Published:Updated:

"சமையல்... சீரியஸ் பிசினஸ்!" விஜய் சேதுபதியின் அன்பால் நிரம்பிய மாஸ்டர் செஃப் முதல் எபிசோட் எப்படி?

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்

மாஸ்டர் செஃப் என்பது சர்வதேச வடிவமைப்பின் இந்திய வடிவம் என்பதால் அதன் அடிப்படையில் இருந்து மீற முடியாது. அந்த ஃபார்மேட்டின் விதிகளை மிக மிக கறாராக கடைபிடித்தாக வேண்டும். அதாவது சமையல் என்கிற விஷயத்துக்குத்தான் இங்கு முதலிடம்.

Published:Updated:

"சமையல்... சீரியஸ் பிசினஸ்!" விஜய் சேதுபதியின் அன்பால் நிரம்பிய மாஸ்டர் செஃப் முதல் எபிசோட் எப்படி?

மாஸ்டர் செஃப் என்பது சர்வதேச வடிவமைப்பின் இந்திய வடிவம் என்பதால் அதன் அடிப்படையில் இருந்து மீற முடியாது. அந்த ஃபார்மேட்டின் விதிகளை மிக மிக கறாராக கடைபிடித்தாக வேண்டும். அதாவது சமையல் என்கிற விஷயத்துக்குத்தான் இங்கு முதலிடம்.

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப் என்பது இன்டர்நேனஷல் லெவலில் ஹிட் அடித்த, சமையல் போட்டி சார்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ. இதன் கருப்பொருளை வடிவமைத்தவர், லண்டனைச் சேர்ந்த Franc Roddam. இந்த நிகழ்ச்சி பின்னர் ‘MasterChef Australia’ என்கிற பெயரில் ஆஸ்ரேலியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் பெருகியதால், சப்டைட்டில், டப்பிங் போன்ற வழிகளில் விஸ்வரூபம் எடுத்து பல தேசங்களிலும் பரவியது.

தொழில்முறை சார்ந்த சமையல் வல்லுநர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் சமையல் போட்டிகள், ஜூனியர், சீனியர் என்று பல்வேறு வகைகளில் இந்தப் போட்டிகளின் கிளைகள் இன்னமும் அதிகமாக விரிந்தன.

இப்படியொரு ஹிட் அடித்த நிகழ்ச்சியை, இந்தியாவில் மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? பொதுவாக அயல்நாட்டு நிகழ்ச்சிகளின் அடிப்படையை அப்படியே நகலெடுத்து, உள்ளூர் மசாலாவில் கலந்து காப்பியடிப்பதுதான் நம்மூர் சேனல்களின் வழக்கம். ஆனால் இம்மாதிரியான இன்டர்நேனஷல் பேட்டன் ரைட்ஸ் உள்ள ஷோவை காப்பியடிக்க முடியாது. உடனே கண்டுபிடித்து அபராத ஓலை அனுப்பி விடுவார்கள்.

விஜய் சேதுபதி - தமன்னா
விஜய் சேதுபதி - தமன்னா

எனவே இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியானது, MasterChef India என்கிற பெயரில் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் Endemol Shine Group-ஆல் தயாரிக்கப்பட்டு 2010-ல் இந்தியாவில் வந்து இறங்கியது. முதல் சீசனில் பிரபல இந்தி நடிகரான அக்ஷய் குமார் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். குணால் கபூர், சஞ்சீவ் கபூர், விகாஸ் கண்ணா போன்ற தொழில்முறை சார்ந்த சமையல் வல்லுநர்களும் நீதிபதிகளாக இணைந்தார்கள். ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான இந்த சமையல் ரியாலிட்டி ஷோ, இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் ஹிட் அடித்த ஒரு நிகழ்ச்சியை தமிழ் சேனல்கள் மட்டும் விட்டு வைக்குமா என்ன? இதன் தென்னிந்திய உரிமையை சன் குழுமம் கைப்பற்றியிருக்கிறது. தமிழில் விஜய் சேதுபதி, தெலுங்கில் தமன்னா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களாக அறிவிக்கப்பட்டனர். மலையாளம் மற்றும் கன்னடத்திலும் விரைவில் அறிவிப்புகள் வருமாம்.

சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் இந்த சமையல் நிகழ்ச்சியை சன் டிவி கைப்பற்றியதற்குப் பின்னால் பல வணிக காரணங்கள் இருக்கலாம். என்றாலும் பார்வையாளனின் நோக்கில், ஒரு முக்கியமான காரணத்தை யூகிக்க முடிகிறது. அது ‘குக் வித் கோமாளி’. ஆம், ஸ்டார் விஜய்-யில் இரண்டு சீசன்களை கடந்திருக்கும் அந்த நிகழ்ச்சி பரவலான கவனத்தையும் கணிசமான பார்வையாளர்களையும் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஒரு நிகழ்ச்சி. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோக்களில் அதுவும் ஒன்று.

எனவே அதற்குப் போட்டியாக தானும் களத்தில் இறங்க சன் டிவி கோதாவில் குதித்திருக்கலாம். விளைவு ‘மாஸ்டர் செஃப் தமிழ்’.

‘குக் வித் கோமாளி’ என்பது தொலைக்காட்சியில் பிரபலங்களாக இருக்கும் அமெச்சூர் சமையல்காரர்களோடு நகைச்சுவைக் கலைஞர்களையும் இணைக்கும் நிகழ்ச்சி. அதாவது இவர்கள் செய்யும் சமையலில் உப்பு, காரம் இருக்கிறதோ, இல்லையோ... நகைச்சுவை நிச்சயமாக இருக்கும். மிகவும் ஜனரஞ்சகமான முறையில் நிகழும் இந்த நிகழ்ச்சி பெரும்பான்மையானோரை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

ஆனால், இந்த நிகழ்ச்சியில் அதன் அடிப்படையான சமையல் என்பது மிகவும் பின்தங்கிப் போய் அசட்டுத்தனமான நகைச்சுவைகளும் கோணங்கித்தனங்களும் மிகுந்த சந்தைக்கடை மாதிரி ஆகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சியின் துவக்க நாளில் ‘சமையல் என்பது சீரியஸ் பிசினஸ்’ என்று விஜய்சேதுபதி உள்குத்தாக சொன்னாரோ என்று கருதத் தோன்றுகிறது.

மாஸ்டர் செஃப் என்பது சர்வதேச வடிவமைப்பின் இந்திய வடிவம் என்பதால் அதன் அடிப்படையில் இருந்து மீற முடியாது. அந்த ஃபார்மேட்டின் விதிகளை மிக மிக கறாராக கடைபிடித்தாக வேண்டும். அதாவது சமையல் என்கிற விஷயத்துக்குத்தான் இங்கு முதலிடம். எனவே தொழில்முறை சார்ந்த தீவிரம் இதில் அதிகமாக இருக்கும். ஜனரஞ்சகமான விஷயங்கள் அரிதாகவே இருக்கும். சமையலை மிக தீவிரமான ஆர்வத்துடன் பின்தொடர்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் பொழுதுபோக்கை பிரதானமாக கொண்டிருக்கும் தமிழ் பார்வையாளர்களை இது எப்படி கவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாஸ்டர் செஃப் தமிழ், சீசன் ஒன்றின் துவக்க நாள் நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமையன்று (07.08.2021) ஒளிபரப்பாகியது. சும்மா சொல்லக் கூடாது... ஒரு மசாலா திரைப்படத்தில் வரும் முன்னணி ஹீரோவின் அறிமுகப்பாடல் போல, பிரமாண்டமான வண்ணமிகு பின்னணியில், அதிரடி இசை ஒலிக்க, பல துணைநடிகர்கள் நடனமாடி நம்மை கவர்ந்து விட்டார்கள்.

அவர்களின் நடுவில், ஃபாரின் ரிட்டன் பெரியப்பா மாதிரி வயலட் நிறத்தில் ஜொலிக்கும் கோட், சூட்டுடன் என்ட்ரி தந்தார் விஜய்சேதுபதி. சட்டையின் மீது VS என்ற ஆங்கில எழுத்துகள் ஒருபுறமும் இன்னொருபுறமும் சமையல் நிகழ்ச்சி என்பதைக் குறிக்கும் கத்தி மற்றும் ஸ்பூன் சின்னங்களும் இடம்பெற்றிருந்தன.

விஜய் சேதுபதி - தமன்னா
விஜய் சேதுபதி - தமன்னா

தனது பொதுவெளித்தோற்றம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. எனவே மையால் மறைக்காத நரை முடி மற்றும் தாடியில் அசால்ட்டாக இருந்தார். அதுவே அவருக்கு ஒரு தனி கவர்ச்சியான தோற்றத்தைத் தந்தது.

இசையமைத்து நடனம் ஆடியவர்களுக்கு நன்றி கூறி அவர்களை வழியனுப்பி வைத்த விஜய் சேதுபதி, சமையல் போட்டி நடக்கவிருக்கும் அரங்கத்தை பார்வையாளர்களுக்கு சுற்றிக் காட்டினார்.

வாவ்! அரங்கமா அது?! தங்கச் சுரங்கம் போல் இருந்தது. வடிவமைத்த கலை இயக்குநருக்கும், இதற்காக உழைத்த பணியாளர்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அப்படியொரு பிரமாண்டமான, அட்டகாசமான, வண்ணமயமான அரங்கம். செட் பிராப்பர்ட்டிகள், பின்னணிகள் என்று ஒவ்வொரு விஷயமும் அத்தனை அழகு.
மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

பாக்குமட்டையால் செய்யப்பட்ட மரம்தான் இந்த அரங்கத்தின் ஹைலைட். எல்லோருடைய கவனத்தையும் கவர்வதாக அந்த மரம் இருந்தது. இது தவிர போட்டியாளர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டவிருக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய மிக நீளமான கிச்சன் ஸ்டேஷன்கள், ஒரு கிராமத்திற்கே சமைக்கக்கூடிய அளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள், நீதிபதிகள் உணவைப் பரிசோதிப்பதற்கான மேடைகள் என்று ஒவ்வொன்றும் மிக கவனத்துடனும் மிகுந்த அழகியலுடனும் வசீகரத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அரங்கத்தைச் சுற்றிக் காட்டிய விசே, பிறகு வெளியே வந்து போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் 12 நபர்களையும் வரவேற்றார். ஒவ்வொருவரும் இங்கு சும்மா வந்துவிடவில்லை. அதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு அந்தத் தகுதியோடுதான் உள்ளே வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தொழில்முறை சமையல் கலைஞர்கள் அல்ல. தங்களின் வீட்டில் விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து அவரவர்களின் வீட்டு உறுப்பினர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்கள். (Home Cooks).

ஒவ்வொரு போட்டியாளரும் வெவ்வேறு வயதுகளை, பின்னணிகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். உதாரணத்துக்கு 18 வயது மட்டுமே ஆன சக்திவேல் மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்திருக்கும் இளைஞர். வெள்ளந்தியான முகத்துடன் அந்தப் பிரமாண்டமான அரங்கத்தையும் விசேவையும் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார். கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவரே வயதில் இளையவர்.

போட்டியாளர் அறிமுகத்தின் போது “உன் பேரு என்னப்பா?” என்று சக்திவேலை விசாரித்த விசே... மிகவும் பாசத்தோடு ‘வாடா... வந்து என்னை ஹக் பண்ணு” என்று சக்திவேலின் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஜாலியாக அழைக்க, உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார் அந்த இளைஞன்.

மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்
மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்

இதன் மறுமுனையில் 72 வயது கொண்ட, பணியிலிருந்து ஓய்வு பெற்ற செங்குட்டுவன் ‘யங்மேன்’ என்கிற புன்னகையுடனும் தன்னம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தார். சிலரைப் பற்றிய அறிமுக வீடியோக்களும் ஒளிபரப்பானது.

பன்னிரண்டு நபர்களையும் அரங்கத்தினுள் அன்போடு அழைத்து வந்த விஜய் சேதுபதி அவர்களோடு சற்று பேசிய பிறகு ஒரு டிவிஸ்ட் கொடுத்தார். இந்த பன்னிரெண்டு நபர்கள்தான் போட்டியாளர்கள் போல என்று நாம் மட்டும் நினைக்கவில்லை. அவர்களும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அரங்கின் இன்னொரு கதவைத் திறந்து கொண்டு மேலும் பன்னிரண்டு நபர்கள் உள்ளே வந்தார்கள். என்னது போட்டிக்கு மேலும் பன்னிரண்டு பேரா என்று ஒவ்வொரு டீமும் பரஸ்பர அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். “ஓ... ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டாங்களா?” என்று ஜோக் அடித்து சூழலின் இறுக்கத்தை ஜாலியாகத் தளர்த்தினார் விசே.

பிறகு நீதிபதிகளின் அறிமுகம். மூன்று நபர்கள் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருவருமே மாஸ்டர் செஃப். இந்தத் துறையில் பழுத்த அனுபவமும் அசாரணமான திறமைகளும் கொண்டவர்கள். சர்வதேச தர ஹோட்டல்களில் தலைமைச் சமையல்காரரர்களாக பணிபுரிந்தவர்கள்.

முதலில் வந்தவர் கெளஷிக். கூர்மையான கண்களும் நரைமுடியுடன் கூடிய குடுமியும், அசத்தலான கோட் சூட்டிலும் வந்திருந்தார். ஆளைப் பார்த்தாலே டெரரான ஆசாமி என்று கணிக்க முடிந்தது. அத்தனை கண்டிப்பு முகத்தில் தெரிந்தது. ஒருநோக்கில் ராகவா லாரன்ஸின் வரவிருக்கும் புதிய திரைப்படத்தின் கெட்அப் போல மிரட்டலாக இருந்தார். சமையல் தொழிலில் ஐந்து வயதிலேயே நுழைந்து விட்டாராம்.

“நீங்க சமைச்சதை என்கிட்ட கொண்டு வர்றதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிச்சிக்குங்க. நான் அத்தனை கண்டிப்பா இருப்பேன். கருணையே காட்ட மாட்டேன். உணவு தயாரிப்பில் ‘சிந்தனை’ என்கிற விஷயத்துக்குத்தான் முதலிடம் தருவேன்” என்று ஸ்கூல் பிரின்ஸிபல் மாதிரி கெளஷிக் சொன்னவுடன், ஏற்கெனவே பதற்றத்தில் இருந்த போட்டியாளர்களின் உள்ளங்கைகள் பயத்தில் வியர்க்க ஆரம்பித்திருக்கும்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

ஆனால், கெளஷிக்கின் கண்டிப்பிலிருந்து ஆறுதல் தருவது போல் இதமான புன்னகையுடன் அடுத்து வந்தவர் ஆர்த்தி சம்பத். “வீட்டின் சமையலறை என்பது பெண்களுக்கான இடமாக இருக்கலாம். ஆனால், வெளியுலகில் சமையல் துறை என்பது ஆண்களுக்கான ராஜ்ஜியம். அப்படிப்பட்ட துறையில் பல அவமானங்களுக்குப்பின் பெண்ணாக நின்று நான் சாதித்திருக்கிறேன்” என்று ஆர்த்தி உணர்ச்சிவசப்பட்டு சொன்ன போது நெகிழ்வாக இருந்தது.

“Love at first sight-ன்னு சொல்லுவாங்க. அது போல நீங்கள் தயாரிக்கும் உணவு என்பது பார்ப்பதற்கு வசீகரமா இருக்கணும். எனவே நான் உணவின் தோற்றத்தைத்தான் முதலில் பார்ப்பேன்’’ என்று அறிவுறுத்தினார்.

அடுத்த வந்த ஹரீஷ் ராவ், பார்ப்பதற்கு தோழமையான முகபாவத்தில் இருந்தார். “நீ ஏறி வாடா கபிலா.. இது நம்ம காலம்” என்று நம்பிக்கையூட்டாத குறை. அத்தனை இதமும் கனிவும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன.

நான் மூன்று விஷயங்களைத்தான் கவனத்தில் கொள்வேன். ‘அது சுவை.. சுவை.. சுவை..’ என்று ஏலம் போட்டார் ஹரீஷ். ஆக…சுவை என்கிற விஷயத்திற்குத்தான் இவர் முதலிடம் தருவார் என்பதை துல்லியமாக தெளிவுபடுத்திவிட்டார்.

கண்களில் மெல்லிய பயமும் உடல்மொழியில் பரபரப்பும் ஆர்வமுமாக 24 போட்டியாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஸ்கூல் வாத்தியார் போல நீதிபதிகள் சற்று மிரட்டலாகப் பேசினாலும், தனது இயல்பான தொனியில், ஜாலியாக ஜோக்கடித்து போட்டியாளர்களின் இறுக்கத்தை அவ்வப்போது தளர்த்திக் கொண்டேயிருந்தார் விசே.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
இந்த 24 நபர்களும் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு எட்டு நபர்களுக்கு இடையே போட்டிகள் நடக்கும். இறுதியில், தகுதி பெறும் 12 நபர்கள் மட்டுமே முதல் கட்ட போட்டிக்குள் நுழைவார்கள். மீதமுள்ள 12 நபர்கள் விசேவையும் மாஸ்டர் செஃப் அரங்கையும் வேடிக்கை பார்த்த திருப்தியோடு வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான்.

முதல் கட்ட போட்டி விறுவிறுப்பாகத் தொடங்கியது.

சமையல் தொடரும்..