சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“எனக்கு டிக் டாக் பிடிக்காது!”

 ஜாக்குலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாக்குலின்

“டீ, காபி, ஜூஸ் எதுவும் வேண்டாம். டயட்ல இருக்கேன்” என்றபடி பேட்டிக்காக வந்து அமர்கிறார் ஜாக்குலின்.

“மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் உங்களைக் கலாய்க்கிறதை எப்படி எடுத்துக்கிறீங்க?”

“ ‘சின்னப் பொண்ணு; இப்போதான் உள்ளே வந்திருக்கா’ன்னு விஜய் டிவி-யில இருந்தவங்க இப்போவரை எனக்கு ஆதரவா இருக்காங்க. என்னைக் கலாய்க்கிறவங்களை எனக்கு நல்லாத் தெரியும். அவங்க மனசுல எதையும் வெச்சுட்டுப் பேச மாட்டாங்க. அதிலும், மகேஷ் அண்ணா ரொம்ப நேர்மையான ஆள். பாலாஜி அண்ணா ஏதாவது சொல்லி என்னைக் கலாய்க்க மாட்டாரான்னு எதிர்பார்ப்பேன். அப்படி ஜாலியா கலாய்ப்பார் அவர்!”

“எனக்கு டிக் டாக் பிடிக்காது!”

“உங்களுடன் பயணித்த சக தொகுப்பாளர் ரக்‌ஷனைப் பற்றி...’’

‘`ரக்‌ஷனைப் பற்றி அவங்க வீட்டுலயும் சரி, எங்க வீட்டுலயும் சரி நல்லாவே தெரியும். நான்கு வருடமா நண்பர்களாக இருக்கோம். ஆண், பெண் தொகுப்பாளர்களை மட்டுமல்ல, சீரியலில் நடிக்கும் ஜோடியைக்கூட காதலிக்கிறாங்கன்னு தான் கிளப்பிவிடுறாங்க. நானும் ரக்‌ஷனும் நல்ல நண்பர்கள், அவ்வளவுதான்!”

‘`நடிகர், நடிகைகள் பலரும் ‘டிக் டாக்’ல கலக்குறாங்க. உங்களை அதில் பார்க்க முடிலையே?”

“எனக்கு ‘டிக் டாக்’ பிடிக்கவே பிடிக்காது. நாளுக்கு நாள் மக்கள் அதுக்கு அடிமையாக ஆரம்பிச்சிட்டாங்க. ‘டிக் டாக்’ பண்ணாதீங்கன்னு நான் எல்லோர்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்கேன். 20 வீடியோக்கு ஒரு வீடியோவுல பெண்கள் மோசமான டிரெஸ்ல ‘டிக் டாக்’ பண்றாங்க, அல்லது ஒரு பெண்ணை ஒரு பையன் தவறா சித்திரித்து ஆடியிருப்பான். இன்னும் சிலர் ‘ப்ளீஸ் எனக்கு லைக் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க’ன்னு ‘டிக் டாக்’லயே பேசுறாங்க. முன்பெல்லாம் ரிலாக்ஸா இருக்குமேன்னு ‘டிக் டாக்’ வீடியோவைப் பார்ப்பேன். இப்போ ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும்போதும் கஷ்டமா இருக்கு.’’

‘`உங்களைக் கோபப்படுத்திய சம்பவம் ஏதாவது...”

“ஒருநாள் நான் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுக்க வந்தார். செல்ஃபிக்காக அவர் என்னை அணுகிய விஷயம் சுத்தமாகப் பிடிக்கலை. தப்பா இருந்தது. அதனால, `விருப்பம் இல்லைங்க’ன்னு சொன்னேன். அதையும் மீறி போட்டோ எடுக்க ஆரம்பிச்சார். மறுபடியும் மறுத்தேன். ‘நீங்க டி.வியில வர்றீங்க. அதனாலதான் போட்டோ எடுக்க நினைச்சேன். வேற யார்கிட்டேயும் போய்க் கேட்கலையே’ன்னு நியாயப்படுத்தப் பார்த்தார். எனக்கு இன்னும் கோபம் வந்தது. டிவி-யில் வேலை பார்க்கிறேன். அது என்னுடைய தொழில். அதைத் தாண்டி எல்லா இடத்திலும், எல்லோரிடமும் சிரித்துப் பேசி செல்ஃபி எடுக்க முடியாது.”

“எனக்கு டிக் டாக் பிடிக்காது!”

‘`சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீங்களா?’’

‘`நடிப்புன்னு வந்துட்டா சின்னத்திரை, சினிமான்னு எந்த வேறுபாடும் இல்லை. எதுவாக இருந்தாலும் நடிப்பேன்.’’

“கல்யாணம் எப்போ?”

‘`எனக்கு இப்போ 23 வயசுதான் ஆகுது. என்னோட 28 வயசுல நான் நினைச்சதையெல்லாம் சாதிச்சிடுவேன்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகுதான் கல்யாணம். நிச்சயம் என் கல்யாணம், காதல் கல்யாணமாதான் இருக்கும். எங்க அம்மாவுக்கும் அதுதான் சரின்னு படுது. எனக்கும் அதுதான் விருப்பம். இப்போவரை யாரையும் காதலிக்கலை; எதிர்காலத்துல என்ன நடக்குதோ, பார்ப்போம்.”

‘`என்ன திடீர்னு எடை குறைப்பு முயற்சி?”

‘`சில கேரக்டர்களுக்கு என் உடல் பருமன் தடையா இருந்தது. அதனாலதான் குறைக்கிறேன். ‘ஐ லவ் ஜிம்’னு எப்படித்தான் சொல்றாங்களோ தெரியலை. தினமும் ஜிம்முக்குப் போகணும்னு நினைச்சாலே எனக்கு அழுகையா வருது. எப்படியும் எடை குறைச்சிடுவேன்னு நினைக்கிறேன். ஸ்லிம் ஜாக்குலினை சீக்கிரமே பார்ப்பீங்க!”

தம்ஸ்-அப் காட்டுகிறார்.