
முதல் நாள் ஷூட்டிங். `சினிமாவுல இருந்து வர்றதால கொஞ்சம் பந்தா இருக்கும்.
`‘சிவசக்தி’ன்னு ஒரு சீரியல். ஷமிதா ஹீரோயின். சினிமாவுல இருந்து அப்பதான் டிவிக்கு வந்திருக்காங்க. அந்த சீரியல்ல சின்ன வயசுலயே காணாமப்போன அவங்க அண்ணன் கேரக்டருக்கு நான் கமிட் ஆனேன்.
முதல் நாள் ஷூட்டிங். `சினிமாவுல இருந்து வர்றதால கொஞ்சம் பந்தா இருக்கும். திமிராத்தான் இருப்பாங்க’ங்கிறதுதான் அவங்களைப் பத்தின என்னுடைய நினைப்பு. அதனால தானாப் போய்ப் பேச வேண்டாம்’னு நினைச்சிட்டிருந்தேன்.
ஆனா அவங்களா வந்து, ‘ஹாய் ஸ்ரீ ஜி, நான் ஷமிதா’ன்னு கைகுலுக்கினாங்க. அப்பக் கூட என் எண்ணம் மாறலை. பதிலுக்கு சம்பிரதாயமாகக் கைகுடுத்துட்டு, ‘இந்த பாருங்க இந்த ‘ஜி’யெல்லாம் வேண்டாம். அப்படிக் கூப்பிடறது எனக்குப் பிடிக்கலை’ன்னு சொன்னேன். உடனே, ‘ஓ.கே., அப்ப நீங்க ஷமின்னு கூப்பிடுங்க, நான் ஸ்ரீன்னு கூப்பிடுறேன்’னு சொல்லிட்டு நகர்ந்துட்டாங்க’’ என்ற ஸ்ரீ, தன் மனதுக்குள் ஷமிதா வந்தமர்ந்த தருணத்தைக் கொஞ்சம் உற்சாகத்துடனேயே விவரிக்கத் தொடங்கினார்..

“அது தீபாவளி சமயம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஸ்வீட், டெக்னீஷியன் சிலருக்குப் புதுத்துணியெல்லாம் வாங்கிட்டு வந்து தந்தாங்க. யூனிட்ல தன்னைவிட மூத்தவங்ககிட்ட ஆசி வாங்கினாங்க. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க, ‘ஆஹா, இந்தப் பொண்ணு நாம நினைச்ச மாதிரி இல்ல போல’ன்னு தோணுச்சு.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா என் நினைப்பு மாற, நானாப் போய் பேசத் தொடங்கினேன். ஒருகட்டத்துல அவங்ககூட இருக்கிற அந்த ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பவே கம்பர்ட்ல இருக்கிற மாதிரி பீல் ஆக, மனசுல ஒரு தீர்மானத்துக்கு வந்தவனா, நானே போய் ‘நாம கல்யாணம் செய்துக்கலாமா’ன்னு கேட்டுட்டேன்’’ என ஸ்ரீ நிறுத்த, “உடனே சம்மதம் சொல்லிட்டீங்களா” என ஷமிதாவிடம் கேட்டேன்.

‘`உடனே பதில் சொன்னா எப்படீங்க? ஆரம்பத்துல உர்னு முகத்தை வச்சிட்டிருந்தாரே, அதெல்லாம் ஞாபகத்துக்கு வராதா’ எனச் சிரித்தவர், ‘எனக்கு ஓ.கே தான், ஆனாலும் என் வீட்டுல இருக்கிறவங்க சம்மதமும் முக்கியம்னு நினைச்சேன். அதனால ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற மாதிரி கொஞ்சம் இழுத்தடிக்கலாம்னு ‘எங்க வீட்டுல வந்து பேசுங்க’னு சொன்னேன்’’ என்று சஸ்பென்ஸுடன் நிறுத்த, மீண்டும் தொடர்கிறார் ஸ்ரீ.
‘`அவங்களுக்குச் சம்மதம்னு தெரிஞ்சுடுச்சுன்னா போதாதா? விஜய் டிவியில இருந்த மகேந்திரன் (தற்போது கமல் கட்சியில் இருக்கிறார்) என்னுடைய பெரியம்மா மகன். எங்க வீட்டுல எந்தவொரு விசேஷம்னாலும் முன்னாடி இருந்து நடத்தறது அவன்தான். அவனே எங்க வீட்டுலயும் என் காதலுக்குச் சம்மதம் வாங்கி, ஷமிதா வீட்டுலயும் பேச, ரெண்டு தரப்பு சம்மதத்துடன் எங்க கல்யாணம் நடந்தது. பிறகு பொண்ணு பிறந்தா. வாழ்க்கை கடவுள் புண்ணியத்துல அதுபாட்டுக்கு நல்லபடியா போயிட்டிருக்கு. இதுல ஒரு ஹைலைட் என்னன்னா, ‘சிவசக்தி’ சீரியலுக்கு என் கேரக்டர்ல நடிக்க வேண்டியது சஞ்சீவ். அவர் மறுத்த இடத்துல நான் கமிட் ஆனேன். அதேபோல அதே சமயத்துல ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘திருமதி செல்வம்’ தொடர் வாய்ப்பு முதல்ல ஷமிதாக்குத்தான் வந்தது. `மறுபடியும் சினிமா சான்ஸ் வந்தா என்ன பண்றது’னு அவங்க கொஞ்சம் தயங்கவே அந்த வாய்ப்பு அபிதாக்குப் போயிடுச்சு.

இந்த ரெண்டு நிகழ்வுகள்ல ஏதாவது ஒண்ணு நடந்திருந்தாலும், அதாவது சஞ்சீவ் சிவசக்தியிலோ அல்லது ஷமிதா ‘திருமதி செல்வ’த்துல கமிட் ஆகியிருந்தாக்கூட நாங்க ரெண்டு பேரும் சந்திக்கிற வாய்ப்பே அமையாமப் போயிருந்திருக்கலாம். எல்லாம் கடவுள் செயல்.’’
ஸ்ரீ-ஷமிதா இருவரும் திருமணம் செய்த பின்னரும்கூட ‘சிவசக்தி’ சீரியலில் நடித்து வந்தார்களாம். அந்தத் தொடர் முடிவடைந்ததும், ‘பிள்ளை நிலா’ என்ற சீரியலிலும் இருவரும் நடித்திருக்கிறார்கள். `அந்த சீரியலில் அண்ணன் தங்கை கேரக்டர்கள் இல்லையே’ எனக் கேட்டேன்.
‘‘அண்ணன் தங்கையா நடிக்கச் சொல்லியிருந்தாக்கூடப் பரவால்லங்க. ‘பிள்ளை நிலா’வுல ரெண்டு ஜோடி. அவங்களுக்கு ஜோடியா வேற ஒரு ஹீரோ. எனக்கு வேற ஹீரோயின். எப்படி நகர்ந்திருக்கும் அந்த ஷூட்டிங் அனுபவம்னு நினைச்சுப் பாருங்க’’ என ஸ்ரீ சொல்லிப் புலம்ப, சிரிக்கிறார்கள் இருவரும்.