Published:Updated:

கேபி எடுத்தது சரியான முடிவா... தீரவே தீராத `அன்பு' கேங்க் அலப்பறைகள்! பிக்பாஸ் – நாள் 102

பிக்பாஸ் – நாள் 102

"இவையெல்லாம் அந்தந்த சூழ்நிலையில் நீங்கள் வெளிப்படுத்தியவை. வீட்டை விட்டுச் செல்லும் போது இவற்றை இங்கேயே விட்டு விடுங்கள்" என்கிற பிக்பாஸின் அறிவுரையைக் கேட்டு போட்டியாளர்கள் நெகிழந்தார்கள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 102

Published:Updated:

கேபி எடுத்தது சரியான முடிவா... தீரவே தீராத `அன்பு' கேங்க் அலப்பறைகள்! பிக்பாஸ் – நாள் 102

"இவையெல்லாம் அந்தந்த சூழ்நிலையில் நீங்கள் வெளிப்படுத்தியவை. வீட்டை விட்டுச் செல்லும் போது இவற்றை இங்கேயே விட்டு விடுங்கள்" என்கிற பிக்பாஸின் அறிவுரையைக் கேட்டு போட்டியாளர்கள் நெகிழந்தார்கள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 102

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் நான்காவது சீஸனின் இறுதித் தருணங்கள் நெருங்கி விட்டன. இதன் ஒரு பகுதியாக, ‘ஒரு குறிப்பிட்ட அளவு பணம் தருகிறேன். எடுத்துக் கொண்டு கிளம்புங்கள். காத்து வரட்டும்’ என்கிற திட்டத்தை பிக்பாஸ் இன்று அரங்கேற்றினார். கேபி அதை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்றது ஒரு நல்ல முடிவு. பாலாஜி மற்றும் ஆரி போன்ற வலிமையான போட்டியாளர்களுக்கிடையில் அவர் வெல்வதற்கான சந்தர்ப்பம் குறைவு. இதை அவருடைய உள்ளுணர்வு உணர்த்தியிருக்க வேண்டும்.

ஆனால் கேபியின் முடிவை செயல்படுத்த விடாதவாறு ரியோ போட்ட டிராமா இருக்கிறதே..?! ஆகக் கொடுமையானது. தமிழ் சீரியல்கள் அனைத்தின் சாரமும் பிழியப்பட்டு ரியோவின் வடிவில் நின்று கொண்டிருந்ததைப் போன்ற பிரமை. "ஏண்டா லூஸூ மாதிரி இருக்கே?” என்று நிஷா கேட்டது சரியான கேள்வி. அன்புக்கூட்டணியின் அலப்பறையை இந்த நிகழ்ச்சியின் கடைசிவரை சகித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அப்படிப் போட்டு படுத்தியெடுக்கிறார்கள்... முடியல!

ஆனால் இதற்காக கேபி சுமாரான போட்டியாளர் என்றும் சொல்லி விட முடியாது. தரையில் உருண்டு பந்தை வைக்கும் டாஸ்க்கில் பாலாஜிக்கே கடும் சவாலாக அமைந்தார். எனவே உடல்திறன் கொண்ட கடுமையாக டாஸ்காக இருந்தால் கூட அவர் வெல்ல வாய்ப்புண்டு.

ஓகே... நாள் 102-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

‘4 Days to go’ என்கிற அறிவிப்பை திரும்பத் திரும்ப திரும்பி நின்று தொலைக்காட்சியில் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார் கமல். ரியாலிட்டி ஷோ என்றால் பண்டிகை தினத்தை முன்பே கொண்டாடி அந்த ஃபீலை சம்பந்தப்பட்ட நாளன்று தருவார்கள். எனவே பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் முன்னாளே தொடங்கியது.

இதன் முன்னுரையாக காலையில் ‘ஆடுங்கடா... என்னைச் சுத்தி...’ பாடல் ஒலிபரப்பாகியது. ஒன்றுமில்லை. அதில் ‘பொங்கல்’ என்கிற வார்த்தை தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடையது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித்தான் பல விஷயங்களை கோக்குமாக்காக நாம் கனெக்ட் செய்து கொண்டிருக்கிறோம். என்றாலும், ‘சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப் புள்ள’ என்று அதில் வருகிற கபிலனின் வரி என்னை மிகவும் கவர்ந்தது.

தமிழர் கலாசாரம் என்பது பாட்டோடு பிணைந்ததுதான். மறுப்பில்லை. ஆனால் வேல்முருகன் என்கிற டேப்ரிகார்டர் ஓய்வேயில்லாமல் தொடர்ந்து அலறிக் கொண்டிருக்கும்போது சமயங்களில் கடுப்பாகிறது. ‘அந்த டிவியை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணி வையுங்க’ என்று சமயங்களில் வீட்டில் நாம் கோபமாகி விடுவோம்... அல்லவா? அப்படித் தோன்றி விடுகிறது. மற்றபடி வேல்முருகன் அருமையான பாடகர்தான்.

அனிதாவும் ரம்யாவும் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க பாலாஜி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். ‘ரம்யாவும் அனிதாவும் கோலம் போட...’ என்று இழுவையுடன் பாட ஆரம்பித்து விட்டார் வேல். ‘அண்ணே... பாட்டுல என்னையும் சேருங்க’ என்று பாலாஜி வேண்டுகோள் வைக்க அதையும் நிறைவேற்றினார்.

‘காசு... பணம்... துட்டு... மணி...’ என்று ஆசை காட்டும் டாஸ்க்கை கொண்டு வந்தார் பிக்பாஸ். இதைப் பற்றிய அறிவிப்பை அர்ச்சனா படிக்கும் போது அவருடைய ஆங்கர் தொனி உற்சாகமான கத்தலுடன் வந்துவிட்டது. ‘தாங்கள் இறுதிப் போட்டியில் தோற்று விடுவோம்’ என்று துளி சந்தேகம் இருந்தால் கூட அந்தப் போட்டியாளர்கள் வெவ்வேறு இடைவேளைகளில் அறிவிக்கப்படும் பரிசுப்பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடலாமாம்.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

'வந்திருக்கும் விருந்தினர்கள், போட்டியாளர்களுக்கு ஆலோசனையோ அறிவுரையோ சொல்லக்கூடாது’ என்று விதியிருந்தாலும் பிறகு அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டன. இதில் வெற்றியாளருக்கு மட்டுமே 50 லட்சம் பரிசுப்பணம். (இந்தி பிக்பாஸில் ஒரு கோடியாக உயர்ந்து விட்டது). அடுத்து வருபவர்களுக்கு வெறும் டைட்டில்தான். எனவே ‘சூதானமாக’ யோசிக்க வேண்டும். ‘உங்கள் முடிவு... உங்கள் கையில்’ என்று முடிவை இறுதிப் போட்டியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார் பிக்பாஸ்.

திருவிழாவில் வாங்கிய கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்து சுற்றிக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘வெள்ளச்சாமி மறுபடியும் பாட ஆரம்பிச்சிட்டான்’ கதையாக வாக்களித்த மக்களுக்கு அவர் மறுபடியும் நன்றி சொல்ல ஆரம்பிக்க ‘டேய் போய்டு. கொன்டே போடுவேன்’ என்று பலருக்கும் கொலைவெறி ஏறியிருக்கும். "நீங்க எனக்கு வாக்களிச்சிருக்கீங்க... ஒரு கோடி ரூவா கொடுத்தா கூட பெட்டியை நான் எடுக்க மாட்டேன்" என்றெல்லாம் பாலாஜி அளந்து விடும் ‘யப்பா... உலக நடிப்புடா, சாமி’ என்றே தோன்றியது.

ஆனால்... "நீங்க என் மேல நம்பிக்கை வெச்சி வாக்களிச்சிருக்கீங்க. ஆகவே இறங்கி விளையாடி ஒரு கை பாத்துருவேன்" என்று பாலாஜி சொன்னது சூப்பரான விஷயம். "பத்து நாளைக்கு முன்னாடின்னா கதையே வேற. அப்ப டல்லா இருந்தேன்" என்கிற உண்மையையும் பாலாஜி சொல்லத் தவறவில்லை.

அதென்னமோ இன்று சனம்தான் பிக்பாஸின் செல்லப்பிள்ளையாக இருந்தார். பணப்பெட்டியை அவர்தான் கொண்டு வந்தார். ‘பொங்கல்’ செய்யும் போட்டிக்கு அவர்தான் நடுவர். ‘பீம்பாய்... பீம்பாய்... லாக்கர்ல இருந்து அந்தப் பணத்தை எடுத்து’ என்கிற வசனம் போல சூட்கேஸில் பணம் கொண்டு வந்து கார்டன் ஏரியாவில் அலங்காரமாக வைக்கப்பட்டது. மதிப்பு ஒரு லட்சம்.

பிக்பாஸில் கலந்து கொள்ள சில விஐபி போட்டியாளர்களுக்கு தினசரி சம்பளமே ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. எனவே சூட்கேஸில் வந்த ஒரு லட்சம் பிசாத்து காசு என்று நினைத்திருப்பார்கள். எனவே யாரும் அதை சட்டை செய்யவில்லை. ஆனால் நம் கதை வேறு. பிக்பாஸ் பார்வையாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து தினமும் நூறு ரூபாய் பரிசு கொடுத்தால் கூட போதும்... பிக்பாஸை கோயில் கட்டி கும்பிடுவோம் சாமி!

பண விவகார டாஸ்க் என்பதால் அது தொடர்பான பாடல்களை மக்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ‘காசு மேல காசு வந்து’ பாடலை பிக்பாஸ் மேட்டருடன் கலந்தடித்து பாடிக் கொண்டிருந்தார் வேல்ஸ். பிறகு ஒரு ‘ராப்’ பாடலை பாலாஜி பாடினார். நன்றாகவே இருந்தது. சுச்சி எழுதியதாக இருக்கும். இதற்கு வழக்கம் போல் வாயால் சிறப்பு சத்தம் கொடுத்தார் சோம்.

பீம்பாய் ‘சனம்’ இரண்டாவது பெட்டியைத் தூக்கி வந்து வைத்தார். ஆரி இதைத் திறந்து பார்க்க ‘ஐந்து லட்சம்’ என்கிற அறிவிப்பு இருந்தது. ‘ஒரு தரம்... இரண்டு தரம்’ என்று மக்கள் ஜாலியாக ஏலம் விட்டார்கள். ‘யாரும் இதை எடுக்க மாட்டாங்க’ என்று சனமும் அனிதாவும் பேசிக் கொண்டிருக்கும் போதே மெல்ல நகர்ந்து சென்ற கேபி யாரும் எதிர்பார்க்காத வகையில் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டார்.

அதற்கு முன் நிச்சயம் நிறைய யோசித்திருப்பார் கேபி. ஏனெனில் இதற்கு மேல் பரிசுத் தொகை உயர்த்தப்பட மாட்டாது என்றே தோன்றுகிறது. இந்த முடிவை தங்கள் அணியிடம் அவர் முன்பே ஆலோசித்திருக்கவும் முடியாது. ஏனெனில் ஆளாளுக்கு ஒன்று சொல்லி குழப்பியிருப்பார்கள்.
பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

கேபி பணப்பெட்டியை எடுத்து விட்டதைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதில் மிகவும் அதிர்ச்சியடைந்த ரியோ ‘சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்.. காசு கொடு’ என்பது மாதிரி, "நீ பெட்டியை வை. மத்தத அப்புறம் பேசிக்கலாம்" என்று கேபியிடம் அனத்த ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது இந்த டிராமா.

கேபியின் முடிவை ரியோ தடுக்க நினைப்பது ஒருவகையில் சரியானது. ஆனால் ஓர் எல்லை வரைக்கும்தான் அதைச் செய்ய முடியும். பாசம் என்கிற ஆயுதத்தைக் காண்பித்து கேபியை கடும் நெருக்கடிக்குள் அவர் தள்ளக்கூடாது. கேபி என்னும் இளம் பெண் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு கடுமையான நெருக்கடியில் சுயமாக யோசித்து எடுத்திருக்கும் முடிவு இது. இதைப் பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும். கூடுதல் மனநெருக்கடியில் அவரைத் தள்ளி விடக்கூடாது.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

"நீ இப்ப எவ்வளவு அழுத்தத்துல இருப்பேன்னு தெரியும். ஆல் தி பெஸ்ட்" என்று கேபியை கட்டியணைத்து வாழ்த்தினார் ரம்யா. (கெளம்பு. காத்து வரட்டும் என்றும் அதைப் புரிந்து கொள்ளலாம்.) "நீ நிறைய உழைப்பை போட்டிருக்கே. அவசரப்படாதே" என்று ஒரு கட்டம் வரைக்கும் வலியுறுத்திய பாலாஜியும் பிறகு கட்டியணைத்து கேபியை வாழ்த்தினார். சோம் நாகரிகமான எல்லை வரைக்கும் சென்று நின்று கொண்டார். ஆரி புத்திசாலித்தனமாக அருகிலேயே வரவில்லை.

ஆனால் ரியோவிற்கும் கேபிக்குமான பாசப்போராட்டம் நீடித்துக் கொண்டேயிருந்தது. என்னதான் பாசம் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு விளையாட்டு. விளையாட்டையும் தனிப்பட்ட உணர்வுகளையும் கலக்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அன்புக்கூட்டணிக்கு கடைசி வரைக்கும் உறைக்கவில்லை. அதனால்தான் மக்களின் பரவலான வெறுப்பை அவர்கள் சம்பாதித்துக் கொண்டார்கள். வெளியில் சென்று விட்டு வந்த அர்ச்சானவிற்கும் நிஷாவிற்கும் இது நன்றாகவே தெரியும். எனவேதான் தூரமாக நின்று கொண்டார்கள்.

"நான் வீட்டுக்குப் போகணும்" என்று ரியோ சொல்வது அபத்தமான காரணம். "என் மேல எனக்கு நம்பிக்கையில்லாம இருந்தது. ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டியில் தேர்வான பிறகு நம்பிக்கை கூடிவிட்டது" என்று சில நாட்களுக்கு முன்னர்தான் ரியோ பாசிட்டிவ்வாக பேசினார். ஆனால் இப்போதே அவர் பிளேட்டை மாற்றுவது மக்கள் அளித்த ஆதரவை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.

"நான் வெளியே போனா நிறைய பேர் இருக்காங்க" என்று ரியோ சொல்ல, "எனக்கு அம்மா மட்டும்தான்" என்று கேபி பதில் சொன்னது நெகிழ்வான காட்சி. முடிவு எட்டப்பட்டாமல் இழுவையாக சென்று கொண்டிருந்தாலும், ‘கொடி காத்த குமரன்’ மாதிரி சூட்கேஸை கையில் இருந்து கீழே வைக்காமலேயே இருந்தார் கேபி. (‘ஐந்து லட்சம் எடுத்துட்டு போகலாம்னு புத்திசாலித்தனமா யோசிச்சா... பாவிப்பசங்க. பாசத்தைக் காட்டி காரியத்தைக் கெடுக்கறாயங்களே’ என்று அவர் மைண்ட் வாய்ஸில் புலம்பியிருக்கலாம்.)

"டேய் லூஸூப் பயலே... உன்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரியே இருக்கு...” என்று ஒரு அக்காவாக சரியான நேரத்தில் தனது கண்டிப்பை நிஷா தெரிவித்த போது ‘அப்படிப் போடு சபாசு’ என்று சொல்லத் தோன்றியது. ரியோவின் மனைவி இப்போது அருகில் இருந்திருந்தால் பூரிக்கட்டையிலேயே ரியோவின் மண்டையில் ஒன்று போட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு சென்ட்டிமென்ட் டிராமா செய்து வெறுப்பேற்றுகிறார் ரியோ.
பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

நகைச்சுவை செய்யும் போதுதான் ரியோவை மிகவும் ரசிக்க முடிகிறது. அந்த ரியோதான் அதிகம் இங்கு வெளிப்பட வேண்டும். அதைத்தான் அவருடைய மனைவியும் தன்னுடைய வருகையின் போது வலியுறுத்தி சொல்லியிருந்தார். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி, அநாவசியமான நேரங்களில் ரியோ முகத்தை பரிதாபமாக மாற்றிக் கொள்வது எரிச்சல். இது போன்ற ஆசாமிகளை நடைமுறை வாழ்க்கையில் மேய்ப்பதும் மிகச்சிரமம். முகத்தைத் தொங்கப் போட்டே சாகடித்து விடுவார்கள்.

தூரத்திலேயே நின்று கொண்டிருந்த அர்ச்சனா ஒரு கட்டத்தில் நெருங்கி வந்து, "நீ எப்ப கேபி வளர்ந்தே?” என்று கேட்டது அருமையான சென்ட்டிமென்ட் கேள்வி. நம் வீட்டுப்பிள்ளைகளைக் கூட ‘குழந்தைகள்’ என்றே நெடுங்காலம் நினைத்திருப்போம். ஆனால் அவர்கள் ஒரு நெருக்கடியில் புத்திசாலித்தனமாக செயலாற்றும் போது ‘டேய் நீதானா' என்று ஆச்சர்யமாக இருக்கும். அந்த உணர்வுதான் அர்ச்சனாவின் கேள்வியில் வெளிப்பட்டது.

ஆனால் அர்ச்சனாவின் இந்தக் கேள்வியை சமூகவலைத்தளத்தில் நன்றாக கிண்டல் செய்திருந்தார்கள். அர்ச்சனா: ‘நீ எப்ப கேபி வளர்ந்தே?” - கேபி: “நீங்க வெளியே போயிட்டீங்கள்ல அச்சும்மா.. அப்ப இருந்துதான்” (ஹிஹி..)

நெருக்கடியில் நின்று தவித்துக் கொண்டிருக்கும் கேபிக்கு ஆலோசனை என்கிற பெயரில் இம்சை கொடுத்துக் கொண்டிருந்தார் சனம். "பணம் முக்கியம்னு நீ நெனக்கல இல்ல... அப்ப சூட்கேஸை வெச்சுடு. ரியோ எடுக்காம நான் பார்த்துக்கறேன். நான்தானே எடுத்துட்டு வந்தேன். இப்ப நானே கேட்கறேன்" என்றெல்லாம் சனத்தின் ஆலோசனை அலப்பறைகள் கூடிக் கொண்டே சென்றது. கோபம் வரவழைக்கும் காமெடியாகவும் இருந்தது. இது போன்ற ஆசாமிகள் ‘அட்வைஸ் சொல்கிறேன் பேர்வழி’ என்று நன்றாக வெறுப்பேற்றி விடுவார்கள்.

மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் கமல் போல அடிபட்ட பரிதாப முகத்துடன் ரியோ அமர்ந்திருக்க, “நூறு நாளைக்கும் மேல இருந்துட்டே. அஞ்சு லட்சம்தான் முக்கியமா, அதான் நம்ம வொர்த்தா?” என்றெல்லாம் ரமேஷ் கண்டிப்பு காட்டியது சிறந்த அணுகுமுறை. ரமேஷ் சொன்னதையே கனிவான சொற்களில் அர்ச்சனா சொன்னார்.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

"இந்த முடிவிற்காக யாரும் என்னை வெறுத்திட மாட்டீங்கள்ல..." என்று கேபி கேட்டது நெகிழ வைப்பதாக இருந்தது. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரியோவால் இழுவையாக இழுக்கப்பட்ட இந்த டிராமா ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. "உங்கள் இறுதி முடிவு என்ன?” என்று பிக்பாஸ் அதிகாரபூர்வமாக கேட்க சங்கடத்துடன் தன் முடிவைச் சொன்னார் கேபி.

"நீங்கள் இப்போது மெயின் கேட் வழியாக வெளியே வரலாம்" என்று பிக்பாஸ் அறிவித்ததும், "அவ நாளைக்குப் போகலாமா?” என்று யாரோ (ரம்யா?!) கரிசனத்துடன் கேட்டார்கள். ஆனால் ‘ரூல்ஸ்னா... ரூல்ஸ்தான்’ என்று கல்லுளித்தனமாக அமைதியாக இருந்துவிட்டார் பிக்பாஸ்.

உண்டியலை ‘பொதேர்’ என்று போட்டு உடைத்து நாணயங்களை இறுதிப் போட்டியாளர்களுக்குப் பகிர்ந்தளித்தார் கேபி. ‘நல்லா விளையாடினே கேபி’ என்று ஆரி கட்டியணைத்து வாழ்த்து சொல்லியது சிறப்பான காட்சி. ‘வெளில போய் எனக்கு வோட்டு போடு’ என்று வழக்கம் போல் பாலாஜி கலாய்க்க ‘அந்தத் தப்பை மட்டும் பண்ணிடாதே’ என்று சதாய்த்தார் சனம். ‘ஐ லவ் யூ’ என்று பிக்பாஸ் வழியனுப்பி வைக்க அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு சென்றார் கேபி.

அர்ச்சனாவின் தலைமையில் அன்புக்கூட்டணி ஒன்று கூடி மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தது. ‘இரு... ஒரு பொஷிஷன்ல நின்னுக்கறேன்’ என்கிற வடிவேலுவின் காமெடி போல சுவற்றில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு கதறினார் அர்ச்சனா. "எப்படா வளர்ந்தா இவ?” என்கிற டயலாக்கை மறுபடி சொல்லி வியந்தார். ஆனால் அதற்குப் பிறகு, "ஒவ்வொருத்தரா வெளியே போயிட்டே இருப்பாங்க. நாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?” என்று அவர் அனத்தியது அபத்தம். இது கேபியின் முடிவு. இதற்கும் எதிர் தரப்பை குற்றம் சொல்ல வேண்டுமா என்ன? “கேபி போனதுல எனக்கு இஷ்டம் இல்ல” என்று சாமிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி.

‘பொங்கல் கொண்டாட்டத்தை’ ஆரம்பித்தார் பிக்பாஸ். முதல் பகுதி ‘சர்க்கரைப் பொங்கல்’ செய்யும் போட்டி. (சர்க்கரைப் பொங்கல் என்றாலே கடந்த சீஸன் கஸ்தூரியை மறக்க முடியாது). வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்தது. ரேகா தலைமையில் ஒரு அணியும் ரம்யா தலைமையில் இன்னொரு அணியும் பொங்கல் கிளற புறப்பட்டார்கள். இதற்கு நடுவராக சனம் இருப்பாராம்.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

பார்க்கும் போதே நமக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும்படி முந்திரியையும் நெய்யையும் ஏராளமாக கொட்டி சர்க்கரைப் பொங்கல் செய்ய ஆரம்பித்தார்கள். டேப்ரிகார்டர் வேல்முருகன் உற்சாகமாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாட ரம்யா கூட்டணி நடனம் ஆடிக் கொண்டிருந்தது. இறுதியில் ரேகா அணி செய்த பொங்கலில் ஒரு சதவீதம் தீய்ந்த வாடை வருகிறது என்று துல்லியமாகக் கணித்து தீர்ப்பு சொல்லி ரம்யா அணியை வெற்றி பெற்றதாக தேர்வு செய்தார் சனம்.

அடுத்ததாக ‘உறியடி’ போட்டி. இதற்கு ரமேஷைத்தான் முதலில் நடுவராக நியமித்தார் பிக்பாஸ். "என்ன பாஸ்... நானும் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தேன்" என்று ரமேஷ் சொன்னதுமே... ‘ஆமாம்... இவரு அப்படியே அறுத்து தள்ளிடுவாரு’ என்று பிக்பாஸிற்கு தோன்றியிருந்தாலும் ‘என்னடா இவன் எப்பவும் தூங்கிட்டு இருக்கறவன்... வாய்ப்பு கேட்கறான்’ என்று ஆச்சர்யப்பட்டு ஆரியை நடுவராக நியமித்து ரமேஷை போட்டியிடச் சொன்னார்.

பேசாமல் ரமேஷ் நடுவராகவே இருந்திருக்கலாம். மானம் தப்பித்திருக்கும். ஏனெனில் உறியடி போட்டியில் வெற்றி பெற்றவர் ரம்யா. (சோனா முத்தா... போச்சா?!) ‘சாந்து பொட்டு சந்தனப் பொட்டு’ பாட்டைப் பாடி ரம்யாவிற்கு அர்ப்பணம் செய்தார் வேல். ஆரி சிலம்பப் பயிற்சி பெற்றவர் என்பது தெரிந்தது. ஸ்டைலாக கம்பு சுழற்றிக் காட்டினார். பிறகு அவர் விளையாட்டாக ரம்யாவிடம் சிலம்பப் போட்டி செய்தார். வழக்கம் போல் ரம்யாவைப் பார்க்கும் போதுதான் ஆரிக்கு முகத்தில் நிஜமான சிரிப்பு வருகிறது.

அடுத்து ஸ்லோ சைக்கிள் ரேஸில் வேகமாக ஓட்டி முதலில் வந்து சிறப்பாக தோற்றுப் போனார் வேல்முருகன். ஆரி வெற்றி பெற்றார்.

சபையைக் கூட்டிய பிக்பாஸ், "வாங்க... நீங்க செய்த ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கலாம்" என்று மக்களை அழைத்தார். "உங்களின் போட்டியிடும் தன்மையில் குறை இருந்ததில்லை. மாற்றுக் கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்தத் தயங்கயதில்லை" என்றெல்லாம் முன்னுரை தந்த பிக்பாஸ், வீட்டில் நடந்த சண்டைக்காட்சிகளின் தொகுப்பை ஒளிபரப்ப, மக்கள் சீரியஸாகவும் அவ்வப்போது சிரிப்புடனும் பார்த்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

இதில் பாலாஜி வந்த காட்சிகளே அதிகம் இருந்தன. அடுத்த இடத்தில் இருந்தவர் ஆரி. அபூர்வமாக ஆஜித் கோபப்பட்ட காட்சியும் வந்தது. ‘காலைல எந்திரிச்சா. என்ன குழம்பு வெக்கலாம்னு யோசிக்கணும். எப்படி கொலை பண்ணலாம்னு இவிய்ங்க யோசிப்பாங்க போலிருக்குது’ என்று துவக்க நாட்களில் நிஷா பேசிய அனத்தலை இறுதி பன்ச் காட்சியாக வீடியோவில் இணைத்தது எடிட்டரின் அட்டகாசமான குறும்பு. போட்டியாளர்கள் இதை மிகவும் ரசித்தார்கள்.

இந்த வீடியோவின் மூலமாக நமக்கும் ஒரு செய்தி இருக்கிறது. பிக்பாஸில் வருவதைப் போல நாமும் சிலரிடம் உக்கிரமாக சண்டை போட்டிருப்போம். ஆனால் சில நாட்கள் கழித்து அதை யோசிக்கும் போது அவை எப்படியெல்லாம் அற்பத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது என்பது புரியும். சமயங்களில் சிரிப்பாக கூட இருக்கும். பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் இதே உணர்வுதான் வந்திருக்கும்.
"இவையெல்லாம் அந்தந்த சூழ்நிலையில் நீங்கள் வெளிப்படுத்தியவை. வீட்டை விட்டுச் செல்லும் போது இவற்றை இங்கேயே விட்டு விடுங்கள்" என்கிற பிக்பாஸின் அறிவுரையைக் கேட்டு போட்டியாளர்கள் நெகிழந்தார்கள்.

நள்ளிரவிற்கு மேல் கேமரா முன்பு சுயவாக்குமூலம் தருவது ஆரியின் வழக்கம். இப்போது அதை அனிதா செய்து கொண்டிருந்தார். ‘நான் இந்த விளையாட்டில் நிறைய கோபப்பட்டிருக்கேன். யாரையாவது இதற்காக வருத்தப்பட வெச்சிருந்தா மன்னிச்சிடுங்க. நான் விளையாடிய முறை எங்க அப்பாவிற்கு பிடிச்சிருந்தது’ என்றெல்லாம் கேமரா முன்பு உருக்கமாக அனிதா பேசிக் கொண்டிருந்தது நெகிழ்வை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் – நாள் 102
பிக்பாஸ் – நாள் 102

பிக்பாஸ் சொல்லிய அதே உபதேசம்தான். இவையெல்லாம் போட்டியாளர்கள் அந்தந்த சூழல்களில் வெளிப்படுத்தியவை. நாமும் கூட அன்றாட வாழ்க்கையில் இதைச் செய்திருப்போம். எனவே நெருக்கடிக்குள் நின்று விளையாடுகிற போட்டியாளர்களின் சறுக்கல்கள் அப்போதைக்கு நமக்கு கோபத்தை, வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் பிறகு அதை நாம் மறந்துவிடுவதுதான் முதிர்ச்சியானது. சீஸன் ஒன்று முடிந்து எத்தனையோ காலமாகியும் ஜூலி மீது இன்னமும் கூட சிலர் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. நம்மின் பிரதிபலிப்புதான் இந்தப் போட்டியாளர்கள் என்கிற உணர்வு இருந்தால் இது போன்ற கசப்புகளை நம்மால் நீட்டிக்க முடியாது. அந்த மனமுதிர்ச்சியை நோக்கித்தான் நாம் நகர வேண்டும்.

இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் விளையாட்டில் வேறு சில அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.