சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“விகடன் TV: மோடியே பாராட்டின ஆள் நான்!”

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

இந்த ஷோவுல நான் அங்கம் வகிக்கறது இன்னொரு டிகிரி பண்ற மாதிரியான ஒரு அனுபவம்தான்.

காலை எட்டு மணி ஆனதும் ‘வணக்கம் தமிழா’ என எல்லோருக்கும் ‘குட் மார்னிங்’ வைத்துவிடும் புஜிதாவுக்கு ஒரு வணக்கத்தை வைத்துப் பேசத் தொடங்கினேன்.

``முன்னணி சேனல்ல முக்கியமான ஸ்லாட்ல வர்றது சாதாரணமில்லை. ‘யாரு புள்ள இது’ன்னு கேக்கற மாதிரி சட்டுனு இந்த இடத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கே?’’

‘‘என் வாழ்க்கையில சில விஷயங்கள் நானே எதிர்பார்க்காதபடி சீக்கிரம் நடந்து சந்தோஷத்தைத் தந்திருப்பது என்னவோ நிஜம்தான். நான் மிலிட்டரி மேன் பொண்ணு. வட இந்தியாவுல பல இடங்கள்ல வசிச்சுட்டு, கடைசியில அப்பா வி.ஆர்.எஸ் வாங்க, குடும்பம் வந்து செட்டில் ஆனது கோயம்புத்தூர்ல. தான் ராணுவத்துல இருந்ததாலோ என்னவோ மகளையும் ராணுவத்துக்கு அனுப்பத்தான் ஆசைப்பட்டார் என் அப்பா தேவராஜ். ஆனா பள்ளி நாள்கள்லயே பேச்சுப் போட்டிகள்ல ஜெயிக்கத் தொடங்க, அதுவே மீடியா பக்கம் வரக் காரணமாகிடுச்சு. அதனால ஒருகட்டத்துல அம்மாவும் அப்பாவும் எனக்குப் பிடிச்ச மீடியா லைன்ல போக சம்மதிச்சிட்டாங்க. கோயம்புத்தூர்ல உள்ளூர் சேனல்ல கொஞ்ச நாள் ஒர்க் பண்ணிட்டு அப்படியே சென்னைக்கு வந்துட்டேன்.’’

“விகடன் TV: மோடியே பாராட்டின ஆள் நான்!”

`` ‘பிரதமர், முதல்வர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கின பொண்ணுப்பா’ன்னு சொல்றாங்களே, அதைக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்...’’

‘‘கோயம்புத்தூர்ல நான் பி.ஜி., ஊடகவியல் முதலாமாண்டு படிச்சிட்டிருந்தப்ப அங்க இ.எஸ்.ஐ மருத்துவமனையில ஒரு விழா. பிரதமர் மோடி கலந்துகிட்டார். படிச்சிட்டிருந்தப்பவே நான் பல இடங்கள்ல பேசின பேச்சைப் பார்த்து இ.எஸ்.ஐ தரப்புல இருந்து என்னைக் கூப்பிட்டாங்க. நாட்டின் பல பகுதிகள்ல இருந்ததால தமிழ், ஆங்கிலத்துடன், இந்தி, சம்ஸ்கிருதம், பஞ்சாபி மொழிகளும் எனக்கு சரளமா வரும். அதுவும் எனக்குக் கூடுதல் தகுதியாக ‘பிரதமர் கலந்துக்கற நிகழ்ச்சியை நீங்கதான் ஹோஸ்ட் பண்றீங்க’ன்னு சொன்னாங்க. என்னால அந்த நிமிடத்தை நம்பவே முடியலை. பி.எம். ஆபீஸ்க்கு என்னைப் பத்தின விவரங்களை அனுப்பி சம்மதம் வாங்கறப்ப, ‘எங்க அப்பா மிலிட்டரியில இருந்தார்ங்கிற தகவலைப் பார்த்ததும் உடனே டிக் அடிச்சாங்க’ன்னு சொன்னாங்க.

“விகடன் TV: மோடியே பாராட்டின ஆள் நான்!”

எப்படியோ, அந்த நிகழ்ச்சி நல்லா நடந்தது. நிகழ்ச்சி முடிஞ்சி கிளம்பறப்ப பிரதமர் மோடி என்னைப் பார்த்துக் கையசைச்சு சிரிச்சதோடு, சைகையாலேயே ‘நல்லாப் பண்ணுனீங்க’ன்னு சொல்லிட்டுப் போனார். அவர் அப்படிப் பாராட்டிட்டுப் போனதாலேயே மறுபடியும் அவர் இரண்டாவது முறை பிரதமரானதும் திருப்பூர் வந்தப்ப அங்கு நடந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன். ஆகமொத்தம் ரெண்டு தடவை பிரதமர் நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணிட்டேன்.

பிரதமர் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினதைப் பார்த்துட்டுதான் திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு அத்திக்கடவு -அவினாசித் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கக் கேட்டாங்க. அதையும் நல்லபடியா பண்ணிக் கொடுத்தேன்.’’

“விகடன் TV: மோடியே பாராட்டின ஆள் நான்!”

`` ‘வணக்கம் தமிழா’ அனுபவங்கள் எப்படி இருக்குது?’’

‘‘இப்பவும் வெளியில என்னைப் பார்க்கிற நிறைய பேர், `நாங்க காலையில எழுந்ததுமே உங்க முகத்துலதான் முழிக்கறோம்’னுதான் சொல்றாங்க. லதா ரஜினிகாந்த் மேடம். விஜய் சார் அப்பா எஸ்.ஏ.சி முதலான பெரிய ஆளுங்கெல்லாம் ‘தினமும் வணக்கம் தமிழா பார்ப்போம்’னு சொன்னாங்க.

இந்த ஷோவுல நான் அங்கம் வகிக்கறது இன்னொரு டிகிரி பண்ற மாதிரியான ஒரு அனுபவம்தான். அந்த அளவுக்கு தினமும் ஏதாவது தெரிஞ்சிக்கிடுறேன். ‘சூரரைப் போற்று’ படத்துல நடிச்ச `ஏர் கண்ட்ரோலிங் ஆபீஸர்’ ஒருத்தரைச் சந்திச்சேன். ஃப்ளைட் இயங்கறது சம்பந்தமா நிறைய விஷயங்களை அவர்மூலமாத் தெரிஞ்சுகிட்டேன்.”

“விகடன் TV: மோடியே பாராட்டின ஆள் நான்!”

``ஆங்கரிங் வந்துட்டா பின்னாடியே சீரியல், சினிமா வாய்ப்புகளும் வந்திடுமே...’’

‘‘சீரியல் வாய்ப்புகள் பெரிசா வரலை. சினிமாவுல ‘ஆம்பள’, ‘தீபாவளி துப்பாக்கி’ன்னு ரெண்டு படங்கள்ல சின்ன கேரக்டர்ல நடிச்சேன். சின்னச் சின்ன கேரக்டருக்கே கேக்கறதால சினிமாப் பக்கம் இறங்கக் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

ஆனா, இந்த வருஷம் நல்ல வாய்ப்புகள் வரும்கிற நம்பிக்கை இருக்கு. ஏன்னா இந்த வருஷம் விகடன் தயாரிப்புல தமன்னாவுடன் நானும் நடிச்சிருக்கிற ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் வெளியாகவிருக்கு.

பிரதமர், முதல்வர் நிகழ்ச்சிகள், சன் டிவி வேலையெல்லாம் எனக்கு எப்படி இன்ப அதிர்ச்சியா அமைஞ்சதோ, அதேபோலத்தான் விகடன் தந்த வாய்ப்பும். சினிமா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திட்டிருக்கிற இந்தச் சூழல்ல அந்த வெப்சீரிஸுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கும் வரும்கிற நம்பிக்கை ரொம்பவே இருக்கு.’’