Published:Updated:

"சம்பளம் தந்துட்டாங்க... ஆனா, மிரட்டுறாங்க!" - பிக்பாஸ் பற்றி கொதிக்கும் மதுமிதா

Madhumitha with husband
Madhumitha with husband

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனம் மீது அளித்துள்ள போலீஸ் புகாருக்கு காரணம் சொல்கிறார் மதுமிதா.

சினிமாவில் நகைச்சுவை நடிகையாக புகழ்பெற்றவர் மதுமிதா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' ஷோவில் கலந்து கொண்டார். சக போட்டியாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார்.

Madhumitha
Madhumitha

நிகழ்ச்சியின் விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த சில நாள்களில் 'மீதி சம்பளத்தை உடனே தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார்' என, மதுமிதா மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம், போலீஸில் புகார் அளித்தது. பதிலுக்கு மதுமிதாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது, சேனல் நிர்வாகத்தின் மீது மதுமிதாவும் சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுமிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்துப் பேசினோம்.

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போகும்போது மதுமிதாவுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தான் ஆகியிருந்தது. ஆனா, `சேனல்ல இருந்து முதல் ஆளா என்னைத்தான் கூப்பிட்டாங்க’னு, ரொம்ப உற்சாகமா கணவர்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, இப்ப நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா லைஃப் லாங் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்களாம்.

'நான் ஒண்ணும் என் சொந்தக் கதையைப் பேசிக் கையை அறுத்துக்கிட்டு வெளில வரலை. ஷோல இருந்து என்னை வெளில அனுப்புனதே நியாயமில்லாத செயல்னு இருக்கிறப்போ, இதுமாதிரியான மெயில்கள் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது'னு மதுமிதா சொல்லிட்டே இருந்தாங்க.

Madhumitha
Madhumitha

டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவங்க 'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும்டீ'னு சவால் விட்டாங்களாம். அந்த எட்டு பேர் பெயரை உச்சரிக்கக்கூட அவங்க விரும்பலை. கடைசியில அவங்க சொன்னதுதானே நடந்துச்சுங்கிறது மதுவுக்கு ஒருவித மன அழுத்தத்தை கொடுத்திருக்கு.

ஷோல அவருக்கு ஆதரவு தந்தவங்க, ப்ளஸ் அவரோட ரசிகர்கள்கிட்ட நடந்த உண்மையைச் சொல்லணும்னு அவங்க விரும்பறதுல என்ன தப்பு?

ஃபர்ஸ்ட் எபிசோடுல இருந்து நடந்ததை ஒண்ணு விடாம புட்டு புட்டு வைக்கணும்னு நினைக்கிறாங்க. அதேநேரம் இந்த நிமிஷம் வரை சேனலோட வார்த்தைக்கும் கட்டுப்பட்டுத்தான் இருக்காங்க. அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தந்துட்டுப் போறேன்'னு சொல்றாங்க'' என்கிறார்கள் மதுமிதாவின் நண்பர்கள்.

Madhumitha
Madhumitha

இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதாவையே தொடர்பு கொண்டு பேசினோம்.

''இந்த நொடியே எல்லாத்தையும் பேசிடுவேன். எனக்குப் பல வாய்ப்புகளை வழங்கியவங்கன்னு நன்றியை நினைச்சுப் பார்க்கிறதால மனசு தடுக்குது.

ஆனா, என்கிட்ட 'நீங்க எங்கேயும் எதையும் பேசக்கூடாது; மீறினா அக்ரிமென்டைக் காட்டி கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க. அப்படின்னா, மத்த போட்டியாளர்கள்லாம் வெளில வந்து ஷோல கலந்துகிட்டது பத்திப் பேசறாங்களே, அவங்க மேலயும் வழக்கு போடணுமே... மத்தவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

மதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்? #DoubtOfCommonMan

நான் உண்மையை மட்டும்தான் பேசுவேன். பார்க்கலாம் எத்தனை நாளைக்குதான் என் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்கன்னு. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க'' என்றதோடு நிறுத்திக் கொண்டார் மதுமிதா.

மதுமிதாவின் குற்றச்சாட்டு மற்றும் போலீஸ் புகார் குறித்து சேனல் தரப்பின் கருத்தை அறியத் தொடர்பு கொண்டோம். ''நோ கமென்ட்ஸ். இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை'' என மறுத்து விட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு