Published:Updated:

சித்ரா - குமரன் ஜோடிக்கிடையே உரசல்... என்ன நடக்கிறது `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில்?!

``ரெண்டு பேர்ல யார், எப்போ சீரியலைவிட்டு விலகப்போறாங்களோ... என்ற அளவுக்கு போயிட்டிருக்கு நிலைமை. இது `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு நல்லதல்ல!" என்கிறார்கள்.

chithra - kumaran
chithra - kumaran

சீரியலில் ஜோடியாக நடிக்கிறபோது, காதல் மலர்ந்து நிஜவாழ்வில் தம்பதியரான பலரை தமிழ் தொலைக்காட்சி உலகம் பார்த்திருக்கிறது. சேத்தன் - தேவதர்ஷினி, செந்தில் - ஶ்ரீஜா, ரச்சிதா - தினேஷ் முதல் சமீபத்தில் கைப்பிடித்த ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், `கேமராவுக்கு முன்னாடிதாங்க அவங்க ஜோடி, மத்த நேரம் ரெண்டு பேருமே உர்ருனுதான் இருக்காங்க' எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?! `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் சித்ரா - குமரன் ஜோடியை சுட்டிக்காட்டித்தான் மேற்படி பேச்சுகள் உலாவருகின்றன.

VJ Chithra
VJ Chithra
Vikatan

`என்ன விவகாரம்' என விசாரித்தபோது, `பெயரைக் குறிப்பிட வேண்டாம்' எனக் கேட்டுக்கொண்டு பேசத்தொடங்கினார், அந்த நடிகர்.

`ஒண்ணுமில்லீங்க, சமீபத்துல யூடியூப் சேனல் ஒண்ணு தமிழ் சினிமா, டி.வி கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிச்சது. விருதுக்கான நடிகர் நடிகைகளைத் தேர்வு செஞ்சப்போ, `சிறந்த சீரியல் ஜோடி'க்கான நாமினேஷன்ல `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா - குமரன் ஜோடியும் இருந்திருக்காங்க. மக்கள்கிட்ட இருந்து இந்த ஜோடிக்கு அதிக ஓட்டும் கிடைச்சிருக்கு. சேனலோட விருது கமிட்டியில இருந்தும் குமரன்கிட்ட பேசியிருக்காங்க. அப்போ, `எனக்குத் தனியா விருது கொடுத்தா வாங்கிக்கிறேன். ஜோடியான்னா, எனக்கு அந்த விருது வேண்டாம்'னு சொல்லியிருக்கார் குமரன். இதைக் கேட்டவங்களுக்கு அதிர்ச்சி. `இல்லீங்க, சிரியல் ரசிகர்களோட ஆதரவையெல்லாம் கணக்கிட்டுத்தான் இந்த விருது தரப்படுது. மக்களுக்குப் பிடிச்ச ஜோடிக்கு விருது தந்தாதான் நல்லாயிருக்கும்'னு சொல்லியிருக்காங்க. ஆனாலும், குமரன் தன்னோட நிலைப்பாட்டுல இருந்து இறங்கி வரல. அதனால, கடைசியில வேற ஒரு ஜோடிக்கு விருது போயிடுச்சு. சின்னத்திரையின் லேட்டஸ்ட் பரபரப்புச் செய்தி இதுதான்" என்கிறார், இவர்.

pandian stores serial
pandian stores serial
`என்னோட பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டதே பெரிய விஷயம்!'- `அழகு' சீரியலில் மீண்டும் சஹானா

இந்த இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் கதையையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். தொடரின் கதையிலும் திடீரென விருப்பமில்லாமல் நடந்துவிடுகிற திருமணம் இவர்களுடையது. பெரும்பாலான காட்சிகளில் இருவரும் முறைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

யூனிட் வட்டாரத்தில் இதைச் சுட்டிக்காட்டுகிற சிலர், ''ஆரம்பத்துல ரெண்டு பேருக்கிடையில் நல்ல நட்புதான் இருந்தது. இடையில என்ன நடந்ததுன்னு தெரியல, ஒருத்தருக்கொருத்தர் பேச்சுவார்த்தை குறைஞ்சுட்ட மாதிரி தெரிஞ்சது. என்னதான் ஃப்ரெண்டா இருந்தாலும், பர்சனலா சில விஷயங்கள்ல தலையிட முடியுமா? அதனால, யாரும் அவங்களை என்ன, ஏதுன்னு கேட்கல'' என்கிறார்கள்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கமிட்டான அடுத்த சில மாதங்களில் தொடங்கிய `ஜோடி' நிகழ்ச்சியில், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடினார்கள் என்பதும், `வெண்ணிலவே வெண்ணிலவே' பாட்டுக்கு இந்த ஜோடி ஆடிய ஆட்டம் அப்போது அப்ளாஸ் அள்ளியதும் குறிப்பிடத்தக்கது.

pandian stores serial
pandian stores serial
Vikatan

``ஆனா, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எந்தவொரு நிகழ்ச்சியிலும் இவர்கள் ஜோடியாகக் கலந்துகொள்ளவே இல்லை. பண்டிகை நாள்களில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஜோடியாகக் கலந்துகொள்ள, தொடர் ஒளிபரப்பாகிற சேனல் தரப்பிலிருந்து கேட்டபோதும் குமரன் மறுத்துவிட்டார்" என்கிறார்கள், சித்ரா - குமரன் இருவருக்கும் நெருக்கமான சிலர்.

கூடவே, ``ரெண்டு பேர்ல யார், எப்போ சீரியலைவிட்டு விலகப்போறாங்களோ... என்ற அளவுக்கு போயிட்டிருக்கு நிலைமை. இது `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு நல்லதல்ல!" என்கிறார்கள்.

kumaran chithra
kumaran chithra
Vikatan

விருது தொடர்பான சர்ச்சை குறித்து குமரனைத் தொடர்புகொண்டு கேட்டால், ``நாமினேஷன்ல நாங்க இருந்தது தெரியும். `ஓட்டிங்' நடந்துக்கிட்டிருந்த சமயத்துல எனக்கு விருது தந்தவங்க தரப்பிலிருந்து போன் வந்தது. ஆனா, விருதுக்குத் தேர்வானதா யாரும் சொல்லல. நானும் அதுக்குப் பிறகு அந்த விஷயத்தை ஃபாலோ பண்ணல!" என்கிறார்.

என்ன பிரச்னை... என்ன நடக்கிறது என்பது, சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும்.