Published:Updated:

லாக்டெளனை மீறி டிவி சீரியல் ஷூட்டிங்: அம்மாவைப் பறிகொடுத்த நடிகை, அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?!

டிவி சீரியல் - மாதிரிப்படம்

லாக்டெளன் விதிகளையும் மீறி கடந்த மே 10-ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்ததன் விளைவு ‘பூ’ பெயர் கொண்ட சீரியல் செட்டில் சுமார் 30 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

லாக்டெளனை மீறி டிவி சீரியல் ஷூட்டிங்: அம்மாவைப் பறிகொடுத்த நடிகை, அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?!

லாக்டெளன் விதிகளையும் மீறி கடந்த மே 10-ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்ததன் விளைவு ‘பூ’ பெயர் கொண்ட சீரியல் செட்டில் சுமார் 30 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

Published:Updated:
டிவி சீரியல் - மாதிரிப்படம்

கொரோனா இரண்டாம் அலையின் பரவலைக் குறைக்க தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறு பெட்டிக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எல்லாமே மூடப்பட்டுள்ளன. பால், காய்கறி முதலான உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களைப் பொறுத்தவரை சினிமா ஷூட்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்து, தெளிவான உத்தரவோ, அனுமதியோ இன்னும் தரப்படவில்லை. ஆனால், முழு லாக்டெளன் அமல்படுத்தப்பட்ட மே 10-ம் தேதிக்குப் பிறகும் பல்வேறு டிவி சீரீயல்களின் ஷூட்டிங்குகள் நடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் நம்மிடம் சொல்ல விசாரணையில் இறங்கினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஆமாங்க... சீரியல் ஷூட்டிங் நடக்கிறது உண்மைதான். நேற்றுகூட (மே-13) ஷூட்டிங் முடிச்சிட்டுத்தான் வந்தேன். ஊரடங்கு அது இதுன்னு பேசினா அடுத்த சில நாட்கள்ல சீரியல்ல நாங்க இருக்க மாட்டோம். அதனால வேற வழியில்லை. போயிட்டுத்தான் வரவேண்டியிருக்கு’' என்றார் அந்த முக்கியமான சேனலின் பிரைம் டைம் சீரியல் ஹீரோ.

டிவி சீரியல் ஷூட்டிங் - மாதிரி படம்
டிவி சீரியல் ஷூட்டிங் - மாதிரி படம்

சேனல் வித்தியாசமின்றி எல்லா டிவி சேனல்களுமே ஷூட்டிங்கைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஒரு இடத்தில் சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்புத் தெரிவிக்க இடத்தை மாற்றிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஈ.சி.ஆர் பகுதியில் நடந்து கொண்டிருந்த ஒரு ஷூட்டிங் குறித்து காவல்துறைக்குத் தகவல் வர, அவர்கள் சென்று எச்சரிக்க, அந்த யூனிட்டும் இடத்தை மாற்றி விட்டார்களாம். இன்னும் சில இடங்களில் காவல் துறையினரே, ''வாகனங்களை வெளியில் நிறுத்தாமல் காம்பவுண்டுக்கு உள்ளே நிறுத்திக்கோங்க. யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து ஷூட்டிங் நடத்திக்கோங்க'' என ரகசிய அனுமதி கொடுக்கிறார்களாம்.

‘’ரகசியமா ஷூட்டிங் எடுக்கிறவங்க அதுல நடிக்கிற நடிகர், நடிகைகள், அவங்க குடும்பம் பத்தி யோசிச்சுப் பார்க்க மாட்டேங்குறாங்க. போன வருஷம் ஊரடங்கு முடிஞ்சு ஷூட்டிங் ஆரம்பிச்ச சமயத்துல, சிலர் கொரோனா பயத்தால ஷூட்டிங் வர மறுத்தாங்க. அதனால 20 பேருக்கு மேல சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க. இப்பவும் அப்படி ஆகிடுமோன்னு பயந்து ஷூட்டிங் போக வேண்டிருக்கு. சின்னச் சின்னப் பெட்டிக்கடைகளைக்கூட திறக்க அனுமதிக்காத அரசு, நூறு பேர் வரைக்கும் கூடுற இந்த சீரியல் ஷூட்டிங் விஷயத்துல ஏன் பாராமுகமா இருக்குனு தெரியலை. ஷூட்டிங்கை நம்பி சிலர் பிழைக்கிறாங்கதான்... ஆனா, அவங்களுக்குமே உயிர் முக்கியமில்லையா’’ என்கிறார் சென்ற லாக்டௌனில் ஷூட்டிங் செல்ல மறுத்த அந்த சீனியர் நடிகை.

கடந்த மே 10-ம் தேதியிலிருந்து தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வந்ததன் விளைவு ‘பூ’ பெயர் கொண்ட சீரியல் செட்டில் விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. அந்த சீரியலின் ஹீரோவுக்குத்தான் முதலில் கொரோனா தொற்று இருந்திருக்கிறது. ஆனாலும், அவரை ஷூட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். அவருக்கு இருந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு டெக்னீஷியன்கள் கவலையுடன் முறையிட்டிருக்கிறார்கள். அடுத்த சில தினங்களில் ஸ்பாட்டில் இருந்த 30 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து யூனிட்டில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டிச் சென்று சத்தமில்லாமல் அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டிருக்கின்றனர். சீரியல் யூனிட் நேற்று மட்டும் ஷூட்டிங்கை நடத்தவில்லை என்கிறார்கள்.

இதேபோல் பிரபல பார்ட் -2 சீரியலின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்திருக்கிறது. இதில் உதவி இயக்குநர்கள் சிலருக்கு லேசான அறிகுறிகள் தெரியவந்த பிறகே ஷூட்டிங்கை நிறுத்தியிருக்கிறார்கள்.

சீரியல் ஷூட்டிங்
சீரியல் ஷூட்டிங்
மாதிரி படம்

ஒரு பிரபல சீரியலின் ஹீரோயின் தன் அம்மாவை கொரோனாவுக்கு இழந்திருக்கிறார். அவரிடம் பேசினேன். ‘’நான் பேசற மனநிலையில் இப்ப இல்லீங்க. முதல்ல எனக்கு கொரோனா பாசிட்டிவ். என் மூலமா அம்மாவுக்கு வந்தது. ரெண்டு நாள் முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. எல்லாம் கொஞ்சம் சரியானதும் நான் பேசறேன்’' என முடித்துக்கொண்டார்.

தமிழகத்துக்கு முன்பே மகாராஷ்டிராவில் லாக்டௌன் அமலானது. அப்போது இந்தி டி.வி சீரியல்களின் ஷூட்டிங் தடைபட்டது. உடனே யூனிட்டை கோவாவுக்கு மாற்றி, அங்கு ஷூட்டிங் நடத்தினார்கள். அதன்பின் கோவாவிலும் ஊரடங்கு தடைகள் அமலாக, எந்த மாநிலத்தில் அனுமதி கிடைக்கிறதோ, அங்கு போய் ஷூட்டிங் நடத்துகிறார்கள். ஐபிஎல் போட்டிகளில் செய்வது போல பயோ பபுள் பாதுகாப்பை ஏற்படுத்தி ஷூட்டிங் நடக்கிறது. இப்படி சட்டபூர்வமாக ஷூட்டிங் நடத்தினாலும், அதற்கும் கண்டனங்கள் எழுந்துள்ளது. ''நடிகர், நடிகைகளையும் டெக்னீஷியன்களையும் இப்படிக் கஷ்டப்படுத்தி இதைத் தொடரத்தான் வேண்டுமா?'' என்று கேட்டார்கள். ஆனால், தமிழகத்தில் சட்ட விதிகளை மீறி ஷூட்டிங் நடத்துகிறார்கள்.

''கடந்த ஆண்டில் கடுமையான ஊரடங்கு திடீரென அமலானதால், எல்லா சேனல்களும் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்தன. இம்முறை அப்படிச் செய்வதற்கு முன்னணி சேனல்கள் தயாராக இல்லை. ஒரு சேனல் ஷூட்டிங்கை தொடர முடிவெடுத்தாலும், அது மற்ற எல்லா சேனல்களுக்கும் அப்படியே செய்ய வேண்டிய பிரஷரை ஏற்படுத்துகிறது. எல்லா முக்கியமான சேனல்களுமே இதனால்தான் தொடர் தயாரிப்பாளர்களுக்கு பிரஷர் கொடுக்கின்றன. அதனால் அவர்கள் சட்டத்தை மீறியாவது ஷூட்டிங்கை தொடர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்'' என வருந்துகிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், கொரோனா பரவலை நினைத்து அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்கள் தேவைதான். ஆனால், கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கு பொழுதுபோக்கைக் கொடுக்க நினைப்பது சரியல்ல!

பெப்ஸி, டிவி சேனல்கள் சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டபோதே, ''இது ரொம்ப முக்கியமா?’' என எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ''சீரியல் ஷூட்டிங்கை நம்பி இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழி தெரியாது. கடந்த முறை ஊரடங்கின்போதே எல்லோரும் கஷ்டப்பட்டனர். இம்முறை அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்பதால்தான் அனுமதி கேட்கிறோம்'' என்கிறார் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

ஆனால், அரசின் விதிகளை மதிக்காமல் ரகசியமாக ஷூட்டிங் நடத்தி சின்னத்திரை நடிகர்கள், கலைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன டிவி சேனல்கள். ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. இந்த விவகாரத்திலும் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.