Published:Updated:

'பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடுவது ஏன்?'- விமர்சகர்களுக்கு ஜீவா ரவியின் பதில்

அஸ்வினி.சி

`உங்கள சீரியலில் பார்த்திருக்கேன்பா. நல்லா நடிக்கிற’ என்று அவர்கள் சொல்லும் போது பெருமகிழ்ச்சியாக இருக்கும். இந்த மகிழ்ச்சி, மன நிறைவு பற்றியெல்லாம் சிலரால் புரிந்து கொள்ள முடியாது.

ஜீவா ரவி
ஜீவா ரவி ( நடிகர் )

`3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு அப்பா ரோலின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் `ஜீவா’ ரவி. அதன் பின்னர் கத்தி, ஜீவா, காக்கி சட்டை, சாட்டை, மிருதன், அறம் என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர். தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார்.

ஜீவா ரவி
ஜீவா ரவி

அண்மையில் இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. பிறந்தநாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள முதியோர் இல்லத்துக்குச் சென்று கேக் வெட்டிக் கைவிடப்பட்ட முதியவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ரவி. சின்னத்திரை வெள்ளித்திரை என இவரின் நட்பு வட்டத்தில் இருக்கும் பிரபலங்கள் பலர் இவரின் வீடியோவை பகிர்ந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதே சமயம் ``ஒருநாள் மட்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்று கொண்டாடினால் அவர்களின் கஷ்டம் தீர்ந்துவிடுமா?’’ என்னும் நெகடிவ் விமர்சனங்களும் இவரைக் குறித்து எழுந்தன. பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும் விமர்சனங்கள் குறித்தும் 'ஜீவா' ரவி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

``என் பிறந்தநாளிற்கு மட்டும் அல்ல. திருமண நாள், மகனின் பிறந்தநாள் என எந்த விசேஷ நாளாக இருந்தாலும் முதியோர் இல்லத்தில்தான் கொண்டாடுவோம். பார்வையற்ற மாணவர்களுக்கான பள்ளிக்கும் சென்று கொண்டாடுவோம். சில சமயங்களில் மனம் சோர்வாக உணரும்போதும் அங்கு சென்றுவிடுவேன். அங்கிருக்கும் முதியவர்களிடம் பேசும்போது புதிய உற்சாகம் கிடைக்கும்.

ஜீவா ரவி
ஜீவா ரவி

`உங்கள சீரியலில் பார்த்திருக்கேன்பா. நல்லா நடிக்கிற’ என்று அவர்கள் சொல்லும் போது பெருமகிழ்ச்சியாக இருக்கும். இந்த மகிழ்ச்சி, மன நிறைவு பற்றியெல்லாம் சிலரால் புரிந்து கொள்ள முடியாது. `ஒரு நாள் மட்டும் போய் பார்த்தா அவங்க வாழ்கை மாறிடுமா’ என்று சிலர் கேட்கதான் செய்கிறார்கள்.

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகள் ஒரு நாளேனும் நம்மை வந்து பார்க்கமாட்டார்களா என்று அன்புக்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஒரு நாள் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கும். முதியோர் இல்லம் மட்டுமின்றி புற்றுநோய் பாதித்த குழந்தைகளையும் சந்தித்து அவர்களுடனும் நேரம் செலவிடுகிறோம். எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த சின்ன சின்ன உதவியை அவர்களுக்குச் செய்கிறோம். சில குழந்தைகள் 1 வருடம்தான் உயிருடன் இருப்பார்கள், சில நாள்கள்தான் உயிருடன் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் சொல்ல கேட்கும்போது மனம் துடிக்கும்.

ஜீவா ரவி
ஜீவா ரவி

அந்த சில நாள்களை அவர்களுக்குப் பிடித்தமாதிரி மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றும். என்னால் முடிந்த அளவுக்குச் செய்கிறேன். விமர்சனங்களை கண்டு கொள்ளமாட்டேன்’’ என்றவரிடம் "ஸ்டிரிக்டான தந்தை, போலீஸ் ஆஃபிஸர், கமிஷ்னர், கலெக்டர், சீஃப் டாக்டர் எனத் திரைப்படங்களில் பல்வேறு ரோலில் நடித்துவிட்டீர்கள். உங்களின் ட்ரீன் ரோல் என்ன?" என்றுக் கேட்டோம். "நான் இதுவரை நெகடிவ் ரோல் நடிச்சது இல்லை. நான் ரொம்ப சாது, சாஃப்ட் இப்படி ஒரு பிம்பம் இருக்கு. அதனை உடைக்கணும். டெரரான வில்லன் ரோல் நடிக்கவேண்டும்" என்றார் புன்சிரிப்புடன்.