Published:Updated:

``சிவகார்த்திகேயன் முதல் டிகாப்ரியோ வரை... சின்னத்திரை டு சினிமாவில் கலக்கும் 15 பிரபலங்கள்!'' #TVPotti

சின்னத்திரை டு வெள்ளித்திரை பயணம்
Listicle
சின்னத்திரை டு வெள்ளித்திரை பயணம்

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் பட்டியல் இது.


1
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ரியாலிட்டி ஷோவில் ஸ்டாண்ட்-அப் காமெடியனாக விஜய் டிவிக்குள் நுழைந்த சிவகார்த்திகேயனின் படங்கள் இன்று அனைத்து முன்னணி சேனல்களிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படுகிறது. விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' ஷோவில் மிமிக்ரி செய்து தன் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர், அந்த ஷோவின் ரன்னர்-அப் ஆகத் தேர்வானார். பின்னர், 'மெரினா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்து, கோலிவுட்டில் வளர்ந்து வரும் டாப் ஹீரோக்களின் வரிசையில் நிற்கிறார், சிவகார்த்திகேயன்.


2
ரியோ ராஜ்

ரியோ ராஜ்

ஈரோட்டில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் ஆங்கரிங் செய்து வந்தவருக்கு, ஆடிஷன் மூலம் 'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக, சன் மியூசிக் சேனலில் விஜே வேலை. `சுட சுட சென்னை' ஷோவை தொகுத்து வழங்கியதில், இவருக்குப் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. பிறகு மீண்டும் விஜய் டிவியின் 'சரவணன் மீனாட்சி' தொடரில் லீடு ரோலில் நடித்தார். இப்போது வெள்ளித்திரையில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இன்னும் நிறைய படங்களில் இவரைக் கதாநாயகனாக எதிர்பார்க்கலாம்.


3
‘நீயா நானா’ கோபிநாத்

கோபிநாத்

1997-ஆம் ஆண்டு 'யுனைட்டெட் டெலிவிஷன்' சேனலில் தன் சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ராஜ் டிவி, ஜெயா டிவி எனப் பல சேனல்களில் வேலை பார்த்தவர், கடைசியாக விஜய் டிவியில் தொகுப்பாளராகப் பணியைத் தொடர்ந்தார். இவர் தொகுத்து வழங்கிய 'நடந்தது என்ன' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இவர் தொகுத்து வழங்கிய 'நீயா? நானா?' இவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. 'நிமிர்ந்து நில்' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். சிறிய இடைவெளிக்குப்பின் 'திருநாள்' படத்தில் நடித்தார்.


4
சந்தானம்

சந்தானம்

விஜய் டிவியின் 'லொள்ளு சபா' மூலம் பிரபலமடைந்தவர், சந்தானம். 2004- ஆம் ஆண்டு 'மன்மதன்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர், 'சிவா மனசுல சக்தி' மற்றும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். ரசிகர்கள் ஆதரவு பெருகப் பெருக 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' மூலம் கதாநாயகன் ஆனார். 'சர்வர் சுந்தரம்', 'ஏ1' என்று பல படங்களில் தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.


5
டிடி (திவ்யதர்ஷினி)

திவ்யதர்ஷினி

1999-ஆம் ஆண்டு சின்னத்திரையில் கால் பதித்தார், திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 'உங்கள் தீர்ப்பு' நிகழ்ச்சியின் மூலம் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு ராஜ் டிவியில் கே.பாலசந்தரின் 'ரெக்க கட்டிய மனசு' சீரியலில் நடித்தார். இவருக்கு, 'காஃபி வித் டிடி' ஷோ மூலம் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. அதன்பின் வெள்ளித்திரையில் 'நள தமயந்தி', 'விசில்', 'பவர் பாண்டி', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறிய இடைவெளிக்குப்பின் 'என்கிட்ட மோதாதே' என்று ஒரு ரியாலிட்டி ஷோவில் மீண்டும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.


6
பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

மயிலாடுதுறையில் பிறந்த தமிழ்ப் பெண். புதிய தலைமுறையில் நியூஸ் ரீடராக அறிமுகம். விஜய் டிவி 'காதல் முதல் கல்யாணம் வரை' சீரியலில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனிக் கவனம் பெற்றார். தமிழ் முகம் என்பதால் எளிதாக வெள்ளித்திரையிலும் ரசிகர்களைப் பெற்றார். 'கடைக்குட்டி சிங்கம்', 'மேயாத மான்', 'மான்ஸ்டர்' எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.


7
ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

சன் டிவியின் 'அசத்தப்போவது யாரு' ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானார், ஐஸ்வர்யா ராஜேஷ். 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். 2010-ஆம் ஆண்டு 'நீதானா அவன்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர், இன்று தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார். 'அட்டக்கத்தி', 'தர்மதுரை', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஹீரோயினாக வளர்ந்து வந்தபோதே 'காக்கா முட்டை' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றார். வுமன் சென்ட்ரிக் படமான 'கனா'வில் முறையாகக் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டு, பெண் கிரிக்கெட்டராகக் கலக்கியிருப்பார், ஐஸ்வர்யா.


8
மா.கா.பா.ஆனந்த்

மா.கா.பா.ஆனந்த்

ரேடியோ மிர்ச்சியில் 6 வருடமாக ஆர்ஜே வேலை செய்தவருக்கு, விஜய் டிவியில் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் விட்டுச் சென்ற 'அது இது எது' ஷோவை சிறப்பாகச் செய்து ரசிகர்களிடம் ஆதரவு பெற்றார். 'கிங்ஸ் ஆஃப் டான்ஸ்', 'சூப்பர் சிங்கர்' எனப் பல ஷோக்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவருக்கு, சினிமா வாய்ப்பு வந்தது. 'வானவராயன் வல்லவராயன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அதன்பின், 'நவரசத் திலகம்', 'அட்டி', 'பஞ்சு மிட்டாய்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். சின்னத்திரையில் சாதித்தவர், வெள்ளத்திரையில் ஒரு பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.


9
ஜாக்குலின்

ஜாக்குலின்

லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டிருந்த போதே விஜய் டிவி ஆடிஷனில் தேர்வாகி விஜே பணியைத் தொடங்கினார். 'கலக்கப்போவது யாரு' சீஸன் 5-ல் ரக்‌ஷனோடு சேர்ந்து இவர் அடித்த லூட்டிக்கு ரசிகர்கள் அதிகம். 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குற விஜே' எனும் பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தவரை, சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


10
'ரோபோ' சங்கர்

ரோபோ சங்கர்

மதுரையில் பல மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடம் போட்டு மிமிக்ரி செய்து கொண்டிருந்தவர், விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தவருக்கு, இயக்குநர் கோகுல் 'ரௌத்திரம்' படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். அந்த சீன் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது. மீண்டும் இயக்குநர் கோகுலே அவரின் அடுத்த படமான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் ஒரு ரோல் கொடுக்க, அதைச் சிறப்பாகச் செய்து முடித்தார் ரோபோ சங்கர். 'மாரி', 'கலகலப்பு 2', 'சிங்கம் 3' எனப் பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில், தற்போது அதிக படங்களைக் கையில் வைத்திருப்பவர், ரோபோ சங்கர்தான்.


11
ஷாருக் கான்

ஷாருக் கான்

இந்திய வெள்ளித்திரையின் தவிர்க்க முடியாத 'சூப்பர் ஸ்டார்' ஷாருக் கான். இவர் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியது சின்னத்திரையில்தான். 1988-ஆம் ஆண்டு, 'தில் தரியா (Dil Dariya)' என்ற சீரியலில்தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார் ஷாருக். ஆனால், ஷாருக் நடிப்பில், 'ஃபாஜி (Fauji)' சீரியல்தான் முதன் முதலில் ஒளிபரப்பானது. அதன்பின் சில சீரியல்களில் நடித்த ஷாருக், 'தீவானா (Deewana), படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். வெள்ளித்திரையில் பல வெற்றி தோல்விகளைக் கடந்து, இன்று பாலிவுட்டின் பாட்ஷாவாக வலம் வருகிறார்.


12
வித்யா பாலன்

வித்யா பாலன்

இந்தி சினிமாவில் மிக முக்கியமான நடிகைகள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இருப்பவர், வித்யா பாலன். 1995-ஆம் ஆண்டு 'ஹம் பான்ச் (Hum Paanch)' டிவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 2003-ஆம் ஆண்டு, பெங்காலிப் படமான 'Bhalo Theko' மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். 2005-ஆம் ஆண்டு வெளியான இந்திப் படமான 'பரினீத்தா (parineeta)' பாலிவுட்டில் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. சில்க் ஸ்மித்தாவின் பயோபிக்கான 'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' ஆகிய படங்கள் இவருக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தன. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் மிக முக்கியமான சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார், வித்யா.


13
ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

'ஷக்க லக்க பூம் பூம்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஹன்சிகா. அதன்பின் ஓரிரு சீரியல்களில் நடித்தவர், ரித்திக் ரோஷன் நடித்த 'கோய் மில் கயா (Koi Mil Gaya)' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். தன் 16-வது வயதில் 'தேசமுடுரு (desamuduru)' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர், தொடர்ந்து 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'அரண்மனை' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியிருக்கிறார்.


14
டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ

'டைட்டானிக்' ஜாக் ஆக நமக்குப் பரீட்சயப்பட்ட லியோனார்டோ டிகாப்ரியோ, தன் திரைப் பயணத்தைத் தொடங்கியது டிவி சீரியலில்தான். ஐந்து வயதில் 'ராம்பெர் ரூம் (Romper Room)' என்ற டிவி சீரியலில் நடித்தார். சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு 'The New Lassie' என்ற டிவி ஷோவில் இரண்டு எபிசோடுகள் நடித்தவருக்குப் பல சீரியல்கள் மற்றும் டிவி ஷோக்களில் வாய்ப்பு கிடைத்தது. 'Critters 3' என்ற காமெடி ஹாரர் படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார், டிகாப்ரியோ. 1997-ஆம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். பலமுறை ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும், 2016-ஆம் ஆண்டு 'The Revenant' படத்திற்காக முதன் முறையாக ஆஸ்கர் வென்றார், டிகாப்ரியோ.


15
தி ராக்

டுவைன் ஜான்ஸன்

WWF மூலம் நம் அனைவராலும் 'தி ராக்' என அறியப்பட்டவர், டுவைன் ஜான்ஸன். கால் பந்து வீரரான இவர் 1996-ஆம் ஆண்டு முதல் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார். WWF-ல் பல சாம்பியன்ஷிப்களையும், ரசிகர்களையும் பெற்ற இவர் 1999-ஆம் ஆண்டு 'That '70s Show' என்ற டிவி தொடரில் நடித்தார். பிறகு, 'Saturday Night Live' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 2001-ஆம் ஆண்டு 'தி மம்மி ரிட்டன்ஸ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். 'ஃபாஸ்ட் & ஃபூரியஸ் 7', 'ஜூமான்ஜி 3' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ஹாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.