Published:Updated:

`இது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்!' - ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அமைச்சகம் அட்வைஸ்

வருண்.நா

ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TV show
TV show

தனியார் சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளை அநாகரிகமான முறையிலோ, பொருத்தமற்ற முறையிலோ காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

இந்தியா முழுவதும் உள்ள தனியார் டி.வி சேனல்களில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நடனம், காமெடி, பாட்டு எனப் பல்வேறு திறமைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களிலும் அதிக அளவில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இனி குழந்தைகளை அநாகரிகமான முறையில் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில ரியாலிட்டி ஷோக்களில், திரைப்படத்தில் வரும் நடன அசைவுகளைக் குழந்தைகள் அப்படியே பின்பற்றுகிறார்கள். அது அவர்களின் வயதுக்கு மீறியதாக உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து தனியார் சேனல்களில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள், கேபிள் டி.வி நெட்வொர்க்ஸ் சட்டம் 1995-ன் படி பின்பற்றப்பட வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Reality Show
Reality Show

"குழந்தைகளைத் தவறான முறையில் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது. மேலும், அந்த நிகழ்ச்சிகளில் மோசமான மொழி, வன்முறை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்!" என்கிறது கேபிள் டி.வி நெட்வோர்க்ஸ் சட்டம் 1995.