Published:Updated:

வெளியேறப்போவது சுச்சியா, ஷிவானியா... பாலாஜி மாமாவைக் கலாய்த்த ரம்யா! பிக்பாஸ் – நாள் 46

பிக்பாஸ் – நாள் 46

இதுவரை ரம்யா யாரைப் பற்றியும் புறணி பேசி பார்த்ததில்லை. ஆனால் அவராலேயே பொறுக்க முடியாத அளவிற்கு பாலாஜி – ஷவானியின் ரொமான்ஸ் அலப்பறைகள் அதிகமாகி விட்டன போல. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 46

Published:Updated:

வெளியேறப்போவது சுச்சியா, ஷிவானியா... பாலாஜி மாமாவைக் கலாய்த்த ரம்யா! பிக்பாஸ் – நாள் 46

இதுவரை ரம்யா யாரைப் பற்றியும் புறணி பேசி பார்த்ததில்லை. ஆனால் அவராலேயே பொறுக்க முடியாத அளவிற்கு பாலாஜி – ஷவானியின் ரொமான்ஸ் அலப்பறைகள் அதிகமாகி விட்டன போல. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 46

பிக்பாஸ் – நாள் 46
‘மணிக்கூண்டு டாஸ்க்’ ஒருவழியாக இன்று முடிவடைந்ததில் போட்டியாளர்களை விடவும் பார்வையாளர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும். இது நேரத்தை உணர்த்தும் அருமையான விஷயம் என்றாலும் சலிப்பைத் தருவதாக அமைந்தது.

ஆனால் ஒன்று கவனித்தீர்களா? இந்த மூன்று நாட்களில் போட்டியாளர்களுக்குள் சண்டையே நடக்கவில்லை. மாறாக சந்தோஷமே அதிகம் நிலவியது. விநாடியை எண்ணும் சலிப்பான வேலையை உற்சாகமாக மாற்றிக் கொள்ள அவர்கள் சில உத்திகளை கண்டுபிடித்தார்கள். கடினமான பணிக்குப் பின்னால் சோர்வைப் போக்கிக் கொள்ள தங்களுக்குள் ஜாலியாக பேசிக் கொண்டார்கள்.

ஆக்கப்பூர்வமாகவும் கடினமாகவும் உழைப்பவனுக்கு அற்பமான விஷயங்களில் செலவு செய்ய நேரம் இருக்காது என்பதே இதிலுள்ள நீதி.

இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் சிரமப்பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களைத் தொடர்ந்து கண்காணித்து நேரத்தை கச்சிதமாக குறித்துக் கொண்டிருக்கும் வேலையை செய்த பிக்பாஸ் டீமின் அசாதாரண உழைப்பையும் பாராட்ட வேண்டும்.

ஓகே... 46வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

அணி மூன்று (கேபி, ஆரி, ரியோ) கடிகாரமாக இயங்கிக் கொண்டிருந்த நள்ளிரவுச் சமயத்தில் ஒரு பாடலை ஒலிபரப்பி (‘கண்ணுக்குள் நூறு நிலவா’) அதற்கு ஸ்லோமோஷனில் மக்கள் ஆட வேண்டும் என்றார் பிக்பாஸ். அனிதாவின் டிக்ஷனரியில் ஸ்பேஸ் என்கிற வார்த்தையே கிடையாது போல. இதற்கும் வேகத்தைக் குறைக்காமல் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். பாலாஜி வழக்கம் போல் ஷிவானி இருந்த ஏரியாவை விட்டு நகராமல், அவருக்குத் தெரிந்த ஒரே ‘அமால்டுமால்’ நடன அசைவை மெதுவாக செய்து கொண்டிருந்தார்.

ஆஜீத் ரொமான்டிக் எக்ஸ்பிரஷனை வானத்தில் இருந்து தேடி இறக்கிக் கொண்டிருக்க, சோமும் அர்ச்சனாவும் ‘டிக்கிலோனா’ பொசிஷனில் அபிநயம் பிடித்தார்கள். மெதுவாக செய்யும் இந்த டாஸ்க் ரமேஷிற்குப் பிடித்ததாக இருந்திருக்க வேண்டும். வந்த நாள் முதலே அவர் ஸ்லோமோஷனில்தானே இயங்கிக் கொண்டிருக்கிறார்?!

அணி எண் மூன்று, 3 மணி 29 நிமிடங்களில் தனது டாஸ்க்கை முடித்தது. அடுத்ததாக அணி எண் நான்கு களத்தில் இறங்கியது. அர்ச்சனாவிற்கும் சாமிற்கும் சலிப்பு தெரியாதவாறு விதம் விதமாக சேஷ்டைகள் செய்து அவர்களை சிரிக்க வைத்தார் சோம். இதர போட்டியாளர்கள் விநாடியை எப்படி எண்ணுவார்கள் என்று அவர் செய்து காண்பிக்க அர்ச்சனா மற்றும் சம்யுக்தாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இவர்கள் நேரத்தைக் கணிக்க மூன்று மணி 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டார்கள். அடுத்ததாக அணி எண் ஐந்து களத்தில் இறங்கியது.

வழக்கம் போல் கேமராவின் முன்பு தனியாக அனத்திக் கொண்டிருந்தார் சுச்சி. பாலாஜி மரமண்டையாக இருந்து மற்றவர்கள் சொல்படி ஆடிக் கொண்டிருப்பதாகவும் தனக்கு எதிராக உலக சதி நடப்பதாகவும் புலம்பிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து பரிதாபமாக இருந்தது. ‘இந்த வீட்டை விட்டு போகவே மனசில்லை’ என்று நேற்று சர்காஸ்டிக்காக சொல்லிக் கொண்டிருந்த அவர், இன்றோ ‘போலியான முகங்களைப் பார்க்கவே பிடிக்கலை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் ஆட்டம் இப்படித்தான் என்று அவருக்குத் தெரியாதா? வெளியுலகத்தில் மட்டும் உண்மை முகங்களா இருக்கின்றன? ‘செம ஹாட் மச்சி', ‘செம பேட் சுச்சி’யாக மாறிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

இறுதி அணி, இறுதிச் சுற்றை 3 மணி 19 நிமிடங்களில் முடித்தது. இத்தோடு ‘மணிக்கூண்டு’ டாஸ்க் முடிந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். (ஹப்பாடா..!). மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘மணி... எட்டு... மணி எட்டு’ என்று கூவி இம்சை தந்து கொண்டிருந்தார் ஷிவானி.

46-ம் நாள் காலை விடிந்தது. ‘ஒரு குச்சி... ஒரு குல்பி’ என்கிற கருத்துள்ள பாடலைப் போட்டார்கள். ஒரு பக்கம் ‘கன்னுக்குட்டி’ ஆவேசமாக துள்ளிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தனியாக நின்று கொண்டு விநோதமான ஸ்டெப்களைப் போட்டு நம்மை கதற வைத்தார் சுச்சி.

‘ரெண்டு நாள்தான் ஆயிருக்கு. ஒரு வாரம் ஆன மாதிரி ஃபீல் வருது. அப்படி பெண்டு நிமிந்திடுச்சு’ என்று அலுத்துக் கொண்டார் ரியோ. (எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு!) ‘அடுத்த வார கேப்டன் சனம்தான்’ என்று வழக்கம் போல் தன் சீண்டலை ஆரம்பித்தார் பாலாஜி. (நிச்சயம் இது இன்னொரு சண்டையில்தான் சென்று முடியப் போகிறது). ‘நீ ஜெயிலுக்குப் போ... ஒய் மீ?' என்று இருவரும் பரஸ்பரம் சீண்டிக் கொண்டார்கள்.

அடுத்ததாக இருசக்கர வாகன டாஸ்க். லேட்டஸ்ட் மாடல் வண்டியை வைத்து ஆண்கள், பெண்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமாம். ஆரிக்கு எப்படியும் ரொமான்ஸ் வராது என்று இவர்களாக முடிவு செய்து ‘நடுவர்’ அணியில் இணைத்து விட்டார்கள். பாவம்! இதர நடுவர்கள் அர்ச்சனா மற்றும் சனம்.

ஷிவானியிடம் முதலில் கடலை போட ஆரம்பித்தவர் சோம். விளைச்சலை நன்றாகவே முயன்றார். இந்தச் சமயத்தில் பாலாஜியின் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல மாறியது. வண்டியின் பின்னால் ஏறிக் கொண்ட ஷிவானி தன் இனிமையான குரலில் ‘பார்த்த முதல் நாளே’ பாடலைப் பாட வண்டி உடனே ஆஃப் ஆகி விட்டது.

ரம்யாவை வசீகரமாகவே இம்ப்ரஸ் செய்தார் ரியோ. தன் அண்ணன் ரமேஷிற்கு வண்டியின் சிறப்பம்சங்களை போனில் சொல்வது போல் பேசி கேபியை கவர முயன்றார் ஆஜீத். ஒரு பொறுப்புள்ள அண்ணனாக தம்பியைக் கண்டிக்காமல் அதில் பெட்ரோல் ஊற்றி காதலை வளர்த்தார் ரமேஷ். ஆனால் ஆஜித் இத்தனை சிரமப்பட்டிருக்கவே வேண்டாம். கேபி வண்டியில் ஏற எப்போதோ தயாராகி விட்டார். சாமிற்கும் பாலாஜிக்கும் இடையிலான உரையாடல் நன்றாகவே இருந்தது. குத்தலான வார்த்தைகளில் பாலாஜியின் ‘காதலை’ கிண்டலடித்தார் சாம்.

இவர்கள் கம்பெனி சேல்ஸ்மேன் போல பேசினாலும் அவற்றின் இடையே ஏதோ ‘ரொமான்ஸ்’ இருந்ததை கண்டுபிடித்த ‘நடுவர் குழு’ ஆஜித் அணிக்கு ‘ஜெர்கின் கோட்’ பரிசளித்து மகிழ்ந்தது.

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘மணிக்கூண்டு’ டாஸ்க்கின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குறைந்த அளவு தவறு செய்த அணி எண்- 4 (சோம், சாம், அர்ச்சனா) வெற்றி பெற்றது. இவர்கள் மூன்று சுற்றுக்கும் சேர்த்து 18 நிமிடங்கள் மட்டுமே தவறு செய்திருந்தார்கள். ரமேஷ் அணி 56 நிமிடங்கள் மட்டுமே தவறு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இதைப் போல அணி எண்- 2 (கேபி, ஆரி, ரியோ) முதல் சுற்றில் வெறும் ஒரு நிமிடம் மட்டுமே தவறு செய்திருந்தார்கள். உண்மையில் இது வியக்கத்தக்க விஷயம். எனவே இவர்கள் சிறப்புத் தகுதியின் பேரில் தேர்வானார்கள்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த ரமேஷ் அணிதான் தேர்வாகியிருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸின் அதிர்ஷடக்காற்று ரியோவின் பக்கம் அடித்தது. அந்த ‘ஒரு நிமிட’ வித்தியாசமும் அதிலிருந்த துல்லியமும் அவர்களுக்குப் பரிசை தேடித் தந்தது.

ஆக... அர்ச்சனா, ரியோ ஆகிய இரு அணிகளிலும் இருந்த ஆறு போட்டியாளர்களும் அடுத்த வார தலைவர் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள். இருப்பதிலேயே மோசம், பாலாஜி அணிதான். மூன்று மணி 4 நிமிடங்கள் தவறு செய்து சாதனை படைத்திருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

‘நான் Duckworth–Lewis–Stern முறையில் ரொம்ப தீவிரமா கணக்கு போட்டுப் பார்த்தேன். அதன்படி நாங்கதான் ரெண்டாவது இடத்திற்கு வந்திருக்கோம்’ என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘இப்படி விளக்கம் சொல்லியே நாசமாப் போகப் போறோம்’ என்று இதை கிண்டல் செய்து கொண்டிருந்தார் ரம்யா. ‘அடிவாங்கினது நாங்க. கப்பு எனக்குத்தான்’ என்கிற காமெடி மாதிரியே இருந்தது பாலாஜியின் விளக்கம். பாலாஜியின் அனத்தலைக் கேட்ட போது ‘தூங்காதே... தம்பி தூங்காதே’ பாடலின் அற்புதமான வரிகள் நினைவிற்கு வந்தன.

பாலாஜி அணியில் இடம் பெற்றதால் பாவம் ரம்யாவும் பங்கம் அடைய வேண்டியதாகி விட்டது. இந்த அணி முதல் சுற்றில் தவறு செய்தது கூட பெரிதில்லை. ஆனால் அதை சமன் செய்வதற்காக இரண்டாம் சுற்றில் செய்த ‘டகால்ட்டி’ வேலை மிகப்பெரிய பிழை. விசாரணை சபையில் இதை இவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம். ஆனால் ரம்யா இதை புன்னகையால் மூடி மழுப்பி விடுவார். ரம்யாவின் புன்னகைக்கு தீவிர ரசிகராக இருக்கும் கமலும் இதை எளிதில் மன்னித்து விடத்தான் போகிறார்.

"ஆக்சுவலி. விநாடியை டிக்... டாக் –ன்னு கணக்குப் போடாம... டிக்… டோக்-ன்னு கணக்குப் போட்டிருந்தா அந்த மில்லி மீட்டர்லாம் சேர்ந்து மல்லிப்பூ மாதிரி பெரிய முழமாகியிருக்காது" என்று இதை வைத்து பெரிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் ஆரி. "சூரியன் வர்றதுக்கு முன்னாடியே அதை நாங்க வர வைச்சிட்டோம்ல" என்று தங்கள் அணியின் பிழையை வைத்து காமெடி செய்தார் நிஷா.

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

"ரெண்டு நிமிஷம் பேசலாமா?" என்று ரம்யாவிடம் வந்த சுச்சி "நான்தான் பெரிய பாவி... பெரிய பாவம் பண்ணிட்டேன். என்னாலதான் நம்ம டீம் தோத்துப் போச்சு..." என்று சம்பந்தமில்லாமல் அனத்த ஆரம்பிக்க, "அதெல்லாம் ஒண்ணுமில்ல. இது டீம் வொர்க். 3 பேரும் தப்பு பண்ணிட்டோம். பாலாஜி வேற லேட்டா எழுந்து வந்து சொதப்பினான்" என்று மிகச்சரியாக ஆறுதல் சொல்லி சுச்சியைத் தேற்றினார் ரம்யா. (சும்மாவா சொல்றோம்... ஸ்வப்னா புத்திசாலின்னு! அவர் நேர்மையானவரும் கூட). சுச்சியின் லாஜிக்கை சகிக்க முடியாமல் பக்கத்திலிருந்த சாம் ‘விருட்டென்று’ எழுந்து கிளம்பி விட்டார்.

‘மணிக்கூண்டிற்காக’ செய்த மகத்தான உழைப்பை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. அந்தந்த அணிகள் பெற்ற வெற்றியின் அளவிற்கு ஏற்ப மதிப்பெண்கள் வந்தன. ஒவ்வொரு அணியும் தனித்தனியாக சென்று ஷாப்பிங் செய்யலாம்

தங்களுக்கு தரப்பட்ட ஆயிரம் மதிப்பெண்களுக்கு ஏற்ப மிக கச்சிதமாக பொருட்களை தேர்ந்தெடுத்தது அர்ச்சனா அணி. அர்ச்சனாவும் நிஷாவும் சமையல் அறை அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் எழுந்தாலும் லக்ஷுரி பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் குடும்பத்தின் பொது நலனை உத்தேசித்தே எடுக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறாக இளைய வயதினர், தங்களுக்குப் பிடித்தமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் வரிசையில் ரமேஷ் அணி சொதப்பிவிட்டது. அவர்கள் பெற்றிருந்த 800 மதிப்பெண்களுக்கு பதிலாக 825 மதிப்புள்ள பொருட்களை எடுத்து விட்டார்கள். எனவே அந்தப் பொருட்களை அவர்கள் இழக்கும் சோகம் நடந்தது. கணக்கிடுவதில் பொதுவாக ரமேஷ் வல்லவர். இருந்தும் இப்படியாகிவிட்டது. தன் அணியில் இருந்த ஷிவானியையும் ஆஜீத்தையும் அவர் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது முன்பே கலந்துரையாடி திட்டமிட்டிருக்க வேண்டும்.

ஏறத்தாழ 9 மணி நேர உழைப்பு இப்படி ஒன்பது நிமிடங்களில் வீணானதில் நமக்கும் கூட படிப்பினை இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம். ‘அதிகமா எடுத்ததை கீழே வைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களே பிக்பாஸ்’ என்று ரமேஷ் பரிதாபமாக முணுமுணுத்தார். ஆனால் பிறகு வந்த அணி சில பொருட்களை கீழே விட்டுச் சென்றிருந்ததைப் பார்க்க முடிந்தது என்ன லாஜிக்கோ?!

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அது பிக்பாஸ் டீமின் ஆர்ட் டிபார்ட்மென்ட். பல டாஸ்க்களில் அவர்களின் ரசனையும் மெனக்கெடலும் தெரிகிறது. இந்த ஷாப்பிங் விஷயத்திற்காக ஒரு செயற்கையான மரத்தை உருவாக்கி அதில் பொருட்களின் புகைப்படங்களை பழம் போல அருமையாக தொங்க விட்டிருந்தார்கள்.

இதுவரை ரம்யா யாரைப் பற்றியும் புறணி பேசிப் பார்த்ததில்லை. ஆனால் அவராலேயே பொறுக்க முடியாத அளவிற்கு பாலாஜி – ஷவானியின் ரொமான்ஸ் அலப்பறைகள் அதிகமாகி விட்டனபோல. தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கே அத்தனை காண்டாகும் போது அருகில் 24 மணி நேரம் பார்ப்பவர்களுக்கு நெருடல் ஏற்படாதா என்ன?

“இந்த வாரம் யாரு போவான்னு நினக்கறே?” என்று ஜோசியர் ஆஜீத்திடம் ரம்யா கேட்டார் போலிருக்கிறது. "சுச்சி அல்லது ஷிவானி" என்றார் ஆஜீத். "பாலாஜி மாமாவை என்டர்டெயின் பண்றதுக்குன்னே இந்த வீட்டிற்கு அவங்க வந்திருக்காங்க போல" என்று ஷிவானியை பங்கம் செய்த ரம்யா, பின்பு ஷிவானி மாதிரியே பேசிக் காட்ட முயன்றது ரகளையான காமெடி. "இவங்க செய்யறதைப் பார்க்க கூச்சமாவும் வெறுப்பாவும் இருக்கு. ரொம்ப போலியானதா இருக்கு” என்று ரம்யா சொன்னது திருவாசகமான உண்மை. இவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போது பாலாஜியும் ஷிவானியும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘செஞ்சி முடி... ஒரு பிடி பிடி’ என்கிற டாஸ்க்கை அடுத்து அறிவித்தார் பிக்பாஸ். சில டாஸ்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவு வகை, ஒட்டுமொத்த வீட்டிற்கும் பரிசாக அளிக்கப்படுமாம்.

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

60 நொடிக்குள் செய்து முடிக்க வேண்டிய ‘இம்சையான’ விளையாட்டுக்கள் துவங்கின. தண்ணீர் நிரப்பப்பட்ட பேப்பர் கப்புகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பிளாஸ்டிக் பந்தை வாயால் ஊதி அனைத்து கப்களையும் கடக்கச் செய்ய வேண்டும். இதை சிறப்பாக முயன்றும் அர்ச்சனா தோற்றுப் போனார்.

அடுத்த அறிவிப்பை பாலாஜி வாசிக்கும் போது அது குழப்பமாக தெரிந்ததால் போட்டியாளர்கள் சிரித்தார்கள். இரண்டு பென்சில்களின் மீது வைக்கப்பட்டிருக்கும் ஜெம்ஸ் மிட்டாயை கயிற்றினால் இழுத்து வாய் வரை கொண்டு வந்து சாப்பிட வேண்டும். இதை பரப்பரப்பான நொடிகளுக்கு இடையில் சிறப்பாக செய்து வெற்றி பெற்றார் பாலாஜி. (இதற்குப் பரிசாக ஜெம்ஸ் மிட்டாய் வழங்கப்படும் என்று பிக்பாஸ் அறிவித்தால் மக்கள் கொலைவெறியாகியிருப்பார்கள்).

"ஒரேயொரு சாக்லெட்டை வெச்சுக்கிட்டு இந்த சீசன் முழுக்க வெறுப்பேத்திக்கிட்டு இருக்கான்" என்று சோமைப் பற்றி கிண்டல் செய்து கொண்டிருந்தார் அர்ச்சனா. "வெறும் வாய்தான். செயல்ல ஒண்ணும் காணோம்" என்று சோமை பங்கம் செய்தார் ரம்யா.

தங்கள் குழுவில் இருப்போரை சென்ட்டிமென்ட்டாக பேசி தன்னைப் பின்தொடர வைப்பதில் அர்ச்சனா வல்லவராக இருக்கிறார். இப்போதும் அவர் அதுபோல் சோமை வெறுப்பேற்ற அதற்குள் அடுத்த டாஸ்க்கிற்கான மணி அடித்து சோமை காப்பாற்றியது.

வாயில் ஒரு ஐஸ்கீரீம் கரண்டியை பிடித்துக் கொண்டு அதன் மீது ஏழு பகடைகளை அடுக்க வேண்டும். இதுதான் கேபிக்கு தரப்பட்டிருந்த டாஸ்க். சிறப்பாக முயன்று தோற்றுப் போனார் கேபி.

பெட்டியில் உள்ள டிஷ்யூ பேப்பர் அனைத்தையும் அறுபது நொடிக்குள் எடுக்க வேண்டும் என்பது அனிதாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இது எளிதாகவே இருந்தது. ஸ்பேஸ் விடாமல் மடமடவென்று அள்ளி வெளியில் வீசி வெற்றி பெற்றார் அனிதா. ('நீ பிக்பாஸில் என்ன கிழித்தே’ என்று அவரை யாரும் இனி கேட்க முடியாது).

பிக்பாஸ் – நாள் 46
பிக்பாஸ் – நாள் 46

‘பரோட்டா சிக்கன் கலக்கி’ என்கிற உணவுப்பொருளுக்கான போட்டி அடுத்து நடந்தது. பலூனை முதுகுப் பகுதியில் பிடித்துக் கொண்டு ரயில் வண்டி போல ஒன்றன் பின் ஒருவராக நடந்து டைனிங் டேபிளை சுற்றி வர வேண்டுமாம். ‘சின்னப்புள்ளத்தனமாக’ இருந்த இந்தப் போட்டியில் எளிதாக வென்று கலக்கியைக் கைப்பற்றினார்கள்.

‘என்ன கலர்... வாட் கலர்’ என்கிற ரைமிங்கில் ‘பரோட்டாவை’ பிக்பாஸிடம் வேண்டி மக்கள் பாட்டுப்பாட இன்றைய நாள் முடிவடைந்தது.

ஆஜீத் சொன்ன ஆருடம் இந்த வாரம் பலிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. அவர் ஜோசியம் சொன்னது ஷிவானி அல்லது சுச்சி. சிக்கனமான உடையில் உலவும் ஷிவானி TRP-க்காக நிச்சயம் தேவைப்படுவார். எனவே ‘சுச்சி’ வெளியேறக்கூடும்.