Published:Updated:

`ஆனஸ்ட்' பாலாஜிக்கும், ஷிவானி - கேபி சண்டைக்கும் என்ன சம்பந்தம்? பிக்பாஸ் – நாள் 38

பிக்பாஸ் – நாள் 38

‘பாலாஜியோடு’ எப்படி பேசுவது என்று நேற்று தயங்கிக் கொண்டிருந்த சனம், இன்று ஜோதியில் கலக்க முயன்றார். பாட்டிக்காக தன் ‘மகனிடம்’ தூது போனார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 38

Published:Updated:

`ஆனஸ்ட்' பாலாஜிக்கும், ஷிவானி - கேபி சண்டைக்கும் என்ன சம்பந்தம்? பிக்பாஸ் – நாள் 38

‘பாலாஜியோடு’ எப்படி பேசுவது என்று நேற்று தயங்கிக் கொண்டிருந்த சனம், இன்று ஜோதியில் கலக்க முயன்றார். பாட்டிக்காக தன் ‘மகனிடம்’ தூது போனார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 38

பிக்பாஸ் – நாள் 38
‘திருடத் தெரிஞ்சாலும் பதுக்கத் தெரியணும்’ என்பது ஒரு பழமொழி. இது சோமிற்கு தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் நன்கு தெரியும். ‘தவறான’ முறையில் சம்பாதிப்பதை விடவும் அதை ‘சரியான’ வகையில் பாதுகாப்பது வைப்பதுதான் அதிக சவால்.

அமுல் டப்பா சோம் பத்திரத்தை ‘(அ)பத்திரமான’ இடத்தில் வைத்திருந்ததைப் பற்றி நேற்று கிண்டலாக எழுதியிருந்தேன். அது உண்மையாயிற்று. தொழிற்முறை திருடன் போல நேர்த்தியாக அதை சுட்டு விட்டார் பாலாஜி.

தட்டுத் தடுமாறி திருடியதை எவரும் யூகிக்க முடியாத இடத்தில் ஒளித்து வைக்கத் தவறி விட்டார் சோம். இந்த லட்சணத்தில் வீட்டில் உள்ள கேமராக்கள் அனைத்தின் முன்பும் நின்று ‘பாஸ்.. job done’ என்று பெருமிதம் பொங்க வாக்குமூலம் தந்ததில் மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

‘இந்தாள் ஒரு வெத்துவேட்டு. பத்திரத்தையே காப்பாத்த துப்பில்லே. என்னை எங்க காப்பாத்தப் போறான்’ என்று புன்னகைப் பீரங்கி ரம்யாவே பின்னர் கழுவி ஊற்றும்படியாகி ஆகிவிட்டது சோமின் நிலைமை. ஆனால் மனிதர் அதற்கும் அசராமல் சிரித்துக் கொண்டேதான் இருந்தார். (ரமேஷின் இன்னொரு வெர்ஷன்).

ஓகே... 37-ம் நாளின் தொடர்ச்சியாக என்ன நடந்ததென்று பார்ப்போம்.

“யார் மேலலாம் டவுட் இருக்கு?” என்று அர்ச்சனா பாட்டி சபையைக் கூட்டினார். அமைதியாக இருப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்வார்கள். அது சரிதான் போல. ‘சோம் மேலதான் எனக்கு பயங்கர டவுட்’ என்று துல்லியமாக யூகித்துச் சொன்னார் ரமேஷ். “ஆளே இல்லாத பங்களாவுக்கு வாட்ச்மேனா இருந்துட்டமே" என்று பத்திரம் இல்லாத லாக்கரை காவல் காக்க நேர்ந்த பங்கத்தைப் பற்றி நிஷா சொன்னது சிரிக்க வைத்தது.

‘நாய்க்கு பேரு வெச்சியே... சோறு வெச்சியா?” என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் கேட்கும் வசனம் பிரபலமானது. இதைப் போல அத்தனை பெரிய லாக்கர் வாங்கிய பாட்டி அதற்கொரு பூட்டும் வாங்கியிருக்கலாம்.

“வீடு முழுக்க தேடினா சிக்கப் போவுது" என்கிற டெரரான ஐடியாவைத் தந்தார் பாலாஜி. ஆனால், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல ‘என் படுக்கையை சோதனை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று சொல்வதின் மூலம் சொதப்பி காட்டிக் கொடுத்துக் கொண்டார் கேப்ரியல்லா.

பத்திரத்தைத் தேடி வீடே அலைபாய்ந்து கொண்டிருந்த போது ஓர் உருவம் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. ஆம். அது நம்ம ரமேஷ்தான். ‘சோம்தான் திருடன்’ன்னு கண்டுபிடிச்சு சொன்னப்பறம் எனக்கென்ன வேலை’ என்கிற மாதிரி ஏகாந்தமாக படுத்துக் கொண்டிருந்தார் ரமேஷ்.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

‘முன்னர் திருடிய பொருட்களை நாமே எடுத்து தந்து விட்டால் சந்தேகம் நம் மீது வராது’ என்று சோம் & குழு நினைத்ததோ என்னவோ... நகை, தங்கக்கட்டி போன்றவற்றை மறைவிடத்தில் இருந்து எடுத்து தாங்கள் கண்டுபிடித்தது போல் நடித்தார்கள்.

இப்படியாக மக்கள் செய்து கொண்டிருந்த அலப்பறை பிக்பாஸிற்கே போர் அடித்ததோ என்னவோ... ‘இந்த டாஸ்க் நிறுத்தப்படுகிறது’ என்று பஸ்ஸர் அடித்தார். ஆனாலும் பாலாஜி தன் முயற்சியை நிறுத்தவில்லை. சரியாக யூகித்து சோமின் படுக்கையின் அடியில் இருந்த பத்திரத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். (பாம்பின் கால் பாம்பறியும்).

தங்களின் நேர்மையான உழைப்பு (?!) வீண் போய் விட்டதே என்கிற ஆத்திரத்தில் பாலாஜியிடம் கேபி சரமாரியாக பல கேள்விகள் எழுப்பினார். அது பெரிய வாக்குவாதத்திற்கு இட்டுச் சென்றது. ‘யாராவது ஹானஸ்ட்டா இருங்கப்பா’ என்கிற வசனத்தை முதலில் சொன்னவர் பாலாஜிதான். ஆனால் கேபி அப்படிக் கேட்டதற்கு கோபித்துக் கொண்டார்.

பிறகு ‘ஹானஸ்ட்’ என்கிற வார்த்தையை பிடித்துக் கொண்டு ஆளாளுக்கு கொலைவெறியுடன் ஜல்லி அடித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்று ஹமாம் சோப் என்பது சரிதான். அதற்காக ‘நேர்மை’ என்கிற வார்த்தையை இத்தனை முறை சொல்ல வேண்டுமா என்ன?

ஆனால் இந்த வாக்குவாதத்திற்கான விதையைப் போட்டவர் ‘சைலன்ட் கில்லர்’ ரம்யாதான். ‘நீங்க நாலு பேரும்தான் எடுத்தீங்க. நான் பார்த்தேன்’ என்று நாட்டாமை படத்தின் சிறுவன் மாதிரி மழலை குரலில் அவர் வாக்குமூலம் தந்தார். அவர் குறிப்பிட்டது பாலாஜி, ஷிவானி மற்றும் சுச்சி. இந்த சாகசத்தை பாலாஜி தனியாகச் செய்திருந்தும், தங்களின் பெயர் கூடவே இழுக்கப்பட்டதில் ஷிவானிக்கும் சுச்சிக்கும் கோபம் வந்துவிட்டது. (திருட்டு விளையாட்டிலும் அறச்சீற்றம் கொள்வது நல்ல காமெடி).

வெளியில் வந்த பாலாஜியிடம் ‘நேர்மை பத்தி பேசினாங்களே’ என்று ஷிவானி போட்டுக் கொடுக்க அதற்கு சுச்சியும் பக்கவாத்தியம் வாசிக்க ஏவப்பட்ட ஆயுதம் போல உள்ளே சென்றார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

நெருங்கிய தோழிகளான ஷிவானிக்கும் கேபிக்கும் இடையேயும் இப்போது முட்டிக் கொண்டது. ‘மனித மனதின் எல்லாப் பிரச்னைகளுக்குமான ஆணிவேரைத் தேடிச் சென்றால் அது காமத்தில் சென்று முடியும்’ என்று சொன்னார் நவீன உளவியலின் தந்தையான ‘சிக்மண்ட் ஃப்ராய்ட்’. கேட்பதற்கு சங்கடமாக இருந்தாலும் இதுதான் அடிப்படையான உண்மை. இதைப் பற்றி சற்று ஆராய்வோம்.

பாலாஜியுடன் அடிக்கடி சண்டையிட்டாலும் அவரை ஆதரிக்காமல் சனத்தால் இருக்க முடியவில்லை. இந்தச் சண்டையின் இடையே கூட பாலாஜிக்கு ஆதரவாக அவர் பேசியதைக் கவனிக்கலாம்.

ஷிவானி பாலாஜியுடன் நெருங்கிப் பழகுவதால் அவர் மீது கேப்ரியில்லாவிற்கு உள்ளுற புகைச்சல் இருந்திருக்கலாம். ‘என்னை தங்கச்சி-ன்னு சொல்லாத’ என்று கேப்ரியில்லா முன்பு பாலாஜியிடம் சிணுங்கியது நினைவிருக்கலாம். இப்போது இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் சுச்சி.

வந்த நாள் முதலே பாலாஜியின் ஆதரவாளர் போல் சுச்சி செயல்பட்டதை கவனிக்கலாம். குறிப்பாக ‘விவாத மன்றத்தில்’ பாலாஜிக்கான சலுகைகள் அவரிடமிருந்து மிக வெளிப்படையாக தென்பட்டன. இப்போது, இந்தப் பத்திர விஷயத்தில் மிக அப்பட்டமாகவே பாலாஜிக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். “அதென்ன பாலாஜியை மட்டும் குறை சொல்றீங்க?” என்று ஸ்பிரிங் போல் குதித்துக் கொண்டிருந்தார்.

எந்தவொரு கூட்டத்திலும் மிக வலிமையாக உள்ள ஆண் மிருகத்தையே பெண் மிருகம் தேர்ந்தெடுக்கும். இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சமாச்சாரம். மனிதனும் ஏறத்தாழ சமூக விலங்குதான். எனவே உடல், புத்தி, செல்வம், செல்வாக்கு என்பது போன்ற விஷயங்களில் வலிமையாக உள்ள ஆணின் ஆதரவிற்காக பெண்களிடம் இடையே போட்டியும் புகைச்சலும் இருப்பது இயல்பானது. இதில் அழகு கூட இரண்டாம் பட்சம்தான். இதன் மறுமுனையில் பலவீனமான ஆண்களின் மீது பெண்களுக்கு மதிப்பேதும் இருக்காது. (சோமு குறித்த ரம்யாவின் கமென்ட் ஓர் உதாரணம்).

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

சற்று உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் இதிலுள்ள நிதர்சனம் புரியும். இது ஆதிக்காலத்திலிருந்து நம்முள் உறைந்திருக்கிற பரிணாம வளர்ச்சி. இப்போது பிக்பாஸ் வீட்டு நிலைமையை இதனுடன் இணைத்துப் பாருங்கள். அண்ணாமலை படத்தின் வசனம் போல ‘கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்’.

அதே சமயத்தில் இதை பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. சில விதிவிலக்குகளும் உண்டு. உதாரணம் ரம்யா. அவர் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் உள்ளவர். எந்தவொரு சிக்கலான சூழலிலும் தன் புன்னகைக்குப் பின்னால் உள்ள புத்தியைப் பயன்படுத்தி அவரால் வெளியே வர முடியும்.

‘பாலாஜி தன்னால கோபப்படலே. கோபப்படுத்தி அனுப்பினாங்க’ என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் ரியோ. இதில் என்னவொரு வேடிக்கை என்றால் சுச்சி பேச முன் வரும் சில சமயங்களில் அவரைக் கோபத்துடன் தடுத்தார் பாலாஜி. இது ஒருவகையில் சுச்சிக்கு அவமானமான விஷயம். அதே சமயத்தில் ஷிவானியின் மீது பாலாஜியால் கோபத்தைக் காண்பிக்க முடியவில்லை. இதிலிருப்பதும் எளிமையான உண்மைதான்.

இதிலிருக்கும் இன்னொரு உள்ளிழை என்னவென்றால் கேபிக்கும் சுச்சிக்கும் இடையில் ஏதோ பயங்கரமான விரோதப் புகை இருக்கிறது. ‘விவாத மன்றத்தில் அவங்க ஜட்ஜ்ஜா போயிட்டாங்க. இல்லைன்னா அவங்க மேல புகார் எழுதியிருப்பேன்’ என்று கேபி பொதுச்சபையில் சொன்னது நினைவிருக்கலாம். எனவே வருங்காலத்தில் இருவருக்கும் இடையே நேரடியான சண்டை வெடிக்கலாம்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த பாலாஜியிடம் ‘சுச்சி உங்களை ரொம்ப ஏத்தி விடறா மாதிரி தெரியுது’ என்று எச்சரித்தார் சம்யுக்தா. இரண்டு ஆண்கள் எந்தவொரு மனத்தடையுமின்றி நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும். ஆனால் இரண்டு பெண்களுக்கு இடையில் என்னதான் நெருக்கமான நட்பு இருந்தாலும் ஏதோவொரு விரோதப் புள்ளி அவர்களுக்கு நடுவே இருந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான உண்மை. (விதிவிலக்குகள் இருக்கலாம்)

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

“அப்படில்லாம் மத்தவங்க பேச்சுக்கு நான் ஆட மாட்டேன்" என்று இதை தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டார் பாலாஜி. அவர் இப்படி சொன்னது இப்போது ஷிவானிக்கு உறுத்த ‘நான் உங்களுக்காக ஒண்ணும் வரலை’ என்றார். இப்போது இது பாலாஜிக்கு உறுத்தியது. ‘நான் உன்னைச் சொல்லலை’ என்று அவர் இறங்கி வந்தவுடன் ‘நான் உங்களுக்காக எண்பது சதவீதமும் எனக்காக இருபது சதவீதமும் வந்தேன்’ என்று இப்போது பிளேட்டை திருப்பிப் போட்டார் ஷிவானி. ஓர் ஆணை எப்போது உயர்த்திப் பேச வேண்டும், எப்போது கோமாளியாக்கி வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது போன்ற உத்திகள் பெண்களுக்கு அநாயசமாக வரும்.

38-ம் நாள் விடிந்தது.

காலைப் பாட்டு முடிந்ததும் வழக்கம் போல் ‘குட்மார்னிங் பிக்பாஸ்’ என்று கோரஸாக கத்தினார்கள். ‘காலை வணக்கம்’ என்று இனிமேல் சொல்லலாம் என்று ஆரி சொல்லியிருந்ததை இவர்கள் மதிப்பதில்லை என்று தெரிகிறது.

மார்னிங் டாஸ்க். ‘வெத்தலை போட்டுக் கொண்டு கூடி பேச வேண்டுமாம்’. வெத்திலை போட்ட குரலின் தொனியை மிகச் சரியாக கொண்டு வந்தார் ரியோ. ஆரி இதை முயன்ற போது ‘டாக்டரை அழைக்க வேண்டுமோ?’ என்று பீதியாகி விட்டது. அந்தளவிற்கு வாய்குழறி வாதம் வந்தது போல் பேசி பயமுறுத்தினார் ஆரி. ‘ஹே. இது அஜித் வாய்ஸூப்பா’ என்று வில்லங்கமான கமெண்ட்டை தந்தார் பாலாஜி. இதை எப்படி சென்சார் செய்யாமல் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. ‘தல ரசிகர்கள் பாலாஜி மீது பாயாமல் இருக்க’ திருப்பதி பாலாஜிதான் காப்பாற்ற வேண்டும்.

மறுபடியும் அந்த வெட்டி டாஸ்க் துவங்கியது. இதற்காக ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட ஒப்பனையுடன் வந்தார்கள். திடீரென்று நரைகூடி கிழப்பருவமெய்தி வந்தார் அர்ச்சனா.

நிஷாவின் உடை இன்று காமெடியாக இருந்தது. ‘ஏதொவொரு படத்துல நாகேஷ் இப்படித்தான் பொம்பளை வேஷம் பண்ணிக்கிட்டு வருவாரு’ என்றார் அர்ச்சனா. நிஷாவை பல சமயங்களில் பயங்கரமாக பங்கம் செய்கிறார் ரியோ. இது நகைச்சுவையாகத் தெரிவது ஓகே. ஆனால் ‘ஏ... கடல் பன்னி’ என்று அவர் கூப்பிடுவது போன்ற சில இடங்களில் எல்லை மீறிப் போயிற்று. இருவருக்குள்ளும் அவ்வாறான நட்பும் உரிமையும் இருக்கலாம். ஆனால் தன்னை யாராவது மரியாதைக் குறைவாக நடத்தி விட்டால் சீரியஸ் ஆகும் ரியோ, நிஷாவை ‘காமெடி பீஸாக’ மற்றவர்களின் முன்னால் தொடர்ந்து நிறுவும் அபத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

‘ரம்யாவின் உடையலங்காரமும் ஒப்பனையும் இன்று மிகச்சிறப்பாக இருந்தது’ என்கிற உண்மையை எழுதினால் ‘ரம்யா ஆர்மியா?’ என்று பின்னூட்டத்தில் வந்து கேட்பார்கள். எனவே ‘இன்று மிகச் சுமாரான தோற்றத்தில் இருந்தார் ரம்யா’ என்று சொல்லிவிடுவது பாதுகாப்பு.

பாலாஜியிடம்தான் பத்திரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி அவரிடமிருந்து வாங்குவது என்பது தெரியாமல் முழித்தார்கள். பாலாஜியிடம் இதற்காக விதம் விதமாகப் பேசிப் பார்த்தார் அர்ச்சனா பாட்டி. ஆனால் பாலாஜி அசருவதாக இல்லை. ‘பாட்டியாவது... போட்டியாவது... எனக்கு பத்திரம்தான் முக்கியம்’ என்று பிடிவாதம் பிடித்தார்.

ஒருவகையில் மிகச் சொதப்பலாக சென்று கொண்டிருந்த இந்த டாஸ்க்கை இன்னும் கொஞ்ச நேரம் இழுத்தது பாலாஜியின் திறமை என்றுதான் சொல்ல வேண்டும். “பீரோல இருந்து மொதல்ல எடுத்தது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்... அதுக்கப்புறம் தந்துடுவேன்" என்று முதலில் சொன்னார் பாலாஜி. எனவே அவரைச் சமாளிக்க ‘நான்தாம்ப்பா எடுத்தேன்’ என்று நம்பமுடியாத பொய்யை அர்ச்சனா சொன்னாலும் ‘அப்பக்கூட தர மாட்டேன்’ என்று மறுபடியும் ஆரம்பித்தார் பாலாஜி. ‘கத்தினா குத்துவேன். குத்தினா கத்துவேன்’ என்பதுதான் பாலாஜியின் ஸ்டைல்.

‘பாட்டியை நாங்கள்லாம் சாமியா கும்பிடுவோம். ஒரு சின்னப்பையன் அவங்களை அசிங்கப்படுத்தறான்’ என்று அனிதா கமென்ட் அடித்த போது ‘பாட்டியை நானும் கும்பிடுறேன். ஆனா பத்திரம்தர மாட்டேன்’ என்று பாலாஜி செய்த அலப்பறை ரகளையான காமெடி. இன்று அவருடைய உடல்மொழியில் சற்று எம்.ஆர்.ராதா வந்துவிட்டதைப் போல் தெரிந்தது.

இதற்கிடையில் ‘நான்தான் எடுத்தேன்’ என்று கூத்தில் கோமாளி போல் சுச்சியும் எதையோ ஒரு உத்தியை முயற்சி செய்ய ‘கம்முனு கெட’ என்று அவரை அதட்டி உட்கார வைத்தார் பாலாஜி. ‘வாயை மூடு வேலு’ என்று அர்ச்சனாவிற்கு ஒரு வேல்முருகன் முன்பு இருந்ததைப் போல, இப்போது பாலாஜிக்கு ஒரு சுச்சி.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

“சொத்து எப்படியாவது நாசமாப் போட்டும். நாம சரக்கடிச்சு சந்தோஷமா இருப்போம்" என்று இந்த ரணகளத்திற்கு இடையிலும் ரியோ செய்த கிளுகிளுப்பு சிரிப்பை வரவழைத்தது. நிஷாவை மிகையாக கிண்டல் செய்ததைத் தவிர இந்த டாஸ்க்கில் ரியோவின் காமெடி பல இடங்களில் நன்றாகவே இருந்தது.

பத்திரத்தை தரமாட்டேன் என்பதை விதம் விதமான வார்த்தைகளில் சொல்லி அடம்பிடித்த பாலாஜியை உள்ளூற எல்லோருமே வெறுத்தார்கள். அவர்களின் வெறுப்பை இயன்ற வரையில் உயர்த்திச் சென்றார் பாலாஜி. எரிச்சல் மூட்டும் கேரக்ட்டராக இருந்தாலும் ஒருவகையில் பிக்பாஸின் இலக்கணங்களுக்கு ஏற்ப விளையாடுபவர் பாலாஜிதான்.

‘பாலாஜியோடு’ எப்படி பேசுவது என்று நேற்று தயங்கிக் கொண்டிருந்த சனம், இன்று ஜோதியில் கலக்க முயன்றார். பாட்டிக்காக தன் ‘மகனிடம்’ தூது போனார்.

பாலாஜி தொடர்ந்து செய்த வெறுப்பினால் ‘போங்கடா. அவனை அடிச்சுப் போட்டு பத்திரத்தை எடுத்து வாங்க’ என்றொரு வயலன்ட்டான ஐடியாவை பாட்டி தர, ‘அமெரிக்க ரிட்டன்’ ரியோ அதற்கு வலுவான ஆட்சேபம் செய்தார். ‘வன்முறையில் நம்பிக்கையில்லை’ என்று அவர் காந்தியிஸம் பேசினாலும் நிதர்சனம் அவருக்குப் புரிந்திருந்ததால் வேறு வழியில்லாமல் அஹிம்சைக்கு மாறினார்.

இது மட்டுமில்லாமல், ‘உங்க கையெழுத்து இல்லாம அந்தப் பத்திரம் செல்லாது. போய் ரிஜிஸ்டர் ஆபிசில் மாத்திக்கலாம்’ என்கிற உருப்படியான ஐடியாவை ரியோ முன்மொழிய ‘ஆமாமாம்’ என்று பின்பாட்டு பாடினார் ஆரி.

ஒரு கட்டத்தில், பாட்டியின் செட்டில்மென்டுக்கு ஒருவழியாக இணங்கி வந்த பாலாஜி அது தனக்கு சாதகமாக இல்லாததால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார்.

"பத்திரம் முக்கியமா. சரக்கு முக்கியமா?” என்று ஆலோசித்த குடும்பம் ‘சரக்குதான் முக்கியம்’ என்கிற ஆரோக்கியமான முடிவிற்கு வந்து பாட்டு பாடி நடனம் ஆடி கொண்டாடியது.

பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

இவர்களின் இழுவை பிக்பாஸிற்கே கொலைவெறியை ஏற்றியது போல. ‘இந்த டாஸ்க் இத்துடன் நிறைவு பெறுகிறது’ என்கிற அறிவிப்பின் மூலம் ஆட்டத்தைக் கலைத்தார்.

‘பாலாஜி கிட்ட பத்திரம் இருக்கறதால... அவங்க டீமிற்குத்தான் மொத்த பாயிண்ட்டும் போகுமா?’ என்று அதிமுக்கியமான கேள்வியை நிஷா முன்வைக்க ‘இல்லை. சொத்தைப் பிரிக்க பாட்டிக்குத்தான் முழு பவர் இருக்கு’ என்று சொல்லி ஆறுதல் அடைந்தார் ரியோ.

இதற்கான பிக்பாஸின் அறிவிப்பை மீண்டும் கேட்டுப் பார்த்தேன். ‘பத்திரம் திருடு போகாத நிலையில் பாட்டி அவருடைய விருப்பம் போல் சொத்தைப் பங்கிடலாம்’ என்பது போல்தான் அந்த அறிவிப்பு இருந்தது. எனவே பாலாஜி அணிக்கு முழு மதிப்பெண்களும் வரக்கூடும். இது பாலாஜிக்கும் நன்கு தெரிந்திருக்கிறது. எனவேதான் பிடிவாதத்தைப் பின்பற்றினார். அதே சமயத்தில் மற்றவர்களின் பகைமையை முழுவதுமாக பெற்றுக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரைதையுணர்ச்சியும் அவரிடம் சிறிது இருந்தது.

மொத்தத்தில் இந்த டாஸ்க் அத்தனை சுவாரஸ்யமாக இல்லாமல் சொதப்பலாக சென்றது. ரியோ, நிஷா, சோம் ஆகியோர் செய்த காமெடி மட்டுமே ஆறுதல். கேபி, ஷிவானி, சுச்சி, சனம் ஆகியோர்களின் நேரடி மற்றும் மறைமுக உணர்ச்சிமோதல்களின் மூலம் மனிதமனம் செயல்படும் சில ரகசியங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பிக்பாஸ் – நாள் 38
பிக்பாஸ் – நாள் 38

பத்திரத்தை அம்போவென்று விட்டு விட்டு தீபாவளி பலகாரம் செய்வதற்கு மக்கள் தயாராக இருந்தார்கள். எண்ணைய்யை தண்ணீர் போல தாராளமாக ஊற்றி அதில் முறுக்கு மாதிரியான ஒரு வஸ்து வெளியே வந்ததைக் கண்டு வீடே குதூகலித்தது.

மொத்தத்தில் இந்த லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் என்பது போட்டியாளர்களுக்கு சோதனையாக அமைந்ததோ இல்லையோ, இதைக் கடந்து வந்தது பார்வையாளர்களுக்குத்தான் பெரிய சவாலாக இருந்திருக்கும்.