Published:Updated:

``தனுஷ்கிட்ட நான் அப்படிச் சொன்னதும், `ஐ யம் ஹேப்பி'ன்னார்!" - சர்ப்ரைஸ் தியா மேனன்!

''டிவி ஆங்கர்னா, நடிகர் நடிகைகளைப் பக்கத்துல பார்த்துப் பேசுவாங்க, கொஞ்ச நாள்ல சீரியல், பிறகு சினிமானு வேற லெவலுக்குப் போயிடுவாங்கன்னுதானே இங்க பேசிட்டிருக்காங்க...''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது, கோயம்புத்தூரின் உள்ளூர் சேனல் ஒன்றில் சப்ஸ்ட்யூட் ஆங்கராக காம்பியரிங்கைத் தொடங்கிய தியா மேனன், இன்று தமிழில் முன்னணி தொகுப்பாளினி. ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை பேட்டி கண்டுவிட்டார். காம்பியரிங் அனுபவங்கள், காதல், 'கிரிக்கெட் கேப்டனின் மனைவியாக குடும்ப வாழ்க்கை' எனப் பேசினார் தியா.

''ஆங்கரிங் என்னோட சாய்ஸ். ஸ்கூல் முடிச்சு காலேஜ் போன போது, 'படிப்புல கவனம் இருக்கட்டும்; ஆங்கரிங்கை விட்டுடலாமே'ன்னார் அப்பா. 'படிச்சுகிட்டே பண்றேனேப்பா'ன்னேன். சொன்னது போலவே ப்ளஸ் டூ, காலேஜ்ல நல்ல மார்க் எடுத்துக் காட்ட, அதுக்குப் பிறகே வீட்டுல சம்மதிச்சாங்க. காலேஜ் முடிச்சு சென்னை வந்ததும், பிரபலமான மியூசிக் சேனல் என்னைச் சேர்த்துக்கிட்டதுக்குக் காரணம், பள்ளிக் கூட நாட்கள்ல இருந்தே பார்ட் டைம்ல பண்ணிண ஆங்கரிங்தான். முதல் நிகழ்ச்சியே லைவ் தந்தாங்க. அதேபோல ஸ்டார் இன்டர்வியூவா முதல்ல சந்திச்சது தனுஷை. பேட்டி முடிஞ்ச பிறகு, அவர்கிட்ட சொன்னேன். 'என்னோட முதல் செலிபிரிட்டி இன்டர்வியூ இது'னு. 'ஐ யம் ஹேப்பி'னு சொல்லிட்டு வாழ்த்தினார்.

Diya Menon
Diya Menon

என்னைப் பொறுத்தவரை ஆங்கரிங் வேற லெவல் வேலை. ஒவ்வொரு நாளும் நிறையக் கத்துக்க முடியுது. சினிமாவுல பெரிய பெரிய ஆளுங்களுக்கு நம்மைத் தெரியுதுங்கிறதும் ஒரு சந்தோஷத்தைத் தருமில்லையா? அதேநேரம், என்னோட வேலையில நூறு சதவிகிதம் உழைப்பைக் காட்டவும் தவறியதே இல்லை. வேற ஒண்ணுமில்லிங்க, செய்யற வேலையைப் பிடிச்சு செஞ்சா போதும். 'கிரேஸி கண்மணி'னு நான் பண்ணிய ஷோ எனக்கு நல்ல புகழைத் தந்தது. அப்பெல்லாம் எங்க வெளியில போனாலும் 'கண்மணி'ன்னே கூப்பிடுவாங்க. காலேஜ் பசங்க 'கண்மணி அன்போடு நான் எழுதிய கடுதாசி கிடைச்சதா'ன்னெலாம் கலாய்ச்சிருக்காங்க .

'நம்ம ஷோவைப் பார்க்குறதாலதானே கலாய்க்கிறாங்க'ன்னு அவங்களையே ரசிகர்களா நினைச்சுப்பேன். இந்த மாதிரியான என்னோட அப்ரோச்னாலயும் கடவுள் ஆசியாலயும் இப்ப வரைக்கும் நல்ல படியாப் போயிட்டிருக்கு' என்ற தியாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. கணவர் கார்த்திக் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் கேப்டன்.

Diya Menon
Diya Menon

''எங்களோடது காதல் கல்யாணம். கல்யாணத்துக்குப் பிறகு நான் சிங்கப்பூர் போய் செட்டிலாகறதங்கிறதுதான் ப்ளான். ஆனா டிவி, சினிமாவுல இருந்து எனக்குக் கிடைச்ச வாய்ப்புகளைப் பார்த்துட்டு, அவரே ஆங்கரிங்கைத் தொடரச் சொல்லிட்டார். எனக்கு இது டபுள் சந்தோஷத்தைத் தர, அன்னைக்குத் தொடங்கினதுதான் இன்னைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட மூணு வருஷமா பறந்துகிட்டேதான் ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன்' என்றவர், 'ஆங்கர்னா, நடிகர் நடிகைகளைப் பக்கத்துல பார்த்துப் பேசுவாங்க, கொஞ்ச நாள்ல சீரியல், பிறகு சினிமானு வேற லெவலுக்குப் போயிடுவாங்க'ன்னுதானே இங்க பேசிட்டிருக்காங்க. ஏர்போர்ட்லயே என் வாழ்க்கையின் பாதி நாள் போகிற கொடுமையெல்லாம் யாருக்காவது தெரியுமா?!'' எனச் சிரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''ஃபிளைட்டைப் பிடிச்சா அஞ்சு மணி நேரம்தான். ஆனால் முன்னாடியும் பின்னாடியும் சில மணி நேரங்களை எடுத்துக்குது. அதான் தாங்க முடியலை' என ஆதங்கப்பட்டவர், நிறைவாக இப்படிச் சொன்னார்.

Diya Menon
Diya Menon

''எனக்குப் பிடிச்ச ஒரு விஷயத்துக்காக ட்ராவல்லயே போகுது என்னோட இப்போதைய வாழ்க்கை. அதேநேரம் எனக்கு ஆங்கரிங்கைத் தாண்டியும், என்னோட கணவருக்குக் கிரிக்கெட்டைத் தாண்டியும் பிடிச்சதுன்னா அதுவும் ஒரே விஷயம்தான். அது, ட்ராவல் பண்றது.

காசு பணம் சேர்க்கணும்; பெரிசா வீடு கட்டணும்னெல்லாம் எங்களுக்கு ஆசை இல்லை. சம்பாதிக்கிற பணத்துல கணிசமா பயணத்துக்குச் செலவழிக்கணும்னு நினைக்கிறோம். இதுவரைக்கும் ரெண்டு பேருமா பதினெட்டு நாடுகள் போயிட்டு வந்துட்டோம். உலகத்துல இருக்கிற நாடுகளோட லிஸ்ட்ல இது ரொம்பவே கம்மியில்லையா, அதனால பயணிச்சிட்டே இருக்கவே ஆசைப்படுறோம்'' என்கிறார் தியா.

``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு