Published:Updated:

"சால்வை போர்த்தின டைம்ல என் பிரச்னையைக் கேட்டிருக்கலாம்!"- அண்ணாமலை சந்திப்பு குறித்து தாரா ராஜசேகர்

தாரா, அண்ணாமலை

"பூனைகளுக்குச் சோறு எடுத்துட்டுப் போயிட்டிருந்தேன். அது என்ன நிகழ்ச்சின்னு எல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. அண்ணாமலையை அதுக்கு முன்னாடி நான் போட்டோவுலகூடப் பார்த்ததில்லை." - இயக்குநர் ராஜசேகர் மனைவி தாரா

"சால்வை போர்த்தின டைம்ல என் பிரச்னையைக் கேட்டிருக்கலாம்!"- அண்ணாமலை சந்திப்பு குறித்து தாரா ராஜசேகர்

"பூனைகளுக்குச் சோறு எடுத்துட்டுப் போயிட்டிருந்தேன். அது என்ன நிகழ்ச்சின்னு எல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. அண்ணாமலையை அதுக்கு முன்னாடி நான் போட்டோவுலகூடப் பார்த்ததில்லை." - இயக்குநர் ராஜசேகர் மனைவி தாரா

Published:Updated:
தாரா, அண்ணாமலை
`தாமரை மலர்ந்தே தீரும்' எனத் தமிழிசை சௌந்தர்ராஜன் சொல்லிவிட்டுப் போனாலும் போனார், மலரை மலர வைக்கப் பல வழிகளிலும் இறங்கிவிட்டனர், தமிழக பாரதிய ஜனதா கட்சியினர். அந்த வகையில், சினிமா மூலம் கட்சி வளர்த்த திராவிட இயக்கங்களின் பாணி மட்டும் இவர்கள் சிந்தனையில் தட்டுப்படாமல் போகுமா என்ன?

விளைவு... இளையராஜா, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ஆர்.கே.சுரேஷ், தீனா, பேரரசு, காயத்ரி ரகுராம், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ என டஜன் கணக்கில் இப்போது பா.ஜ.க ஆதரவாளர்களைப் பார்க்க முடிகிறது.

இந்தச் சூழலில், மறைந்த நடிகரும் இயக்குநருமான ராஜசேகரின் ('சரவணன் மீனாட்சி' சீரியலில் நடிகை குயிலிக்கு ஜோடியாக வருவாரே அவர்தான்) மனைவி தாரா ராஜசேகரையும் சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து மேடையில் பார்க்க நேர்ந்திட, "நீங்களும் பா.ஜ.க.வில் சேர்ந்துட்டீங்களா?" என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம்.

தாரா ராஜசேகர்
தாரா ராஜசேகர்

"ராஜசேகர் இறந்ததுல இருந்து நானே பெரிய சிக்கல்ல இருக்கேன். வீட்டுக்காக வாங்கிய கடனைக் கட்ட முடியாத சூழல். வங்கியில இருந்து 'கடனைக் கட்ட முடியலைன்னா சொல்லிடுங்க, வீட்டை ஏலத்துக்கு விட்டுடலாம்'னு கேட்டுட்டே இருக்காங்க. காலம் போன கடைசியில அவரு கடன் வாங்கி வாங்கின வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, பக்கத்துத் தெருவுல குறைஞ்ச வாடகைக்குக் குடியிருக்கேன். அந்த வீட்டு வாடகையிலதான் என் வயிறே நிரம்பிட்டிருக்கு.

இன்னொரு பக்கம், 'வீட்டுப் பிரச்னையில இருந்து வெளியில் வர உதவ முடியுமா'ன்னு சினிமாப் பிரபலங்கள், அரசியல்வாதிகள்னு பலரையும் அணுகிட்டிருக்கேன்.

எங்க பகுதியில் பொதுச் சேவையில ஈடுபடறதாச் சொல்ற நாலு பெண்கள் எனக்கு அறிமுகமானாங்க. அவங்ககிட்டயும் என் பிரச்னையைச் சொல்லியிருந்தேன். அவங்களும் 'பொறுங்க, என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்'ன்னு சொல்லி வச்சிருந்தாங்க'' என்றவரிடம், அண்ணாமலையுடன் மேடை ஏறியது குறித்துக் கேட்டதும், கலகலவெனச் சிரிக்கத் தொடங்கிவிட்டார். சில நிமிடச் சிரிப்புக்குப் பிறகு தொடர்ந்தார்...

"ஒருநாள் நான் இப்ப வசிக்கிற வீட்டுல இருந்து என் சொந்த வீடு இருக்கிற அபார்ட்மென்ட்டுக்குப் போயிட்டிருந்தேன். அந்த அபார்ட்மென்ட்ல இருக்கிற நாலஞ்சு பூனைகளுக்கு தினமும் சாப்பாடு வைக்கிறது என் வழக்கம். அதேபோல அன்னைக்கும் அந்தப் பூனைகளுக்குச் சோறு எடுத்துட்டுப் போயிட்டிருந்தேன். திடீரெனு அந்த நாலு பெண்கள் அங்க வந்துட்டாங்க.

'உடனே கிளம்புங்க, நுங்கம்பாக்கத்துல ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்குப் போகணும். உங்க வீட்டுப் பிரச்னையையும் மனுவா எழுதி எடுத்துக்கோங்க. அங்க கொடுக்கலாம்'ன்னு சொல்லிக் கூப்பிட்டாங்க.

தாரா, அண்ணாமலை
தாரா, அண்ணாமலை

'எதைத் தின்னா பித்தம் தெளியும்'கிற சூழ்நிலையில இருந்துட்டிருக்கிற எனக்கு அந்த நிமிஷம் என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியலை. அதனால அவங்ககூடக் கிளம்பிப் போயிட்டேன்.

அது என்ன நிகழ்ச்சின்னு எல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. அதேபோல‌ அண்ணாமலையை அதுக்கு முன்னாடி நான் போட்டோவுலகூடப் பார்த்ததில்லை.

திடீர்னு அவர் இருந்த மேடையில ஏறச் சொன்னாங்க. ஏறினதும் அவர்கிட்ட, 'இவங்க சினிமா டைரக்டர் ராஜசேகர் மனைவி'ன்னு அறிமுகப்படுத்தினாங்க. அவர் வணக்கம் வைக்க, நானும் பதிலுக்கு வணக்கம் வச்சேன். உடனே அவர் ஒரு சால்வையை எடுத்து எனக்குப் போர்த்திவிட்டுட்டார். இதுதாங்க நடந்துச்சு" என்கிறார்.

"சரி, அண்ணாமலையிடம் மனு கொடுத்தீர்களா?" என்றால், "அது மட்டும் நடக்கவே இல்லை. சால்வை போர்த்தின நேரத்துல என் பிரச்னையையாச்சும் கேட்டிருக்கலாம்" என ஆதங்கப்படுகிறார்.