Published:Updated:

`குழந்தாய்' அர்ச்சனா... குத்துறாங்க ரியோ... அழுகை ஆரி... நடிகன் பாலாஜி! பிக்பாஸ் – நாள் 99

பிக்பாஸ் – நாள் 99

"நிஷா வானத்துல நட்சத்திரமா நின்னு நம்மளைப் பார்க்கறா பாரேன்" என்று சோம் அனத்தியிருக்கிறார் போலிருக்கிறது. "அடப்பாவி! நான் செத்தா போயிட்டேன்?!" என்று ஜாலியாக அலறினார் நிஷா. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 99

Published:Updated:

`குழந்தாய்' அர்ச்சனா... குத்துறாங்க ரியோ... அழுகை ஆரி... நடிகன் பாலாஜி! பிக்பாஸ் – நாள் 99

"நிஷா வானத்துல நட்சத்திரமா நின்னு நம்மளைப் பார்க்கறா பாரேன்" என்று சோம் அனத்தியிருக்கிறார் போலிருக்கிறது. "அடப்பாவி! நான் செத்தா போயிட்டேன்?!" என்று ஜாலியாக அலறினார் நிஷா. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 99

பிக்பாஸ் – நாள் 99
கடந்த சீஸனின் போட்டியாளர்களை உள்ளே அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று நேற்று எழுதியிருந்தேன். பிக்பாஸின் காதில் அது அரைகுறையாக விழுந்துவிட்டது போல! இப்போதைய சீஸனின் போட்டியாளர்களையே அனுப்பிவிட்டார். எனவே அர்ச்சனாவின் 'சிக்கன்குனியா' டான்ஸை மறுபடியும் பார்க்க வேண்டிய நிலைமை. சரி, இத்தனை நாட்கள் திரும்பத் திரும்ப ஒரே முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதிலிருந்து நமக்கு சிறிய ஆறுதல் கிடைத்திருக்கிறது என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

இதில் ஹைலைட் காமெடி என்னவெனில், ரமேஷ் உள்ளே வந்ததும், "ரமேஷ்... நீ போய் பெட்ல படுத்துக்க" என்று அவரை நிஷா அனுப்பி வைத்ததுதான். ரமேஷூம் உள்ளே வந்த மறு நிமிடமே தன்னுடைய பிரத்யேக போஸில் போய் படுத்துக் கொண்டார். உண்மையில் அவரைக் காணாமல் அந்த பெட்டே ஏங்கிப் போய் தேடியிருக்கும் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... வாழ்த்துகள். (நோ... நோ... வாழ்த்துகளை உங்களுக்குச் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ‘அடி வாங்கினது நானு... கப்பு எனக்குத்தான்’ என்பது மாதிரி, தினமும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது மட்டுமல்லாமல் மீண்டுமொரு முறை பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறதே... ஹே... பகவான்..!).

ஓகே... 99-வது நாளில் என்ன நடந்தது?!

காலையில் பாட்டு போடுபவர் உற்சாக மூடில் இருந்தார் போலிருக்கிறது. ‘லாலா கடை சாந்தி’யின் துவக்க இசையில் ஆரம்பித்து ‘டமாலு டூமீலு’க்கு வந்து ‘am waiting’ பன்ச் வசனத்தில் முடித்தார். எந்தப் பாட்டைப் போட்டாலும் ஆட வேண்டிய சூழலில் போட்டியாளர்கள் இருப்பதால் ‘தையா... தக்கா’ என்று ஆடி முடித்தார்கள்.

‘காலைல ஆறு மணி இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு’ காமெடி கதையாக பாலாஜி மறுபடியும் கேமரா முன்பு அனத்தத் துவங்கி விட்டார். "மக்களே. நான் கெட்டவன்னு நெனச்சிடுவீங்களோன்னு பயமா இருந்தது. அப்படி இல்லைன்னு காட்டிட்டிங்க... ரொம்ப நன்றி" என்கிற புராணத்தை அவர் மீண்டும் பாடிய போதுதான் அவருக்காக வாக்களித்தவர்கள், "தப்பு பண்ணிட்டமோ?!” என்று யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள். ஆரியின் சகவாசம் காரணமாகவோ என்னமோ... ஒரு விஷயத்தை கேமரா முன்பு சொல்லி மீண்டும் மீண்டும் பதிவு செய்யும் வியாதி பாலாஜிக்கும் வந்து விட்டதோ?!

Jokes apart, பாலாஜியின் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. தன்னுடைய செய்கைகளால் தன் இமேஜ் பாழாகியிருக்குமோ என்கிற அச்சத்தில் அவர் ஆழந்திருக்கும் போது, மக்கள் அவரைப் புரிந்து கொண்டார்கள் என்று தெரிந்ததால் ஏற்பட்டிருக்கும் ஆசுவாசம் அது. ‘புதுசா பொறந்த மாதிரி இருக்கு’ என்கிற சரியான சென்டிமென்ட் சொற்களில் தன் உணர்வுகளை கச்சிதமாகப் பதிவு செய்கிறார் பாலாஜி.

அனைத்துப் போட்டியாளர்களையும் அழைத்த பிக்பாஸ், ‘வாங்கப்பா பேசிட்டு இருக்கலாம்... எனக்கும் போரடிக்குது’ என்று கதை பேச அழைத்தார். “இது 15 வது வாரம்... ஏறத்தாழ 2000 மணி நேரங்கள் இந்த வீட்ல இருக்கறீங்க. வீடு முழுக்க உங்கள் அனுபவங்கள் கதைகளாகப் பதிவாகியிருக்கும். அதிலிருந்து உங்களை நிலைநாட்டிக் கொண்ட, நெகிழ வைத்த, மகிழ வைத்த மூன்று தருணங்களைப் பதிவு செய்யுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

வகுப்பறையில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால் பொதுவாக மாணவர்கள் எல்லோரும் முதலில் திருதிருவென்று விழிப்பார்கள். அந்த வகுப்பில் நன்றாகப் படிக்கிற மாணவனை நோக்கி அனைவரின் கண்களும் திரும்பும். அவன் எழுந்து என்ன சொல்கிறானோ... அதை அப்படியே பிக்கப் செய்து கொள்வார்கள்.

பிக்பாஸ் வீட்டிலும் இப்படித்தான். எந்தவொரு சிக்கலான டாஸ்க்கிலும் ஆரி முதலில் எழுந்து பேசி மற்றவர்களுக்கு வழிகாட்டுவார். இதிலும் அப்படித்தான் நடந்தது.

முதலில் எழுந்தார் ஆரி. இரண்டு சுட்டு விரல்களையும் நெற்றியின் முனையில் வைத்து சல்யூட் அடிப்பதுதான் அவரது மேனரிஸம் போலிருக்கிறது. வழக்கம் போல் ஆரியின் பேச்சு சிறப்பாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

“நான் ரேம்ப் வாக்ல முதன் முதல்ல ஜெயிச்சு வாங்கின மெடல்தான் ரொம்ப நெகிழ வெச்ச தருணம். 2 முறை கேப்டன் ஆனதும் மகிழ வெச்ச விஷயம். தமிழ் எனக்கு பிடிச்ச விஷயம். இனிமே தமிழ்ல பேசலாம்னு நான் சொன்னதை பிக்பாஸூம் ஆதரிச்சாரு. ‘மதியம் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்’னு ஆரம்பிச்சேன். என்னால முடியல. ஆனா ரியோ அதை ஃபாலோ பண்ண வெச்சாரு... மகிழ்ச்சி. நான் சரியா விளையாடி இருக்கேன்னா... அதுக்கு நீங்க எல்லோரும்தான் காரணம்” என்று உருக்கமாகப் பேசிய ஆரி, “உடம்பு சரியில்லாததால டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்ல என்னால் சரியாக விளையாட முடியலை. தொன்னூற்று ஒரு நாள் நான் சரியா விளையாடியிருக்கேன்... அது என்னைக் காப்பாத்தும்னு நெனச்சேன் இந்த ஒரு வாரத்துல சரியா விளையாடததால அது போகும்னா, போகட்டும்... ஆனா அதுக்கு அப்புறம் நான் சேவ் ஆன தருணம் மறக்க முடியாததாக இருந்தது" என்று நெகிழ்ந்தார்.

"டேலன்ட் ரவுண்ட்ல நான் டானஸ் ஆடினதைப் பார்த்துதான் எனக்கு டான்ஸ் வரும்னு மத்தவங்க ஒத்துக்கிட்டாங்க. அப்ப கிடைச்ச பாராட்டு மகிழ்ச்சியா இருந்தது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து அளிக்க பிக்பாஸ் வாய்ப்பு தந்தது மறக்க முடியாதது. கன்ஃபெஷன் ரூம்ல பிக்பாஸ் கூப்பிட்டு விசாரிக்கறப்ப மனசை திறந்து கொட்டினதுதான் நெகிழ வைத்த தருணம்" என்று பட்டியலிட்டுப் போனார் கேபி.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

‘ஏடாகூடம்’ என்பதற்கு மறுபெயர் பாலாஜி என்பதுதான் நமக்குத் தெரிந்த கதையாயிற்றே!. எனவே வித்தியாசமாக யோசித்து "கோர்ட்ல எனக்கு எதிரா வீட்டில் உள்ளே எல்லோரும் நின்னு சாட்சி சொன்னீங்களே... அந்த நாள்... டைரில குறிச்சு வெச்சிருக்கேன்... என்னால மறக்கவே முடியாது. அவ்ளோ சந்தோஷமா ஃபீல் பண்ணேன்" என்று வில்லத்தனமாக சிரித்து விட்டு, "மத்தவங்களுக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்திருக்கேன். கமல் சார்கிட்ட நிறைய டிப்ஸ் வாங்கினேன். இதை நான் கேமா மட்டும்தான் பார்த்தேன். நிறைய முறை விழுந்து எழுந்து வந்திருக்கேன். நான் முழுசா உடைந்த தருணம். என்னன்னனா... சக போட்டியாளரின் அம்மா வந்தப்பதான்… அப்பவும் நான் ‘சேவ்’ ஆனது... ரொம்ப சந்தோஷமான மோமன்ட். மிஸ்டர் இந்தியா போட்டில ஜெயிச்சதுக்கு அப்புறம் இதுதான் மறக்க முடியாத தருணம். ஆண்களுக்கு நிகரா பெண்கள் போட்டி போட்டு ஜெயிச்சது ரொம்ப நல்ல தருணம். அந்தப் பாட்டு கேட்டு எமோஷனல் ஆயிட்டேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி. அதுதான் எனக்கு மருந்தா இருந்தது!" என்று பேசிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து வந்தவர் ரியோ. "ஃபைனல்ஸ்க்கு போக தகுதியில்லைன்னு சொன்னாங்க.. எனக்கே கூட நம்பிக்கையில்லாம இருந்தது. ஆனா Finalist ஆன தருணம்தான் மறக்க முடியாது. பலூன் டாஸ்க்ல பாலாஜியை ஜெயிக்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு வெறியே வந்தது. நான் முடிவு பண்ணிட்டா... என்னால ஜெயிக்க முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன். ‘நான் பேசறது... நடந்துக்கறது எல்லாம் சரியா'–ன்னு எனக்கே குழப்பமா இருக்கும். என் மனைவிகிட்ட பேசினதுக்கு அப்புறம்தான் தெளிவு வந்தது. நான் ஜெயிச்சதுக்கு பாலாஜி பாராட்டினது நெகிழ வைத்த தருணம். ‘என்னை சிரிக்க வெச்சீங்க... தாங்க்யூ...’ன்னு கமல் சார் கிட்டயே பாராட்டு வாங்கினேன். அதுவும் மறக்க முடியாத தருணம்" என்று நெகிழ்ந்து பேசி அமர்ந்தார் ரியோ.

“நான் சரியா விளையாடலைன்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஒருமுறை எல்லோர் கிட்ட இருந்தும் ‘best performer’ வாங்கின தருணம் மகிழ்ச்சியா இருந்தது. இறுதிப் போட்டிக்கு முதன் முதலில் தகுதியான தருணமும் முக்கியமானது. ’60 செகண்ட்ல பேசணும்’ன்ற டாஸ்க்ல ரொம்ப உதறலா இருந்துச்சு. கமல் சார் என்னை ஊக்கப்படுத்தினது மறக்க முடியாத தருணம்" என்றார் சோம்.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

“நான் ஒரு self made person. அப்பா இறந்தப்புறம் எல்லா முடிவுகளையும் நானாத்தான் யோசிச்சு எடுக்க வேண்டியிருந்தது. சரியா இருந்தா அப்படியே ஃபாலோ பண்ணுவேன். Eviction free pass-ல பேசிட்டு வந்தப்புறம். நீங்க எல்லோருமே என்னைப் பாராட்டும் போது எனக்கே குழப்பமா இருந்தது. அப்புறம் சந்தோஷம் வந்தது. ஷிவானிக்கு கிஃப்ட் தந்ததும் மறக்க முடியாத தருணம். சிங்கப்பெண்ணே பாடல் தருணம்தான் ரொம்ப முக்கியம். அதை மறக்கவே முடியாது" என்று நெகிழ்ந்து அமர்ந்தார் ரம்யா.

“நீங்க பேசினதையெல்லாம் கேட்டேன். எனக்கும் கூட ரொம்ப நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது’ என்று பிக்பாஸ் சொன்னதைக் கேட்டதும் போட்டியாளர்கள் மகிழ்ந்தார்கள்.

“எல்லோரும் கார்டன் ஏரியால வந்து உக்காருங்க" என்றார் பிக்பாஸ். "என்னாச்சு பிக்பாஸ் உங்களுக்கு, கண்ணு அவுட்டா? ஏற்கெனவே நாங்க அங்கதான் உக்காந்திருக்கோம்" என்றார் சோம். வீட்டின் கண்ணாடி கதவு திரையிடப்பட்டது. அர்ச்சனா, ரேகா, ரமேஷ், நிஷா ஆகியோர் ஸ்டோர் ரூம் வழியாக ரகசியமாக உள்ளே வந்தார்கள்.

'ஹப்பாடா... மெயின் கேட்ல இருந்து உள்ள வர்றதுக்குள்ளே டயர்டா ஆயிடுச்சு’ என்று தன் ஆஸ்தான இடத்தில் சென்று ‘ஹாயாக’ படுத்துக் கொண்டார் ரமேஷ். கிச்சன் மேடையின் கீழ் சிலிண்டர் வைக்கும் இடத்தில் இன்னொரு சிலிண்டராக ஒளிந்து கொண்டார் நிஷா. தனது முதுகுப்புறத்தைக் காட்டி எதையோ தேடுவது போல் நின்று கொண்டிருந்தார் அர்ச்சனா.

"அய்... யாரோ சோறு கொண்டு வந்திருக்காக" என்று பறக்கா வெட்டியாக கத்தினார் ரம்யா. பிறகு அர்ச்சனாவை பின்பக்கமிருந்து பார்த்து விட்டு, "பிரியங்கா வந்திருக்காங்களா?” என்று ரம்யா கேட்டது பிரியங்காவின் காதில் விழாமல் இருக்க வேண்டும். அப்புறம்தான் மக்களுக்குத் தெரிந்தது. ஆம்... அன்பு அந்த வீட்டிற்குள் திரும்ப வந்துவிட்டது.

தங்களின் குழந்தையை ப்ரீகேஜி வகுப்பில் முதல் நாள் விட்டு வந்த பெற்றோர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் தெரிந்திருக்கும். பெற்றோர் கிளம்பும் போது முகத்தை கோணிக் கொண்டு நிறைய குழந்தைகள் அழ ஆரம்பிக்கும். சில குழந்தைகள் மட்டுமே ‘கெளம்பு.. காத்து வரட்டும்’ என்று சமர்த்தாக அமர்ந்திருக்கும். பீறிட்டு அழும் குழந்தைகளைச் சமாளிப்பதற்குள் ஆசிரியர்களுக்கு போதும் போதும் என்று ஆகி விடும்.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

குழந்தைகள் பள்ளிச்சூழலுக்கு பழகட்டும் என்பதற்காக ஒரு மணி நேரம் வகுப்பில் வைத்திருப்பார்கள். பிறகு அவர்களைத் திறந்து விடும் போது குழந்தைகள் பெற்றோர்களை நோக்கி பாசத்துடன் ஓடும் காட்சி இருக்கிறதே, ‘தங்க மீன்களில்’ கூட வராத காட்சி இது. இதே போலத்தான் பிக்பாஸ் வீட்டிலும் நடந்தது.

‘மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள்... மீண்டும் சந்தித்த போது’ என்கிற ரேஞ்சிற்கு ஒருவரையொருவர் பார்த்து கட்டிக் கொஞ்சி முத்தமிட்டு ஆரத்தழுவி சிரித்து அணைத்து நடனமாடி கலங்கி மகிழ்ந்து நெகிழ்ந்து போனார்கள். அதிலும் ‘இறுதிச்சுற்று’ ஹீரோயின் மாதிரி ரமேஷின் இடுப்பில் ரியோ ஓடி வந்து ஏறி அமர்ந்த காட்சி ஒரு நல்ல காமெடி. அதிலும் அன்புக்கூட்டணி மீண்டும் இணைந்ததில் அவர்களின் அலப்பறை அதிகமாக இருந்தது. அதிலும், ‘இனிமே சின்ராசுவைக் கையிலேயே பிடிக்க முடியாது’ என்கிற ரேஞ்சிற்கு அர்ச்சனாவின் பாசப் பொழிவு அதிகமாக பெருகியது.

"நிஷா வானத்துல நட்சத்திரமா நின்னு நம்மளைப் பார்க்கறா பாரேன்" என்று சோம் அனத்தியிருக்கிறார் போலிருக்கிறது. "அடப்பாவி... நான் செத்தா போயிட்டேன்?!" என்று ஜாலியாக அலறினார் நிஷா. "எதுக்குன்னு கேட்காத..." என்று ரம்யாவிற்கு திருஷ்டி எடுத்தார் அர்ச்சனா.

"'உங்களுக்கு என்னம்மா குறைச்சல்... பிக்பாஸ்லயே சாப்பாடு கொடுத்துடுவாங்க. துணி துவைச்சு கொடுத்துடுவாங்க. அழறதுக்கு கிளிசரின் கொடுத்துடுவாக'ன்னு வெளியே ஒரே கேள்வியா வருது. பதில் சொல்லி மாளலை" என்று அனத்தினார் நிஷா.

சராசரி நபர்கள் மட்டுமல்ல. சற்று அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்கள் கூட பிக்பாஸ் ஒரு Scripted show என்று நம்புவது நகைப்பாக இருக்கிறது. இது ஸ்கிரிப்ட்டட்தான். ஆனால் பலரும் நினைத்துக் கொள்வது போல ‘கேமரா... ஆக்ஷன்’ என்கிற ஸ்கிரிப்ட் கிடையாது. மனிதர்களை நெருக்கடிக்குள் தள்ளி அவர்களின் உணர்வு மோதல்களை வணிகமாக்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை. அப்போதுதான் ஒரிஜினல் உணர்ச்சிகள் பதிவாகும். போட்டியாளர்களுக்கு மூன்று வேளையும் சோறு போட்டு மசாஜ் எல்லாம் செய்துவிட்டால் எப்படி சண்டை வரும்? இந்த அடிப்படையை யோசித்தால் கூட போதும்.
பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

நிஷாவைத் தனியாக ஓரங்கட்டி அவரிடம் கண்கலங்க அனத்திக் கொண்டிருந்தார் ஆரி. ‘படுபாவிங்க... நாலு தடவை ஜெயிலுக்கு அனுப்பிச்சிட்டாங்க’ என்று புலம்பிய ஆரியை, ‘தேசத் தலைவர் ஆவறதுன்னா சும்மாவா... அப்படித்தான் இருக்கும்’ என்பது போல் ஆற்றுப்படுத்தினார் நிஷா. "என் மனைவி வரும் போது கூட ‘என்னைப் பத்தி எதுவும் சொல்லாத. அது என்கிட்ட மாற்றத்தை உண்டாக்கிடலாம். நான் எப்படி இருக்கேனோ... அப்படியே இருந்து வெளியே வரணும்’னு சொன்னேன்" என்று நேர்மையாக நெகிழ்ந்தார் ஆரி.

"டேய் ஆரி உன்கிட்ட சாரி சொன்னார்டா... நீ கவனிக்கலையா?” என்று பாலாஜியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் ரமேஷ். “உன் கதைல நீதான் வில்லன். நீதான் ஹீரோ" என்று பாலாஜியிடம் ரேகா சொல்லிக் கொண்டிருந்தது கச்சிதமான ஸ்டேட்மென்ட். பாலாஜிக்கு தன் பிம்பம் குறித்தான கவலை பெருகிவிட்டது போல. எனவே யார் தன்னைக் கடந்து சென்றாலும் அவரின் கையைப் பிடித்து இழுத்து ‘நான் எப்படி வெளில தெரிஞ்சேன்’ என்று பீதியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏறத்தாழ அனிதாவின் நிலைமைக்கு பாலாஜியும் வந்து சேர்ந்திருப்பது பரிதாபம்.

முன்பு ‘பப்பரப்பே’ என்று சுரேஷ் படுத்திருந்த அதே போஸில் சோபாவில் படுத்திருந்த பாலாஜி, மீண்டும் ரேகாவிடம் ‘நான் எப்படி தெரிஞ்சேன்?’ என்று விசாரிக்க ‘இவன் தொல்லை தாங்கலையே’ என்று கடலோரக் கவிதை உள்ளுக்குள் நொந்திருக்கும். "நீ கோபத்தை கொஞ்சம் அடக்கியிருந்திருக்கலாம்" என்று சரியான ஆலோசனையைத் தந்தார் ரேகா.

"அர்ச்சனா... கன்ஃபெஷன் ரூமிற்கு வழி தெரியுமா? ரைட்ல திரும்பி வலது பக்கம் வாங்க" என்று பாசத்துடன் கூப்பிட்டார் பிக்பாஸ். திரும்பி வந்திருக்கும் பழைய ஆட்கள், வரும் வியாழன் வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் போலிருக்கிறது.

"சரி... கூட்டத்தைக் கூட்டிவிட்டோம். இவர்களை சும்மாவா வைத்திருப்பது. ஏதாவது டாஸ்க் கொடுக்கலாம்" என்று யோசித்த பிக்பாஸ், அதை அர்ச்சனாவின் மூலம் அறிவிப்பு தர வைத்தார். ‘வேலை இல்லாதவன்…‘ என்று ஆரம்பித்து ஒரு பழமொழி இருக்கிறது. அப்படியொரு டாஸ்க்கைத் தந்தார் பிக்பாஸ்.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99
ஆண்களும் பெண்களும் தனித்தனி அணியாகப் பிரிய வேண்டுமாம். குடுவையில் இருக்கும் மாவை தன் வாயில் கவ்வியிருக்கும் கார்டினால் அள்ளி பக்கத்து வாயில் இருக்கும் கார்டில் கொட்ட வேண்டும். அவர் அதை வாங்கி அடுத்தவரிடம் கொட்டுவார். இப்படியே யார் அதிக அளவு மாவை சேகரிக்கிறார்களோ... அவரே வெற்றியாளர்!

ஆண்கள் அணி பொறுப்பாக இந்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்க பெண்கள் அணியில் நிஷா செய்த அலப்பறைதான் அதிக சிரிப்பை வரவழைத்தது. அர்ச்சனாவிடம் மாவைக் கொட்டும் போது அவர் பெருமூச்சை விட்டு விட, மாவு முழுக்க கீழேயும் அர்ச்சனாவின் முகத்திலும் விழுந்தது. பின்பு அதையே ஒரு விளையாட்டாக மாற்றிக் கொண்டார்கள்.

ஆரி மிக சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்து போட்டியாளரை நெருங்கும் போது பாரதிராஜா படத்தின் டூயட் காட்சிகள் எல்லாம் நினைவிற்கு வந்து சிரிப்பை ஊட்டியது. இந்த டாஸ்க்கை சிரிக்காமல் செய்வது மிகச் சிரமம். எனவே பெண்கள் அணி சிரித்துக் கொண்டாடியது. இறுதியில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. மீதமிருக்கும் மாவை நிஷாவின் தலையில் கொட்டி மகிழ்ந்தார் கேபி. ‘குதிரை தள்ளி விட்டதும் இல்லாம, குழியையும் பறிச்சதாம்’ என்கிற பழமொழி இருக்கிறது. அது போல இப்படியொரு அற்பமான டாஸ்க்கை தந்த பிக்பாஸ், நிஷாவின் மாவு கொட்டிய முகத்தைப் பார்த்து விட்டு, "இப்பத்தான் அளகா இருக்கீங்க நிஷா...” என்று சொல்லி வெறுப்பேற்றினார்.

ரேகாவின் கொண்டையை கையில் பற்றிக் கொண்டு மைக்காக மாற்றி பாடிக் கொண்டிருந்தார் ரியோ. ரேகா மேம் அதை இயல்பாக எடுத்துக் கொண்டது நல்ல விஷயம். “நீங்கதான் எனக்கு முதல்ல heart break’ கொடுத்தீங்க” என்று சென்ற நூற்றாண்டு சமாச்சாரத்திற்காக ரேகாவிடம் இப்போது ஜாலியாக ஃபீல் செய்தார் கேபி.

பிக்பாஸ் – நாள் 99
பிக்பாஸ் – நாள் 99

நிஷாவை அரவணைத்துக் கொண்டு ஊர்வலம் சென்ற ரியோ "இவங்க எனக்கு உண்மையிலேயே எனக்கு அக்காதான். எங்க பாசம் உண்மையானது. கேமிற்காக நாங்க எதுவும் பண்ணலை" என்று கேமராவின் முன் பிரகடனம் செய்தார். "குத்திட்டே இருக்காங்க. என்னால தாங்க முடியலை" என்று அதற்கு முன் நிஷாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டார் ரியோ.

தன் பிம்பக் கவலை தொடர்பான விசாரணையை ரேகாவிடம் துருவித் துருவி அறிந்து கொண்ட பாலாஜி அடுத்துச் சென்ற இடம் அர்ச்சனா. “நீ சமயங்கள்ல அதிகம் கோபப்பட்டே... ஓகே... மக்கள் கிட்ட விட்டுடு. அவங்க பார்த்துப்பாங்க... நீ நல்லாத்தான் விளையாடின. ஒண்ணு சொல்லட்டுமா... ஐ லவ் யூடா குழந்தை. ‘குழந்தை’ன்னு சொல்றது உனக்குப் பிடிக்காது. இருந்தாலும் சொல்லுவேன். நீ என்னை நாமினேட் பண்ண முடியாது" என்று ஜாலியாகப் பாசத்தைக் காட்டினார் அர்ச்சனா.

ஆக... இரண்டு மூன்று நாட்களுக்கு பிக்பாஸ் வீடு விக்ரமன் படம் போல அழுகாச்சி காட்சிகளால் நிறைந்திருக்கும் போலிருக்கிறது. சென்டிமெனட் சீன்களுக்குத் தயாராகிக் கொள்வோம்.