Published:Updated:

இடியட் பாக்ஸ் -79|மார்க்ஸின் கொள்கைகள் மீதான பதற்றமும், ஏஞ்சலின் டிஆர்பி நம்பிக்கையும்…வென்றது யார்?

இடியட் பாக்ஸ்

பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

Published:Updated:

இடியட் பாக்ஸ் -79|மார்க்ஸின் கொள்கைகள் மீதான பதற்றமும், ஏஞ்சலின் டிஆர்பி நம்பிக்கையும்…வென்றது யார்?

பொறுப்பு துறப்பு : இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.

இடியட் பாக்ஸ்

மார்க்ஸ் தனியாக கான்ஃபரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தான். அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அவனால் கண்ணாடி வழியாக அலுவலகத்தில் நடப்பதை பார்க்க முடியும்.

ஆனால், வெளியில் இருந்து பார்த்தால் கான்ஃபரன்ஸ் அறையில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாது. அல்லது விளக்குகள் அணைக்கப்பட்டிருப்பதால் கான்ஃபரன்ஸ் அறையில் யாரும் இல்லை என வெளியில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்ளக்கூடும்.

மனது குழப்பமாக இருக்கும் சமயங்களில் மார்க்ஸ் இப்படி செய்வதுண்டு. இருளான ஒரு அறையில் கண்களை திறந்து அமர்ந்திருப்பதென்பது ஒரு வகையான தியானம்தான். அப்படி அமரும் போதெல்லாம் அவனுக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் எழுதிய ‘பித்தன் பேசுகிறான்’ என்கிற கவிதை தொகுப்பின் வரிகள் நினைவுக்கு வரும்

“எல்லோரும் வெளிச்சத்துக்கு வாருங்கள் என்றார்கள். பித்தன் மட்டும் இருளுக்கு போங்கள் என்றான். வெளிச்சத்தில் நீங்கள் மற்றவர்களை பார்க்கிறீர்கள். இருளில் தான் நீங்கள் உங்களையே பார்க்கிறீர்கள்”

மார்க்ஸ் இருளில் அமர்ந்து தனக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முயற்சித்துக் கொண்டிருந்தான்.புரோகிராமிங் ஹெட்டாக மார்க்ஸ் பொறுப்பேற்பதற்கு முன்னால் ஆரஞ்சு டிவி வழக்கமான மாமியார் மருமகள் கண்ணீர் கதைகளை சொல்லும் ஒரு சேனலாகத்தான் இருந்தது. இப்படி ஒரு சேனல் இருக்கிறது எனச் சொன்னால் கூட அப்படியா என கேட்கிற நிலைமையில் தான் சேனல் இருந்தது.

மார்க்ஸ் பொறுப்பேற்ற பிறகு ஆரஞ்சு டிவியின் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. வித்தியாசமான கதையம்சம் உள்ள தொடர்கள், அதற்கு இணையாக ஆடல் பாடல் காமெடியை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான நான் ஃபிக்ஷன் ஷோக்கள் என கடந்த 7 வருடங்களில் ஆரஞ்சு டிவி அதன் வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்கள் மனதில் வலுவானதொரு இடத்தை பிடித்துக் கொண்டது. மக்களால் அதிகம் பார்க்கப்படும் சேனல்களின் வரிசையில் அதற்கு இரண்டாவது இடமும் கிடைத்தது.

முதலிடத்தில் இருக்கும் மார்ஸ் டிவிக்கும் இதற்கும் நடுவில் பெரிய இடைவெளி இருக்கிறது என்றாலும் கூட இரண்டாவது இடம் என்பது இரண்டாவது இடம் தானே.

காலங்கள் ஓட நிலைமை மாற தொடங்கியது. இரண்டாவது இடத்தை பிடிக்க மார்க்ஸின் வித்தியாசமான அணுகுமுறை காரணம் என புகழ்ந்தவர்கள் நாளாக நாளாக அந்த அணுகுமுறைதான் ஆரஞ்சு டிவி இரண்டாவது இடத்திலேயே தங்கி விட்டதற்கு காரணம் என முணுமுணுக்க தொடங்கினார்கள்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

மார்ஸ் டிவியை வெல்ல வேண்டும் என்றால் மார்ஸ் டிவி போல அனைத்து மக்களும் பார்க்கும்படியான வழக்கமான தொலைக்காட்சி தொடர்களைத்தான் தயாரிக்க வேண்டும் என்பது ஏஞ்சலின் வாதமாக இருந்தது. அப்படி செய்தால் ஆரஞ்சு டிவி அதன் அடையாளத்தை இழந்து விடும் என்பது மார்க்ஸின் வாதமாக இருந்தது. முதலிடத்துக்கு ஆசைப்பட்டு இரண்டாம் இடத்தை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் யாரும் ஏஞ்சலின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

ஆனால் இந்த முறை ஏஞ்சல் சாதித்து விட்டாள். அவள் நம்பிய இரண்டு தொடர்களின் ஒளிபரப்பு தொடங்கி ஒரு வாரமாகி விட்டது. வரும் வியாழக்கிழமை அது வெற்றியா தோல்வியா என்பது தெரிந்து விடும்.

யாரை கேட்டாலும் இது ஆரஞ்சு டிவி சீரியல் மாதிரியே இல்லை என்றார்கள். அந்த சீரியல்களின் தரம் மிக மோசம் என்றார்கள். ஆரஞ்சு டிவியின் யுடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் மக்கள் அதை திட்டி தீர்த்தார்கள். மார்க்ஸ் அனைத்தையும் படித்தான், அமைதியாக இருந்தான். அவனுக்கு தெரியும் மக்கள் சில சீரியல்களை கடுமையாக சாடுவார்கள். ஆனாலும், அதை கடைசி வரை பார்ப்பார்கள். இது எந்த ரகம் என்பது ரேட்டிங் வந்தால் தான் தெரியும்.

சட்டென கான்ஃபரன்ஸ் அறையின் விளக்குகள் எரிந்தன. மார்க்ஸ் நிமிர்ந்து பார்த்தான். “நான் சொல்லல இவன் இங்கதான் உட்கார்ந்துட்டு இருப்பான்னு” என்றபடி நெல்லையப்பன் உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து பாண்டியனும் உள்ளே நுழைந்தான்.

“என்ன மாமா?” என்றான் மார்க்ஸ்.

“அத நான் கேட்கணும்... எதுக்கு இப்படி தனியா உட்கார்ந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க?”

“சும்மா தான்”

“என்ன சும்மா... ஏஞ்சலோட குடும்ப குருமா சீரியல்கள் லான்ச் ஆனதுல இருந்தே நீ சரியில்லப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை” என அவரை பார்க்காமல்

சொன்னான் மார்க்ஸ்.

“அந்த சீரியல் ஹிட்டாயிடுச்சுன்னா நீ தோத்த மாதிரி ஆயிடும்னு பயப்படுறியா?” என சட்டென கேட்டார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் அவரை ஏறிட்டு பார்த்தான்.

உண்மையை முகத்துக்கு நேராக போட்டு உடைக்கும் நண்பர்கள் கிடைப்பது பெரிய பாக்கியம். கசப்பான நிஜத்தை நம் மீது தூக்கியடிப்பவர்கள் அந்த கணம் விரோதிகளாய் நம் கண்களுக்கு தெரிந்தாலும் அவர்கள்தான் நமது உண்மையான நண்பர்கள் என்பதை யோசித்து பார்த்தால் நமக்கு விளங்கும். நாம் கேட்க விரும்புவதை சொல்பவர்கள் நண்பர்கள் அல்ல. நமக்கு தேவையானதை சொல்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அவர்கள்தான் நம் நலம் விரும்பிகள்.

“என்னப்பா ஏஞ்சல் சீரியல் ஹிட்டாயிடும்னு பயப்படுறியா?” என மீண்டும் கேட்டார் நெல்லையப்பன்.

“ஆமா மாமா” என்றான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

கசப்பான நிஜங்களை எதிர் கொள்ள எளிதான வழி ஆமென அதை ஒப்புக் கொள்வதுதான்.

“என்னய்யா இப்படி சொல்ற?” என்றார் நெல்லையப்பன்.

“ரெண்டு சீரியல் ஹிட்டாவுறது சேனலுக்கு நல்லதுதான் மாமா... ஆனா, இப்படி ரெண்டு சீரியல் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா” என்றான் மார்க்ஸ்

தோற்று போவதிலேயே பெரிய வலி. நாம் மலையென நம்பியிருக்கும் நமது கொள்கைகள் தோற்றுப்போவது தான்.

“தல... அந்த சீரியல எல்லாரும் கழுவி கழுவி ஊத்துறானுங்க தல… அதுக்கு நம்பர் வராது நீ கவலப்படாத” என்றான் பாண்டியன்.

மார்க்ஸ் பதிலேதும் சொல்லாமல் தலையாட்டினான்.

“சனங்களுக்கு அது தான் பிடிச்சிருக்குன்னா பார்த்துட்டு போட்டுமே… எதுக்கு நாம டென்ஷனாகணும். நமக்கு ஹிட்டு தான முக்கியம்” என்றார் நெல்லையப்பன்.

“தப்பான சீரியல் ஜெயிச்சா உனக்கு ஓகே வா?” எனக் கேட்டான் மார்க்ஸ்.

“யோவ் தப்பான சீரியல் சரியான சீரியல்ன்னு எல்லாம் எதுவும் கிடையாது. மக்களுக்கு பிடிச்ச சீரியல் பிடிக்காத சீரியல்தான் இருக்கு”

“அதெல்லாம் இல்ல மாமா... நல்ல சீரியல் கெட்ட சீரியல் இருக்குன்றேன்” என்றான் மார்க்ஸ்.

“என்னாச்சு... ஏன் இப்படி அடம் பிடிக்குறாப்ள” என எரிச்சலாக சொன்னார் நெல்லையப்பன்.

“தல எதுவாயிருந்தாலும் நாளைக்கு ரேட்டிங்கை பார்த்துட்டு பேசலாம்” என பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பாண்டியன்.

“மாமா கடைசியா ஒண்ணு மட்டும் சொல்றேன்”

“அதான் நாளைக்கு பேசிக்கலாம்னு சொல்லியாச்சே அப்புறம் என்ன?”

“இது மட்டும் சொல்லிடுறேன்” என்றான் மார்க்ஸ்.

“சொல்லு”

“ஜூஸ விட சாராயம் அதிகமா விக்குறதால அதுதான் நல்லதுன்னு ஆயிடாதில்ல” என்றான் மார்க்ஸ்.

“ஆகாதுப்பா... ஆனா ஜூஸ் வித்தா கடைசி வரைக்கும் பிழிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுதான். சாரயம் வித்தா தான் செட்டிலாக முடியும். உனக்கு ஜெயிக்கணுமா? ஜூஸ் புழியணுமா?” எனக் கேட்டார் நெல்லையப்பன்

“நாளைக்கு பேசலாம்” என்றான் மார்க்ஸ்.

“அதத்தான் நாங்க அப்பவே சொன்னோம்” நெல்லையப்பன் சிரித்தார்.

மேனனும் தாட்சாவும் மருத்துவமனையின் ICU அறை ஒன்றின் வெளியே காத்திருந்தார்கள். மேனன் சின்ன பதற்றத்துடன் அமர்ந்திருந்தார். தாட்சா அமைதியாக போனை பார்த்தபடி இருந்தாள்.

“தாட்சா”

தாட்சா திரும்பி அவரைப் பார்த்தாள்.

“ஆர் யூ ஓகே”

“யா... ஐ’ம் ஓகே” எனப் புன்னகையுடன் சொன்னாள் தாட்சா.

அதை நம்பாமல் பார்த்தார் மேனன்.

“ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அம்மாவுக்கு லங் இன்ஃபெக்ஷன் ஆகுறதும் அவங்களை நான் ஆஸ்பிட்டல்ல சேக்குறதும் நாலஞ்சு வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு. ஐ’ம் யூஸ்டு டூ இட்” என்றாள் தாட்சா.

“நீங்க வேணா உள்ள அம்மாவோட இருங்க. நான் இப்படி

வெயிட் பண்றேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல”

என்றார் மேனன்.

“அய்யோ இந்த மாதிரி சமயத்துலதான் அம்மா பக்கமே போகக் கூடாது. எமோஷனலா நம்மள பிளாக் மெயில் பண்ணுவாங்க”

“புரியல” என்றார் மேனன்.

“கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க” என புன்னகைத்தாள் தாட்சா.

“பண்ணிக்குங்க” என்றார் மேனன்.

தாட்சா ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள்.

“அது எப்படி பண்ணிக்க முடியும் ?”

“ஏன் முடியாது?”

“நான் காதலிக்கிற ஆள் இன்னும் கல்யாணத்துக்கு தயாரான்னு தெரியலயே” என்றாள் தாட்சா.

“வில் யூ மேரி மீ” என சட்டெனக் கேட்டார் மேனன்.

தாட்சா முகம் மாறினாள்.

“அம்மாவுக்காக என்ன ப்ரபோஸ் பண்றீங்களா?”

“இல்ல... பிடிச்சிருக்குன்னு தான் ப்ரபோஸ் பண்றேன்”

தாட்சா மேனனை பார்த்தாள். அவர் அதை விளையாட்டாக சொல்லவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

“கையில ரிங் இல்லை... பொக்கே இல்லை.. முழங்கால் போடல. ஒரு ரொமான்ட்டிக்கான இடத்துக்கு கூட்டிட்டு போகல. இப்படி ஆஸ்பிட்டல் வராண்டாவில சாதாரணமா ப்ரபோஸ் பண்றீங்களே”

“இதெல்லாம் விட நான் கேட்குறதும் அதுக்கு உங்களோட பதிலும் தான முக்கியம்” என்றார் மேனன்.

தாட்சா ஆமென தலையாட்டினாள்.

“வில் யூ மேரி மீ” என மீண்டும் கேட்டார் மேனன்.

“யெஸ் மேனன்” என அவரது கையை பற்றிக் கொண்டாள் தாட்சா.

இருவரும் சந்தோஷத்தில் அமைதியாக இருந்தார்கள். திட்டமிடல் எதுவும் இல்லாமல் அந்த கல்யாண பேச்சு சாதாரணமாக முடிந்தது அவர்களுக்கு பிடித்திருந்தது.

தாட்சா எழுந்தாள்.

“நான் போய் அம்மாவ பார்த்துட்டு வந்தர்றேன்” என்றாள் தாட்சா.

மேனன் அவளை புன்னகையுடன் பார்த்தார்.

“கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லிட்டு வந்தர்றேன். சந்தோஷப்படுவாங்க. எப்பன்னு கேட்டா என்ன சொல்லட்டும்”

எனக் கேட்டாள் தாட்சா.

“நாளைக்கு... இல்ல நாளை மறுநாள். இல்ல... இன்னைக்கேவா இருந்தா கூட ஓகேதான்” என்றார் மேனன்.

தாட்சா சிரித்தபடி ஐசியூவுக்குள் நுழைந்தாள். மேனன் புன்னகைத்துக் கொண்டார்.

மார்க்ஸ் லிஃப்டை திறந்து கொண்டு வெளியே வந்தான். லிஃப்டில் ஏறுவதற்காக மாட்ஸ் நின்று கொண்டிருந்தான்.

அவனது வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறி முற்றிலும் வேறு ஒருவனாக அவன் மாறியிருந்தான்.

ஃபார்மல் பேன்ட் ஷர்ட் அணிந்து அதை டக் இன் செய்திருந்தான். காலில் பிராண்டட் ஷூ. முடியை குறைவாக வெட்டி அழகாக சீவியிருந்தான். தாடி இல்லாமல் முகம் வழுவழுப்பாக இருந்தது.

“டேய் என்னடா இது கோலம்?” என்றான் மார்க்ஸ்.

“சும்மா தான்” என மாட்ஸ் வெட்கப்பட்ட தருணத்தில் மார்க்ஸுக்குப் புரிந்து விட்டது இந்த மாற்றத்துக்கான காரணம் நந்திதாதான் என்று.

“நான் வேலைக்கு ஜாயின் பண்ணிட்டேன்ணே” என்றான் மாட்ஸ்.

“வேலைக்கு சேர்ந்துட்டியா... என்னவா?”

“ப்ரோமோ டிப்பார்ட்மென்ட்ல மேனேஜரா சேர்ந்திருக்கேன்”

“டேய் அதெல்லாம் உனக்கு செட்டாகுமா?” என கேட்டான் மார்க்ஸ்.

“பழகிக்க வேண்டியதுதான்ணே”

“பறவை மாதிரி பறந்துட்டு இருந்த.... இப்ப கூட்டுக்குள்ள

அடையற... சரியா வருமான்னு யோசிச்சுக்கோ” என்றான் மார்க்ஸ்.

“பறவைக்கு நெல்லு போடுறாங்க... ஆனா, பொண்ணு தர மாட்டுறாங்களேன்ணே” என சிரித்தான் மாட்ஸ்.

மார்க்ஸுக்கும் சிரிப்பு வந்தது.

“அப்போ நந்திதாவுக்காகத்தான் இந்த மாற்றமா ?”

“ஆமான்ணே”

“இதெல்லாம் யார் கிட்ட இருந்துடா கத்துக்குறீங்க?” என சிரித்தபடி கேட்டான் மார்க்ஸ்.

“எல்லாம் உங்க கிட்ட இருந்து தான்ணே”

“என் கிட்டயிருந்தா?”

“ஆமான்ணே... எவ்வளவு பெரிய டெரர் நீங்க... பிடிச்ச பொண்ணுக்காக உங்க புரோகிராமிங் ஹெட் பதவியவே நீங்க விட்டு குடுக்கலயா?

நான் என்னன்ணே என்னோட அழுக்கு தாடியைதானே விட்டு குடுத்தேன்” என சிரித்தான் மாட்ஸ்.

“விவரமா பேசுறடா தம்பி” என் அவன் தோளை தட்டி கொடுத்தான் மார்க்ஸ்.

“அன்னைக்கு உங்க காதல ஒத்துக்காம நான் கோபமா பேசிட்டேன்” என மார்க்ஸ் ஆரம்பித்தான்.

“அய்யோ அவளுக்கு ஒரு அப்பா,அம்மா இருந்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்களோ அதைத்தான்ணே நீங்களும் சொன்னீங்க… எனக்கு அதுல சந்தோஷம்தான்ணே” என்றான் மாட்ஸ்.

அவனது புரிதல் மார்க்ஸை என்னவோ செய்தது. மாட்ஸின் தோளை தட்டிக் கொடுத்தவன் “சந்தோஷம்டா” என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

நந்திதா பற்றிய கவலை மார்க்ஸிடமிருந்து சுத்தமாக போய்விட்டிருந்தது.

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

சாந்தினியின் எதிரில் ஏஞ்சல் அமர்ந்திருந்தாள். சாந்தினி ரேட்டிங்கை ஒருங்கிணைத்தபடி இருந்தாள்.

ஏஞ்சலுக்கு பதற்றமாகயிருந்தது. சீரியல்கள் துறையின் தலைமை பொறுப்பேற்ற பிறகு அவள் எடுத்த முதல் முடிவு இது. எது ஆரஞ்சு டிவியின் ஸ்டைல் என நம்பப்பட்டதோ அதற்கு முற்றிலும் எதிராக அவள் ஒன்றை செய்திருக்கிறாள். வரப்போகும் ரேட்டிங்தான் அவளது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

கண்ணன் டீக்கடையில் மார்க்ஸ் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே பாண்டியன் நெல்லையப்பன் நின்று கொண்டிருந்தார்கள்.

மார்க்ஸ் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க முயல நெல்லையப்பன் அதை பிடுங்கி எறிந்தார்.

மார்க்ஸ் அவரை எரிச்சலாக நிமிர்ந்து பார்த்தான்.

“நாலாவது சிகரெட் இது… போதும் நிறுத்து... ஓவரா பண்றியே” என்றார் நெல்லையப்பன்.

அவரது வார்த்தைகளில் இருந்த அக்கறை அவனை பேசவிடாமல் செய்தது.

“எப்பவுமே ரேட்டிங் வரனும்ன்னு டென்ஷனா இருப்ப... முத தடவையா ரேட்டிங் வரக்கூடாதேன்னு நீ டென்ஷனா இருக்க” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸுக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது.

“அப்படியில்ல மாமா” என பலவீனமான குரலில் சொன்னான்.

“வந்தா வரட்டும் மார்க்ஸ்... இப்படி ஒரு சீரியலை ஏன் மக்களுக்கு பிடிக்குதுன்னு யோசிப்போம். அதை விட்டுட்டு நான் எடுக்குற சீரியல்தான் மக்களுக்கு பிடிக்கும்னு அடம் பிடிச்சா எப்படி? அவனுக்கு எது பிடிக்கும்னு பார்த்து அத தான நம்ம எடுக்கணும்... அதான நம்ம வேலை”

“புரியுது” என்றான் மார்க்ஸ்.

பாண்டியன் நெல்லையப்பனை பார்த்து வேண்டாம் பேசாதே என்பது போல கண்ணை காட்டினான்.

“இன்னும் ரேட்டிங் வரலையே” என்றான் மார்க்ஸ்.

“மணி பத்தரை தானப்பா ஆகுது... இன்னும் அரை மணி நேரம் இருக்கே”

“உள்ள போலாமா தல” என்றான் பாண்டியன்.

“இல்ல... இங்கயே நிக்கலாம்” என்றான் மார்க்ஸ்.

எதையும் அசால்ட்டாக டீல் பண்ணும் மார்க்ஸ் இந்த விஷயத்துக்கு இப்படி பதற்றமாவது அவர்களுக்கு புதிதாக இருந்தது.

ரேட்டிங்கினை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த சாந்தினி நிமிர்ந்து ஏஞ்சலை பார்த்தாள். அவளது முகம் சந்தோஷமோ துக்கமோ இன்றி இறுகி போய் இருந்தது.

“என்ன ரேட்டிங்?” என பதற்றமாக கேட்டாள் ஏஞ்சல்.

“பாயின்ட் ஃபைவ் அண்ட் பாயின்ட் செவன்” என்றாள் சாந்தினி.

ஏஞ்சல் சுக்குநூறாக உடைந்தாள். அவளது கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

சாந்தினி முகம் மெதுவாக புன்னகைக்கு மாறியது

“ஃபைவ் பாயின்ட் ஃபைவ் அண்ட் ஃபைவ் பாயின்ட் செவன். இந்த சேனல்ல லாஞ்ச் ஆன சீரியல்கள்லயே முதல் வாரம் அதிகமான ரேட்டிங் வந்த சீரியல்ஸ் இதுதான்” என்றாள் சாந்தினி.

ஏஞ்சலுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை. எதுவும் பேசாமல் அப்படியே டேபிளில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

சாந்தினி அவளை தடுக்க முயலவில்லை. அந்த அழுகையின் பின்னால் இருந்த சந்தோஷம் அவளுக்கு புரிந்தது. இது போன்ற ஒரு தருணத்திற்காகத்தானே ஒவ்வொருவரும் காத்திருக்கிறோம். வாழ்நாளெல்லாம் ஒன்றை நம்பி போராடிக் கொண்டிருக்கும் ஒருவன் அந்த நம்பிக்கை வெற்றி பெறும்

போது உணரக்கூடிய சந்தோஷம் அலாதியானது.

ஏஞ்சல் எழுந்து சாந்தினியை அணைத்துக் கொண்டாள். சாந்தினி அவளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள்.

“நீ ஜெயிச்சிட்ட ஏஞ்சல்”

ஆட்டம் முழுவதும் எப்படி விளையாடினோம் என்பது கடைசி பந்தில் எடுக்க வேண்டிய ஒரு ரன்னில் அடங்கியிருக்கும். கஷ்டப்பட்டு எடுத்த 350 ரன்கள் கடைசி ஒரு ரன்னை எடுக்க தவறினால் அர்த்தமற்றுப்போகும். அந்த வெற்றி ஏஞ்சலுக்கு சந்தோஷத்தை தந்ததை விட நம்பிக்கையை தந்தது.

தயங்கி தயங்கி மார்க்ஸிடம் ரேட்டிங்கை சொன்னான் பாண்டியன். மார்க்ஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“முத வாரம் ப்ரோமோ எல்லாம் போட்டு கிழி கிழின்னு கிழிச்சாங்கல்ல, அதனால ரேட்டிங் வந்திருக்குன்னு நினைக்கிறேன் தல... போக போக குறைஞ்சிரும் தல” என்றான் பாண்டியன்.

மார்க்ஸ் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான்.

“மார்க்ஸ்... வா உள்ள போலாம்” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் நிமிர்ந்து அவரை பார்த்தவன், “நீ போ மாமா நான் அப்புறமா வரேன்” என்றான்.

“விளையாடாத... ஒழுங்கா வா... ஓடிப்போனா தான் அசிங்கமா இருக்கும்”

“ஓடல்லாம் இல்ல மாமா... நான் அப்புறமா வரேன்”

“அதெல்லாம் ஆவுறது இல்ல... நீ இல்லாம நாங்க யாரும் உள்ள போறதா இல்லை” என உறுதியாக சொன்னார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் சற்று யோசித்து “இன்னொரு சிகரெட் மட்டும் பிடிச்சுக்கவா?” என அனுமதி கேட்கும் தொனியில் அவரிடம் கேட்டான்.

“கண்டிப்பா வேணுமா?”

மார்க்ஸ் தலையாட்டினான்.

“சரி... சீக்கிரம் பிடிச்சிட்டு வா” என்றார் நெல்லையப்பன்.

மார்க்ஸ் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தவன் மெதுவாக நடந்து

சற்று தள்ளி நின்று யோசனையுடன் புகைக்கத் தொடங்கினான்.

“என்னடா இவன் இப்படி இருக்கான்?”

“இல்ல மாமா அந்த ஏஞ்சல் ஏற்கனவே ஓவரா பண்ணும். இப்ப

ரேட்டிங் வேற வந்திருச்சா… வேற லெவல்ல நம்மள கலாய்க்கும்” என்றான் பாண்டியன்.

“ஆமா கலாய்க்கதான் செய்யும். நம்ம பண்ண ஷோ ரேட்டிங் வர்றப்ப எல்லாம் அத கலாய்ச்சோம்ல... பதிலுக்கு அது கலாய்க்கலைன்னா எப்படி?” என்றார் நெல்லையப்பன்.

“அதில்ல...இது வொர்க்காகும்னு தல நினைக்கல... ஆனா அது பயங்கரமா வொர்க்காயிடுச்சுல்ல”

“ஆமாடா... அப்படி வொர்க்காகும் போது கோச்சுகிட்டா எப்படி? கத்துக்கணும்... அது தான் அழகு”

“இது போய் மக்களுக்கு எப்படி பிடிச்சுதுன்னு தெரியலயே மாமா” என ஆதங்கமாகச் சொன்னான் பாண்டியன்.

“இது தான் பிடிக்குது... ரேட்டிங் வருது... ஏன் பிடிக்குதுன்னு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?”

“அது சரி தான்” என்றான் பாண்டியன்.

மார்க்ஸ் யோசனையாக சிகரெட்டை பிடித்துக் கொண்டிருந்தான்.

தலைவர்களின் தடுமாற்றமென்பது வித்தியாசமானது. தாங்கள்

உறுதியாக வெற்றிபெறாது என நினைக்கும் ஒரு விஷயம் வெற்றி பெறும் போது வென்று விட்டோமே என அவர்கள்

சந்தோஷப்படுவதில்லை. அதை விட தங்களின் நம்பிக்கை தோற்றுவிட்டதே என்பது தான் முன்னால் வந்து நிற்கும். அதன் பிறகு முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதெல்லாம் தான் எடுக்கிற முடிவு சரியா தவறா என்கிற அது சந்தேகத்தை தரும்.. அந்த சந்தேகம்தான் தோல்விக்கு ஒருவனை அழைத்து செல்லும் முதல் படி.

மார்க்ஸ் யோசனையாக சிகரெட் பிடித்தபடி இருந்தான்.

நெல்லையப்பனும் பாண்டியனும் கவலையாக மார்க்ஸை பார்த்தபடி இருந்தார்கள்.

Stay Tuned... அடுத்த எபிசோட் வரும் சனிக்கிழமை வெளியாகும்!