ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

கல்யாணம் முடிஞ்சும் ஹனிமூன் போகலை!

ஸ்ரீதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீதிகா

விகடன் TV

கல்யாணம் முடிஞ்சும் ஹனிமூன் போகலை!

``நடிகைகளுக்குக் கல்யாணம் நடந்தா, மறக்காம எழுப்பப்படும் ஒரு கேள்வி. `தொடர்ந்து நடிப்பீங்களா?’ இந்தக் கேள்வியிலிருந்து தப்பிச்சேன்’னு நினைச்சேன். ஏன்னா, 2019 டிசம்பர் 30 என் கல்யாணம். சரியா ஒரு வாரத்துல அதாவது ஜனவரி 2020 முதலல் வாரத்துலயே எனக்கு ஷூட்டிங். ஆனா பாருங்க, அடுத்த மூணாவது மாசத்துல மொத்தமும் காலி. கொரோனா, ஊரடங்கு, நடிச்சிட்டிருந்த சீரியலுக்கு எண்ட் கார்டு... இப்படி நிறைய.’’ - கடந்து போன சிக்கல்களைக்கூட கலகலவெனச் சிரித்தபடி நினைவுகூர்ந்த ஸ்ரீதிகாவிடம் தொடர்ந்து பேசினேன்.

``புதுசா கல்யாணமும் ஆகியிருக்கு. கணவர் பக்கத்திலேயே இருக்கக் கிடைச்ச வாய்ப்பா நினைச்சுக்க வேண்டியதுதானே?’’

‘`(லேசாக முறைத்தவர்) ஏங்க, சனீஷை (கணவர்) நேர்ல பார்த்து எட்டு மாசம் ஆச்சு. என்னை மாதிரியே அவரும் கல்யாணம் முடிஞ்ச மறு வாரத்துல வேலையில சேர்ந்துட்டார். வயநாட்டுல அவங்க வீட்டுல இருந்து ரெண்டு பேருமா கிளம்பி, ஏர்போர்ட் வந்து, ஏர் இந்தியாவுல அவர் துபாய்க்கும் டொமெஸ்டிக் சர்வீஸ்ல நான் சென்னைக்குமா ப்ளைட் ஏறினோம். அடுத்த ஒரு வாரத்துலயே எங்களுக்குத் தலைப்பொங்கல். ஆனா ரெண்டு பேருக்குமே லீவு இல்லை.

ஸ்ரீதிகா
ஸ்ரீதிகா

அதனால மறுமாசம் வந்த காதலர் தினத்தில் சந்திச்சே ஆகணும்’னு முடிவு செய்தோம். அதன்படி பிப்ரவரி 14 தம்பதியா எங்களுடைய முதல் காதலர் தினம் கேரளாவுல கழிஞ்சது’’ என்றவரிடம், கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் பரிமாறிக் கொண்ட பரிசுகள் பற்றிக் கேட்டேன்.

‘`என் மாமா (அக்கா கணவர்) மூலம்தான் எனக்கு சனீஷ் அறிமுகமானார். டிவி நடிகர் சங்கம் மலேசியாவுல கலைநிகழ்ச்சி நடத்தினப்ப அவரை முதன்முதலா சந்திச்சேன். ‘பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்’னு என் மாமா சொல்லியிருந்தார். முதன் முதலா சந்திக்கப் போறேன், வெறுங்கையுடன் போகலாமா? அவருக்கு ஒரு டிஷர்ட் வாங்கிட்டுப் போயிருந்தேன். அவரும் எனக்கு ஒரு மோதிரம் வாங்கி வச்சிருந்தார்.

பார்த்தோம், பேசினோம், பிடிச்சிருந்தது. நான் வாங்கிட்டுப் போன டிஷர்ட் அவருக்கு சரியா இருந்தது. ஆனா அவர் எனக்கு வாங்கின மோதிரம்தான் அளவு பெரிசா இருந்தது. அதையே மாத்தி, பிறகு திருமணப் பரிசாத் தந்துட்டார்.

ஸ்ரீதிகா
ஸ்ரீதிகா

அதேபோல காதலர் தினத்துக்கும் நான் அவருக்கு சட்டையும் எங்க மேரேஜ் போட்டோ ப்ரேமும் தந்தேன். அவர் பெர்ப்யூம் வாங்கிட்டு வந்தார். அந்த மனுஷன் சர்ப்ரைஸ் பண்றதுக்கெல்லாம் கூச்சப்படற டைப். அதனால எங்க லவ்வர்ஸ் டே செலிபிரேஷன் சிம்பிள்தான்’’ என்றார்.

அந்தக் காதலர் தினத்துக்குப் பிறகு இன்று வரை தம்பதியினர் இருவரும் நேரில் சந்திக்கவே இல்லை. அந்த வருத்தத்தையும் பகிர்ந்தார்.

‘`லவ்வர்ஸ் டே முடிச்சுட்டுப் போன மறுமாசம்தான் கோவிட் ஊரடங்கு வந்துடுச்சே! அவரு துபாய்ல ஐ.டி. நெட் ஒர்க் அண்ட் செக்யூரிட்டி இன்ஜினீயரா இருக்கார். `ஒர்க் ப்ரம் ஹோம்’னு வீட்டுல இருந்து வேலை செய்யறோமே, அதுல ஏதாச்சும் நெட் ஒர்க் ப்ளஸ் செக்யூரிட்டி பிரச்னைகள் வந்தா அதைச் சரி செய்ய வேண்டியதுதான் அவர் வேலை. அதனால அவர் ஆபீஸ்ல மத்தவங்களுக்குத்தான் வீட்டுல இருந்து வேலை. இவர் தினமும் ஆபீஸ் போகணும். அதனால லாக் டௌன்ல ஊருக்கு வரவும் முடியலை. கேரளாவுல கோவிட் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால கேரளா போறதுக்கு எனக்கும் பயம். இப்படியே நாள்கள் கழிஞ்சது.

கொஞ்சம் தளர்வுகள் அறிவிச்ச பிறகுமே இந்தியா போகணும்னா ’அங்க இன்னும் சூழல் சரியாகலை’ன்னு சொல்லி அவர் அலுவலகத்துல அனுமதி தர மாட்டேங்கிறாங்களாம். அதனால எட்டு மாசமா வீடியோ கால் மூலமாவே வாழ்க்கை நடத்திட்டிருக்கோம். அந்த மனுஷன் பாவம், புதுசாக் கல்யாணமாகி ஒரு நாள்கூட என் கையால ருசியா சமைச்சுச் சாப்பிடலை. ஒரேயொரு தடவை ஆம்லெட் போட்டுக்கொடுத்ததோடு சரி.

‘‘கடைசியா ‘கல்யாணப்பரிசு’ சீரியல்ல நடிச்சேன். ஆனா கல்யாணம் முடிஞ்சு ஒரு ‘ஹனிமூன்’ போக முடிஞ்சதா? என் கல்யாணத்துக்கு நல்ல பரிசா லாக் டௌனையும் பிரிஞ்சிருக்கிற துயரத்தையும் கொடுத்திருச்சு இந்தப் பாழாப்போன கொரானா!’’ –கோவிட் 19-ஐச் சபித்துச் சிரிக்கிறார்.

கல்யாணம் முடிஞ்சும் ஹனிமூன் போகலை!

“அப்ப லாக் டௌன்ல என்னதான் செய்தீங்க? அடுத்த சீரியல் எப்போ?”

‘`எல்லாரும் செஞ்ச ஒரு வேலையைக் கொஞ்சம் தாமதமாச் செய்திருக்கேன். அதாங்க, `சிம்ப்ளி ஸ்ரீதிகா’ங்கிற பேருல யூடியூப் சேனல் ஒண்ணு ரெடியாகியிருக்கு. அடுத்த சில நாள்களில் ஸ்டார்ட் ஆகிடும்.

சீரியலைப் பொறுத்தவரை சில வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா கேரக்டர் திருப்தி இல்லாததால கமிட் ஆகலை. இடையில ‘மகராசி’ தொடர்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சுக் கொடுத்தேன். இன்னும் சில புராஜெக்ட் பேசிட்டிருக்காங்க. இன்னும் உறுதி செய்யப்படலை’’ என்கிறார்.