Published:Updated:

"சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதியே வேண்டாம்!"- கோரிக்கையைத் திரும்பப் பெற்ற பெப்சி... காரணம் என்ன?

சீரியல் ஷூட்டிங்
சீரியல் ஷூட்டிங் ( மாதிரி படம் )

"பணியாளர்கள் நடுத்தெருவுல நிற்க வேண்டிய நிலை வருது... சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதியே வேண்டாம்!" - கோரிக்கையைத் திரும்பப் பெற்றது பெப்சி.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அமல்படுத்தியிருக்கும் லாக்டௌன் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே ரகசியமாக பல்வேறு சீரியல்களின் ஷூட்டிங்குகள் நடைபெற்று வருவதாக நேற்று விகடன் தளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

சீரியல் ஷூட்டிங் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்ட ஹீரோ கலந்துகொள்ள அவரால் சீரியலில் பணியாற்றிய சுமார் 30 பேருக்குக் கொரோனோ பரவியதையும் அந்தச் செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

லாக்டெளனை மீறி டிவி சீரியல் ஷூட்டிங்: அம்மாவைப் பறிகொடுத்த நடிகை, அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?!

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, "முழு ஊரடங்கு முடிவடையும் 24-ம் தேதி அல்ல, மே 31-ம் தேதி வரைக்குமே கூட எந்தப் படப்பிடிப்பும் நடக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் (மாதிரி படம்)
சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் (மாதிரி படம்)
For Representation Only

தொடர்ந்து, சீரியல் ஷூட்டிங்கில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர்,

"வேலை போயிடக் கூடாதுனு ஷூட்டிங் போகணும்னு நினைச்சாங்க... அங்க எப்படியோ, யார் மூலமோ கொரோனா வந்துட, வீட்டுக்குப் போனா அவரால மத்தவங்களும் பாதிக்கப்படுவாங்க. அதனால வீட்டுக்குப் போக முடியாது. மருத்துவமனையிலும் இடமில்லை. தயாரிப்பாளர்கள் கிட்டக் கேட்டா, ’நாங்க டெஸ்ட் எடுக்கும்போது, கொரோனா அறிகுறி இல்லையே’ங்கிறாங்க. ஆக மொத்தத்துல அந்தத் தொழிலாளி நடுத்தெருவுல நிற்கறான். அதனாலதான் தெளிவா ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.

சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுங்கணு கேட்டதை நாங்களே வாபஸ் வாங்கிக்கறோம். மே 31-ம் தேதி வரைக்கும் எந்தப் படப்பிடிப்பும் நடக்காது" எனச் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் இன்றும் (மே 15) சென்னையின் சில இடங்களில் சில சீரியல்களின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆர்.கே. செல்வமணியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர்களும், "நாளை முதல் ஷூட்டிங் இல்லை" எனச் சொல்லிவிட்டார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு