Published:Updated:

``குழந்தையை வெச்சு மிரட்டினாங்க, ஆனா அதுக்கெல்லாம் நான் பயப்படல!" - `வானிலை' மோனிகா

மோனிகா
மோனிகா ( Photo: Vikatan / Kalimuthu.P )

சமீபகாலமாக இவரை சீரியல், சினிமாப் பக்கம் பார்க்க முடியவில்லை. இவரிடமிருந்து வீடியோக்களும் குறையத் தொடங்கியதால், `என்ன ஆச்சு' என அவரையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய புதிதில், `வானிலைச் செய்தி' வாசித்தே பிரபலமானவர் மோனிகா. `வானிலைச் செய்தி'க்குப் பிறகு சீரியல், சினிமா என நடிப்புப் பக்கம் வந்தவர், சோஷியல் மீடியா வந்த பிறகு, அதன் வழியே அரசியல், சமூகப் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசி வீடியோக்கள் வெளியிடத் தொடங்கினார். அப்படி இவர் வெளியிட்ட ஒரு வீடியோவால் இவரது செய்தி வாசிப்பாளர் வேலைக்குப் பிரச்னை வர, அந்த வேலையையே உதறினார்.

ஆனால், சமீபகாலமாக இவரை சீரியல், சினிமாப் பக்கம் பார்க்க முடியவில்லை. இவரிடமிருந்து வீடியோக்களும் குறையத் தொடங்கியதால், `என்ன ஆச்சு' என அவரையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

மோனிகா கணவருடன்
மோனிகா கணவருடன்

``இன்னைக்கும் என்னைப் பார்க்கிற நிறைய பேர், அந்த நாள்களைத்தான் ஞாபகம் வெச்சுப் பேசறாங்க. என்னைப் பொறுத்தவரை அந்தக் காலத்தை `வாழ்க்கையின் இனிமையான காலம்'னு சொல்வேன். கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்ச நாள் மீடியாவுல இருந்து ஒதுங்கியிருந்தேன். ஆனாலும் திரும்பவும் சீரியல், சினிமா வாய்ப்புகள் வர, மனசுக்குப் பிடிச்ச கேரக்டர்களை மட்டும் பண்ணிட்டிருந்தேன்.

இடையில நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு சீரியல்கள் பண்ண முடியாமப் போயிடுச்சு. சோஷியல் மீடியா வீடியோங்கிறது என் தனிப்பட்ட விருப்பம். நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலேயும் உறுப்பினர் கிடையாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு வித்தியாசம் பார்காம மனசுக்கு சரின்னு தோணுற விஷயங்களைப் பேசிட்டிருந்தேன். அப்படி வெளியான சில வீடியோக்களால வேற மாதிரியான சில பிரச்னைகள் உருவாகுற மாதிரி தெரிஞ்சது."

மோனிகா - மேத்யூ
மோனிகா - மேத்யூ

``வீடியோவுல பேசின விஷயத்துல நியாயம் இருக்கா இல்லையான்னு பார்க்காம, பேசவே கூடாதுங்கிற மாதிரி சிலர் நினைச்சாங்க. என்னுடைய குடும்பத்தை நோட்டமிட்டாங்க. மகன் படிக்கிற ஸ்கூலைக் கண்டுபிடிச்சு அவங்க அவனை போட்டோ எடுத்து வெளியிடுறாங்க. சிம்பிளா சொல்லணும்னா, என்னோட மகனைக் காட்டி எனக்கு மிரட்டல் வந்ததுனு அதைச் சொல்லலாம். அந்தச் சமயத்துல என் கணவரும் வேலை சம்பந்தமா கொஞ்ச நாள் வெளிநாட்டுல இருந்தார். `ரிஸ்க் வேண்டாமே'னு வீட்டுல பெரியவங்களும் கேட்டுக்கிட்டதால, கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு நினைச்சேன். மத்தபடி யாருக்கும் பயந்தெல்லாம் ஒதுங்கலை. அப்படியிருந்தும் எப்போதாவது பேசிட்டுதான் இருக்கேன்.

வேலூர் மக்களவைத் தேர்தல்ல அ.தி.மு.கதான் ஜெயிக்க வேண்டியது. கடைசி நேரத்துல அந்தக் கட்சியோட ஒரே எம்.பியான ரவீந்திரநாத்தின் `முத்தலாக்' பற்றின பேச்சாலதான் கட்சி தோத்துச்சு. இதைப் பேசியிருந்தேன். அதனால நிச்சயமா மறுபடியும் வீடியோ வெளியிடுவேன். இதுக்கிடையில என்னுடைய கணவர் ஒரு முக்கியமான பணியில இறங்கியிருக்கார். அவருக்கு உதவலாமேனு நினைச்சதால, சீரியல், சினிமாவுல நீங்க என்னைப் பார்க்க முடியலை'' என்ற மோனிகாவிடம், அவரது கணவர் சாம் மேத்யூவின் அந்த முக்கியமான பணி குறித்தும் கேட்டோம்.

மோனிகா
மோனிகா
பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

``அதுவும் அரசியல் தொடர்பான வேலைதான். பிரசாந்த் கிஷோர் கேள்விப்பட்டிருக்கீங்கதானே? அவர் பண்ற அதே `பொலிடிகல் பிராண்டிங்' ஃபீல்டுலதான் மேத்யூவும் இருக்கார். ரெண்டு மூணு தேர்தல்களைச் சந்திச்சிட்டார். 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்ல தமிழ்நாட்டுல எல்லாப் பிரதானக் கட்சிகளுக்குமே இவர் மாதிரியான ஆட்கள் தேவைப்படுவாங்க. அந்தத் தேர்தலுக்கான வேலைகளை இப்பவே தொடங்கிட்டார். ஒரு மனைவியா இந்த வேலையில அவருக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கேன்'' என்கிறார் மோனிகா.

அடுத்த கட்டுரைக்கு