Published:Updated:

``Dracarys!" சாம்பல் காடுகளையும், மண்டை ஓடுகளையும் யார் ஆண்டால் என்ன? #GameOfThronesS08E05

Game Of Thrones ( HBO )

கிட்டத்தட்ட இப்படியொரு தருணம் வந்தே தீரும் என்பது `Game of Thrones' பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கதைகள்... எல்லாமும் இதற்காகத்தான் என்று தெரிந்திருந்தபோதும் இத்தனை அவசரம் ஏன் என்றே கேட்கத் தோன்றுகிறது.

``Dracarys!" சாம்பல் காடுகளையும், மண்டை ஓடுகளையும் யார் ஆண்டால் என்ன? #GameOfThronesS08E05

கிட்டத்தட்ட இப்படியொரு தருணம் வந்தே தீரும் என்பது `Game of Thrones' பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கதைகள்... எல்லாமும் இதற்காகத்தான் என்று தெரிந்திருந்தபோதும் இத்தனை அவசரம் ஏன் என்றே கேட்கத் தோன்றுகிறது.

Published:Updated:
Game Of Thrones ( HBO )

DRACARYS! - முந்தைய சீஸன்களில் நாம் விசிலடித்து, கைதட்டி ரசித்த இந்த ஒற்றைச் சொல், இன்று தனக்குள் பல அப்பாவிகளின் மரண ஓலங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. டிராகன்கள் ஆபத்தானவையா இல்லையா என்பதை அதன் மேல் அமர்பவரே தீர்மானிக்கிறார். ஆனால், அதன் மேல் அமர்பவரின் மனநிலையை யார் தீர்மானிக்கிறார்? ஒரு மாபெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தைப்போல நெருப்பைக் கக்கி ஊரையே அழிக்கும் டிராகன்கள் ஒரு பேரழிவுக்கான ஆயுதம். அதை இயக்குபவரை அவரின் விதி மோசமான ஒரு மனநிலைக்குத் தள்ளும்போது அவரிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாதுதான். கருணையைக் கேட்க முடியாதுதான். ஆனால், அவர்தான் இந்த உலகையே ஆளப்போகிறார், அரியணையில் அமரப்போகிறார் எனும்போது அந்த மோசமான மனநிலையையும் எதிர்த்து நின்று, எதிர்மறையான எண்ணங்களைப் புறந்தள்ளுபவராகத்தானே அவர் இருக்கவேண்டும்?

டெனேரியஸ் டார்கேரியனிடம் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என நினைக்கிறார் லார்டு வேரிஸ். ஜான்தான் அதற்குத் தகுதியானவன் என்கிறார். டிரியனுக்கும் அது சரி என்று தோன்றுகிறது. ஆனால், ராஜதுரோகம் செய்ய டிரியன் தயாராக இல்லை. மரண தண்டனை பெற்று இறக்கும் தறுவாயிலும் லார்டு வேரிஸ், தான் நினைத்தது தவறாக இருக்கவேண்டும்; டெனேரியஸ் டார்கேரியன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத `Mad Queen'-ஆக இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார். ஆனால், `Mad King' வழியில் வந்த அவளின் கோபம் அவள் ஆள நினைத்த ஊரையே தீக்கிரையாக்கி இருக்கிறது. செர்ஸிதான் சுயநலமிக்கவள், மக்களைப் பற்றிக் கவலைகொள்ள மறுப்பவள் என்று நினைத்துவந்தவர்களை டெனேரியஸின் அனல் கக்கும் கோபம் சற்றே மனம் மாறச் செய்திருக்கலாம். நெருப்பாலும் ரத்தத்தாலும் கிங்ஸ் லேண்டிங்கைத் தனதாக்கிக்கொள்வேன் என்று உலகின் மற்றொரு முனையிலிருந்து கிளம்பியவள் இன்று அதைச் செய்து முடித்திருக்கிறாள்.

டெனேரியஸ்
டெனேரியஸ்
HBO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், சாம்பல் காடுகளையும், மண்டை ஓடுகளையும் இனி யார் ஆண்டால் என்ன?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டெனேரியஸ் எனும் கலீஸி செயல் பலருக்கும் ஆச்சர்யம் தரும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், அவள் ஆரம்பத்திலிருந்து ஏமாற்றப்படுகிறாள். கூட வரும் விசேரியஸ், டொத்ராக்கி படைக்கு அவளை விற்கிறான். புதிய உலகம், புதிய மனிதர்கள் ஆனால் அங்கும் ஏமாற்றம். நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் சர் ஜோராவும் ஏமாற்றுகிறார். கணவன் மறித்துப்போகிறான். குழந்தை இறந்து போகிறது. மக்களுடன் இழந்த இடம் நோக்கி வருகிறாள். பிற டொத்ராக்கி இனங்கள் பிரிந்து போகிறார்கள். எஸ்ஸாஸிலும் சிலர் அவளை ஏளனம் செய்கிறார்கள். முன்னேறிக்கொண்டே இருக்கிறாள். வெஸ்டிரோஸிலும் எல்லாம் அப்படியேதான் தொடர்கிறது. சான்சா நம்ப மறுக்கிறாள். நைட்கிங்கை அழிக்க அவளது படை எவ்வளவு உதவியது என்பதை யாருமே அங்குப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வெற்றிக்களிப்பில் அனைவரும் குதூகலிக்கும் போதும், தனித்திருக்கிறாள் அவள்.

முந்தைய கட்டுரைகள்: எபிசோடு 1 | எபிசோடு 2 | எபிசோடு 3 | எபிசோடு 4

சான்சாவைப் பற்றி நன்கு அறிந்ததாலேயே அவளிடம் பிறப்பு ரகசியத்தைச் சொல்ல வேண்டாம் என மன்றாடுகிறாள் கலீஸி. ஆனாலும், குடும்பம் முக்கியம் என அதை மீறுகிறான் ஜான். `நீதான் என் ராணி, ஆனால் அவர்கள் என் குடும்பம்' என்கிறான் ஜான். எல்லோருக்கும் எப்போதும், நல்லவர்களாக இருக்க முடியாது என்பதை, உயிர்த்தெழுந்தும் சிலர் புரிந்து கொள்வதேயில்லை.

ரகசியத்தைக் காற்றில் கசிய விடுகிறாள் சான்சா. காய் நகர்த்துவதில் சாமர்த்தியசாலி ஆகிவிட்டாள் லிட்டில் ஃபிங்கரின் சிஷ்யை. இதெல்லாம் ஈடேறி முடிவதற்குள் மிஸ்ஸாண்டே கொல்லப்படுகிறாள். தனக்கு எல்லாமுமாய் இருந்த மிஸ்ஸாண்டேயும் கலீஸியை விட்டுப் பிரிகிறாள். மிஸ்ஸாண்டேவுக்கு கலீஸிதான் எல்லாம். அதனால்தான் மூன்றாவது எபிசோடில், சான்சா கலீஸியைப் பற்றி இழிசொல் பேசும்போது, `அவள் இல்லாவிட்டால் மடிந்திருப்பாய்' என எச்சரித்துவிட்டு நகர்கிறாள். இழிபிழைப்பு என்னும் சொல்லாடலுக்கு அப்படியே பொருந்திபோகும் வாழ்வு சான்சாவுடையது. மிஸ்ஸாண்டேவால் கூட சான்சா போன்றதொரு வாழ்வை வாழ முடியாது, கலீஸியால் மட்டும் எப்படி முடியும்? 

DRACARYS
DRACARYS
HBO

DRACARYS என்னும் மிஸ்ஸாண்டேவின் இறுதி வார்த்தை, அவளுக்குள் அசரீரியாய்க் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தனது Hand ஆக டிரியன் மீண்டும் மீண்டும் அவளுக்குத் துரோகம் இழைக்கிறான். `இனி எனக்கு நீ துரோகம் இழைத்தால், அதுவே கடைசியாக இருக்கும்' என எச்சரிக்கிறாள். ஆனால், மீண்டும் ஜெய்மியை விடுவித்து துரோகம் இழைக்கிறான். இன்னொரு Hand ஆக இருக்கும் வேரிஸ், விஷம் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறான். உணவருந்தாமல் இருக்கும் கலீஸிக்கு உணவளிக்கும் சிறுமியிடம், அவனது சாதுரியத்தை செய்யப் பணிக்கிறான். The greater the risk, the greater the reward என்கிறான். அதற்குரிய விலையை கலீஸியிடமிருந்து பெறுகிறான். இத்தனை துரோகங்களை மீறியும் ஜானைக் காதலிக்கிறாள். அன்பா, பயமா என்கிற அந்த ஒற்றைத் தருணத்தில், இனி Fear என்கிறாள். ஆம், இனி அவள் காட்டப்போவது அன்பு அல்ல, Let it be fear. Nothing Else matters!

கிட்டத்தட்ட இப்படியொரு தருணம் வந்தே தீரும் என்பது `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கதைகள்... எல்லாமும் இதற்காகத்தான் என்று தெரிந்திருந்தபோதும் இத்தனை அவசரம் ஏன் என்றே கேட்கத் தோன்றுகிறது. `A Song of Ice and Fire' எழுதிய ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் ஒருமுறை இப்படிச் சொன்னார்.

``பேரதிர்ச்சியான நிகழ்வுகளை, ட்விஸ்டுகளை ஒரு கதையில் நிகழ்த்திக் காட்டுவது என்பது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆனால், அந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கதாபாத்திங்களின், அதனின் தன்மைகளின் நீட்சியாக இருக்க வேண்டும். அப்போது இருக்கும் நிலைமையின் வெளிப்பாடாக, அதைக் காரணமாக வைத்து மட்டுமே அது நிகழவேண்டும். இப்படி எதுவும் இல்லை என்றால், அது வேண்டுமென்றே, நம்மை அதிர்ச்சியடையச் செய்ய மட்டுமே நிகழ்த்தப்பட்ட ஓர் அர்த்தமற்ற செயல்!"
George RR Martin

கேம் ஆஃப் த்ரோன்ஸ்-ல் தற்போது நிகழும் செயல்கள் ஏனோ அவரின் இந்த வார்த்தைகளை நினைவூட்டின! 

Game Of Thrones
Game Of Thrones
HBO

வெஸ்டரோஸ் முழுக்கவே தன்னை யாரும் விரும்பவில்லை என டெனேரியஸ், ஜானிடம் கூறுகிறாள். அதே சமயம் ஜான் அரசனானால் மக்கள் ஏற்பார்கள் என்பதும் அவளுக்குப் புரிகிறது. ஆனால், ஜான் அவன் மாமா நெட் ஸ்டார்க்கின் பிரதிபலிப்பு. டெனேரியஸை ராணியாக ஏற்றுக்கொண்டவன். அரியணை ஆசை இல்லாதவன். ஒருவேளை ஜான் அரியணையை ஏற்க நினைத்திருந்தால் இத்தனை உயிர்ச்சேதம் நிகழ்ந்தே இருக்காது. வேரிஸை கொன்றபின், சான்சாவின் கரங்களிலும் இந்த ரத்தம் படிந்திருக்கிறது என்கிறாள் டெனேரியஸ். அப்படிப் பார்த்தால் இன்று பல்லாயிரம் உயிர்கள் போனதற்கு ஜானுமே ஒரு காரணம்தான். சுற்றியிருக்கும் அனைவரும் அரசியல் செய்கையில் நல்லவனாக இருப்பதைவிடப் பேராபத்து இருந்துவிட முடியுமா என்ன? ஜானாக கண்ணை மூடியிருப்பவன் ஏகான் டார்கேரியனாக விழித்துக்கொள்ள வேண்டிய தருணத்தை தவறவிட்டு நிற்கிறான். அவன் கரங்களிலும் இந்த ரத்தக்கறைகள் இருக்கவே செய்கின்றன. இப்போதாவது விழித்துக்கொள் ஜான்!

இப்பேர்ப்பட்ட பேரழிவு நிகழும் முன்பு நிகழ்ந்ததொரு மாபெரும் நெகிழ்ச்சித் தருணத்தைப் பேச வேண்டியிருக்கிறது. வெஸ்டரோஸிலேயே மாபெரும் அறிவாளியாகக் கருதப்படும் டிரியன் தன் ராணி இனியொரு தவறு செய்தால் மரண தண்டனைதான் என்றபோதும், அவள் பிடித்து வைத்திருக்கும் கைதி ஒருவனை விடுவிக்கிறான். ``பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிருக்குப் பதில் ஒரு Dwarf, என் உயிர்போனால்தான் என்ன? இது ஒரு நல்ல ஆஃபர்தானே?" என்று அந்தக் கைதியிடமே கேட்கிறான் டிரியன். யாரோ ஒருவராக இருந்தால் உடனே சம்மதித்து இருப்பார்கள். அந்தக் கைதி அவன் சகோதரன் ஜெய்மி எனும்போது, அவனுமே என்ன செய்துவிட முடியும்? ஆனால், அது நிகழவேண்டும். தன் உயிரைக் காத்தவன், தன் உருவத்தைவைத்து கேலி செய்பவர்கள் மத்தியில் தன்னை சகோதரனாக மதித்த ஜெய்மிக்கு டிரியன் செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல இது. டிரியன் ஜெஃப்ரியைக் கொன்றதற்கு மரண தண்டனை கைதியாக சிறையில் இருக்கும்போது ஜெய்மிதானே காப்பாற்றினான்? அந்தக் கணக்கை நேர் செய்யவேண்டுமே? Lannisters always pay their debts.

ஜெய்மி தலைநகருக்குச் செல்லவேண்டும். ஆணவத்திலும் அதிகாரத்திலும் ஆடும் செர்ஸியை அங்கிருந்து மீட்டு நாட்டைவிட்டு அவர்கள் ஓடவேண்டும். டிரியனுக்கு செர்ஸி மேல் பாசம் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனால், செர்ஸி அப்படிச் செய்தால், அப்பாவி மக்கள் காப்பாற்றப்படுவர். ஜெய்மியும் அவளும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்கலாம். ஆனால், வில்லன்களும் திருந்தி நல்வாழ்க்கை வாழ இது டிஸ்னியின் கதையில்லை. கேம் ஆஃப் த்ரோன்ஸ்! இங்கே அறத்தின் வழி நடப்பவரையே மரணம் துரத்தும். செர்ஸியும் ஜெய்மியும் செய்யாத பாவங்களை வேண்டுமானால் பட்டியலிடலாம். ஏனென்றால், அவர்கள் பாவக்கணக்கு ரெட் கீப்பில் ஓடிய அப்பாவிகளின் எண்ணிக்கையைவிட அதிகமானது. Lannisters should pay their debts.

டிரியன் லேனிஸ்டர்
டிரியன் லேனிஸ்டர்
HBO

ஆர்யா ஸ்டார்க்... இந்த சீஸனின் சூப்பர்ஸ்டார். வின்டர்ஃபெல்லில் எல்லாம் முடிந்தது என எல்லோரும் மரணத்தை வரவேற்க எத்தனித்தபோது மரணத்தையே வென்று எல்லோருக்கும் கடவுளானவள். போராட்டக்காரி. கலகக்காரி. எப்போதும் பின்வாங்காதவள். இதோ இந்த எபிசோடிலும் செர்ஸியைக் கொல்ல ஹவுண்டுடன் ரெட் கீப்பில் நுழைகிறாள். ரெட் கீப் டிராகனுக்கு இரையாகத் தொடங்கும்போது Hound அவளைப் பாதுகாப்பாக திரும்பிச் செல்ல கோரிக்கை விடுக்கும்போது அவளும் அதை ஏற்கிறாள். அப்போது ஆர்யாவின் முகமூடியை மாட்டிக்கொண்டு யாரங்கே நிற்கிறார்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. `இது ஆர்யா இல்லை. ஆர்யா அஞ்சி ஓடுபவள் இல்லை!' என்றே தோன்றுகிறது.

ஆனால், அது நல்லதுதான் என்று அடுத்தடுத்த காட்சிகளில் நமக்குப் புரிய வைக்கிறார்கள். போரின் குரூரத்தை அதனருகில் இருந்து பார்க்கிறாள் ஆர்யா. அவளும் ஹவுண்டும் ரெட் கீப்பின் மற்றோர் உட்புற வாயிலில் நுழையும்போது கதவுகள் அங்கே சாத்தப்படுகின்றன. ஒரு தாயையும் அவளின் குழந்தையும் உள்ளே கிடைக்கவிருந்த வாய்ப்பை இவர்கள் தட்டிப்பறித்தே உள்ளே நுழைகிறார்கள். தற்போது, ஆர்யா திரும்பி வெளியே வருகையில், பேராபத்தில் மாட்டிக்கொள்கிறாள். மக்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க நெரிசலில் சிக்கிக்கொள்கிறாள். இந்தக் காட்சி 'The Battle of Bastards'-ல் ஜான் மாட்டிக்கொண்டு போராடும் காட்சி அளவிற்கு வீரியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், ஆர்யாவை இங்கே காப்பாற்றும் கரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அது முன்பு ஆர்யாவால் பின்னுக்குத் தள்ளப்பட்ட அதே தாயின் கரங்கள். இப்போது, அவர்களையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று ஆர்யா முயல்கிறாள். தன் தாய் தன் கண்முன்னே இறப்பதைப் பார்க்கும் குழந்தையின் மனநிலை என்னவாக இருக்கும்? அது தன் தந்தை கொல்லப்படுவதை நேரில் பார்த்த ஆர்யாவுக்கு நன்றாகவே புரிகிறது. அந்தக் குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற முயல்கிறாள். ஏற்கெனவே, சொன்னதுதான். அப்படியெல்லாம் நடந்துவிட, இது டிஸ்னியின் `தேவதை கதை' இல்லை.

ஆர்யா ஸ்டார்க்
ஆர்யா ஸ்டார்க்
HBO

எல்லாம் முடிந்தபின்னர், ரெட் கீப் என்ற ஒன்றே இல்லாமல் ஆனபிறகு ஆர்யா எழுகிறாள். இடிபாடுகளில் சிக்கி, அவள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். ஆர்யா சாகவில்லை என்று நாமுமே அவளைப் போல ஆசுவாசம் கொள்கிறோம். ஆர்யாவின் இதுவரையான வாழ்க்கைப் பயணம் இத்தகையானதுதான். தற்போது அரங்கேறியுள்ள காட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட அவள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் டிரெய்லர்தான். ஆம், ஆர்யா ஒரு War Horse. பல களங்கள் கண்டவள். அதை உணர்த்தும் விதமாகவோ என்னவோ அங்கே ஒரு வெள்ளைக்குதிரை நிற்கிறது. கிட்டத்தட்ட ஆர்யாவின் மனநிலைதான் அதற்கும். போரில் மனிதர்கள் வேண்டுமானால் ஒரு நிலைப்பாட்டில் இருக்கலாம். ஒரு சாரரை ஆதரிக்கலாம். அவர்கள் போருக்காகப் பயன்படுத்தும் விலங்குகள் யார் பக்கம் நிற்கின்றன? லேடியாக சொகுசு வாழ்க்கையை வெறுத்தவள்; வின்டர்ஃபெல்லின் அரியணைக்கு ஆசைப்படாதவள். போரில் பங்கேற்க விரும்பாதவள்; இந்த ஆர்யா எனும் War Horse, இனி யார் பக்கம் நிற்பாள்? இவ்வளவு மரணங்களை நிகழ்த்திய `Mad Queen' டெனேரியஸ் டார்கேரியனின் பக்கமா? ஜானே இனி அதை விரும்பினாலும் இனி ஆர்யாவின் மனநிலை அதை ஏற்காது என்றே தோன்றுகிறது.

ஆர்யா ஸ்டார்க்
ஆர்யா ஸ்டார்க்
HBO

அவளின் பயணம் மீண்டும் அந்தக் குதிரையுடன் தொடங்குகிறது. ஆனால், அதில் அமர்ந்திருப்பவள் நிச்சயம் இதுவரை தயக்கமே இல்லாமல் பல கொலைகள் செய்த ஆர்யாவாக இருக்க முடியாது. இத்தனை துர்மரணங்கள் அவளின் மனதை உடைக்காமல் போய்விடுமா? கல்லாகவே இருக்க, அவள் ஒன்றும் ப்ரான் இல்லை. Three-eyed Raven இல்லை. No-one இல்லை. அவள் Arya Stark of Winterfell. ஏதேனும் நிச்சயம் செய்வாள்!

Cleganebowl

`The Bells' என்னும் இந்த எபிசோடில் பலரையும் உற்சாகமைடய வைத்தது, `Mountain vs Hound' சண்டைதான். டெனேரியஸ், லேனிஸ்டர், ஸ்டார்க் சண்டையைவிட கொடியது இந்தச் சகோதர யுத்தம். பழி தீர்த்தல் என்பது உயிரைக் கொல்வது வரை நிற்கப்போவதுமில்லை. உயிரைவிட்டேனும் அதைச் சாத்தியப்படுத்திய பலரது கதை வரலாறுகளில் உண்டு. Hello Big Brother என Hound , Mountainஐப் பார்த்துச் சொல்ல, இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது. Cleganebowl என்னும் நிகழ்வுக்காக இத்தனை ஆண்டுக்காலம், இந்த இரு அசுரர்களுடன், ரசிகர்களும் காத்திருந்தனர். முதல் சீஸனின் ஐந்தாவது எபிசோடில் சர் லோராஸுக்கும் Mountainக்கும் சண்டை நிகழும். அதில் Mountain தோற்றுவிட, உக்கிரமாகிறான். Mountain-ம், Hound-ம் சண்டையிட்டுக்கொள்ள ராபர்ட் பராத்தியனின் ஆணையில் சண்டை தடுக்கப்படுகிறது.

Hound வெர்சஸ் Mountain
Hound வெர்சஸ் Mountain
HBO

Sandor ``The Hound” Clegane & Gregor “The Mountain” Clegane நடக்க இருக்கும் சண்டைக்கு Cleganebowl எனப் பெயர் வைத்துப் பல காலமாக தியரிக்களை எழுதி வந்தனர் ரசிகர்கள். மூத்தவனான Mountain சிறுவயதிலுமே அரக்கக் குணம் கொண்டவன்தான். அவனது பொம்மைகளை எடுத்து Hound விளையாடிவிட, Hound-ன் முகத்தில் தீயிடுகிறான் Mountain. Oberyn Martell ஆரம்பித்து வைத்த Mountainன் முடிவை மொத்தமாய் Hound முடிக்க வேண்டும். Oberyn Martell-ன் தலையைப் பிதுக்கிக் கொன்றதைவிட இன்னும் அதிக வாஞ்சையுடன் Mountain ன் தலையை, தன் தம்பியின் தலையைக் கொய்ய வேண்டும். இதுதான் இருவரது ஆசையும். அதற்குரிய Perfect Stage ஆக அமைகிறது The Bells.

ரெட் கீப் மொத்தமாய் DRACARYS வசம் தீயில் மூழ்கிக் கிடக்கிறது. கட்டடங்கள் தீயில் மிதக்கின்றன. `மரணம் எளிதில் அமைந்துவிடாதா?' என அனைவரும் எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருக்கும் தருணமது. கிட்டத்தட்ட சென்னையின் வெயிலை ஒத்திருக்கும் தட்பவெப்பம். செர்ஸியைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கிறார்கள். ஆர்யாவைத் திரும்பப்போகச் சொல்லிவிட்டு, Hound தன் வாழ்வின் தேடலை நோக்கி, எக்கணமும் நொறுங்கக் காத்திருக்கும் இடத்துக்குள் வேகமாக முன்னேறுகிறான். Hound-ம் Mountain-ம் சந்தித்துக்கொள்கிறார்கள். வாழ்நாளுக்கான அந்நொடியில் சரியக்காத்திருக்கும் கட்டடத்துக்குள் இருவரும் அமைதியாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். தன்னுடைய ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிதைத்த Mountain-ன் கடைசி நாள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறான் Hound. The dead உடன் நடைபெற்ற போரின் காயங்களில் இருந்தே மீளாத Hound-க்கு உத்வேகம் அளிக்க, செர்ஸியின் படையிலிருந்து சில வீரர்கள் தானாய் வந்து Hound-ன் வாளுக்குப் பயிற்சி தருகிறார்கள். மெய்ஸ்ட்டர் Qyburn-ஐ Mountain அணுகிய விதத்திலேயே செர்ஸிக்கு அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பது புரிந்திருக்கும். பழிதீர்த்தலுக்கான உச்சபட்ச வெறியிலும், கொல்ல முடியாத ஒருவனை என்ன செய்ய முடியும். நாம் எதற்கு அஞ்சுவோமோ, அதற்கும் துணிய வேண்டும். காலம் முழுவதிலும் நெருப்புக்கு அஞ்சும் Hound, அதே தீப்பிழம்பில் `மூழ்கிச் சாவோம் வா' எனத் தன் சகோதரனைத் தீக்குள் உள் அழைத்துச் செல்கிறான். Let it be fear!

Hound வெர்சஸ் Mountain
Hound வெர்சஸ் Mountain
HBO

ஜெய்மியும் செர்ஸியும் ஒன்றாய்ப் பிறந்தவர்கள். ஒன்றாகவே மடிந்தும் போகிறார்கள். முதல் சீஸனில் ப்ரானை கீழே தள்ளிவிடுவதில் ஆரம்பிக்கிறது இருவருக்குமான எல்லாம். ஜெய்மிக்கு செர்ஸியைக் காப்பாற்றுவதைவிடவும் பெரிய விஷயம் எதுவுமில்லை. கிங்ஸ்லேயராக தான் செய்த காரியத்துக்கும் பின்னும் ஜெய்மி அத்தனை உண்மையுள்ளவனாக இருப்பான். அந்தக் குற்றத்தின்பால் வாழும் வாழ்க்கைதான் அவனுக்கு வாய்த்தது. (இதுவரையிலும் கிங்ஸ்லேயர்கள் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்தத் தீங்கும் செய்ததில்லை என்பது தனிக்கதை. மேட் கிங், ஜொஃப்ரி லானிஸ்டர் இருவரும் ராஜாவாக இருந்து யாருக்கு என்ன பயன்?)

ஜெய்மி , செர்ஸி
ஜெய்மி , செர்ஸி
HBO

ஜெய்மிக்கு செர்ஸிதான் எல்லாம். செர்ஸிக்கு குழந்தைகள்தான் எல்லாம். குழந்தைகள், அரியணை என்பதைக் கடந்துதான் ஜெய்மி வருகிறான். அதனால்தான் ஜெய்மியைக் கொல்ல ஆள் அனுப்புகிறாள். அவளது தந்தை புது கல்யாணத்துக்கு ஆயத்தமாகச் சொல்லும் போது அதற்கும் சம்மதிக்கிறாள். ஆனால், ஜெய்மி அப்படியில்லை, அவனுக்கு Nothing Else matters. அவனுக்கு எல்லாம் அவள். மகனின் உடல் கிடத்தப்பட்டு இருக்கும் நிலையிலும், இருவரும் காதல் கொள்கிறார்கள். அதுதான் ஜெய்மி.எங்கேனும் தப்பித்து வாழ்ந்துகொள்ளுங்கள் என டிரியன் யோசனை தருகிறான். அதற்குரிய எல்லா வழிகளையும் உலகின் தலைசிறந்த ஸ்மக்ளரை வைத்துச் செய்கிறான். டிரியன் கேட்கும் உதவி ஜெய்மியை டொத்ராக்கிகளிடமிருந்து தப்பிக்க வைக்கவா, மக்களைத் தப்பிக்க வைக்கவா, இல்லை ஜெய்மி, செர்ஸீயைத் தப்பிக்க வைக்கவா என்பதெல்லாம் அவர் அவருக்கான Interpretation. ஆனால், அந்தப் பாதை தற்போது இல்லை. DRACARYS அவள் அரியணை வாழ்க்கையை மொத்தமாகச் சிதைத்துவிட்டது. செர்ஸி கவலைகொள்கிறாள். குழந்தை என்கிறாள். ஜெய்மி Nothing else Matters என செர்ஸியைக் கட்டியணைக்கிறான். அவனுக்கான முடிவு அதுதான். Nothing Else Matters!

நிகழும் துர்சம்பவங்களுக்கு இடையே, கிரேஜாய் ஜெய்மியை கொன்றுவிட்டு சந்தோஷமடைவதை எல்லாம் சிலாகிக்க வார்த்தைகள் போதவில்லை.

டெனேரியஸ் கிங்ஸ் லேண்டிங் வருவது போல், முதல் சீஸனில் கனவு காண்பாள். ஆனால், அவள் காண இருக்கும் கிங்ஸ் லேண்டிங் இப்படி மண்டை ஓடுகளையும், சாம்பல்களையும், பிணக் குவியல்களையும் கொண்டிருக்கும் என அவளே நினைத்திருக்க மாட்டாள். அப்படியே நினைத்திருந்தாலும், அதை அவளே செய்யவிருக்கிறாள் என்பதை நிச்சயம் கற்பனை செய்திருக்க மாட்டாள். டெனேரியஸ் மேட் குயினாகி இருக்கிறாள். தற்போதைய தேவை, ஒரு Queen Slayer!