேன்" என்றவர் கொஞ்சம் அமைதி காத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஒரு விஷயம் சார். 'குக்கு வித் கோமாளி' ஷோவுலதான் நான் கோமாளி. ஆனா, சிலர் என்னை நிஜக் கோமாளியாவே நினைக்கிறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை. மனசுக்கு வருத்தமா இருக்கு.

புகழ்
புகழ்

இப்ப பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் கண்ணுல பட்டு அது மூலமா வரிசையா படங்கள் அமைஞ்சிட்டு வருது. ஆனா சிலர் ஏன்னு தெரியலை என்னை வெச்சு காமெடி பண்றாங்க.

ரெண்டு நாளுக்கு முன்னாடி ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து பேசறோம்னு ஒரு போன் வந்தது. கிண்டியில ஒரு இடத்துக்கு வர முடியுமான்னு கேட்டாங்க. நானும் நம்பி ஆசையா கிளம்பிப் போனேன். ஆனா கிண்டி போய் அந்த நம்பரைக் கூப்பிட்டா சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு. யாரு எதுக்கு சார் இப்படிப் பண்றாங்க?" அப்பாவியாகக் கேட்கிறார் புகழ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு