Published:Updated:

`மர்மதேசம்' தொடரின் ஐந்தாவது கதை திரும்ப எடுக்கப்படுமா?' - `மர்மதேசம்' நாகா பதில்

சந்தோஷ் மாதேவன்

தற்போது மீண்டும் `விடாது கருப்பு' 23 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப்பில் இணையத்தொடராக வெளியாகியுள்ளது. ஏற்கெனவே லட்சக் கணக்கானோர் பார்த்துவிட்ட நிலையில், உற்சாகத்தின் விளிம்பில் இருக்கிறார் நாகா.

Filmmaker Naga takes a dig at serials of present day
Filmmaker Naga takes a dig at serials of present day

குடும்ப உறவுகளுக்குள் மட்டுமே உலாவிக்கொண்டிருந்த சின்னத்திரை கதைகளுக்கு நடுவே இப்படியும் தொடர்கள் எடுக்கலாம் என நிரூபித்து, 90-களில் பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்தைத் தொலைக்காட்சிக்கு அடிமையாக்கியது `மர்மதேசம்'. ஐந்து தனிக்கதைகளை உள்ளடக்கிய இந்த தொடரின் மிகப்பெரிய வெற்றிக் கதையென்றால் இரண்டாம் பாகமான `விடாது கருப்பு'தான். அந்த ஐந்தில், `விடாது கருப்பு' உட்பட மூன்று கதைகளை இயக்கியவர் நாகா.

விடாது கருப்பு
விடாது கருப்பு

தற்போது மீண்டும் `விடாது கருப்பு' 23 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப்பில் இணையத்தொடராக வெளியாகியுள்ளது. ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் பார்த்துவிட்ட நிலையில், உற்சாகத்தின் விளிம்பில் இருக்கிறார் நாகா. "நாங்க இந்த சீரியல எடுக்கும்போதே எதிர்காலத்தை மனசுல வச்சுத்தான் எடுத்தோம். எத்தனை வருஷம் கழிச்சு ஒரு புது தலைமுறை வந்து அதப் பார்த்தாலும் எங்க கதையும் திரைக்கதையும் புதுசாவே இருக்கணும்னு நினைச்சோம். அது இப்போ நடந்துடுச்சு," எனப் பேசத் தொடங்கினார்.

"எது தொடக்கம், எது முடிவென்ற விளக்கங்கள் சொல்லப்படாமல், `நாண்-லீனியர்' வகை திரைக்கதைகள் அமைத்து பல படங்கள் இன்று வெளியாகி வருகின்றன. தலைகால் புரியாத இந்தப் படங்களை உள்வாங்க முடியாத ஒரு பகுதி பார்வையாளர்கள் இன்றும் இருக்கின்றனர். இது இப்படி இருக்கையில், 23 வருஷத்துக்கு முன்னாடியே முன்று வெவ்வேறு காலகட்டங்கள்ல நடக்குற மாதிரி எப்படி ஒரு `நாண்-லீனியர்' சீரியல் எடுத்தீங்க? அதை எப்படி தொலைக்காட்சி பார்க்கும் எல்லாருக்கும் புரியவும் வச்சிங்க?" எனக் கேட்டேன்.

நாகா
நாகா

"இந்தத் தொடரை ஆரம்பிக்கும்போதே கதையோட தொடக்கம் இதுதான், முடிவு இதுதான்னு நாங்க முடிவு எடுத்தோம். அதனால எங்களுக்கு ஒரு தெளிவு இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு முன்கதை இருக்கும். எல்லா எபிஸோடுமே இரண்டா பிரிஞ்சு இருக்கும். முதல் 5 நிமிடம், 1970கள்ல நடக்குற ஒரு பீரியட் ட்ராமாவா இருக்கும். அடுத்த 15 நிமிடம் நிகழ்காலத்துல நடக்கும். இதுக்கு நடுவுல சில எபிசோடுகள்ல ராசு கதாபாத்திரத்தோட நடுவயது கதையும் வரும். எல்லாமே புரியுற மாதிரி `அன்று', `இன்று'ன்னு பிரிச்சுதான் காட்டுவோம்" என விளக்கினார்.

"விடாது கருப்பு மொத்தமே 82 எபிசோடுகள்தாம். இப்போ வர நிறைய தொடர்கள் ஆயிரக்கணக்குல எபிசோடோட இருக்கு. இந்த நிலையை எப்படி பார்க்குறீங்க?" என்ற கேள்விக்கு சிரிப்பே நாகாவின் முதல் பதிலாக இருந்தது.

நாகா
நாகா

"நான் முதல்ல சொன்னதுதான். படப்பிடிப்புக்கு முன்னாடியே இதுதான் தொடக்கம், இதுதான் முடிவுன்னு எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்லாம இந்திரா செளந்தர்ராஜன் எழுதின நாவல்ல சில மாற்றங்களைக் கொண்டுவந்து ஒரு முழுநீள சைக்காலஜிக்கல் த்ரில்லராக கதையை மாற்றினோம். கதை நகர நகர எங்களோட முடிவுக்கு ஏற்ற மாதிரிதான் பின் கதையும் முன்கதையும் சேர்த்தோமே தவிர அதைவிட்டு வெளிய போகவே இல்ல."

ஆனா இப்போ சீரியல் எல்லாமே போறபோக்குல கதை மாறும். முதல் 100 அல்லது 200 எபிசோட் பாத்துட்டு அதோட ரீச் எப்படி இருக்குன்னு பார்ப்பாங்க. அதுக்குப் பிறகு அந்தக் கதைய இழுத்து, நீர்த்துப்போகச் செஞ்சு, லைஃப் சப்போர்ட் குடுத்து, ஐ.சி.யூக்கு அனுப்பி வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் மாஸ்க்கெல்லாம் மாட்டி அதுக்குப் பிறகுதான் முடிச்சு வைக்கிறாங்க. இப்போ சீரியல்களோட நிலைமையே வேற,"
நாகா

"இது ஏன் இப்படி ஆயிடுச்சு," என்ற கேள்வியை மனதில் நினைத்து அவரிடம் கேட்கும் முன்பே, "இது தவிர்க்க முடியாதது. ஒண்ணும் செய்ய முடியாது," என்றார். மேலும் தொடர்ந்தவர், "அந்தக் காலத்துல எங்களுக்கு ஒரு சுதந்தரம் இருந்தது. வாரத்துக்கு ஒரு எபிசோடுதான். ஒரு எபிசோடு முடிச்சு அடுத்த எபிசோடு வர வரைக்கும் நடுவுல இருக்குற காலத்துல மக்கள் அவங்க சொந்த வாழ்க்கைய வாழ்ந்து, அதுல இருக்குற இன்ப துன்பங்கள அனுபவிச்சு, அதுக்குப்பிறகு அடுத்த வாரம்தான் எங்க சீரியலப் பார்க்க வருவாங்க. இப்போ அப்படியில்ல. தினமும் சீரியலப் பார்க்கணும். அதுவும் வெள்ளிக் கிழமை வந்துட்டா ஒரு பெரிய ட்விஸ்ட் போடணும். ரெண்டு நாள் இந்த நினைப்புலையே மக்கள இருக்கவச்சு, திங்கள் மறுபடியும் சீரியலப் பார்க்க வைக்கணும். எனக்கு ஒரு எபிசோட் எடுக்க ஒன்றரை நாள் தேவைப்படும். ஆனா டெய்லி சீரியலை அப்படி எடுக்க முடியாது. ஒரு நாளைக்கு நாலு அல்லது அஞ்சு எபிசோட் வரை எடுக்கவேண்டி இருக்கும். இந்த நிலைமையிலேயே நிறைய சீரியல் டெட்லைனுலதான் நடக்கும். சாயங்காலம் டெலிக்காஸ்டுக்கு, காலையில ஷூட்டிங் வச்சு மதியம் எடிட்டிங் செய்யுறாங்க. அதற்கு இப்படிப்பட்ட அழுத்தம்தான் காரணம்," என ஒரு பெரிய விளக்கம் கொடுத்தார்.

`மர்மதேசம்' தொடரின் ஐந்தாவது கதையான `எதுவும் நடக்கும்' முழுமைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, "அது புரொடக்‌ஷன்ல ஒரு சிக்கல். வேற வழியில்லாம நிறுத்த வேண்டியதா போச்சு. ஆனா, அந்தக் கதை அப்படியேதான் இருக்கு. கண்டிப்பா திரும்ப முதல்ல இருந்து அதை எடுப்போம். முழுக் கதையும் முதல்ல இருந்து படமாக்குற பிளான் இருக்கு" என நாகா கூறினார்.

`நீண்ட காலத்துக்குப் பிறகு `ஆனந்தபுரத்து வீடு'ன்னு ஹாரர் ஜானர்லையே ஒரு படம் கொடுத்தீங்க. அதுக்குப் பிறகு உங்களை சின்னத்திரை, சினிமா எங்கேயுமே பார்க்கமுடியல. ஆனாலும் உங்களை நீங்க பிசியாதான் வச்சிருக்கீங்க. எப்படி?" என்றேன்.

`மர்மதேசம்' தொடரின் ஐந்தாவது கதை திரும்ப எடுக்கப்படுமா?' - `மர்மதேசம்' நாகா பதில்

"சினிமா, அல்லது சீரியல்தான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. அது எப்படி இருந்தாலும் எனக்கு ஓ.கேதான். இப்போ மும்பை, சென்னைனு பல ஊர்கள்ல இருக்குற சினிமா இன்ஸ்டியூட்களுக்குப் போய் டைரக்‌ஷன், திரைக்கதை எழுதுறது பத்தி வகுப்புகள் எடுக்குறேன். அது இல்லாம இப்போ ஒரு தெலுங்கு படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். என்னுடைய சொந்தப் படத்துக்கான ஸ்கிரிப்டும் இருக்கு. ஒரு வெப் சீரீஸுக்கான திட்டமும் இருக்கு. இதுக்கு மேல என்னவேணும்?" என்றார்.