Published:Updated:

"அஜித் பாலிசியும் 5,000 மெசேஜும்!" - நெகிழும் `இக்லூ’ அம்சத் கான்

அம்சத் கான்
அம்சத் கான்

``சின்னச்சின்ன ரோலுக்காக நிறைய படங்களின் ஆடிஷன்ல தேர்வானேன். ஆனா, கடைசி நேரத்துல ஹீரோ ஒத்துக்கல, அவரோட நண்பருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு காரணம் சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.’’

நமக்கான காதலை, வருத்தத்தை, சோகத்தை, வலியை என நமக்கு நெருக்கமான ஒருவரோடு மட்டும்தான் அளவுக்கு அதிகமாகக் காட்டுவோம். அதைத்தான், அவர்கள்தான் 'இக்லூ'. ஜீ 5 தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இணைய திரைப்படம்தான் 'இக்லூ'. திரையாளும் அம்சத் கான் மற்றும் மஞ்சு குரியன் இருவருக்குமான வலியும், வலிக்கான நிவாரணியும் இவர்கள் இருவருமே.

பொதுவாக காதல் பற்றியோ, காதலில் வரும் பிரிவு பற்றியோ, காதல் தோல்வி பற்றியோ நிறைய படங்கள் பார்த்திருப்போம். கண்முன்னே காதல் எதிர்கொள்ளும் மரணத்தை, அந்த நேரத்துக்கான ரிலேஷன்ஷிப்பை எந்த சினிமாவும் கச்சிதமாகக் கையாண்டதாக நினைவில்லை. அப்படியான ஒரு கதைக்களத்தைக் கொண்டு, ரசிகர்களை உருகவைக்கிறது பனி சூழ்ந்த இந்த இக்லூவின் கதகதப்பு.

இயக்குநர் பரத் உடன் அம்சத் கான்
இயக்குநர் பரத் உடன் அம்சத் கான்

கடும் பனியை எதிர்கொள்ள , கடுமையான பனிக்கட்டிகளைக் கொண்டே எஸ்கிமோக்கலால் கட்டப்படும் உறைவிடமே இக்லூ. நாயகி மஞ்சு குரியனின் கதகதப்பு தரும் இக்லூ தான் நாயகன் அம்சத் கான். இவர்களின் காதலும், வலியும், மகிழ்வையுமே பேசுகிறது கதை.

படத்தின் நாயகன் அம்சத் கான், 'வல்லினம்' போன்ற தேசிய விருதுபெற்ற படத்தில் நடித்திருந்தாலும், இக்லூ அவருக்கு புதிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது. விஜய் டிவி-யின் 'ஆயுத எழுத்து' சீரியலிலும் நாயகனாகக் களமிறங்கியிருக்கும் அம்சத், அவரின் திரைப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

எப்படி சினிமா துறைக்குள்ள வந்தீங்க?

அம்சத் கான்
அம்சத் கான்

அடிப்படையில் நான் மார்கெட்டிங் துறையைச் சார்ந்தவன். ஒரு எஃப்.எம் ஸ்டேஷனில் மார்கெட்டிங் ஹெட்டா வேலை பார்த்துட்டு இருந்தேன். வேலை பார்த்துட்டே ஷார்ட் ஃபிலிம், தியேட்டர் நாடகம் போன்று நடிப்பிலும் கவனம் செலுத்திட்டு வந்தேன். ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணும்போது நிறைய சினிமா துறை சார்ந்தவர்களோட நட்பு எனக்கு கிடைச்சது. நான் 2010-ல் இருந்தே சினிமா துறையில் இருக்கேன். நண்பர்கள் மூலமா கான்டாக்ட்ஸ் வெச்சு, 'மாயா', 'வல்லினம்' 'நட்பதிகாரம்' என ஒரு ஆறு படங்கள் பண்ணேன். 2009-ல் இயக்குநர் கனவோடு இருக்கும் பாரத் மோகன் நட்பு கெடச்சது. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து 'நிழலாட்டம்'னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணோம். அந்தச் சமயத்தில், டிஜிட்டல் மீடியா அந்த அளவுக்கு பரிச்சயம் கிடையாது. ஃபேஸ்புக், யூடியூப் இதெல்லாம் என்னன்னே தெரியாது. எங்க படத்தைப் பகிர எந்த டிஜிட்டல் தளமும் அப்போ இல்ல. அதனால, நாங்க எடுத்த படத்தை நாங்களே போட்டு பார்த்துப்போம். அதுக்கு, விஷால் சந்திரசேகர் தான் இசையமைத்தார். இப்போ, அவர் பெரிய இசையமைப்பாளர் ஆகிட்டார். பிரசன்னா ஜி.கே அந்தப் படத்துக்கு எடிட்டிங் வேலை பண்ணார். அவரும் இப்போ நல்ல நிலைக்கு வந்துட்டார். நாங்க எல்லாரும் ஒரு கேங். அப்போது எல்லோருமே பேச்சிலர்ஸா இருந்தோம். அதனால, நிறைய சினிமா சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினோம். இப்படியே லைஃப் போயிட்டு இருந்துச்சு. நாங்க தனிதனியா எங்க வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சோம். இப்போ, பல போராட்டத்துக்குப் பிறகு இக்லூ மூலமா திரும்பவும் நடிக்க வந்திருக்கேன்.

இக்லூ உருவாக்கம் பத்தி சொல்லுங்க?

அம்சத் கான்
அம்சத் கான்

ஒரு ஐந்து வருடங்கள் முன்னாடி பரத் எனக்கு கால் பண்ணார். ``ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு மச்சான், ஷார்ட் ஃபிலிமா பண்ணலாம்’’ அப்படின்னு சொன்னார். அந்த ஸ்கிரிப்ட் கேட்டு நான் அழுதுட்டேன். இத கண்டிப்பா நாம படமா எடுக்கணும்னு நான் சொன்னேன். அந்த ஸ்கிரிப்டை ஷார்ட் ஃபிலிம்மாவும் பண்ணோம். நண்பர்கள் வீட்டில் ஷூட், சாலையில் ஷூட் எனப் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்தப் படத்தை எடுத்து முடிச்சோம். அப்படியும் எங்களுக்கு டிஜிட்டல் தளம் பரிச்சயம் இல்லாததால படம் வெளியிட முடியல. சில மாதங்கள் முன்னர், டிஜிட்டல் தளம் இருக்கே நாம ஏன் அந்த நல்ல ஸ்கிரிப்டை இப்போ எடுக்கக் கூடாதுனு தோனுச்சு. நான் உடனே பரத்துக்கு கால் பண்ணி, நாம இப்போ அந்தப் படத்தை பண்ணலாம்னு சொன்னேன். அவரும் உடனே ஓகே சொல்லிட்டார். இப்படித்தான் இக்லூ உருவாக்கம் நடந்துச்சு.  இக்லூ ஷூட் அப்போ எங்களுக்கு நிறைய பிரச்னைகள் வந்தது. ஏதோ நண்பர்கள் சேர்ந்து பண்ணதால சமாளிச்சோம். சென்னையில் 20 நாள் ஷூட் நடந்துச்சு. கோத்தகிரியில் 10 நாள் பண்ணோம்.

இக்லூ படத்தில் என் மகள்களா நடிச்ச ட்வின்ஸ், உண்மையில் ரொம்ப திறமையான குழந்தைங்க. ஷாட் எங்க வைக்குறாங்க, க்ளோஸ் ஷாட், வைட் ஷாட் எல்லாமே அவங்களுக்குத் தெரியும். அழகா நடிச்சுக் கொடுத்தாங்க. இந்தப் படத்துக்கான கிரெடிட்ஸ் இயக்குநர் பரத்துக்குதான் போகணும். அவர் அமைத்த காட்சிகள்ல நான் இயல்பா நடிச்சேன். அவர் எழுதியிருக்கத நான் பிரதிபலிச்சேன். இப்போ நான் என்னோட ரியல் லைஃப்லயும் ஜாலியான அப்பாவாதான் இருக்கேன். எனக்கு ஒன்றரை வயசுல குழந்தை இருக்கு. 

இக்லூவை தியேட்டர் ரிலீஸ் பண்ணாம டிஜிட்டல் தளத்தை தேர்வு செய்தது ஏன்?

அம்சத் கான்
அம்சத் கான்

'இக்லூ' படத்துக்காக தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர்களை சந்திச்சுப் பேசினோம். ஆனா, அவங்க இது நல்ல ஸ்கிரிப்ட் தான். நல்ல ஹிட் ஹீரோ வெச்சு பண்ணாதான் நல்லா ரீச் ஆகும்னு சொல்லிட்டாங்க. ஃபேஸ் வேல்யூ இருக்கிற நடிகர்கள்ன்னு போன பட்ஜெட் எகிறும். அந்த மாதிரியான நடிகர்கள் இல்லாட்டி அந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதும் கஷ்டம். படம் நல்லாருக்குன்னு செய்தி பரவுகிறதுக்குள்ள தியேட்டர்ல இருந்து படம் எடுத்துடுவாங்க. பரத்துக்கு அதில் ஈடுபாடு இல்லை. அதனால டிஜிட்டல் தளத்தில் வெப் மூவியா அந்தப் படத்தை வெளியிட முடிவு பண்ணோம். அதுதான் எங்க பட்ஜெட்டுக்கும் சரியா வரும்னு தோணுச்சு. அப்புறம் அதே நண்பர்கள் கேங் மீண்டும் ஒண்ணு சேர்ந்தோம். ஒரு மாசத்துல படம் ஷூட் பண்ணி முடிச்சிட்டோம். நாங்க எதிர்பார்த்தத விட நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சது. வேற லெவல் ரீச். ரொம்ப சந்தோஷமா இருந்தது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த இந்த படத்துக்கு  டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் சரியானது. 

இக்லூ பார்த்துட்டு பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் யாராச்சும் வாழ்த்தினாங்களா?

இதுவரைக்கும் இல்லை. இக்லூ படம் டிஜிட்டல் தளத்துல வெளியானதால ரீச் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனா, மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இதுவே எங்களுக்கு பெரிய வெற்றியாதான் பார்க்குறோம். என்னோட இன்ஸ்டாவில் எனக்கு ரொம்பப் பெரிய ஃபேன் ஃபாலோயர்ஸ் கிடையாது. ஆனா, இக்லூ வெளியான பிறகு கிட்டத்தட்ட 5000 மெசேஜ் வந்துச்சு. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் நிறைய பேர் பாராட்டி மெசேஜ் பண்ணாங்க. இக்லூ டிரெய்லர் வெளியானப்போ வெறும் 3000 வியூவர்ஸ் தான் பார்த்திருந்தாங்க. ஆனா படம் வெளியானதும் 2 லட்சம் பேருக்கு மேல பார்த்திருக்காங்க. மேலும் யூ டியூபில் 200 மேற்பட்ட கமென்ட்ஸ் வந்திருந்தது. ஒரு கமென்ட் கூட நெகடிவ் கமென்ட் இல்லை. அதுவே எனக்கு பெரிய வெற்றி பெற்ற ஃபீல் கொடுத்துச்சு.

யாரோட இயக்கத்துல நடிக்கணும்னு ஆசை?

அம்சத் கான்
அம்சத் கான்

பரத் இயக்கத்தில் தான் நடிக்கணும்னு ஆசை. நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷமா ஃப்ரெண்ட்ஸ். நாங்க இருவரும் சேர்ந்துதான் சினிமா துறையில் சாதிக்கணும்னு போராடிட்டு இருக்கோம். நிறைய பேர்கிட்ட  நான் சான்ஸ் கேட்டிருக்கேன். சின்னச்சின்ன ரோலுக்குக்கூட என்னை ரிஜெக்ட் பண்ணாங்க. படத்துக்கு ஆடிஷன்ல தேர்வாகியிருப்பேன். ஆனா, கடைசி நேரத்துல நடிகர் ஒத்துக்கல, நடிகர் அவரோட நண்பருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு சொல்றார். தயாரிப்பாளர் ஒத்துக்கல அப்படின்னு காரணங்கள் சொல்லி என்னை ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. முகவரி படத்துல அஜித் சார் தன்னோட பேஷன விட்டுடலாம்னு முடிவு எடுப்பார். அதே மாதிரி தான் நானும்  ஒரு கட்டத்துல நடிப்பை விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஃபேமிலி இருக்கு. நல்லா படிச்சிருக்கோம். மாதாந்திர வருமானம் முக்கியம்னு தோணுச்சு.

அம்சத் கான்
அம்சத் கான்

பரத்தும் நானும் போனில் பேசிப்போம். எனக்கு ஃபேமிலி இருக்கு மச்சி, யாருமே சேன்ஸ் கொடுக்கமாட்றாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. சினிமா ஆசைக்கு முடிவுக்கட்டலாம்னு பாக்குறேன்னு சொன்னேன். இரு மச்சி அவசரப் படாத. நாம முயற்சி பண்ணிட்டே இருப்போம்ன்னு பரத் சொன்னார். அதன்பிறகுதான் இக்லூ பண்ணத் தொடங்கினோம். ஒருவேளை இக்லூ படம் வராம இருந்திருந்தா நான் திரும்பவும் எஃப்.எம் ஸ்டேஷனுக்கு போயிருப்பேன். யாருமே என்னை நம்பாதபோது பரத் தான் நம்பினார். நிறையா தயாரிப்பாளர்கள் கதை சூப்பரா இருக்கு, பெரிய நடிகர் வெச்சு இந்த படம் பண்ணலாம்னு சொன்னாங்க. வேறு இயக்குநரா இருந்திருந்தா இந்நேரம் இந்தக் கதையை பெரிய நடிகர் வெச்சு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருப்பாங்க. நான்தான் அந்தப் படத்துல நடிக்கணும்னு பரத் உறுதியா இருந்தார். இந்தப் படம் பண்ணா அம்சத்கூட மட்டும்தான் பண்ணுவேன்னு சொல்லிட்டான். இதுதான் எங்க நட்பின் ஆழம். என்னைக்குமே நான் பரத்துக்கு கடமைப்பட்டிருக்கேன்.

டிரீம் ரோல்?

அம்சத் கான்
அம்சத் கான்

எனக்கு வில்லன் ரோல் பண்ணனும்னு ஆசை. எனக்கு ஹீரோவா நடிக்க ஆர்வம் இல்லை. ரொம்ப உணர்வுபூர்வமான கேரக்டர் வந்தா நடிப்பேன். எனக்கு ரகுவரன் சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை யாராலயும் ரீபிளேஸ் பண்ண முடியாது. நான் இந்த 10 வருஷத்துல இதுவரை 1000 ஆடிஷன் போயிருப்பேன்.

சினிமாவில் சாதிக்கணும்னுதான் 10 வருஷமா போராடினீங்க. திடீர்னு சின்னத்திரைக்கு வந்தது ஏன்?

அம்சத் கான்
அம்சத் கான்

விஜய் டிவி-யில் இருந்து ஆயுத எழுத்து சீரியல் வாய்ப்பு வந்தபோது ரொம்பத் தயங்கினேன். ஆனா சினிமாவைவிட டெலிவிஷன்ல நல்ல ரீச் கிடைக்கும்னு யோசிச்சேன். அதனால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டேன். சின்னத்திரையில் நல்ல மதிப்புக் கிடைக்குது. என் திறமைக்கு நல்ல மரியாதை கிடைச்சது. என்னோட நல்ல நேரம், இக்லூவும் ஆயுத எழுத்தும் ஒரே டைம்ல அமைஞ்சது. ரெண்டுமே நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.

அம்சத் கான் கூறியது போல் உண்மையில் அவரின் திரைப் பயணம் அஜித்தின் முகவரி படத்தை தான் நினைவுக்கூறுகிறது. கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் வெளிபாடு தான் அம்சத்துக்கு அமைந்த இக்லூ. கூடவே ஆயுத எழுத்து என்னும் பெரிய சீரியலில் ஹீரோ ரோல்.

பின் செல்ல