Published:Updated:

``கையொப்பம், கேரியர் சாப்பாடு, ஆனா அந்த ஃபீல்!'' - எப்படியிருந்தது சீரியல் ஷூட்டிங்கின் முதல் நாள்?!

சீரியல் ஷூட்டிங்கில்...
சீரியல் ஷூட்டிங்கில்...

"ஒரு சீரியலை நம்பியிருக்கற எல்லோருக்குமே வேலை இல்லைங்கிறது நிஜம். வேற வழியில்லாததால் இப்போதைக்கு இந்தச் சூழலை ஏத்துக்க வேண்டியதிருக்கு. அதேபோல ஒருத்தரையொருத்தர் தொட்டு நடிக்கிற காட்சிகளும் தவிர்க்கவே முடியலைன்னா மட்டுமே இருக்கும்."

கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்களின் ஷூட்டிங் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

முன்னதாக இருபது நபர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்கலாமென அரசு அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை போதாது எனத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான ஃபெப்சி மற்றும் சீரியல் தயாரிப்பாளர்களான நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது 60 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைத்திருக்கிறது.

சீரியல் ஷூட்டிங்கில்...
சீரியல் ஷூட்டிங்கில்...

நேற்று ஒரு முன்னனி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடரின் ஷூட்டிங் திருக்கழுக்குன்றத்திலும், அதே சேனலின் மற்றொரு தொடரின் ஷூட்டிங் சென்னை வளசரவாக்கம் பகுதியிலுள்ள ஷூட்டிங் ஹவுஸிலும் தொடங்கியது.

மற்றொரு சேனலின் முக்கியத் தொடர்களின் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டிருப்பதால், வரும் வாரத்திலிருந்து புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

சரி, இரண்டரை மாதக் கால க்வாரன்டைன் நாள்களுக்குப் பிறகான ஷூட்டிங்கின் முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது?

கலந்துகொண்ட சிலரிடம் பேசினோம்.

’’60 பேர் வரைதான் கலந்துக்கணும்னு சொல்லியிருக்கிறதால கொஞ்ச நாளைக்கு அதுக்கேத்தபடிதான் கதையை நகர்த்தியாகணும். முக்கிய கேரக்டர்கள் மட்டுமே வந்து போவாங்கனு தெரியுது. அதனால ஒரு சீரியலை நம்பியிருக்கிற எல்லாருக்குமே வேலை இல்லைங்கிறது நிஜம். வேற வழியில்லாததால் இப்போதைக்கு இந்தச் சூழலை ஏத்துக்க வேண்டியதிருக்கு. அதேபோல ஒருத்தரையொருத்தர் தொட்டு நடிக்கிற காட்சிகளும் தவிர்க்கவே முடியலைன்னா மட்டுமே இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் ஒருவர்.

சென்னை அரும்பாக்கத்தில் நடந்துகொண்டிருந்த ஷூட்டிங்கில் இருந்த அந்தத் தொடரின் ஹீரோ ஜெய் ஆகாஷிடம் பேசினோம்.

ஷூட்டிங்கில் ஜெய் ஆகாஷ்
ஷூட்டிங்கில் ஜெய் ஆகாஷ்

‘’செட்டுக்குள் நுழையறப்பவே எல்லாருக்கும் டெம்ப்ரேச்சர் செக் பண்ணி எல்லார் பத்தின விவரங்களையும் கேட்டுக் குறிப்பெடுத்துக்கிட்டாங்க. தொடர்ந்து வாசல்லயே ஒரு டிக்ளரேஷன் ஃபார்ம்ல கையொப்பம் போடச் சொன்னாங்க. அப்புறம் வாய்க்கு ருசியா ஒரு இஞ்சி டீ கிடைச்சது. காலை டிபன் இதுக்கு முன்னாடி மாதிரி கேரியர்ல வராம பார்சல் டிபனா தந்தாங்க. சாப்பாட்டுக்கு எல்லாரும் அவங்கவங்க வீட்டுல இருந்து தட்டு எடுத்துட்டுப் போயிருந்தோம்.

டச் அப், மேக்-அப் மேன்கள், டெக்னீஷியன்கள் எல்லாருமே எல்லா நேரமுமே மாஸ்க், க்ளவுஸ் போட்டிருக்கணும்கிறதை ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. ஆர்ட்டிஸ்டுகள் சீன்ல நடிக்கிறப்ப மட்டும் மாஸ்கை கழற்றிக்கலாம். மத்த நேரம் அவங்களுக்கும் இதே கட்டுப்பாடுதான்.

என்னுடைய சீரியலைப் பொறுத்தவரைக்கும், நேத்து என்னுடைய ஆபீஸ் சீன். அதனால காட்சிப்படியே ஆர்ட்டிஸ்டுகள் தள்ளி நின்னபடிதான் சீன் இருந்தது. ஹீரோயினையோ அல்லது வேறு யாரையுமோ தொட்டு நடிக்க வேண்டிய அவசியம் வரல. அடுத்தடுத்த நாள்கள் எப்படி இருக்கும்னு தெரியலை.

விஜய் மேனேஜர், `மாஸ்டர்' இணை தயாரிப்பாளர்... வெளியேற்றப்பட்டாரா ஜெகதீஷ்?

மதிய உணவுக்கான பிரேக்ல கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமா சில விஷயங்களை எல்லாருக்கும் விளக்குனாங்க. அதேபோல காலையில 8 மணி முதல் ராத்திரி 8 மணி வரையிலான ஷூட்டிங்கில் ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் டெம்ப்ரேச்சர் செக் பண்ணிட்டே இருந்தாங்க. எல்லாருமே கூடுமானவரைக்கும் எச்சரிக்கையாகவே இருந்தோம்’’ என்கிறார் இவர்.

''எல்லாருமே ஒருவித எச்சரிக்கையுணர்வோடுதான் இருக்காங்க. ஆனாலும் உள்ள நுழையறப்பவே கையொப்பம் போடுறோமே, அந்த இடத்துல விவரிக்க முடியாத ஒரு திக் திக் ஃபீல் எங்களை அறியாமலேயே வந்திடுது'’ என்கிறார் நடிகை ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு