ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோக்களுள் `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியும் ஒன்று! இந்த நிகழ்ச்சி வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமே இல்லாமல் காமெடி கலந்து இருப்பதுதான் இதன் ஹைலைட். கோவிட் சமயத்தில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத சர்ச்சைகளும் இந்த சீசனில் எழுந்துள்ளன.
"முதல் மூன்று சீசன்களிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக புரொமோட் ஆனது நல்ல விஷயம்தான்! ஆனால், இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் என்ன? சமைக்கத் தெரிந்த குக்கிற்கு சமையல் தெரியாத கோமாளி உதவி பண்ணனுங்கிறதுதானே? அப்ப ஷிவாங்கிக்கு 'செஃப் ஆஃப் தி வீக்' வாங்கற அளவுக்கு நல்லா சமைக்கத் தெரியும்னா முதல் மூன்று சீசன்களில் ஏன் அவங்க அதை வெளிக்காட்டாம இருந்தாங்க? வேணும்னே தெரியாத மாதிரி நடிச்சு போட்டியாளர்களை வெளியேற்றணும்னு நினைச்சாங்களா?

ஒருவேளை இப்ப இந்தக் குறுகிய காலத்துல அவங்கக் கத்துகிட்டு வந்தாலும் மற்ற தேர்ந்த போட்டியாளர்களைக் காட்டிலும் படு திறமையா, அதுவும் கஷ்டமான டிஷ்களை எல்லாம் தேர்ந்தெடுத்து, ரிஸ்க் எடுத்து சரியா பண்றாங்களே, எப்படி?" இப்படி ஏகப்பட்ட கேள்விகளை சமூக வலைதளங்களில் காண நேர்ந்தது.
அடுத்ததாக, கோமாளியாக என்ட்ரியான ஓட்டேரி சிவா திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் குடித்துவிட்டு செட்டிற்குள் வந்ததாகவும், பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதன் காரணமாகவே 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றியதாகவும் தகவல்கள் பரவிவந்தன. ஆனால், அது உண்மையில்லை என்றும், அவரைப் போட்டியாக நினைக்கின்ற சில யூடியூபர்களே இந்த மாதிரியான தவறானத் தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், எது எப்படிடோ, அந்தச் சர்ச்சைக்குப் பிறகு ஓட்டேரி சிவா நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார் போட்டியிலிருந்து கடந்த வாரம் எவிக்ட் ஆனார். இந்த சீசனின் முதல் எவிக்ஷன் இவர்தான்! ஷிவாங்கிக்குப் பதிலாக இவரை வெளியேற்றியதாக அவரே கூறியது போல சில வீடியோக்கள் யூடியூபில் வெளியாகின. ஆனால், அதுவும் உண்மையில்லை. இந்த சீசன் முடியும் வரையில் சேனல் தரப்பிலிருந்து யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்கிற ஒப்பந்தம் போட்டிருப்பதால், நிகழ்ச்சி முடிந்தே பேட்டி கொடுக்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

'மற்றவர்கள் சமைத்ததை ஒப்பிடும்போது இவர் நல்லாத்தான் சமைச்சிருப்பார்' என அவருடைய ஃபைனல் டிஷ்ஷை வைத்தே அவருடைய ரசிகர்கள் பலரும் கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
உண்மை என்ன என்பது 'குக்கு வித் கோமாளி' குழுவினருக்கு மட்டுமே தெரியும்!