Published:Updated:

நிறைய டிவி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார்களே... அவர்களுக்கு சம்பளம் அதிகமா? | Doubt of Common Man

தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில் ஒரே நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள்/பங்கேற்பவர்கள்தான் அதிகம் வருமானம் பெற முடியும்.

Published:Updated:

நிறைய டிவி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார்களே... அவர்களுக்கு சம்பளம் அதிகமா? | Doubt of Common Man

தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில் ஒரே நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள்/பங்கேற்பவர்கள்தான் அதிகம் வருமானம் பெற முடியும்.

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் கவிதா என்ற வாசகர், "தொலைக்காட்சிப் பிரபலங்கள் சிலர் எல்லாத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் முகம் காட்டுகிறார்களே, அவர்களுடைய சம்பளமும் அதிகமாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

சினிமா, சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாப் பொழுதுபோக்குத் தளங்களிலும் கலை, மகிழ்ச்சி, உற்சாகத்துடன் பல வதந்திகளும் வலம் வருகின்றன. அதிலும் நடிகர்களின் வருமானம் பற்றிய பேச்சுகளுக்குக் குறைவே இருக்காது. ”இந்த நடிகரின் வருமானம் என்ன தெரியுமா?” என சி.பி.ஐ அளவு பில்டப் கொடுக்கும் காணொலிகளை வலைதளங்களில் காணமுடியும். வாசகரின் சந்தேகத்திற்கு விடையைத் தெரிந்துகொள்ள, பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சினிமா நடிகையும், தொலைக்காட்சிப் பிரபலமுமான ஆர்த்தியிடம் பேசினோம்.

டிவி பிரபலம்
டிவி பிரபலம்

“தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில் ஒரே நிறுவனத்தில் நிகழ்ச்சிகள் தொகுப்பவர்கள்/பங்கேற்பவர்கள்தான் அதிகம் வருமானம் பெற முடியும். ஒரே நிறுவனத்தில் இருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் ஒரு புறம் என்றால், என் போன்றவர்கள் இன்னொரு புறம். எந்த நிறுவனம் என்பது எனக்கு முக்கியம் இல்லை. தனித்துவமான நிகழ்ச்சிகள் மூலம் மக்களை மகிழ்விக்க முடியும் பட்சத்தில் எந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பேன். மானாட மயிலாட, சூப்பர் 10, அணு அளவும் பயமில்லை, பிக்பாஸ் என நான் பங்கேற்ற யாவும் வெவ்வேறு நிகழ்ச்சிகள், வெவ்வேறு நிறுவனங்கள். இப்போது புதிய முயற்சியாக அமேசானில் "எங்க சிரி பாப்போம்" என்னும் நிகழ்ச்சி. கிட்டத்தட்ட எல்லாமே வித்தியாசமான முயற்சிகள்.

சம்பளம், வருமானம் தாண்டி மக்களிடம் நம் திறமைகளைக் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கம். அதிக வருமானம் தேவை என்றால் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதுதான் சிறந்த முடிவு. ஏனெனில், நிறுவனங்கள் மாதாமாதம் சம்பளம் கொடுத்தால் கார் வாங்கலாம், வீடு வாங்கலாம். ஈ.எம்.ஐ பிரச்னைகளையும் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.

பிக்பாஸில் ஆர்த்தி
பிக்பாஸில் ஆர்த்தி

ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் போட்டுவிட்ட பின்னர் மற்ற நிறுவன சேனல்களில் சென்று வேலை பார்க்க முடியாது. சிலர் சிறப்பு அழைப்பாளராகச் சென்று வர முடியும். சில நிறுவனங்களில் வேலை செய்யும் கலைஞர்கள் அந்நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுவதைப் பார்க்கலாம். மாதச் சம்பளம் வாங்கி ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் கலைஞர்களை எப்போது வேண்டுமானாலும் ஷூட்டிங் அழைத்துப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது வழக்கம். ஒப்பந்தப்படி வேறு நிறுவனங்களுக்கும் செல்ல முடியாது.

இருக்கும் நிறுவனத்தில் முடிந்தவரை திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கலாம். சில நிறுவனங்களில் சீரியல் நடிகர்கள், மற்ற கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிப் படப்பிடிப்பு முடிந்த பின்னர் வேறு சில நிகழ்ச்சிகளுக்குச் சென்று தலையைக் காட்டுவது, கேரவனிலே தூங்கி எழுவது, மற்ற நடிகர்களுடன் நேரம் செலவிடுவது என ஒரு சேனலின் குடும்பம்போல இயங்குவதைப் பார்க்கலாம். அனைவருக்கும் மாதமானால் சம்பளம் வந்துவிடும்.

யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றும் காணொலிகள் மூலம் சம்பாதிக்கும் தங்களின் ஊழியர்கள் மக்களால் கவனிக்கப்பெற்றால் அதனை நிறுவனங்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு அதன் மூலம் பார்வையாளர்களைப் பெறுகின்றனர். சமூக வலைதளங்களில் கெட்ட பெயர் வாங்கினால்கூட அதன் மூலம் மக்களிடம் பேசு பொருளாக இருந்தால், அது தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் சாதகமானதாகத்தான் இருக்கும்.

டிவி
டிவி

ஒரு நிறுவனத்தில் இருந்து பிரபலமாகும் கலைஞர்கள் மற்ற நிறுவனங்களுக்குப் போகக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. தொலைக்காட்சியில் இருப்பவர்கள் சினிமாவில் எளிதாகப் பிரகாசிக்க முடியாது. தொலைக்காட்சியில் பார்த்த முகத்தை மக்கள் சினிமாவில் ரசிக்கமாட்டார்கள் என நிறைய நிராகரிப்புகள் இருக்கும். முக்கியமாக சீரியலிலிருந்து சினிமாவிற்குள் நுழையும்போது, சீரியல் முத்திரையை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது. இதிலிருந்து வெற்றிகரமாகத் தப்பியது சந்தானமும் சிவகார்த்திகேயனும்தான்."

வருமான அடிப்படையிலும் பெரிய இடம் சினிமாதானே!

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man