
சீரியல் நடிகைகளின் சிரிப்பு அனுபவங்கள்
டிவி சீரியல் என்றாலே அழுவாச்சி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான ஜாலி அனுபவங்களைப் பகிர்கிறார்கள் டிவி பிரபலங்கள்.
அஸ்வினி
“சீரியல் ஷூட்டிங்கைவிட ஒரு ஷோவுல கிடைச்ச ஒரு மொமன்ட்டை என்னால மறக்க முடியாது. கமல் சார் கலந்துகிட்ட ஒரு ஷோவுல ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களின் ஆர்ட்டிஸ்டுகள் எல்லாரும் கலந்துகிட்டோம். கமல் சார் பேச்சுவாக்குல, சின்ன வயசுல தான் கண் அடிச்சது பத்தியெல்லாம் சொல்ல, `இங்க ஒருத்தர் அவரைப் பார்த்துக் கண் அடிக்கணும்’னு ஒரு டாஸ்க். கரெக்டா எங்கிட்ட வந்தது. உலக நாயகனைப் பார்த்துக் கண் அடிச்ச அந்த நிமிஷத்தை மறக்க முடியுமா?”
ஜூலி
“‘சத்யா’ தொடர்ல எங்ககூட நடிக்கிற வித்யாவுக்கு ஒரு விநோதமான பழக்கம். யாராவது ஜோக் அடிச்சிட்டா விழுந்து விழுந்து சிரிப்பாங்க. ’ப்ரண்ட்ஸ்’ படத்துல ஒரு காட்சியில் விஜய் நிறுத்தாமச் சிரிப்பாரே அதே மாதிரி. அதைவிட ஒருபடி மேலன்னும் சொல்லலாம். பக்கத்துல யாராவது இருந்தா, அவங்க மேல விழுந்து சிரிச்சு, அவங்க டிரஸ்ஸையெல்லாம் கசக்கி சமயத்துல கிழிக்கக் கூடச்செய்துடுவாங்க. இப்ப கொரோனாவுக்குப் பிறகு அவங்களைப் பார்த்தா யூனிட்டே தெறிச்சு ஓடுது. அவங்ககூட ட்ராக் இருந்தாலே மிரள்றாங்க எல்லாரும். இப்போதைக்கு எங்க யூனிட்ல இதுதான் பன் மொமன்ட்.

ஹேமா
“பொதுவாகவே ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பப்ப ஸ்நாக்ஸ் தர்றது வழக்கம். சில இடங்களில் லஞ்ச் முடிச்சதும் கடலை மிட்டாய் மாதிரி ஏதாவது தருவாங்க. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்பாட்லயும் அந்தப் பழக்கம் உண்டு. அப்பெல்லாம் ‘மளிகைக் கடைக்காரர் பொண்ணுதானே நீங்க ஸ்பான்சர் செய்யக் கூடாதா’ன்னு கேட்டு என்னை யூனிட்ல கலாய்ப்பாங்க. ‘எங்கப்பா மாயவரத்துல கடை வச்சிருக்கார்; ரெண்டு நாள் லீவு தாங்க, போய் கடலை மிட்டாய் வாங்கிட்டு வர்றேன்’னு நானும் பதிலுக்கு லந்து பண்ணுவேன்.”
வினோதினி
“சரியா லாக்டௌன் தொடங்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘ரோஜா’ சீரியல்ல கெஸ்ட் ரோல்ல கமிட் ஆனேன். ஹியூமர் கேரக்டர். அந்த சீரியல்ல ராஜேஷ் சார் நடிக்கிறாரா, நான் அஞ்சாவது படிக்கிறப்ப அதாவது சுமார் முப்பது வருஷத்துக்கு முன்னாடி ‘மண்ணுக்குள் வைரம்’ படத்துல அவர்கூட நடிச்சப்ப பார்த்தது, அதுக்குப் பிறகு இப்பதான் பார்க்குறேன். ‘அஞ்சாப்பு படிச்ச மாதிரி இருந்த அதே முகம்தான் உனக்கு இப்பவும் இருக்கு’ன்னு அவர் சொல்ல, ‘நீங்ககூட நான் அப்ப பார்த்த மாதிரியேதான் சார் இருக்கீங்க’ன்னு நான் சொன்னேன். உடனே அங்க வந்த வடிவுக்கரசியம்மா, ராஜேஷ் சாரைப் பார்த்து, ’நல்லா இருக்கு உங்க டயலாக்லாம். அப்ப, நானும் ’கன்னிப் பருவத்திலே’ல இருந்த மாதிரியே இருக்கேன், வாங்க `பட்டு வண்ண ரோசாவாம்னு பாடலாமா’ன்னு கேட்க யூனிட்டே சிரிச்சிடுச்சு.”
நிஷா
“ ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்ப ஒரு விஷயம் நடந்துச்சு. ஒவ்வொரு நாளும் சீரியலின் எபிசோடு முடியறப்ப ஏதாவது ஒரு ஆர்ட்டிஸ்டை க்ளோஸ் அப்ல காட்டித்தானே முடிப்பாங்க, இதை வச்சு ஒரு வம்பைக் கிளப்பி விட்டுட்டாங்க. ‘வாரத்துல அதிக நாள் என்னையே க்ளோஸ் அப்ல காட்டறாங்க’ன்னு புரளி கிளப்பி விட்டுட்டாங்க. யூனிட்ல கடுப்பாகிட்டாங்க. ‘கட் பண்ணிட்டுத் தொடரும் போடறதெல்லாம், சீன் டயலாக் வச்சுத்தான் முடிவு செய்வாங்க; ‘எனக்குத்தான் சீரியல்ல முக்கியத்துவம்’னு நீ சொல்லிட்டுத் திரியறயாம்மா’ன்னு கேட்டுட்டாங்க. ‘ஐயோ எனக்கு எதுவும் தெரியாது’ன்னு சொல்லிட்டேன். அந்த வம்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கறதுக்காகவே கடுப்புல அடுத்த நாள் வேணும்னே எபிசோடு முடியறப்ப க்ளோஸ் அப்ல ஒரு துடைப்பத்தைக் காட்டித் ‘தொடரும்’னு போட்டாங்க.”

ஜெனிஃபர்
“ ‘செம்பருத்தி’ சீரியல்ல எனக்கு ஹீரோ ஆதிகூடக் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படுவாங்க என்னுடைய அத்தை ‘ஊர்வம்பு’ லக்ஷ்மி. ஆனா, நானோ, ‘காதலா’, ‘கல்யாணமா’ அப்படீனான்னு கேக்கற வெகுளித்தனமான கேரக்டர். சீரியல் இப்படியே போயிட்டிருந்த சூழல்ல, திடீர்னு ஒருநாள் எனக்கு ரியலாவே கல்யாணம் நடந்திடுச்சு. அதுவும் லவ் மேரேஜ், கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரம் ஷூட் போனா, ஒரே கலாய். ‘சீரியல்ல மட்டுமல்ல ரியலாவே வெகுளித்தனமா நடிச்சு எங்களையெல்லாம் ஏமாத்தி இருக்கீங்கல்ல’ன்னு கேக்கறாங்க அதுவரைக்கும் என் லவ் பத்தி அங்க யாருக்கும் எதுவும் சொல்லலையாம். அதான் செல்லமாக் கோவிச்சுக்கிட்டாங்க.”
ரேமா
“சமீபத்துல முடிஞ்ச ‘ஜோடி’ சீசன்ல எனக்கு ஜோடி ராமர். மத்த போட்டியாளர்களெல்லாம் தீவிரமா ரிகர்சல் பண்ணிட்டிருந்தா, அவர் வர மாட்டார். ’ரிகர்சல் போகாம நாம எப்படி பர்பார்மன்ஸ் பண்ணுறதுன்னு கேட்டா, ‘ரிகர்சல் ரிகர்சல்னு என்னம்மா இப்படிப் படுத்தறீங்களே’ன்னு டயலாக் பேசுவார். ஒருகட்டத்துல எல்லாரும் ‘அவரு ஸ்டேஜ்ல போய் நின்னாலே கைதட்டு விழும். ஆனா நீ பிராக்டிஸ் பண்ணாம ஸ்டேஜ்ல என்ன செய்யப் போற’ன்னு பயமுறுத்தவும் செஞ்சாங்க.
ஒருநாள் நேரடியாகவே கேட்டுட்டேன். ‘அண்ணா, நீங்க ‘என்னமா இப்படிப் பண்ணுறீங்களே’ன்னு பேசி ஓட்டு வாங்கிட்டுப் போயிடுவீங்க, நான் என்ன செய்ய’ன்னு கொஞ்சம் சீரியஸாவே கேட்டுட்டேன். உடனே, ‘என்னம்மா இப்படி அசால்ட்டா சொல்லிட்ட, அந்த டயலாக்கைப் பேசறதுக்கு நான் எத்தனை ரிகர்சல் போனேன் தெரியுமா? லக்ஷ்மி ராமகிருஷணன்கிட்ட நேராப் போய் ட்ரெய்னிங் கொடுங்கன்னு கேக்காதது மட்டும்தான் பாக்கி’ன்னு சொல்லி சுத்தி உள்ள எல்லாரையும் சிரிக்க வச்சுட்டார்.”
ரேஷ்மா
“ ‘பூவே பூச்சூடவா’ சீரியல்ல பிரேக் டைம் கௌசல்யா பாட்டியோடு ஜாலியான அரட்டையாப்போகும். ஆரம்பத்துல அவங்க பழைய வில்லன் நடிகர் செந்தாமரை சார் மனைவிங்கிறது யூனிட்ல அவ்வளவா யாருக்கும் தெரியலை. அதனால, பாட்டியைக் கலாய்க்கிறதும் பன் பண்ணுறதுமா இருந்தோம். திடீர்னு ஒருநாள் அந்த விஷயம் தெரிஞ்சதும், எல்லாருக்குள்ளும் ஒருவித பீதி.அவங்ககிட்ட போய் பேசவே யோசிச்சோம்.
ஆனாலும் எங்களில் மதன்மட்டும் பயப்படாம பாட்டியைக் கலாய்க்கிறதும் பட்டப்பேரு வச்சுக் கூப்பிடறதுமா இருப்பார். பாட்டியும், ‘படவா, ஒரு பயங்கரமான வில்லன் பொண்டாட்டியை காமெடி பீஸா டீல் பண்ணுறல்ல’ன்னு பதிலுக்குச் செல்லமா கோவிச்சுக்கு வாங்க. அதேநேரம் பாட்டி, எல்லாருக்கும் தன்னுடைய பழைய சினிமாக் கதைகளைச் சொல்வாங்க.”

மின்னல் தீபா
“ `யாரடி நீ மோகினி’ ஷூட் ஈவிபியில நடந்திட்டிருந்தது. தீம் பார்க்கா இருந்தப்ப, ராட்டினத்துல இருந்து ஒருத்தர் இறந்துட்டதால ரொம்ப நாளாப் பூட்டிக்கிடந்த இடம் அது. அதனால நாங்க ஷூட் போனப்ப, யாரோ சிலர் அங்க பேய் நடமாடுதுன்னு புரளி கிளப்பி விட்டுட்டாங்க. ஏற்கெனவே எங்க சீரியலும் பேய்க்கதையா, அதனால ஒருவித பீதியிலேயே ஷூட் நகர்ந்திட்டிருந்தது. மத்தியான நேரத்துல சாப்பிட்டுட்டு ரூம் உள்ளே தனியாப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்தபடியே தூங்கலாம்னா கூட பயமா இருக்கும். என்னுடைய இந்த பயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட சிலர், ‘மாயி’ல வர்ற மாதிரிக் கண்ணைக் காட்டுங்க, பேய் உங்களைக் கண்டு மிரண்டுடும்னு சொல்லிக் கலாய்ப்பாங்க. அப்புறம், போகப் போக பயம் விலகிடுச்சு.”
சமீரா
“ `றெக்க கட்டிப் பறக்குது’ தொடர்ல நான் ஹீரோயின் கம் புரடியூசர். சீரியல்ல இடையில என் கணவர் அன்வரும் வந்து ஜாயிண்ட் பண்ணினார். அதுக்குப் பிறகுதான் இன்ட்ரஸ்டிங். அன்வருக்கு ஜோடியா இன்னொரு ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆனாங்க. கதைப்படி சீரியல்ல அன்வருக்கு அவங்ககூட ரொமான்ஸ் உண்டு. அதாவது என் முன்னாடியே அந்தப் பொண்ணுகூட ரொமான்ஸ் பண்ணணும். மனுஷன் நெளிவார் பாருங்க, அந்தக் காட்சி பார்க்க அவ்ளோ சூப்பரா இருக்கும். பக்கத்துல போய், நடிக்கன்னு வந்த பிறகு, பக்கத்துல பொண்டாட்டி இருக்காங் கன்னெல்லாம் யோசிச்சிட்டிருப் பீங்களான்னு கேட்பேன். ஒருவேளை சீன் நல்லா வந்துட்டாலும் விட மாட்டேன், ’பக்கத்துல நான் இருக்கறப்பவே இவ்ளோ ரொமான்ஸ் எப்படி வருது’ன்னு கேட்பேன். ஆக மொத்தத்துல அந்த நாள்கள் ஒவ்வொண்ணுமே செமயா போச்சு.”
வைஜெயந்தி
“ ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ன்னு ஒரு சீரியல். ஜீ தமிழ் சேனல்ல ஒளிபரப்பாச்சு. எஸ்.பி.பி.சரண் ஹீரோவா நடிச்சார். நான், ‘மெட்டி ஒலி’ காயத்ரில்லாம் நடிச்சோம். எனக்குத் திருமணமான புதுசு அது. ஷூட்டிங்கின் ஒவ்வொரு நாளுமே நல்லபடியா போயிட்டிருந்த சூழல்லதான் காயத்ரி மேடம் கர்ப்பமானாங்க. சீரியல்ல அவங்க முக்கியமான கேரக்டர்ங்கிறதால அவங்களுக்குப் பதிலா யாரை ரீப்ளேஸ் பண்ணுறதுன்னு குழப்பத்துல இருந்தாங்க. அடுத்த சில நாள்களிலேயே சப்போர்ட்டிங் கேரக்டர்ல நடிச்ச இன்னொரு நடிகையும் கர்ப்பமாக, இன்னொருத் தரையும் மாத்த வேண்டிய சூழல். ட்விஸ்ட் இத்தோட நிற்கலை. அடுத்த கொஞ்ச நாளிலேயே நானும் கர்ப்பமடைய, மூணு முக்கிய கேரக்டர்களை மாத்தணுமான்னு யோசிச்ச சேனல், சீரியலையே முடிச்சிடுச்சு. என் லைப்ல இந்தச் சம்பவத்தை மறக்கவே முடியாதுங்க.”

ஆனந்தி
“`ஜோடி’ ஷோ ஷூட்டிங்ல சத்யாவுடன் சேர்ந்து நான் பண்ணின ப்ராங்க்தான் ஷூட்டிங் ஸ்பாட்ல நான் சந்திச்ச எவர்கிரீன் ஜாலி மொமென்ட்னு சொல்லலாம். ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கும் என்னை ப்ராங்க் பண்ணச் சொன்னவங்களுக்கும் மட்டுமே ‘இது ப்ராங்க்’னு தெரியும்.
அதனால, ‘வீட்டுக்குத் தெரியாது; லவ்வை இப்பதான் முதன்முதலாச் சொல்றேன், வீட்டுல இந்தக் காதலை ஏத்துப்பாங்களான்னு தெரியலை’ன்னு நான் கண்ணைக் கசக்குனதும், கூட ஆடிட்டிருந்தவங்க எல்லாருக்கும் என் மேல அநியாயத்துக்கு இரக்கம். அதுல ரெண்டு பேர், ‘அடுத்த வாரமே உங்க கல்யாணம். ஜோடி டீம் நடத்தி வைக்குது. வர்றதைப் பாத்துக்கலாம்’னு சீரியஸாகவே கிளம்பி, செலவுக்குப் பணமெல்லாம் கலெக்ட் பண்ணத் தொடங்கிட்டாங்க. ஸ்பாட்ல எல்லாருக்குமே அது ‘ப்ராங்க்’னு தெரியற வரைக்கும் நடந்ததையெல்லாம் நினைச்சா இப்பவும் சிரிப்பு சிரிப்பா வருது.”