Published:Updated:

``அஷ்வின்கூட ஜோடியா சமைச்சா என்ன தப்புங்கறேன்?" - `குக் வித் கோமாளி' ஷிவாங்கி லாஜிக்

விஜய் டிவி `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலக்கும் ஷிவாங்கியிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாடகியாகும் ஆர்வத்தில் மீடியாவில் களமிறங்கி, தற்போது செம என்டர்டெயினராக மாறியிருக்கிறார் ஷிவாங்கி. `இந்தப் பொண்ணு நிஜமாவே இப்படித்தான் பேசுமா?' என்று பேசியவர்கள், `இந்தப் பொண்ணோட இயல்பு ரசிக்கும்படியா இருக்குது' எனப் பாராட்டும் அளவுக்குப் புகழ்பெற்றுள்ளார். அதை ஆமோதிக்கும் வகையில், சமீபத்தில் `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் சிவகார்த்திகேயனும் ஷிவாங்கியின் செயல்பாடுகளுக்கு அண்ணனாக லைக்ஸ் தட்டினார். விஜய் டிவி `குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலக்கும் ஷிவாங்கியிடம் பேசினோம்.

அஷ்வின் - ஷிவாங்கி
அஷ்வின் - ஷிவாங்கி

``பெற்றோரின் பூர்வீகம் கேரளா. இசை பயணத்துக்காகவே சென்னை வந்தாங்க. கஷ்டப்பட்டுதான் அம்மாவும் பின்னணிப் பாடகியானாங்க. `சந்திரமுகி' படத்துல இடம்பெற்ற `ரா ரா' பாடல் அம்மாவுக்குப் புகழ் கொடுத்துச்சு. நான் வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சின்ன வயசுல பெற்றோர்கிட்ட ஓரளவுக்கு மியூசிக் கத்துகிட்டேன். ஸ்ரேயா கோஷலின் தீவிர ரசிகை நான். அவங்க பாடலைத்தான் அடிக்கடி பாடிட்டிருப்பேன்.

இசைத்துறையில பலருக்கும் நிலையான வருமான வாய்ப்புகள் இருக்காது. அதைப் பத்தி பலரும் என்கிட்ட சொல்லவே, ஒருகட்டத்துல மியூசிக் கத்துக்கிறதை நிறுத்திட்டேன். வீட்டுல இருந்தபடியே பெற்றோர் இசை வகுப்பும் எடுப்பாங்க. அதில் என்னையும் கலந்துக்கச் சொல்லுவாங்க. நான் கண்டுக்க மாட்டேன். ஆனா, வீட்டுல எப்போதும் இசை ஒலிக்கும். அதைக் கேட்டு வளரும் வாய்ப்பு அதிகம் கிடைச்சது.

Shivangi
Shivangi

காலேஜ் முதல் வருஷம் படிச்சபோது. இன்டர் காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் நண்பர்கள் குழுவுடன் பாடினேன். இந்த நிலையில `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் ஆடிஷன் நடந்துச்சு. `அதுல கலந்துகிட்டா, நல்ல அனுபவம் கிடைக்கும். முயற்சி பண்ணிப் பாரு'ன்னு அம்மா சொன்னாங்க. கலந்துகிட்டேன்! அதுல பலரும் என்னைவிட ரொம்பவே சிறப்பா பாடினாங்க.

`நாம செலக்ட் ஆக வாய்ப்பில்லை'ன்னுதான் நினைச்சேன். ஆனா, `டாப் 20' போட்டியாளர்கள்ல ஒருவரா இடம்பெற்றது எனக்கே ஆச்சர்யம்தான். கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திகிட்டேன். ஒவ்வொரு ரவுண்டுலயும் நல்லா பயிற்சி எடுத்துப் பாடினேன். `டாப் 6'ல இடம்பிடிச்சேன். ஃபைனலுக்கு போக முடியாத ஏக்கம் இப்ப வரைக்கும் எனக்கிருக்கு" என்று வருத்தமாகக் கூறுபவர், `குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றிக் கேட்டதும் ஜாலி மோடுக்கு மாறினார்.

Shivangi
Shivangi

`` `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி முடிஞ்சதும் `சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அதுலயும் ஃபைனல் வரை போக முடியல. இந்த ரெண்டு இசை நிகழ்ச்சியிலயும் ரொம்பவே வெகுளித்தனமா இருந்தேன். அதுதான் என்னோட இயல்பான குணம்னாலும், ஆரம்பத்துல என்னை யாரும் சரியா புரிஞ்சுக்கல.

`நீங்க நிஜமாவே இப்படித்தானா? இல்ல நடிக்கிறீங்களா?'ன்னு கேட்டிருக்காங்க. அதனால, தொடக்கத்துல கொஞ்சம் வருத்தப்பட்டேன். அப்புறம் என்னைப் பத்தி படிப்படியா புரிஞ்சுகிட்டாங்க. யாரு எப்படி எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லைனு, என்னோட இயல்பான குணத்துல முடிஞ்சவரை என்டர்டெயின் பண்ணினேன். அதனாலதான், `குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைச்சது. அதுலகூட ஆரம்பத்துல என்னையும், என் குரலையும் சிலர் கலாய்ச்சாங்க. ஆனா, முதல் சீஸன் முடிவுல `சிம்மக் குரல் சிங்காரி'ன்னு விருது கொடுத்தாங்க. எமோஷனல் ஆகிட்டேன்.

சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி
சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி

இப்ப வரை எனக்கு சமையல் தெரியாது. கிச்சனுக்குக்கூட போக மாட்டேன். `படிப்பு, கரியர்ல கவனம் செலுத்தினா போதும்'னுதான் பெற்றோர் சொல்லுவாங்க. இந்த நிகழ்ச்சியில முதல் சீஸன்ல சமைக்க ரொம்பவே சிரமப்பட்டாலும், நல்ல அனுபவமா இருந்துச்சு. அப்புறம் இப்ப நடக்குற ரெண்டாவது சீஸன்லயும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான காஸ்டியூம் தருவாங்க. ஷூட்டிங் போறதே சந்தோஷமா இருக்கும். அங்க போன பிறகுதான் அன்னிக்கு என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்.

ஒவ்வொரு வாரமும் என்னோட ஜோடி குக் யாரு வருவாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பேன். இந்த சீஸன் குக்ல அஷ்வின் ஹேண்ட்சம் பர்சன். நல்லா சமைப்பார்; அன்பா பழகுவார். அதனால, ஒவ்வொரு எபிசோடுலயும் அவர்கூட சேர்ந்து சமைக்க எல்லாப் பொண்ணுங்களும் ஆசைப்படுவாங்க. நானும் ஆசைப்படுறேன். இதுல என்ன தப்பு இருக்கு? இது முழுக்கவே ஃபன் அண்டு ஃப்ரெண்ட்லியானதுதான். போன சீஸனைவிட ரெண்டாவது சீஸன் அதிக ரீச் ஆகியிருக்கு.

அஷ்வின் - ஷிவாங்கி
அஷ்வின் - ஷிவாங்கி

என்னோட இயல்பான குணத்தை இப்ப பலரும் புரிஞ்சுகிட்டாங்க. அதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். சிங்கரா எனக்குக் கிடைச்ச அடையாளத்தைவிடவும், `குக் வித் கோமாளி' நிகழ்ச்சிதான் நல்ல அடையாளம் கொடுத்திருக்கு. இந்த நிகழ்ச்சியை நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணா தவறாமல் பார்ப்பார். எனக்கு போன் பண்ணி, `க்யூட்டா பர்ஃபார்ம் பண்றீங்க'ன்னு பாராட்டியிருக்கார்.

பொங்கல் எபிசோடுல அவர் ஷோவுக்கு வந்தது எங்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். அப்போ என்னைத் தங்கச்சின்னு சொன்னார். அதைக் கேட்டதும் சில விநாடி என் இதயத்துடிப்பு அதிகமாகிடுச்சு. ஹேப்பியா இருந்துச்சு. அப்புறம் அவர்கூட போட்டோஸ் எடுத்துகிட்டோம். ஆனா, இப்ப வரை எனக்குச் சொல்லிக்குற அளவுக்குச் சமைக்கவே தெரியாது. சமையல் செய்றதைவிட, பிடிச்ச ஃபுட், நொறுக்குத்தீனிகளை நல்லா சாப்பிடவே பிடிக்கும்.

ஷிவாங்கி
ஷிவாங்கி
`ரூஃபிங் வேலைக்குப் போனேன்; 5 நரம்பு கட்டாகிருச்சு!' - கலங்கவைக்கும் `குக் வித் கோமாளி’ புகழ்

பி.காம் ஃபைனல் இயர் படிக்கிறேன். படிப்பு, சின்னத்திரை வேலைனு பரபரப்பா இருக்கேன். இப்ப யூடியூப் ரொம்பவே டிரெண்டிங்கா இருக்குறதால, நானும் தனி சேனல் ஆரம்பிச்சேன். எனக்குப் பிடிச்ச விஷயங்கள், என்னோட வழக்கமான செயல்பாடுகளை வீடியோவா எடுத்து அதுல பதிவிடுறேன். ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா போகுது. இன்னும் என்னோட கரியர் எதுன்னு முடிவெடுக்கல. ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடுற ஆசை இருக்கு. முதல்ல படிப்பை முடிக்கணும்" என்று க்யூட் சிரிப்புடன் விடைபெற்றார் ஷிவாங்கி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு